Published:Updated:

கல்லறையில் தமிழ் தொண்டன் வேதநாயகம் பிள்ளையின் சிலை!

கல்லறையில் தமிழ் தொண்டன் வேதநாயகம் பிள்ளையின் சிலை!
கல்லறையில் தமிழ் தொண்டன் வேதநாயகம் பிள்ளையின் சிலை!

கல்லறையில் தமிழ் தொண்டன் வேதநாயகம் பிள்ளையின் சிலை!

மிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவலைப் படைத்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிலை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் வரலாற்றை முதலில் அறிந்து கொள்வோம். திருச்சி மாவட்டம் குளத்தூரில் 11.10.1826-இல் பிறந்த வேதநாயகம் பிள்ளை, முதலில் தந்தையிடம் கல்வி கற்கத் தொடங்கினார். அதன்பின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கல்வியை புலவர் தியாகராசப் பிள்ளையிடம் பயின்றார். சிறு வயதிலேயே கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர், நாகை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்பு மாயூரம் மாவட்ட நீதிபதியாக 13 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்ததால், இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார் (தற்போது மாயூரம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மயிலாடுதுறை என்றழைக்கப்படுகிறது). அதன்பின் மாயூரம் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றினார். இந்தக் காலக்கட்டத்தில்தான் தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நூலைப் படைத்திருக்கிறார். மேலும் 15-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். வாழ்க்கை நெறிகள், பொது நீதி, பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்குக் கருத்துகள் ஆகியவை இவரது நூல்களின் கருப்பொருளாக அமைந்திருக்கிறது.

தமிழ்க் கவிதைகளின் புதிய பாணிக்கு வேதநாயகம் பிள்ளை வித்திட்டார் என்றால் அது மிகையில்லை. இவர், வீணை வாசிப்பதிலும் வல்லவர். இவரது சமகாலத் தமிழ் அறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வடலூர் ராமலிங்க அடிகளார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்ரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோரிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். 1805 முதல் 1866 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து "சித்தாந்த சங்கிரகம்" என்ற நூலை வெளியிட்டார். சட்டவிதிகளைத் முதன்முதலாகத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் மொழிபெயர்ப்பு செய்த பெருமைக்குரியவரும் இவரே. தமிழ் உரைநடையை வளம்பெறச் செய்த முன்னோடிகளில் தலைசிறந்தவராக வேதநாயகம் பிள்ளை கருதப்படுகிறார்.

பெண் கல்வி குறித்து இவர் வெறும் எழுத்துகளில் மட்டும் கட்டுரை எழுதாமல் செயலிலும் செய்து காட்டினார். மாயூரத்தில் பெண்கள் மட்டுமே பயிலக் கூடிய தனிப் பள்ளியைத் தொடங்கினார். இதுதான் தமிழ்நாட்டில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், இந்துவாகப் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவ மக்களுக்கும் தொண்டாற்றினார்.  கிறிஸ்தவ வழிபாட்டுப் பாடல்கள், கிரேக்கம், லத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழிலேயே பாடல்களைப் புரிந்துகொண்டு வழிபட வேண்டும் என்பதற்காக, திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் போன்ற இலக்கியங்களைப் படைத்தார்.  மனிதநேயத்திலும் மகத்தான மனிதராகவே திகழ்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் பெரும்பஞ்சம் ஏற்பட்டபோது, தனது சொத்துகள் அனைத்தையும் தானமாகக் கொடுத்தார். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்பட்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தன்னுடைய 63-ஆவது வயதில் 21.07.1889 அன்று இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

இப்படி தமிழ் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு கல்லறையில் சிலை இருப்பதை குறித்து தமிழ் ஆர்வலர்களிடம் பேசியபோது, "மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்குப் பெருமை சேர்க்கும்வகையில், குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் தஞ்சை ஆயர் சுந்தரம் அவர்களால் மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் கிறிஸ்தவ தேவாலயம் முன்பாக 07.12.1983 அன்று, வேதநாயகம் பிள்ளையின் சிலை திறந்து வைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்தச்சிலை அமைந்துள்ள இடம் இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்கும் மயானக் கூடமாகி விட்டது. கம்பிச் சிறையில் வேதநாயகம் பிள்ளையின் சிலை இருப்பது யாரும் எளிதில் பார்க்க முடியாதபடி உள்ளது. யார் யாருக்கெல்லாம் எங்கெங்கோ சிலைகள், மணிமண்டபங்களை அமைக்கும் தமிழக அரசு, தமிழுக்குத் தொண்டாற்றிய வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் அவருடைய சிலையை இங்கிருந்து அகற்றி பொதுமக்கள் கண்ணில் படக்கூடிய இடத்திலாவது மாற்றி அமைக்க வேண்டும்" என்றனர் வேதனையுடன். 

தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்றுச் செயல்பட தமிழக அரசு முன்வருமா? 

அடுத்த கட்டுரைக்கு