Published:Updated:

உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 2

உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 2
உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 2

உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 2

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அரங்கேற்றப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலையின் சாட்சியங்களாய் வீழ்ந்தும் வாழ்ந்தும்வருகிற செய்தியாளர்கள், அந்த மண்ணில் மறைக்கப்படமுடியாத வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இறுதிப்போர்க் காலத்தில் இறுதிவரை வன்னியில் செய்தியாளராகப் பணியாற்றி, முள்வேலி முகாமுக்கும் சென்று மீண்டு இன்று கனடாவின் வான்கூவரில் வசித்துவரும் சுரேன் கார்த்திகேசுவின் பகிர்வு - இரண்டாம் பகுதி! 

வலி சுமந்த மோகன் அண்ணை!

மோகன் அண்ணையை இரண்டு நாள்களாகக் காணவில்லை. வேலைக்கும் வரவில்லை. நானும் அன்ரனியும் அவரைத் தேடி வீட்டிற்கு போனோம். அவர் அங்கு இல்லையென்பதையும் கடற்கரைக்குப் போய்ட்டார் என்றும் அவரின் மனைவி தெரிவித்திருந்தார். நான் வழமையாக அவர் வீட்டிற்குப் போனா அவர் பிள்ளையைத் தூக்குவன். அன்றும் ``மகள் எங்க, கூப்பிடுங்க அக்கா” என்று நான் கேட்டவுடன் அழஆரம்பித்துவிட்டார். ``முந்தநாள் என்ர பிள்ளையைப் பறிகொடுத்திட்டனே” என்று அழுதது, இன்றும் நினைவில் நிற்கிறது. 

மோகன் அண்ணையைத் தேடி கடற்கரைக்குப் போனோம். அங்கே மகளைப் புதைத்த இடத்தில் அவர் அழுதுகொண்டு இருந்தார். அந்த சமயத்தில் எங்களால் ஆறுதல் எதனையும் சொல்லமுடியவில்லை. நாங்களும் அவ்விடத்தில் அமர்ந்து விட்டோம்.. பின்னர் மோகன் அண்ணையக் கூட்டிக்கொண்டு ஈழநாதம் அச்சு இயந்திரங்கள் வைத்திருந்த பகுதிக்கு வந்திருந்தோம்.

மோகன் அண்ணை மிகவும் முக்கியமானவராக இருந்தார். கணினி மற்றும் அச்சு இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதில் சிறப்புச்தேர்ச்சி கொண்டவர். அவர் இல்லாமல் பத்திரிகையை வெளியிடமுடியாது என்று எங்களுக்குத் தெரியும். அவரே தன் மனதைத் தேற்றிக்கொண்டு மூன்றாவது நாள் பணியினை மீண்டும் ஆரம்பித்து விட்டார். இதுதான் அவரின் வலிசுமந்த வலிமைபெற்ற வாழ்க்கை.

நான்,ஜெகன், மோகன் அண்ணை, சுகந்தன் அண்ணை, அன்ரனி, தர்சன்.. ஆறு பேரும் ஒவ்வொரு இரவும் ஒன்றாக இருந்து கதைத்துக்கொண்டிருப்போம். சண்டை தொடங்கியபின் இப்படி நாங்கள் கதைப்பதில்லை. ஏனென்றால் தர்சன் கணனிப்பிரிவு, சுகந்தன் அண்ணை இயந்திரப்பிரிவு நான் செய்தியாளர் பிரிவு, மோகன் இயந்திரம் மற்றும் முகாமைத்துவப்பிரிவு, ஜெகன் தொடர்பாடல் பிரிவு என வேறுபட்ட பணிகளில் இருந்தபடியால் தொடர்ச்சியாகக் கதைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அன்ரனியும் நானும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அன்ரனியுடன் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.

எதிலும் சடுதியான சசிமதன்!

சசிமதனும் மகேஸ் அண்ணையும் நெருங்கிய நண்பர்கள். சசிமதன் ஈழநாதம் பணியாளர் என்று சொல்வதைவிட நல்லதொரு உழைப்பாளி என்று சொல்லலாம். அவர் நேரத்தை வீணப்படிப்பதில்லை. 

அதிகாலை முல்லைத்தீவு பாதைக்கான விநியோகம் முடித்து மீண்டும் கிளிநொச்சிக்கு இரவு வந்து விடுவார். ஒவ்வொரு நாளும் இரவு ஈழநாதம் நிறுவனத்துக்கு வரும் சசிமதன். அடுத்தநாள் அதிகாலை செல்வதற்கான எரிபொருள் மற்றும் தனது உந்துருளியினைப் புறப்படுவதற்காக தயார்ப்படுத்திவிட்டு, பத்திரிகை விநியோகப்பகுதியில் நித்திரையாகிவிடுவார். அதிகாலை 2 மணிக்குப் பிற்பாடே பத்திரிகை முன்பக்கம் அச்சிடப்படும். அதற்கு முன்னர் ஏனைய பக்கங்கள் அச்சிடப்பட்டுவிடும். 

அச்சிடப்படும் பத்திரிகையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோக நடவடிக்கைக்குத் தயார் படுத்தவேண்டியிருக்கும். அதற்காக ஏற்கெனவே அச்சிடப்பட்ட பக்கங்களையும் இறுதியாக அச்சிடப்பட்ட பக்கங்களையும் இணைப்பதற்கு 15 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றுவார்கள். அதில் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பேப்பரை மற்றொரு நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பேப்பரோடு இணைப்பதற்கு ஈழநாதம் நிறுவனத்தால் ஒவ்வொருவருக்கும் தனியான சம்பளம் வழங்கப்படும். குறுகிய நேரத்தில் ஒருவர் 50 ரூபாய்கள் மேலதிகமாக ஒருநாளில சம்பாதிக்கமுடியும். இப்பணியினை ஈழநாதம் நிறுவனத்தில் பணியாற்றும் எந்தப் பணியாளரும் செய்யலாம். சசிமதன் இந்தவேலையை இடைவிடாது செய்து வந்தவர். 

ஈழநாதம் நிறுவனத்தின் பொருளாதார நிலமையில் முல்லைத்தீவு விநியோகம் மிக முக்கியமானது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பத்திரிகை விநியோகிக்காவிட்டால். பத்திரிகை விற்பனை அன்றை நாள் குறைந்து விடும். எந்தக் காலநிலைமைகள் என்றாலும் அதற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பத்திரிகை விநியோகத்தினை செய்து வந்த சசிமதனின் இழப்பு மிகப்பெரியது. நாங்கள் நித்திரைகொள்ளும் நேரத்தில் அவர் நித்திரைகொள்ளாமல் பணியாற்றிய ஒருவரை இழந்துவிட்டோம். ஊடகவியலாளர் இளங்கீரனுடன் ஆனந்தபுரம் பகுதிக்குச் சென்றபோதே எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டார். சசிமதனும் மகேஸ் அண்ணையும் ஒரு நாள் இடைவெளியில் கொல்லப்பட்டவர்கள். 

``மகேஸ் அண்ணையை எங்களோட வச்சிருந்திருக்கலாம்!”

சண்டை என்றாலும் சரி சந்தை என்றாலும் சரி விநியோகம் என்பது முக்கியமான ஒரு விடயம். ஈழநாதம் பத்திரிகையின் விநியோகத்தில் ஈடுபட்டவர்கள்தான் மகேஸ் அண்ணை மற்றும் சசிமதன். மகேஸ் அண்ணை யாழ்ப்பாணம் பாதை தடைபட்டபின்னர் முல்லைத்தீவிற்கான விநியோகம் மற்றும் புதுக்குடியிருப்பு விளம்பர பணிமனையின் முகாமையாளராகக் கடமையாற்றியிருந்தார்;. தன் மனைவி பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் தனியே விட்டுவிட்டு ஈழநாதம் நிறுவனத்திற்காக வன்னிக்கு வந்தவர்தான் நல்லையா மகேஸ்வரன்... ``மகேஸ் அண்ணை”!

அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகள் எனக்குத் தெரிந்தாலும் அந்நேரத்தில் நாங்கள் பெரிதுபடுத்துவதில்லை. மழைக்காலத்தில் வன்னி எப்படியிருக்கும் என்று சொல்லவேண்டியிருக்காது. பத்திரிகையை ஒவ்வொரு பிரதேச விநியோகஸ்தர்களுக்கும் கொண்டு செல்லும் போது மழையில் நனைந்து விடாபடி பக்குவமாக எடுத்துச்செல்லுவார். மழைக் காலத்தில் தேராவில், உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் பகுதியில் வெள்ளம் பாயும். அவருக்கு ஒரு கால் இல்லை. அப்படியிருந்தும் எப்படி அத்தனை பேப்பரையும் கொண்டுபோய் இருப்பார் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. தன்னால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு, சாக சில மணித்தியாலங்கள் முன்னர்வரை ஈழநாதத்திற்காகப் பணியாற்றியிருந்தார்.

அன்றைய நாளில் நானும் ஜெகனும் ஈழநாதம் அச்சு இயங்திரங்கள் ஏற்றியிருக்கும் வாகனத்தில் அருகில் நின்றோம். ஒரு அண்ணை மகேஸ் அண்ணையின் புகைப்படத்தோடு வந்திருந்தார். "இவர் செத்திட்டாராம் விளம்பரம் போடவேணுமாம்”. சற்று முன்னர் எங்களோடு பேசிவிட்டு போனவர். கொஞ்ச நேரத்திலேயே எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்.

நானும் ஜெகனும் உடனேயே மகேஸ் அண்ணை இருந்த இடத்திற்கு போய்விட்டோம். மகேஸ் அண்ணை உடல் வெள்ளை வேட்டியால் மூடப்பட்டிருந்தது. அவரின் உறவினர் ஒருவரோடுதான் இருந்தவர். அந்த உறவினர் ``இதிலதான் இருந்து கதைத்துக்கொண்டிருந்தம் தம்பி” ``அதிலதான் செல் விழுந்தது.” "மகேஸ் அண்ணைக்கு சின்ன துண்டுதான் பட்டது. அதிலேயே செத்திட்டார்” என்று கண்ணீர் மல்கினார். உண்மையில் இப்பொழுதுதான் கவலையாக இருக்கிறது. நான் அல்லது ஜெகனோ ஒரு நாள் கூட "அண்ணை சாப்பிட்டிங்களா, எங்க இருக்கிறிங்கள்” என்று கூட கேட்டதேயில்லை. ``எங்கட நோக்கம் மிசினறி எல்லாம் பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். பேப்பர் அடிக்கிறது நிக்கக் கூடாது” இதுதான் குறியாக இருந்தது. நாங்கள் எங்கே போறமோ அன்று அதிகாலை வந்து அருகில் நிற்பார். அன்றைய நாள்களில் எத்தனை நாள் அவர் சாப்பிட்டாரோ தெரியவில்லை. ``எங்களுக்குச் செல் விழுறதும் பிரச்னை இல்லை. சாகிறதும் பிரச்னை இல்லை.” ``இப்படித்தான் பல நாள்கள் மண்டை இறுகிப்போய் இருந்திருக்கிறம்.” விழுகின்ற ஒவ்வொரு எறிகணைகளின் சத்தங்கள் இவரைப்போன்றவர்களின் உழைப்பின் அருமையை எங்களுக்குக் காட்டவில்லை. 

யாழ்ப்பாணத்திலிருந்து எங்களுக்காக வந்து பணியாற்றிய மகேஸ் அண்ணையை எங்களோட கூப்பிட்டு வச்சிருந்திருக்கலாம். எங்களோட இருந்திருந்தா செத்திருக்கமாட்டார். அவர் மனைவி பிள்ளைகளிடம் நாங்கள் எந்த முகத்தோடுபோய் ஆறுதல் படுத்தமுடியும்? பல்லாயிரம் பேரைத் தூக்கிய எங்களுக்கு அவரைத் தூக்கி அடக்கம் செய்யமுடியவில்லை. அடுத்தநாள் உறவினர்கள் அடக்கம்செய்துவிட்டனர். நான் போகவில்லை. அதிகாலையே 110 பேர் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். நான் அந்த இடத்திற்கு போய்விட்டேன். என்னால அவரின் முகத்தை கடைசியாகக்கூட பார்க்கமுடியவில்லை! 

கணவருடன் கொல்லப்பட்ட டென்சி ! 

பத்திரிகையைக் கணினியில் வடிவமைத்து உரிய நேரத்தில் இயந்திரப்பகுதிக்குச் செல்லும்வரைக்கும் கடுகதியில் இயங்கும் ஒருவர், மேரி டென்சி. அவரின் உழைப்பு அந்நாள்களில் இப்பத்திரிகையை மெருகேற்றியிருந்தது. பொக்கணைப் பகுதியில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் தனது கணவருடன் கொல்லப்பட்டுவிட்டாள். ஆறு மாத குழந்தை மட்டும் தனியே தவித்தது. கிபிர் விமானங்கள் வரும்போதெல்லாம் பங்கருக்குள் ஓடுவதும் திரும்ப வேலை செய்வதுமாக ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில பிடித்துக்கொண்டு வேலைசெய்தவர்களில் டென்சியும் ஒருவர். நான் கணினிப் பிரிவுக்குப் போகும்போதெல்லாம் டென்சி புறுபுறுத்துக்கொண்டு இருப்பார். ``துஸ்யந்தன் மாஸ்ரர் செய்தியை நேரத்திற்குத் தாங்கோ”, ``சிவபாலன் அண்ணை திரும்பத்திரும்ப தலையங்கம் மாத்துறார்” என்றுவாசலுக்குப் போகும் போதே அவளின் குரல் கேட்கும். 

விரல் சூப்பியபடியே சடலமாக்கப்பட்ட சங்கர்!

நாங்கள் இரட்டைவாய்க்காலில் இருக்கும் போதுதான் அந்த துயரச்சம்பவம் நடந்தது. இரட்டைவாய்க்கால் பகுதியில்தான் ஈழநாதம் இயங்கிக்கொண்டிருந்தது. அன்று காலை வீட்டிலிருந்து ஈழநாதத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். 300 மீற்றர் சென்றுகொண்டிருக்கும்போது எனக்குப் பின்னே ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்தது. நானும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. பல எறிகணைகள் என்றால் வீழ்ந்து படுக்கலாம் ஒரு எறிகணைதானே என்று  போய்விட்டேன். எமது பணிமனையிலிருந்து நானும் செல்வராசா அண்ணையும் எறிகணை வீழ்ந்த பகுதிக்குச் சென்றோம். அது எங்கள் வீட்டிற்கு கிட்டிய தூரத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்திருந்தது. நாங்கள் அவ்விடத்திற்கு செல்ல, ``ஐயோ சுரேன் விரல் சூப்பிக்கொண்டே செத்துப்போனான். ஏன்ர கடவுளே உள்ளே பாருங்கோ” என்று சங்கரின் அம்மா கதறி அழுது கொண்டிருந்தாள். சிறிய தரப்பாள் கூடாரத்திற்குள் சங்கர் கவுண்டு படுத்திருந்தான். அவன் செத்த மாதிரி தெரியல்ல. கிட்டப் போய் அவன் சேட்டோடு சேர்த்து தூக்கினேன். சூப்பிய விரல் கீழே விழுகிறது. அவனுக்குச் சின்ன வயதிலேயே விரல் சூப்பிற பழக்கம் இருக்கு. அவன் அதை நிறுத்தவில்லை. அவனுக்கு நான் பல தடைவ வாயில சுண்டுவன். அப்பிடி இருந்தும் அவன் விரலைச் சூப்பிற பழக்கத்தை விடவில்லை. 

ஈழநாதத்திற்கு அருகில்தான் அவர்களின் வீடு இருந்தது. அவர்களின் வீட்டில்உள்ள பலாப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் எல்லாம் நாங்கள் சாப்பிடுவம். சங்கர்தான் கொண்டு வந்து தருவான். அவன் பாடசாலை முடிந்தவுடன் உடுப்பு மாற்றாமலே ஈழநாதத்திற்கு வந்துவிடுவான். ஏனெனில் அவனுக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். ``அங்க உள்ள பழைய பேப்பர்களில் வரும் படங்களை எடுத்துச் சேகரிப்பதுதான் அவனுக்குப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருக்கும். ஈழநாதத்திற்கு யார் வந்தாலும் வாசலில் உள்ள காவலாளி அனுமதி பெறவேண்டும். ஆனால் அவன் வந்தால் யாரும் ஒன்றும் பேசமாட்டார்கள். அவனும் ஈழநாதத்தோடு ஒன்றித்துப் போனான். எல்லாரோடும் அன்பாகப் பழகுவான். அவனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் மட்டுமல்ல. கிரிக்கெட் தொடர்பான பல விடயங்கள் அவனுக்குத் தெரியும். அவனில் மூத்தவர்கள்கூட அவனிடத்தில் கிரிக்கெட் தொடர்பாகக் கேட்பார்கள். அடிக்கடி பார்க்கும் அந்த முகம் அன்றைக்கு அசைவற்று கிடந்த என்னால தாங்க முடியவில்லை. வீழ்கின்ற ஒவ்வொரு எறிகணையும் பல உயிர்களை குடித்துக்கொண்டுதான் இருந்தது. 

எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் பொழுது அவனது அம்மாவும் கடைசித்தம்பியும் முகம் கழுவுவதற்காகச் சென்றுவிட்டார்கள். இவன் நித்திரையாகக்கிடந்தவன். நித்திரையோட அவன் போய்விட்டான். அவனுக்கு சாவின் வேதனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலை ஒரு பக்கமும் கையின் ஒரு பக்கமும் சிதைந்துவிட்டது. அவனின் தந்தை அன்று காலை நிவாரணம் எடுப்பதற்குச் சென்றுவிட்டார். அவர்கள் அந்த இடத்திற்கு முதல்நாள்தான் வந்திருந்தார்கள். பதுங்குக்குழி இன்னும் அமைக்கவில்லை. பதுங்குக்குழி அமைப்பதற்கான பொருள்கள் பொக்கணையில் இருக்கிறதெனவும் அதோடு நிவாரணம் எடுக்கவும் போய்விட்டார் என சங்கரின் அம்மா எனக்குச் சொல்லிருந்தார். உடனே நானும் செல்வராசா அண்ணையும் சங்கரின் உடலைத் தூக்கிக்கொண்டு எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் வைத்தோம். இதற்கிடையில் எனது நண்பர்களும் வந்துவிட்டார்கள். உடனே சங்கர் வழமையாகப் போடும் ஜுன்ஸும் சேட்டும் அவனின் பாக்கிக்குள் இருந்து எடுத்துக்கொண்டு போய் அவனைச் சுத்தம்செய்து அவனுக்கு உடுப்பை மாற்றினோம். 

மாற்றிவிட்டு நான் அவனின் தந்தை சென்ற இடத்தை நோக்கிச் சென்றேன். அம்மா சொன்ன இடத்தில் அவர் இல்லை. அவர்களின் உறவினர்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை. அருகில் சங்கக்கடைக்குப் போய்ட்டார்; அவசரம் என்றால் அங்க போய் பார்க்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். நான் அவரிடம்போய், ``அண்ணை வீட்டில செல் விழுந்துவிட்டது. சங்கர் செத்துவிட்டான். மற்ற ஆக்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை" என்று சொன்னேன். உடனே தந்தையை ஏற்றிக்கொண்டு சங்கரின் உடல் வைத்திருந்த வீட்டிற்குப் போனோம்.

எறிகணை வீழ்ந்து அவர்களின் கூடாரம் சிதைந்து விட்டது. இப்ப அவர்களுக்குத் தேவை சங்கரை அடக்கம் செய்ய வேண்டும். ஆளுக்கு ஆள் எல்லாரும் கதைக்கிறார்கள். சங்கரின் அப்பா என்ர முகத்தைப் பார்த்தார். எனக்கு விளங்கிவிட்டது. சங்கரை அடக்கம் செய்யவதற்கான அனைத்து வேலைகளையும் நானும் சுகந்தன் அண்ணையும் அன்ரனியும் தர்சனும் அருகில் உள்ள சுடலைக்குப் போனோ. அங்கே அடக்கம் செய்வதற்கு கிடங்கினை வெட்டினோம். எமது சமய முறைப்படி இறந்தவரின் உடலை எரிப்பதுதான் வழமை. ஆனால், அந்த நேரத்தில் சமைப்பதற்கு விறகுகூட எடுக்கமுடியாது. எப்படி எரிப்பது? அதற்காகவே எல்லாருமே இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பார்கள். 

நாங்கள் கிடங்கு வெட்ட மூன்று அடியில் தண்ணி ஊற ஆரம்பித்துவிட்டது. தண்ணியை அள்ளிஅள்ளி இன்னும் ஒரு அடி வெட்டினோம். பின்னர் சங்கரை அந்தக் கிடங்கிலேயே புதைத்தோம். சங்கரை அடக்கம் செய்வதற்கு அருகில் நின்ற நண்பர்கள் சுகந்தன், அன்ரனி, தர்சன் ஆகியோர் இறுதி நாள்களில் இறந்துவிட்டார்கள். 
நாள்கள் நகர நகர இருப்பதற்கே இடமின்றி இறந்தவர்களைப் புதைக்கமுடியாது இறந்த இடத்திலேயே கைவிட்டு விடவேண்டிய சூழலும், கைவிடப்பட்ட பதுங்குக்குழிகளுக்குள் போடவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

ஏப்ரல் 25 .. சுகந்தன் அண்ணையைத் தொடக்கூட முடியல்ல!

மோகன் அண்ணையும் சுகந்தன் அண்ணையும் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நான் அச்சு இயந்திரங்கள் இருந்த இடத்திற்குச் சென்றவுடன் சங்கீதன் அண்ணை, ``சுரேன் இன்றைக்கு எங்க போறிங்கள்” என்று கேட்டார். ``வலைஞர்மடம்” என்றதும், ``சரி இவர்களோடு நீங்களும் போங்கோ” என்று சொல்லித்தான் போனேன்.

ஒரு செய்தியாளர் என்றால் எங்கே ஆமிக்காரன் நிக்கிறான் என்று உண்மையில தெரிந்திருக்கவேண்டும். அன்று நான் யாரோடும் கதைக்கவில்லை. காலை நேரம் என்றபடியால் எனக்குப் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆமி முன்னேறி வந்தது தெரிந்திருந்தால் அவ்விடத்திற்கு நாங்கள் சென்றிருக்கமாட்டம். ஒரு செய்தியாளனாக அன்றைக்கு நான் தோத்துப்போய்விட்டன் என்ற நெருடல் இன்றைக்கும் இருக்கிறது.

9.30 மணியிருக்கும்.. 

