Published:Updated:

``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன்
``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன்

``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன்

ணமதிப்பிழப்பை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்தபோது அதை மிகத் தீவிரமாக ஆதரித்து எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் ஜெயமோகன். பணமதிப்பிழப்பு  தோல்வியாக அமைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது. இதுகுறித்து ஜெயமோகனிடம் அவரது வாசகர் எஸ்.ராசேந்திரன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜெயமோகன் தன் இணையப் பக்கத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். பணமதிப்பு நீக்கத்தினை ஆதரித்தற்கான காரணத்தைக் சொல்லிவிட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் இன்னும் சில விஷயங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளில்  ஏமாற்றமே மிஞ்சியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

``பணமதிப்புநீக்கம் தோல்வியடைவதைக் கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருந்தேன். சில தனியார் வங்கிகள் அதை உடைத்துப் பெரும்லாபம் ஈட்டின. கணக்காளர்களும் வங்கியாளர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோத்துக்கொண்டு அதை அழித்தார்கள். நான் அறிந்தது உண்மை என்றால் கெடு முடிந்து எட்டுமாதங்கள் கடந்தும்கூடப் பழையநோட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தார்கள். முதலில் தயாரிப்பின்மை, அரசு நிர்வாகத்தின்மேல் ஆள்வோருக்குக் கட்டுப்பாடு இல்லாமை ஆகியவையே அதற்குக்காரணம் என நம்பினேன். ஆனால், அத்தனை நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன என்றால் அதன்பொருள் ஒன்றே, இதில் பாரதிய ஜனதா கட்சியும், இந்த அரசும் ரகசிய லாபம் ஈட்டாமல் இவ்வாறு நிகழாது. அவர்கள் உடனிருக்காமல் இத்தனை முழுமையான மோசடி நிகழவே முடியாது. அவர்கள் அதற்குப்பொறுப்பேற்க வேண்டும். அதன் விளைவான அனைத்து அழிவுகளுக்கும்...

கடுமையான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள், மதக்காழ்ப்புகளை அரசியலாக வெளிக்காட்டுபவர்கள் தவிர இந்தியாவின் எளிய குடிமக்கள் பெரும்பாலானவர்கள் அந்நடவடிக்கை வந்தபோது நான்கொண்டிருந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள். அதை அந்த மக்களுடன் எளிய முறையில் உரையாடிய எவரும் உணர்ந்திருக்கலாம். இன்று அவர்களில் பலரும் நான் உணரும் ஏமாற்றத்தையும் கசப்பையும் அடைந்திருப்பார்கள். ஒரு குடிமகனாகத் தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டவனாக, சுரண்டப்பட்டவனாக உணர்கிறேன். நரேந்திர மோடியின் `மனதோடு பேசும்’ நிகழ்ச்சியில் உள்ள அசட்டு நாடகத்தனம், செயற்கையான பாவனைகள், புனிதர்களுக்குரிய நல்லுபதேச மொழிகளைக் கூச்சமே இல்லாமல் சொல்லும் தோல்தடிமன் உச்சகட்ட வெறுப்பையே உருவாக்குகிறது.

ஆயினும் நடுநிலையில் நின்றபடித்தான் பார்க்க வேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். இந்த ஆட்சியின் செயல்பாடுகளை என் தனிச்சூழலிலும் நான் செய்யும் பயணங்களிலும் கூடுமானவரை உளப்பாகுபாடின்றியே நோக்குகிறேன். கருத்துக்கேட்கும்போது அரசியல்திரிபுகள் அற்றவர்கள், சொல்லப்போனால் ஆதரவுநிலையுடன் இவ்வரசை நோக்கியவர்களிடமிருந்தே கேட்டறிகிறேன். விளைவாக உருவான என் எண்ணம் சுதந்திரத்துக்குப்பின்னர் இந்தியாவில் உருவான அரசுகளில் முழுத் தோல்வியடைந்த இரண்டு அரசுகளில் ஒன்று இது என்பதே. இன்னொன்று 1971- 77 ல் இந்திராகாந்தி அமைத்த அரசு.” என்று கூறிவிட்டு அந்த இரண்டு அரசுகளையும் ‘ஒற்றை மனிதரை முன்னிறுத்தும் நபர் வழிபாட்டு அரசியல்’, இப்படித் தனிமனிதரை மையமிட்டு உருவாகும் போது அமையும் `சமையற் கட்டுச்சபையின் நிர்வாகம்’, இவை இரண்டும் செயல்படக் காரணமாக அமைந்திருக்கும் `அதிகாரியாதிக்க அரசு (bureaucratic government)’ என்ற மூன்று அம்சங்களின் வழி ஒப்பீடு செய்கிறார்.

இம்மூன்று அம்சங்களால்தான் `முற்றிலும் செயல்படாத, ஆனால் இடைவிடாது வெற்றுச்சொற்களை வீசிக்கொண்டே இருக்கும் அரசு உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே இன்றைய அரசும் மிகப்பெரிய பொருளியல் குளறுபடிகளை, தேக்கத்தை உருவாக்கிவிட்டு கவர்ச்சியான சொற்களை உமிழ்ந்துகொண்டிருக்கிறது’ என்றும் எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.

"நரேந்திர மோடிக்கும் இந்திராகாந்திக்கும் இடையேயான ஒற்றுமைகள் வியக்கவைப்பவை. இருவரும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வுகொண்டவர்கள். ஆகவே செயற்கையாக ஓர் இரும்புத்தோற்றத்தை நடிக்கிறார்கள். சர்வாதிகாரம்மூலம் ஆற்றல்கொண்டவர்களாக ஆக முயல்கிறார்கள். அதற்காக நம்பிக்கைக்குரியவர்களின் சிறுகுழுவை உருவாக்கி அதைச் சார்ந்திருக்கிறார்கள். தனிமனிதபிம்பம், மிகையுணர்ச்சிப் பிரசாரம் வழியாக அரசியலைக் கையாளமுடியும் என நினைக்கிறார்கள். தேசப்பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே உருவாக்கித் தங்களை ரட்சகர் எனக்காட்டி அதிகாரத்தைக் கையாள்கிறார்கள் `என்னைக்கொல்லச் சதி’ என இந்திரா காந்தி கூச்சலிடாத நாளே இல்லை. இவர்கள் இந்தியாவை ஆள்வதற்கான அறிவாற்றலோ நிர்வாக அமைப்போ இல்லாத நிலையில் முற்றிலும் செயல்படாத ஒரு கருங்கல்லை அரசு என மக்கள்மேல் சுமத்துகிறார்கள்.

இந்திரா காந்தியாவது சில நலத்திட்டங்களைச் செய்ய முயன்றார். ஆனால், மோடி அரசு பசப்புச் சொற்கள், பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது. எளிய அளவில்கூட ஒரு நலம்நாடும் திட்டம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்கள் எவையுமில்லை, எளிய கவர்ச்சித் திட்டங்கள் கூட இல்லை. சொல்லப்போனால் இங்கே மக்கள் என ஒரு திரள் இருப்பதையே இவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கை மிக ஆபத்தானது. மேலும் மேலும் கொள்ளையிடுவதற்கான அனுமதியை இந்தியச் சமூகம் அளிப்பதாகவே இவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன்பொருட்டேனும் இவர்கள் அகன்றாகவேண்டும். வேறு வழியே இல்லை. இதுவே என் அரசியல்!” 

என இந்தக் கட்டுரையில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார் ஜெயமோகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு