Published:Updated:

`கொம்பன் இப்படிச் சாவான்னு நினைக்கலையே..!' - புதுக்கோட்டையைத் துயரில் ஆழ்த்திய அமைச்சரின் காளை

`கொம்பன் இப்படிச் சாவான்னு நினைக்கலையே..!' - புதுக்கோட்டையைத் துயரில் ஆழ்த்திய அமைச்சரின் காளை
`கொம்பன் இப்படிச் சாவான்னு நினைக்கலையே..!' - புதுக்கோட்டையைத் துயரில் ஆழ்த்திய அமைச்சரின் காளை

`கொம்பன் இப்படிச் சாவான்னு நினைக்கலையே..!' - புதுக்கோட்டையைத் துயரில் ஆழ்த்திய அமைச்சரின் காளை

புதுக்கோட்டை மாவட்டம்  தென்னலூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக் காளையான 'கொம்பன், மரணமடைந்த சம்பவம் ஜல்லிக்கட்டு  வளர்ப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. தவிர, அதைப் புதைத்த இடத்தில் சகல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். கைக்குறிச்சி ஊர் பொதுமக்கள் சார்பாக, `கொம்பனுக்கு கண்ணீர் அஞ்சலி' என்ற வாசகம் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி, வீரர்களும் பார்வையாளர்களும் மரணம் அடைவது என்பது நடக்கும். காளை இறப்பது என்பது நிகழாத அபூர்வ சம்பவம். அப்படியொரு காணச் சகிக்க முடியாத சம்பவம், நேற்று தென்னலூரில் நடந்தது. இறந்தது, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்பு மாடுகளில் ஒன்றான 'கொம்பன்' என்பதால், ஒட்டுமொத்த மக்களின் 'கவனக்குவிப்பு'ம் இந்தச் சம்பவத்தின் மீது விழுந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து, கொம்பன்மீது, இயல்பாகவே கொண்ட பாசம் காரணமாக, இலுப்பூர் பகுதி மக்கள் அத்தனை பேரும் கொம்பன் புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று மெழுகுவத்தி ஏற்றிவருகின்றனர்.

 நேற்று இரவு, கொம்பன் சமாதியைச்சுற்றி நூற்றுக்கணக்கான மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டிருந்தன. அந்தக் காளையைப் பராமரித்து வந்தவர், கொம்பன் இறப்பைத்தாங்க முடியாமல், புதைக்கப்பட்ட  இடத்திலேயே சுருண்டுபடுத்து விட்டார். கொம்பனைக்குறித்து அவர் புலம்பிய வார்த்தைகளைக்கேட்டு, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கண்ணீர்விட்டனர். அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தவித்தனர். அந்தக் காளை, அமைச்சரின் காளை என்பதை எல்லாம் தாண்டி, எல்லோருடைய மனதையும் வென்றிருந்தது.


'கொம்பன்', புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்களின் கதாநாயகனாக இருந்தது. இந்த வருடம் மட்டுமே பதினைந்துக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு, அத்தனையிலும் யாரிடமும் பிடிபடாமல் வெற்றி பெற்றிருந்தது. தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை அந்த முரட்டுக்காளை சம்பாதித்துவைத்திருந்தது. கொம்பனை சில வருடங்களுக்கு முன்பு ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி, தனது காளையாக பராமரித்துவந்தார் அமைச்சர். அவரிடம் வருவதற்கு முன்பே புகழ்பெற்றிருந்தது. அதன் கம்பீரத்திலும், தொடர்ந்து பெற்ற வெற்றிகளிலும் ஈர்க்கப்பட்டுத்தான் விஜயபாஸ்கர் கொம்பனை விலைக்கு வாங்கினார். அதற்கு முன்பு, பெயரில்லாமல் இருந்த இந்தக் காளைக்கு, 'கொம்பன்' என்று பெயரிட்டதும் அமைச்சர்தான். 

தென்னலூர் ஜல்லிக்கட்டு, அதன் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. தமிழ்நாட்டிலேயே மூன்று வாடிவாசலைக்கொண்டது தென்னலூர்தான். ஆரம்ப காலத்தில், அந்த மூன்று வாடிவாசல்களிலிருந்தும் காளைகள் அவிழ்த்துவிடப்படும். 


நேற்று நடந்த போட்டியில், பிரதானமான வாடிவாசலில்தான் மாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. முகப்பில் நிரந்தரமாக இருக்கும் இரண்டு கல்தூண்களை மறைத்தபடி மிக நெருக்கமாக வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தால்,கொம்பன் இறந்திருக்காது. அந்த கல்தூணுக்கும் அடைப்புக்கும் இடையே இடைவெளி இருந்தது. குனிந்தபடி சீறிப்பாய்ந்த கொம்பன், தூணை ஒட்டி நின்றிருந்த மாடுபிடி வீரர்கள்மீது பாய்வதாகக் கருதி, தூண்மீது பாய்ந்துவிட்டது. முழு பலத்துடன் மோதியதால், நேரடியாக அதன் மூளை பாதிக்கப்பட்டு, அங்கேயே சுருண்டுவிழுந்து இறந்துவிட்டது' என்கின்றனர் சம்பவத்தை நேரில் கண்டவர்கள்.

கொம்பன்மீது அமைச்சருக்கு தனிப் பாசம் உண்டு. அதைத் தனி கவனத்துடன் வளர்த்துவந்தார். கொம்பனும் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு, பிடிபடாத மாடாக விளையாடி, அமைச்சருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. 'அமைச்சரோட செல்லப்பிள்ளை கொம்பன் களத்துக்கு வர்றான். பிடிபடாத இந்தக் காளையைப் பிடித்தால்,அமைச்சர் சார்பில் தங்கக் காசு பரிசு' என்று அறிவிப்பாளர் மைக்கில் சொல்ல, பெரும் ஆரவாரத்தோடு கொம்பன் அவிழ்த்துவிடப்படும். நேற்று தென்னலூரிலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், அந்த ஜல்லிக்கட்டுதான் கொம்பன் பங்குபெறும்  கடைசி ஜல்லிக்கட்டாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.


 

அடுத்த கட்டுரைக்கு