Published:Updated:

நெய்வேலி புத்தகக் கண்காட்சி..! ஆளுநர் தொடங்கிவைக்கிறார்

ஜி.சதாசிவம்

நாட்டின் தலைசிறந்த பதிப்பாளர்களுடன், மத்திய அரசின் பதிப்பகத்துறை, சாகித்ய அகாடமி, தேசிய புத்தக நிலையம் போன்ற அமைப்புகளும், ஹிகின்பாதம்ஸ் போன்ற பிரபலமான புத்தக விற்பனையாளர்களும் இக்கண்காட்சியில் இடம் பெறவிருக்கின்றனர்.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி..! ஆளுநர் தொடங்கிவைக்கிறார்
நெய்வேலி புத்தகக் கண்காட்சி..! ஆளுநர் தொடங்கிவைக்கிறார்

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 21-வது புத்தகக் கண்காட்சியை வரும் 29-ம் தேதி அன்று,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். 

நெய்வேலியில் ஒவ்வோர் ஆண்டும் என்.எல்.சி நிறுவனம் பிரமாண்டமான அளவில், புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. 1998-ல் தொடங்கப்பெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சி, தற்போது தென்னிந்தியா அளவில் நடைபெறும் பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இவ்வாண்டு நடைபெறும் 21-வது புத்தகக்கண்காட்சி, வரும் 29-ம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில், சுமார் 150 பதிப்பாளர்கள் கலந்துகொண்டு, 160 விற்பனைக் கூடங்களில் 10 ஆயிரத்துக்கு அதிகமானத் தலைப்பில் புத்தகங்களைக் காட்சிப்படுத்தவிருக்கின்றனர். நாட்டின் தலைசிறந்த பதிப்பாளர்களுடன், மத்திய அரசின் பதிப்பகத்துறை, சாகித்ய அகாடமி, தேசிய புத்தக நிலையம் போன்ற அமைப்புகளும், ஹிக்கின்பாதம்ஸ் போன்ற பிரபலமான புத்தக விற்பனையாளர்களும் இக்கண்காட்சியில் இடம் பெறவிருக்கின்றனர்.

இப்புத்தகக் கண்காட்சி, தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10  முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி திறந்திருக்கும். இந்த புத்தகக் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரும் 29-ம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கவிருக்கிறார். என்.எல்.சி இந்தியா நிறுவனத் தலைவர் டாக்டர் சரத் குமார் ஆச்சார்யா மற்றும் என்.எல்.சி இயக்குநர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கண்காட்சி நடைபெறும் நாள்களில், தினமும் ஒரு எழுத்தாளரும், ஒரு பதிப்பகத்தாரும் கௌரவிக்கப்படவிருக்கின்றனர். 

மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் புத்தகப் பிரியர்களைக் கவரும் வகையில், புத்தகங்கள், பத்திரிகைகள், குறுந்தகடுகளைப் புத்தக விற்பனையாளர்கள், தள்ளுபடி விலையில் விற்பனைசெய்ய உள்ளனர். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு உணர்வுத் திட்டத்தின்கீழ், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் இக்கண்காட்சியில் பங்குபெற்று பயனடையும் வகையில், சுமார் 15 ஆயிரம் பள்ளி மாணாக்கர்களுக்கு மேல், இலவச அனுமதி அளிக்கப்படவிருக்கிறது.

மேலும், இக்கண்காட்சிக்கு வரும் வெளியூர் மாணவ மாணவிகளுக்கு குடிநீர் பாட்டில், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இப்புத்தகக் கண்காட்சி நடக்கும் 10 நாள்களிலும், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், புத்தகக் கண்காட்சித்திடலில் அமைந்துள்ள லிக்னைட் அரங்கில், பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. ஒய்.ஜி மகேந்திரன் வழங்கும் '3ஜீ' நாடகம், மதுரை முத்துவின் 'சிரித்து வாழ வேண்டும்', லேனா தமிழ்வாணனின் 'வாசிப்பும், சுவாசிப்பும்' பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரனின் பட்டிமன்றம் உள்பட மேஜிக் நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் இக்கண்காட்சியின் வெவ்வேறு நாள்களில் நடைபெறவிருக்கின்றன.

குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், பொழுதுபோக்கு, விளையாட்டு அம்சங்களும், பெரியோர் மற்றும் சிறியோருக்கு விருந்தளிக்க அறுசுவை உணவகங்களும் இக்கண்காட்சியில் கூடுதலாக இடம் பெறவிருக்கின்றன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை  என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சரத்குமார் ஆச்சார்யா, இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், சுபீர்தாஸ், தங்கபாண்டியன், விக்ரமன் மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர்.