Published:Updated:

“பெருந்தச்சன்… பெருந்தமிழன்… மாமல்லன்…” மண் மணக்கும் மல்லை விருதுகள்! 

JAYAVEL B
“பெருந்தச்சன்… பெருந்தமிழன்… மாமல்லன்…” மண் மணக்கும் மல்லை விருதுகள்! 
“பெருந்தச்சன்… பெருந்தமிழன்… மாமல்லன்…” மண் மணக்கும் மல்லை விருதுகள்! 

சிற்பம், தற்காப்பு, தமிழ் வளர்ச்சி போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தி வருகிறது மல்லை தமிழ்ச்சங்கம்.

மல்லை தமிழ் சங்கத்தின் இந்த ஆண்டு விருது வழங்கும் விழா மாமல்லபுரம், மரகதப் பூங்காவில் நேற்று (23.09.2018) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் தலைமைச் சிற்பி பாஸ்கரன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய மல்லை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா. “விருது கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த விருதுகளையெல்லாம் நாங்கள் கொடுக்கவில்லை. இந்தப் பகுதியிலே வாழ்ந்த மூதாதையரின் சான்றுகளை மட்டுமே அடையாளமாக வைத்து விருதுகளை வழங்கிக்கொண்டிருக்கிறோம். ‘ஞானத் தமிழ் புரிந்த நான் பெருந்தமிழன்’ என்று தன்னை பறைசாற்றிக்கொண்ட பூதத்தாழ்வார் அவதரித்த பூமி என்பதால் அவரின் பெயரால் பெருந்தமிழன் விருது கொடுக்கப்படுகிறது.

இந்த மண்ணில் வெட்டுதல், கட்டுதல், குடைதல் என்று மூன்றுவித சான்றாக விளங்கிக்கொண்டிருக்கும் திருக்கடல் மல்லையில், உலகத்திலேயே முதன்முதலாகச் சிற்பத்திற்கென்று நூல் வகுத்துதந்த மகேந்திரவர்மன் பல்லவன் ‘பெருந்தச்சன்’ என்று அழைக்கப்பட்டார். அவரின் நினைவாகப் பெருந்தச்சன் விருது வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள துறைமுகப் பட்டினத்தில்தான் வணிகத்தையும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தையும் செலுத்துவதற்காக வீரர்களைத் தேர்வு செய்து மாமல்லபுரத்தைக் கட்டிக்காத்தார்கள் என்பது வரலாறு. யாராலும் வெல்லமுடியாத சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வாதாபிகரையில் வீழ்த்தி வாகை சூடினான் இந்த மண்ணில் வாழ்ந்த நரசிம்ம பல்லவன். அவனுக்கு ‘மாமல்லன்’ என்ற பெயர் உண்டு. அந்த வீரனின் பெயரால்தான் மாமல்லபுரம் என்ற பெயர் உருவானது. அவரின் பெயரால் ‘மாமல்லன்’ விருது வழங்கப்படுகிறது” என விருதுகளின் வரலாற்றினை நினைவுகூர்ந்தார். 

தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கத் தலைவர் மிக்கி செட்டி அவர்களுக்கு பெருந்தமிழன் ராஜராஜன் விருதும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ. விஜயராகவன் அவர்களுக்கு ‘பெருந்தமிழன்’ விருதும், சிற்பி ஆர். எழிலரசன் அவர்களுக்கு பெருந்தச்சன் விருதும், தடகள வீராங்கனை சாந்தி சௌந்தர்ராஜன் அவர்களுக்கு மாமல்லன் விருதும் வழங்கப்பட்டன. 



தென்னாப்பிரிக்காவில் உலகத் தமிழ் பண்பாட்டுத் தலைவரான மிக்கி செட்டி, தென்னாப்ரிக்காவில் உள்ள தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் இந்தியர்களைத் தென்னாப்பிரிக்க அரசு சார்பாக வரவேற்று உபசரிக்கும் பொறுப்பை அந்நாட்டு அரசு அவருக்கு வழங்கியுள்ளது.

“தமிழகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு லட்சக் கணக்கானவர்கள் புலம் பெயந்திருக்கிறார்கள். அதில் பலர் கடல் பயணத்தின்போதே இறந்திருக்கிறார்கள். கரும்புத் தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் எனப் பலர் தொடர்ந்து இறந்துபோனார்கள். அதில் மிச்சம் இருப்பவர்களின் அடையாளம்தான் நாங்கள். நாங்கள் தென்னாப்பிரிக்காவில் தமிழை பேசுவதற்கும் எழுதுவதற்கும் சிரமம் உள்ளது. இந்தப் பிரச்னைகளை இங்கிருக்கும் அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும். மேலும், இங்கிருந்து தமிழர்கள் தென்னாப்பிரிக்கா சென்றதன் அடையாளமாகச் சென்னையில் ஒரு நினைவுத்தூண் எழுப்ப வேண்டும். உலக அளவில் புலம்பெயந்த தமிழர்களின் வேண்டுகோளாக இதை நாங்கள் வைக்கிறோம்” என்றார் மிக்சி செட்டி. 



அடுத்துப் பேசிய தளகள வீராங்கனை சாந்தி சௌந்தர்ராஜன், “நான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு ஆயிரக்கணக்கானவர்கள் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களை உலக அளவில் வெற்றி பெறச் செய்ய ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பது என் லட்சியம். இதுவரை என்னிடம் 35 பேர்தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 7 பேர் காவல்துறையில் அதிகாரிகளாகப் பணிபுரிகிறார்கள். சிலர் தேசிய அளவில் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என எனக்கு வருத்தம் உள்ளது. ஆனால், என் மாணவர்கள் மூலமாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று எனது லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்வேன்” என்றார். 
மண் சார்ந்த நினைவுகளோடும் மன நிறைவோடும் சென்றனர் மல்லை மக்கள்!