Published:Updated:

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

மூன்றெழுத்து அற்புதம்ஓவியங்கள் : கே.ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

என்னுடைய வழக்கறிஞர் அம்மாவே!

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

நான் சாப்பிடாமல் டியூஷன் சென்டருக்குச் சென்றால் பால் டம்ளரோடு வந்து நிற்பார் என் அம்மா. இதைப் பார்த்து மற்ற பிள்ளைகளும் ஆசிரியரும் சிரிப்பார்கள். என் பரீட்சைக்கு இரவு முழுவதும் கண்விழித்து, காபி போட்டு குஷிப்படுத்தி படிக்க வைப்பார். நான் எத்தனை முறை குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், `அடுத்த தடவை நீதான் முதல் மார்க்' என்று சொல்லி உற்சாகப்படுத்துவார். சின்ன சின்னத் தவறு செய்து அப்பாவிடம் அடி வாங்கும்போது, என்னுடைய வழக்கறிஞராகவே வேலை செய்து, என்னைக் காப்பாற்றி, அதேநேரம் என் தவற்றையும் எனக்குப் புரிய வைப்பார். கல்லூரியில் பிரச்னை, தோழிகளோடு சண்டை என என் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லி என் தோழியாக நிற்பார். திருமணமாகி, குழந்தை பெற்ற பின்னரும், நான் மாமியார் வீட்டிலிருந்து வீட்டுக்கு வந்தால் எல்லாரும் கேலி செய்ய, எனக்கு உணவு ஊட்டிவிட்டு, அம்மா மகிழும்போது என் உள்ளம் பூரிக்கும். இத்தனைக்கும் என் அம்மாவுக்கு இருந்தது ஒரு கை மட்டுமே என்பதால், எப்போதும் என் மனம் நெகிழும்.

- என்.தில்ஷாத் பேகம், புதுச்சேரி - 5

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

அமைதிப்புரட்சி நடத்திய அம்மா!

‘அ
டுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று சொல்லி வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில், என் கல்விக்காக, அமைதிப்புரட்சி நடத்திய எங்க அம்மாதான் பெஸ்ட். அம்மா ஒரு மருத்துவரின் மகள். வங்கி அதிகாரியின் மனைவி. பணி நிமித்தம் என் அப்பா அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டபோது, மூத்த மகளாகப் பிறந்த என் படிப்பும் பல தடைகளைச் சந்திக்க நேர்ந்தது. சில வருடங்கள் வீணாயின. இந்தக் கஷ்டங்களையெல்லாம் தாண்டி, எஸ்.எஸ்.எல்.சி முடித்தபோது, அந்தக்கால வழக்கப்படி திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். எனக்கோ படிப்பின்மீது அதீத ஆர்வம். இது பற்றி என் தந்தை அறிந்திருந்தாலும், உற்றார் உறவினரின் நெருக்கடிகளுக்கு, செவிசாய்க்க வேண்டிய நிலையில், குழப்பத்துக்கு ஆளானார். எனக்கோ பயம் பற்றிக்கொண்டது. இந்தக் காலம் போல், பெற்றோரிடமோ மற்றவர்களிடமோ, பெண்கள் எதைப் பற்றியும் மனம்விட்டுப் பேச முடியாது என்ற நிலையில் என்னால் முடிந்தது மௌனப் போராட்டம்தான். உண்ணாவிரதம் இருந்தேன்.

பட்டினியால் மகள் படும்பாட்டைத் தாங்க முடியாமல், என் அம்மாவின் வயிறு கலங்கியது. செய்வதறியாது தவித்தார். என் தந்தையிடம் பேசவும் தைரியமில்லை. நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின், என்மீது மிகவும் பாசமுள்ள என் அத்தையிடம் சென்று, என் உண்ணாவிரதத்தின் வீரியம் பற்றிச்சொல்லி, அவர்களைக் கையோடு அழைத்துவந்து, என் அப்பா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோரிடம் எனது நிலையை எடுத்துச் சொல்ல வைத்து, கல்லூரியில் சேர்த்தார்கள். என்னை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வரும்போது, கல்லூரி முதல்வரிடம், `என் பெண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறி, மாமியார் வீட்டில் மகளை விட்டுவிட்டு வரும் தாய்போல, கண்ணீருடன் அம்மா நின்ற காட்சி இன்றும் என் கண்முன் வந்து நிற்கிறது. பி.யு.ஸி படிப்பை முடித்தேன். மறுபடியும் போராட்டம். இப்போதும் அம்மாதான் பக்கபலமாக நின்று, என்னைப் பட்டப்படிப்பில் சேர்க்கும் நிலையை உருவாக்கினார். திருமணப் பேச்சால் என் படிப்பு எந்த நேரத்திலும் தடைப்பட்டு விடுமோ என்கிற பயத்திலேயே படித்தாலும், எங்கள் குடும்பத்தின் முதல் பெண் பட்டதாரியாகும் வாய்ப்பைப் பெற்றேன். இதற்கெல்லாம் காரணம் என் அம்மாதானே!

- என்.ரங்கநாயகி, கோவை-25

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

ஐந்து குழந்தைகளுக்குப் பிறகு ஹாஸ்டல் வாழ்க்கை!

ம்மா தான் என் உயிர்; என் உலகம்; என் வழிகாட்டி. அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் ஒன்பது. முதல் ஐந்து குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் வரை அவர் வெளி உலகம் அறியா குடும்பத்தலைவி. தந்தையின் குறைவான வருமானத்தால் வீட்டில் வறுமை நிலை. வெளியில் பணிக்குச் செல்ல முடிவெடுத்தாள். அந்தக் காலத்தில் மகப்பேறு உதவியாளர் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு படிப்போடு, ஓரளவு ஆங்கில அறிவும் அவசியம். ஐந்து சிறு குழந்தைகளையும் மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு, மாமனாரிடம் ஆங்கிலத்தில் ஆர்வமுடன் தனிப்பயிற்சி எடுத்தார். நேர்முகத் தேர்வில் வென்றார். ஒன்றரை வருட காலப் பயிற்சியில் சேர்ந்தார். வென்றார். அரசுப் பணியில் சேர்ந்தார்.

மறுபடியும் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் ஒருத்தி நான். அல்லும் பகலும் அயராது உழைத்தார். இடையில் எனது தந்தையும் இறந்துவிட, அனைத்துப் பொறுப்புகளையும் மனம் தளராது தனி ஆளாகச் சுமந்தார். அவர் உலகமே நாங்கள்தாம். அனைவரையும் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து பேரன், பேத்திகள் கண்டு தனது 93-வது வயதில் உயிர் நீத்தார்.

ஐந்து குழந்தைகளுக்குப் பிறகு பயின்று, அதுவும் ஒன்றரை ஆண்டு காலம் ஹாஸ்டலில் தங்கிப் படித்து, வெற்றி பெற்று, பணியில் அமர்ந்தாரே... என்ன ஒரு மன உறுதி! அதனால் என் அம்மாதான் பெஸ்ட்!

- எஸ்.லலிதா சுப்பிரமணியன், திருநெல்வேலி

மேலும் பல வாசகிகளின் உணர்வுகள் அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு