Published:Updated:

"காற்றைப் போல உணர்ந்தோம்!" - பார்வையற்ற குழந்தைகள் முதன்முதலாக கடலை 'கண்ட' நெகிழ்ச்சி அனுபவம்

"காற்றைப் போல உணர்ந்தோம்!" - பார்வையற்ற குழந்தைகள் முதன்முதலாக கடலை 'கண்ட' நெகிழ்ச்சி அனுபவம்
"காற்றைப் போல உணர்ந்தோம்!" - பார்வையற்ற குழந்தைகள் முதன்முதலாக கடலை 'கண்ட' நெகிழ்ச்சி அனுபவம்

"காற்றைப் போல உணர்ந்தோம்!" - பார்வையற்ற குழந்தைகள் முதன்முதலாக கடலை 'கண்ட' நெகிழ்ச்சி அனுபவம்

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஒருநாள் சுற்றுலாவாக பூம்புகார்,தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள்.

அந்தப் பயணம் குறித்து பள்ளியின் ஆசிரியர் சரவண மணிகண்டன் நம்மிடம் பேசினார். "எங்கள் பள்ளி விடுதியுடன் கூடிய பள்ளி என்பதால், பருவ விடுமுறைகளைத் தவிர, மாணவர்கள் வெளியே செல்ல வாய்ப்பில்லை. எனவே அவர்களுக்குச் வெளியே சுற்றுலா செல்வதென்றால்.. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அந்த நாள் எப்போது வருமென்று வருடம் முழுதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். மொத்தம் 34 பார்வையற்ற மாணவ- மாணவிகள் பங்கேற்ற இந்தக் கல்விச் சுற்றுலாவில், பள்ளியில் பணியாற்றும் ஏழு பணியாளர்களோடு, பிஷப் பாக்கியம் ஆரோக்கியசாமி கல்வியியல் கல்லூரியிலிருந்து ஐந்து மாணவர்கள் கலந்துகொண்டு, பார்வையற்ற மாணவ மாணவிகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.

பூம்புகாரில் அமைந்துள்ள சிலப்பதிகாரம் கலைக்கூடத்தில்  காணப்பட்ட  ஒவ்வொரு புடைப்புச் சிற்பத்தையும் வழிகாட்டுநர் விளக்க, மாணவர்கள் தங்கள் கைகளால் தடவிப் பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக, கண்ணகி கோவலன் சிலைகள், கண்ணகியின் காலில் அணிந்திருந்த சிலம்பு, மாதவியின் கையிலிருந்த யாழ், கோவலனை வெட்டுகிற வாள் என அத்தனை சிற்பங்கள் பற்றியும் மாணவர்கள் அறிந்துக்கொண்டார்கள். கடற்கரையில் நின்று எழுவதும் விழுவதுமாக இருந்த அலைகளை, அவற்றின் சத்தத்தைக் கொண்டு மாணவர்கள் ரசித்தார்கள். பல மாணவர்கள் கடலை நேரில் உணர்வது இதுவே முதல்முறை. நறுமணத்தையும் காற்றையும் உணர்வது போல், கடலையும் அதன் பிரமாண்டத்தையும்  உணர்ந்தார்கள்.

தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பற்றியும் ஏறத்தாழ 300 ஆண்டுகால பழமை வாய்ந்த படகுகள், மரக்கட்டையாகிப்போன திமிங்கலத்தின் முதுகெலும்பு போன்றவற்றைப் பற்றியும்  தொடுதலால் அறிந்து மாணவர்கள் பிரமித்தார்கள்" என்றவர், சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

"அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், திருத்தலங்கள் உள்ளிட்ட  சுற்றுலா இடங்களில் யாருடைய உதவியும் இல்லாமல்  நாங்கள் சுயசார்புடன் இயங்குவதற்கு அந்த வளாக அமைப்பு பிரெய்லி வரைபடமாக பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அத்தோடு அரங்கின் உள்ளே எழுதப்பட்டுள்ள விளக்கக்குறிப்புகளுக்கு அருகில்,அந்த விவரங்களை அப்படியே பிரெய்லியில் படியெடுத்து ஒட்டினால் (Braille stickers) நாங்களே அவற்றைச் சுயமாக வாசித்துப் புரிந்துகொள்ளவோம். கல்வி ஒன்றுதான் பார்வையற்றோராகிய தங்களுக்கு ஒரே வெளிச்சம் என்பதை இந்தக்கல்விச் சுற்றுலா மூலம் எங்கள் மாணவர்களும் நாங்களும் உணர்ந்துக்கொண்டோம்" என்றார் நெகிழ்ச்சியாக.


 

அடுத்த கட்டுரைக்கு