Published:Updated:

``அப்ப வருத்தப்பட்டோம்... ஆனா, இப்ப..?!'' - `குணமா வாய்ல சொல்லணும்' ஸ்மித்திகாவின் பெற்றோர்

``அப்ப வருத்தப்பட்டோம்... ஆனா, இப்ப..?!'' - `குணமா வாய்ல சொல்லணும்' ஸ்மித்திகாவின் பெற்றோர்
``அப்ப வருத்தப்பட்டோம்... ஆனா, இப்ப..?!'' - `குணமா வாய்ல சொல்லணும்' ஸ்மித்திகாவின் பெற்றோர்

தன்னைச் சுற்றி பரவியிருக்கும் இந்தப் புகழ் வெளிச்சத்தைக் கண்டுகொள்ளாமல், கொய்யா மர நிழலில் தன் நண்பர்களோடு ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கிறது அந்த மழலை.

"திட்டாம அடிக்காம குணமா வாயில சொல்லணும்"

தாயிடம் திட்டு வாங்கி... அழுது கொண்டே பேசும் அந்தக் குழந்தைதான் சென்ற வார ஹாட் நியூஸ். அவள் சொன்ன டயலாக்கை மறுபடியும் மறுபடியும் போட்டு கேட்காதவர்கள் குறைவு என்றே சொல்லலாம். யார் அந்தச் சுட்டி... எங்கு இருக்கிறார் என்று கண்டறிந்தோம்.  

திருப்பூரில் உள்ள மண்ணரை என்ற பகுதியில் அந்தக் குழந்தை வசிப்பதாக நமக்குத் தகவல் வரவே, நேராக அவரது வீட்டுக்குப் பயணப்பட்டோம். வாசலில் வைக்கப்பட்டிருந்த கொய்யா மரத்தின் நிழலில் விளையாடிக்கொண்டிருந்தாள் சிறுமி ஸ்மித்திகா. கேமராவோடு நாம் சென்றதைக் கண்டதும், சிரித்துக்கொண்டே அவள் வீட்டுக்குள் ஓடிசென்று ஒளிந்துகொள்ள, சிறுமியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார் அவரது அம்மா பிரவீணா. ``அந்த வீடியோ வெளியானதுலேருந்து மீடியா ஆள்கள் வந்துட்டே இருக்காங்க. குட்டி, ஏரியாவிலும் ரொம்ப பிரபலமாகிட்டா... அதான் அம்முனிக்கு ஒரே வெட்கமா வருது என்று அம்மா பிரவீனா சொல்ல, ``அங்கிள்... அந்த டயலாக்கை மட்டும் சொல்லுன்னு கேட்காதீங்க... எல்லார்கிட்டேயும் அதையே சொல்லிச் சொல்லி எனக்கு இப்போ போர் அடிக்குது!'' என்று கூறிவிட்டு, பாதியில் நிறுத்திய விளையாட்டை மீண்டும் தொடர ஆரம்பித்தார் ஸ்மித்திகா.

"எனக்கு மதுரை பக்கம் திருமங்கலம். சின்ன வயசுலேயே குடும்பத்தோடு திருப்பூருக்கு வந்துட்டோம். பள்ளிக்கூடம் போன காலத்தில் இருந்தே பிரகாஷை எனக்குத் தெரியும். என் அண்ணனோட ஃப்ரெண்ட் இவர். பார்த்தோம் பேசினோம் ஆறு வருஷம் எங்க லவ் தொடர்ந்தது. வழக்கம்போல ரெண்டு வீட்டிலேயும் பிரச்னை. ஒரு கட்டத்துல எங்க இவர கட்டிக்காமப் போயிடுவேனோன்னு பயந்து தற்கொலைகூட பண்ணிக்கப் பார்த்தேன். ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் உசுர காப்பாத்தி, ஒருவழியா எங்களுக்குக் கல்யாணமும் பண்ணி வெச்சாங்க. அதுக்கப்புறம்தான் சிரமம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சுது. ராத்திரி பகலா இவர் ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டாலும், வாங்குன கடனுக்கு வட்டியைக் கட்டவும், ஆட்டோவுக்குத் தவணை செலுத்தவுமே பணம் பத்தாது. சரியான வருமானம் இல்லாம, வீட்டுல பல நாள்கள் அடுப்பு எரியாமலும் போயிருக்கு. அத்தனையும் தாங்கிட்டு வாழ்க்கையை நகர்த்திட்டு இருக்கும்போதுதான் ஸ்மித்திகா பொறந்தா. எங்களோட கஷ்டங்களை எல்லாம் மறக்கடித்து சந்தோஷத்துல கொண்டாட வெச்சது அவதான். இருந்தாலும் வீட்டுச் செலவுகள் இன்னும் அதிகமாச்சு. அம்மாவிடம் குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு நானும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அதுக்குப் பிறகு ஓரளவுக்குத் தாக்குப் பிடிச்சோம். எத்தனை பிரச்னைகள், எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், மகளை தூக்கி மடியில உட்கார வெச்சுட்டேன்னா எல்லாத்தையும் மறந்துருவேன். கல்யாணம் ஆனதுல இருந்தே இவர்கிட்டே கேமரா செல்போன் வாங்கணும்னு பலதடவை கெஞ்சியிருக்கேன். பொறுமையா வாங்கலாம்னு சொன்னவர், இப்போ ஒரு 6 மாசத்துக்கு முன்னாடிதான் புது செல்போன் வாங்கிக் கொடுத்தார். கையில் செல்போன் வந்ததிலிருந்தே என் மகளை விதவிதமாக போட்டோ எடுத்து ரசிச்சிட்டு இருப்பேன். எப்போவுமே துறுதுறுன்னு அவ பண்ற சேட்டைகளை எல்லாம் வீ்டியோவாக எடுத்து வெச்சு, இவர்கிட்டேயும், எங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்டேயும் காமிக்கிறதுல எனக்கொரு ஆனந்தம்.

அன்னைக்குக்கூட ஸ்மித்திகா ஸ்கூலுக்குப் போனப்போ அவளுக்குச் சாப்பிட கொஞ்சம் உலர் திராட்சைகளை டப்பாவில் வைச்சு அனுப்பியிருந்தோம். ஆனா சாப்பிடாம பாக்ஸ் அப்படியே ரிட்டர்ன் ஆனதும் `ஏன் பாப்பா..! சொல்ற பேச்சைக் கேட்காம இப்படிப் பண்ணுறேனு' என் கணவரும் அவளை கண்டிக்க ஆரம்பித்தார். உடனே கோபப்பட்ட ஸ்மித்திகா அவரை அடிக்க போனா. சட்டுனு கோபமான நான்... `இப்படியெல்லாம் நீ செய்யலாமா, நாங்களும் உன்னைத் திருப்பி அடிக்கட்டுமா?''னு அதட்டினேன். உடனே அழ ஆரம்பிச்சவளை  நான் வீடியோவாக எடுத்து வைச்சேன். அதுக்கப்புறம் ஒரு 10 நாள்கள் கழிச்சு அந்த வீடியோவை என் தோழி ஒருத்திக்கு விளையாட்டா அனுப்பியதுதான் தாமதம், ஊர் உலகத்துக்கே பரவி இந்தளவுக்கு ஃபேமஸாகியிருச்சு'' என்று பிரவீனா சொல்லி முடிக்க, அவரைத் தொடர்ந்து பேச தொடங்கினார் கணவர் பிரகாஷ்.

``தினமும் காலையிலும், சாயங்காலமும் ஏரியாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ஆட்டோவில் ஸ்கூல் டிரிப் அடிக்கிறேன். அதுபோக மற்ற நேரங்களிலும் சவாரி வந்துட்டேதான் இருக்கும். காலையில் ஸ்மித்திகா எழுவதற்கு முன்னாடியே நான் வீட்டுல இருந்து கிளம்பினா, திரும்ப வீடு வந்து சேரும்போதும் அவ தூங்கியிருப்பா. புள்ளைய ரொம்ப மிஸ் பண்றோமேன்னு ஒரே ஏக்கமா இருக்கும். அதைப் பார்த்துட்டுதான் பிரவீனா இப்படியெல்லாம் வீடியோ எடுத்து வெச்சு, நான் வீட்டுக்கு வந்ததும் அதை எங்கிட்டே காமிக்க ஆரம்பிச்சாங்க. 

எங்களுக்குக் கல்யாணம் முடிந்து, என் மனைவி மாசமா இருந்தப்போ ஆம்பள புள்ளைதான் எனக்கு வேணும்னு வைராக்கியமா சொல்லிட்டு திரிஞ்சவன் நான். ஆனால் பிறந்தது பெண் குழந்தைன்னு சொன்னதும், வேதனையில் 2 நாள் வீட்டுப் பக்கமே போகலை. அதையெல்லாம் நெனச்சுப் பார்த்தா, எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்னு இப்போ தோணுது. யார் யாரோ எங்கிருந்தெல்லாமோ போன் பண்ணி வாழ்த்துறாங்க. சினிமாவில் நடிப்பதற்கும், டி.வி சேனல் நிகழ்ச்சிகளுக்கும் கூப்பிடுறாங்க. என் மகள் எங்குடும்பத்துக்கே பெருமை தேடிக் கொடுத்துட்டா சார்..!'' என்று நெகிழ்கிறார் பிரகாஷ். 

கடந்த சில நாள்களில் ஸ்மித்திகாவைப் பற்றிப் பேசாத மீடியாக்கள் இல்லை. அந்த வீடியோவை பகிராத ஆட்களும் குறைவுதான். ஆனால் தன்னைச் சுற்றி பரவியிருக்கும் இந்தப் புகழ் வெளிச்சத்தைக் கண்டுகொள்ளாமல், கொய்யா மர நிழலில் தன் நண்பர்களோடு ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கிறது அந்த மழலை.

அடுத்த கட்டுரைக்கு