``இலங்கை இராணுவத்தினர் அப்பகுதியில் மிக கிட்டிய தூரத்தில் நிற்கிறார்கள்” என்று எங்களுக்குத் தெரியாது. திடீரென தாக்குதலின் பின்னர்தான் நான் கடல் பக்கமும் மோகன் அண்ணை மேல் பக்கமாக ஓடியிருந்தோம். நான் கடலுக்கு இறங்கி நீந்தி முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருக்கலாம். ஆனால், சுகந்தன் அண்ணைக்கு உயிர் இருக்கும் என்று நினைத்துதான் மீண்டும் அவரைத் தூக்குவதற்கு ஓடியபோதே தாக்குதலில் கீழே விழுந்தன். சுகந்தன் அண்ணையின் தலை சிதறுவதை என்ர கண்ணால பார்க்கும் போது ``வதனி அக்கா மூன்று பிள்ளைகளோட இனி என்ன செய்யப்போறா” என்று நினைத்துக்கொண்டே நான் கடற்கரையில் படுத்துட்டன். 

பதினெட்டு ஆண்டுகள் ஈழநாதம் பத்திரிகைக்காக உழைத்த இரும்பு மனிதர் சுகந்தன். அண்ணைக்கு அன்று உடம்புக்குச் சுகமில்லை. உடல்வருத்தத்தோடுதான் எங்களோட வந்தவர். சுகந்தனை விட்டிட்டு சுரேனைத் தூக்கி வந்திட்டாங்கள் என்று வதனி அக்கா இப்பவும் நினைப்பா… என்று நினைக்கிறன். அன்றைக்கு நான் தப்பி வந்திருக்கலாம். ஆமி கிட்ட நிக்கிறான் என்று தெரிஞ்சும் நான் அவரைத் தூக்கப்போனான். எனக்கு நெஞ்சில வெடி. மூன்று மீற்றரில் இருக்கிற சுகந்தன் அண்ணையத் தொடக்கூடமுடியல்ல.

ஏப்ரல் 29 - வைத்தியசாலை மீது வீசிய குண்டு.. உயிர்தப்பினேன்!

ஆயுத மோதல்களின் போது வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போர்க்குற்றங்களில் ஒன்றாகும். 29.04.2009 அன்று மாலை சிறிலங்கா கடற்படையினர் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்தாக்குதலின் போது நான் மயிரிழையில் உயிர்த்தப்பினேன். இப்போர்க்குற்றங்களில் தொடர்புடைய அப்போதைய சிறிலங்கா கடற்படைத்தளபதியாக வசந்த கரன்னகொட என்ற தளபதியே ஆவார்.
சிறிது நேரத்தில் ``சுரேன் முடிஞ்சா ஓடிவா ஆமி உங்காலதான் அடிக்கிறான்” என்று மோகன் அண்ணையின் குரல் கேட்கிறது. அரைமயக்கம் ஒன்றுமே தெரியல்ல. குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன். 

நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. கடற்கரை மணல் எடுத்து நெஞ்சில அடைத்தேன். அதன்பிறகுதான் அப்படியே மூக்காலயும் வாயாலயும் இரத்தம் வந்தபடியே மயங்கிட்டன். அரைமயக்கம், சத்தங்கள் கேட்கிறது. நான் சாகப்போறன் போல இருந்தது. 
மோகன் அண்ணை என்னை இழுத்துக்கொண்டு போயிருக்கிறார். குறிப்பிட்ட தூரம் சென்ற பின்னரே வாகனம் ஒன்றில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தேன். இவ்வளவும் 20 நிமிடத்தில் நடந்து முடிந்திருந்தாக மோகன் அண்ணை சொல்லியிருக்கிறார்.

நெஞ்சுப்பகுதியில் பெரிய காயம் என்பதால் உள்ளககுருதிப்பெருக்கினால் என்னால் சுவாசிக்கமுடியாமல் போய்விட்டது. காயமடைந்தவர்களுக்கு இரத்ததானம் செய்பவர்கள் மிக அரிதாகக் காணப்பட்டது. காயமடைந்தவர்களின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர் வழங்கினாலேயொழிய இரத்தம் வழங்க அப்போதைய சூழலில் யாரும் முன்வரமாட்டார்கள். சாப்பாடு இல்லாமல் சளைத்துப்போயிருந்த மக்கள் எப்படி இரத்தங்களை வழங்குவார்கள். இருந்தாலும் ஓரளவு ஆரோக்கியமானநிலையில் இருந்தவர்கள் தாமாகமுன்வந்து இரத்தம் வழங்குவார்கள்.

எனக்கு அறுவைச்சிகிச்சை செய்வதற்கு நான்கு மாற்றுக் குருதிப்பைகள்வரை ஏற்றப்பட்டிருந்தது. பலர் எனக்கு ரத்தம் தந்தாலும் சிலருடையது எனக்குப் பொருத்தமில்லாததால் ஏனைய காயமடைந்தவர்களுக்கு ஏற்றப்பட்டது. 

சண்டை ஒன்றில் இரண்டு கண்களையும் இழந்திருந்த மோகனா அக்காதான் எனக்கு மிகுதி இரத்தம் தருவதற்கு முன்வந்திருந்தார். மதியும் வைத்தியர் ஒருவருமே முள்ளிவாய்க்காலில் பிறிதொரு இடத்தில் வசித்த மோகனா அக்காவிடம் இரத்தம் எடுத்திருந்தனர்.

இத்தனை பேரின் உழைப்பும் மிககுறுகிய நேரத்தில் எனக்குக் கிடைத்தபடியால்தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். என் உயிரைக் காப்பாற்ற துடித்தவர்கள் அனைவரும் ஏற்கெனவே போர்க்காலங்களில் வலிகளைச் சுமந்தவர்களே! 

29.04.2009 அன்று மாலை நான்கு மணியளவில் வைத்தியசாலையில் நான் இருந்த கட்டிலின் பின்புறத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பிறகு நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். 

மே 12 - ``சுரேனுக்கு முடியப்போகுது போல”!

பரவலாக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிறது. காயமடைந்தவர்களின் தொகை தெரியல்ல. கொல்லப்படுபவர்களின் தொகை தெரியல்ல. 

``ஈழநாதம் செய்திஆசிரியரின் குடும்பத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுவிட்டார்களாம்”-இப்படி எல்லாரும் வந்து சொல்லினம். எனக்கு நெஞ்சில இருந்து ஊனம் வடிய ஆரம்பித்துவிட்டிருந்தது. என்னைப் பார்த்திட்டுப் போறவ, `சுரேனுக்கு முடியப்போகுது போல’ என்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை கேட்கமுடிகிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதியாக இருந்த வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டேன். திடீரென எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. வைத்தியசாலை முற்றத்தில் விழுந்த எறிகணையில் பலர் கொல்லப்பட்டார்கள். அருகில் நின்ற பெண் வைத்தியர், எங்களை பங்கருக்குள் இருக்கச்சொல்லிட்டு வெளில நிண்டவர். பலருடய முயற்சியில் நான் காப்பாற்றப்பட்டேன். 

இப்புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் சேட் இப்பவும் என்னிடம் இருக்கின்றது. அதைவிட என் உடலிலிருந்து எடுக்கப்பட்ட எறிகணையின் சிறிய இரும்புப்புகுதி என்னிடம் இருக்கிறது. நெஞ்சிலிருந்து எடுக்கப்பட்ட குண்டின் ஒரு சிறுபகுதியினைவிட ஆங்காங்கே சிறிய இரும்புத்துண்டுகளும் இருக்கின்றன. அவை எப்படி என் உடம்பில் வந்தன என்று தெரியாது. தற்பொழுது, விமானக்குண்டு வீச்சுக்கள் இல்லை; எறிகணைகள் சத்தங்கள் இல்லை; காயங்கள் படாத என் உடல் மீண்டும் மீண்டும் காயப்படுத்தப்படுகிறது. வலிதான் வலிமையைத் தரும் என்று சொல்லிச் சொல்லி மனதைத் தேற்றுவோம்! 

அடுத்த கட்டுரைக்கு