Published:Updated:

சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்

சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்
பிரீமியம் ஸ்டோரி
சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

Published:Updated:
சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்
பிரீமியம் ஸ்டோரி
சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்

ங்குபாய் ஹங்கலுக்கு அவர்கள் வருவதும் தெரியாது, வணக்கம் வைப்பதும் தெரியாது, விடைபெற்றுச் செல்வதும் தெரியாது. ஒருபக்கமாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டிருப்பார். சில நேரம் அவர் உறங்குவது போல இருக்கும். அல்லது வெறித்துப் பார்ப்பது போலவோ யோசித்துக்கொண்டிருப்பது போலவோ தோன்றும். ஆனால், மாணவர்கள் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். யாரேனும் ஒரு ராகத்தைக் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இழுத்துவிட்டால் போதும்; கணீரென்று கங்குபாயின் குரல் சீறிவரும். `இல்லை, இல்லை அப்படியல்ல; நான் பாடுவதைக் கவனி.'

சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்

கங்குபாய் ஹங்கலின் பாடலை ஒருவர் முதன்முறை கேட்டால் பாடுபவர் ஆண் என்றே நினைத்துக்கொள்வார். சில இசை வடிவங்களுக்கு ஆண் குரல்தான் எடுப்பாகவும் கம்பீரமாகவும் இருக்கும் என்று தீவிரமாக நம்பிக்கொண்டிருந்த கலைஞர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர வீழ்த்திய விநோதமான குரல் அவருடையது. ஒரு பெண் எதை, எப்படி, எதுவரை பாட வேண்டும், என்பதற்கு இந்துஸ்தானி இசையுலகம் கவனமாக உருவாக்கி, காலம் காலமாகக் காப்பாற்றி வைத்திருந்த வரையறையையும் இலக்கணத்தையும் உடைத்துத்தகர்த்த குரலும்கூட. அவருடைய இசை மட்டுமல்ல; வாழ்வும்கூட தனித்துவமானதாகவும் அசாதாரணமானதாகவும் இருந்ததால்தான் இது சாத்தியமானது.

1924-ம் ஆண்டு பெல்காமில் காந்தி தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு பள்ளிக்குழந்தைகள் சிலரை மேடையில் ஏற்றிப் பாடவைத்தார்கள். 11 வயது கங்குபாய் ஹங்கலும் அவர்களில் ஒருவர். இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் நினைவு கூரும்போது கங்குபாயின் குரலில் உற்சாகமோ, பெருமிதமோ இல்லை. ‘ஆம், பெல்காம் மாநாட்டில் பாடியது எனக்கு நினைவில் இருக்கிறது. காந்திஜி வந்திருந்தார். ஆனால், என்னை மற்ற மாணவர்களிடமிருந்து பிரித்து, தனியே உணவு கொடுத்து, தனியே சாப்பிடச் சொல்வார்களே என்னும் கவலை நிகழ்ச்சி முடிவடையும்வரை என்னைப் போட்டு உருட்டிக்கொண்டிருந்தது.’

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறப்பதென்பது காலில் சங்கிலியோடு பிறப்பதற்கு ஒப்பானது' என்றார் அம்மா. `அதை நீ வாழ்நாள் முழுக்க சுமந்தாக வேண்டும். மறக்கவோ, மறைக்கவோ முடியாது. ஒரு பெண்ணாகவும் நீ இருப்பதால் இரட்டைச் சங்கிலிகள் உனக்குப் பூட்டப்பட்டிருக்கின்றன. இந்தச் சங்கிலிகள் அனுமதிக்கும்வரை நீ செல்லலாம். மேலே செல்ல முயன்றால் இரண்டும் போட்டியிட்டு உன்னைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்.' காந்தி முன்னே பாடிய காலம் தொடங்கி 94-வது வயதில் இறுதிக் கச்சேரியில் பாடியது வரை கங்குபாய் ஹங்கலை இரும்புச் சங்கிலிகள் பின்னுக்கு இழுத்துக்கொண்டே இருந்தன. இடறிவிட்டுக்கொண்டே இருந்தன. அவர் சதையை அரித்துத் தின்றுகொண்டே இருந் தன. அவற்றுக்கு எதிராக கங்குபாய் நடத்திய தொடர்ச்சியான போராட்டமே அவர் வாழ்க்கை. தனது போராட்டத்தில் அவர் பயன்படுத்திய முன்னணி ஆயுதம், இசை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்

கங்குபாயின் அம்மாவுக்குக் கர்னாடக இசை பரிச்சயம் இருந்ததால் அதையே அவர் தன் மகளுக்கும் கற்றுக்கொடுத்தார். ஆனால், கங்குபாய் மேற்கொண்டு கற்க விரும்பியது இந்துஸ்தானி என்பதால் குடும்பம் தார்வாடில் இருந்து ஹூப்ளிக்குக் குடிபெயர்ந்தது. தினமும் மாலை ஒரு வழித்துணையையும் அழைத்துக்கொண்டு ரயில் ஏறி குருவின் வீட்டுக்குச் சென்று பாடம் படிக்க வேண்டும். பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் குருவுக்கு வீட்டு வேலைகளையும் கங்குபாய் செய்ய வேண்டியிருந்தது. அவர் பாட ஆரம்பித்து, அவர் குரல்வளத்தைக் கண்டு அதிசயித்து, அவருடைய கற்றல் திறனைக் கண்டு தன் பிழை உணர்ந்து அந்தக் குரு கங்குபாயைப் பிற பணிகளிலிருந்து விடுவித்து இசை மட்டும் கற்கச் செய்தார். ‘சிறிய வயதில் இப்படித்தான் பக்கத்து வீட்டில் மாங்காய் பறிக்கச் செல்வேன். அவர்கள் என்னைப் பார்த்தாலே விரட்டியடிப்பார்கள். எனக்கு அங்கீகாரமெல்லாம் கிடைத்தபிறகு அதே வீட்டுக்காரர்கள் என்னை வரவேற்று உபசரித்தனர்.’

இந்துஸ்தானி இசையின் முழு பரிமாணத் தையும் உள்வாங்கிக் கொள்வதற்குள் 16-வது வயதில் குருராவ் கவுல்கி என்னும் வழக்கறிஞருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். வேற்றுச் சாதிக்காரராக இருந்தாலும் இது அவருக்கு இரண்டாவது திருமணம். இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். கங்குபாயின் இசையல்ல, அதன்மூலம் அவருக்குக் கிடைக்கத் தொடங் கிய புகழும் அங்கீகாரமும் அல்ல, பணமே குருராவுக்கு முக்கியமானதாக இருந்தது. வியாபாரம் செய்கிறேன், முதலீடு செய்கிறேன் என்று கங்குபாயை நச்சரித்துக்கொண்டே இருந்தார். தன் கையில் வந்துசேர்ந்த பணத்தையெல்லாம் அவர் தன் கணவரிடமே கொடுத்துக்கொண்டிருந்தார். கங்குபாயின் பணம் இனித்தது என்றாலும் இறுதிவரை கணவரின் ஆசாரமான வீட்டில் அவர் அனுமதிக்கப்படவேயில்லை. ஒருகட்டத்தில் கணவரிடமிருந்தும் ஒதுங்கி, தனியாகத் தன் குழந்தைகளுடன் வசிக்கத் தொடங்கினார்.

ஆனால், அவர் சற்று அச்சப்பட்டது பாடுவதில் சிக்கல் ஏற்பட்டபோதுதான். தொண்டையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை அவரைக் குணப்படுத்தியது என்றாலும் மென்மையும் குழைவும் மறைந்து கட்டையான ஆண் குரல் தோன்றியிருந்தது. `அம்மா, இன்னொரு சங்கிலி' என்று மனத்துக் குள் சொல்லிக்கொண்டே பாடினார்.

கொல்கத்தாவில் ஒருமுறை இசைக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு ஆகியிருந்தபோது கங்குபாயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் மெலிந்த, ஒடுங்கிய கங்குபாயை நேரில் கண்டதும் ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கிலி பிறந்துவிட்டது. `நாளைதான் உங்கள் நிகழ்ச்சி. ஆனால், இன்று இரவு நீங்கள் எங்களுக்குப் பாடிக் காட்டியாக வேண்டும். பிடித்திருந்தால்தான் மேடை தருவோம்' என்று சொல்லிவிட்டார்கள். கங்குபாய் வாயைத் திறந்து பாட ஆரம்பித்தபோது அவர் குரலைக் கேட்டு அவர்கள் கிலி மேலும் கூடியிருக்கவும் வேண்டும். ஆனால், முழுக்கக் கேட்டுமுடித்தபோது பாரம் தாங்காமல் அவர்கள் கூனிக்குறுக நேர்ந்தது. திரிபுராவின் மகாராஜா அளித்த தங்கப் பதக்கத்தை அமைதியாகப் பெற்றுக்கொண்டு விடைபெற்றார்.

எத்தனை பேருக்கு மீண்டும் மீண்டும் விளக்குவது? எத்தனை முறை ஒரே விஷயத்தைப் புரியவைப்பது? எத்தனை சந்தேகங்களைத் தீர்த்துவைப்பது? `பெண் இசைக் கலைஞர் என்றால் பாலியல் தொழில் செய்பவரா?' என்றார் ஒருவர். `என்னது நீ ***** சாதியா? உன்னால் ராகமெல்லாம் பாட முடியுமா?' என்று சபை நடத்துவோர் புருவங்களை உயர்த்தினர். `என்னது எங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் பாட வேண்டுமா? பொதுவாக ஆண்கள்தாம் இதுபோன்ற பெரிய விழாக்களில் பாடுவார்கள்...'

விதிவிலக்காக வரவேற்ற மற்ற சாதியினரும் கூட கங்குபாயை வராந்தாவில் அமரவைத்தே உணவு பரிமாறினார்கள். `என்னை, என் இசையைப் புரிந்து ஏற்றுக்கொள்ள உனக்கு எத்தனை அவகாசம் தேவைப்படுமோ அதுவரை காத்திருக்கிறேன்; அதுவரை போராடுகிறேன்' என்றார் கங்குபாய். இந்துஸ்தானி உலகம் மெள்ள மெள்ள நெகிழ்ந்து கொடுத்து கங்குபாயை உள்ளே வர அனுமதித்தது. காலடி எடுத்து வைத்தபிறகு அந்த உலகை அவர் இசை மிக இயல்பாக ஆளத் தொடங்கிவிட்டது.

ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், நேபாளம் என்று வலம் வர ஆரம்பித்தார் கங்குபாய். ஐந்தாம் வகுப்பு படித்திருந்த அவருக்கு நான்கு பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டமளித்துப் பெருமிதம்கொண்டன. ஐம்பது விருதுகளும் இருபத்து நான்கு பட்டங்களும் மழையாகக் குவிந்தன. ஒன்பது பிரதமர்களிடமிருந்தும் ஐந்து குடியரசுத் தலைவர்களிடமிருந்தும் அடுத்தடுத்து விருதுகள் பெற்றுக்கொண்டார். சங்கிலிகள் கழன்றுகாணாமல் போய்விடவில்லை. அவை ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன என்னும் புரிதல் அவருக்கு இறுதிவரை இருந்தது. ‘பத்ம பூஷண் விருது பெறுவதற்கு முந்தைய இரவு எனக்கு உறக்கமே வரவில்லை. இதுவரை அனுபவித்துவந்த மன உளைச்சல், வலி, வேதனை அனைத்தையும் மறந்துவிட முடியுமா என்று முயன்று பார்த்தேன். மகிழ்ச்சியான ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஏன் இதையெல்லாம் நினைக்க வேண்டும் என்று புரியவில்லை.’

சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல்

தன் மகள் கிருஷ்ணா ஹங்கலை இந்துஸ் தானி உலகுக்கு அறிமுகப்படுத்தும்போது இரு துண்டுகளாகப் பிளவுண்டு கிடந்த அந்த உலகுக்கு எதிராகத் தனது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றார் கங்குபாய். ஒருவர் திறமையாக இருப்பதைவிடவும் ஆணாக இருப்பது ஏன் முக்கியமானதாக இருக்க வேண்டும்? வாய்ப்புகளும் விருதுகளும் சன்மானமும் ஏன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ் வேறாக இருக்கின்றன? ஆண் கலைஞர்களை பண்டிட், உஸ்தாத் என்று அழைத்து மகிழ்பவர்கள் பெண்களை ஏன் பாய், பேகம், ஜான் என்று பாலினத்தை வைத்துப் பிரித்து அடையாளப்படுத்த வேண்டும்? சபா நடத்துபவர்கள் தொடங்கி ஆல் இந்தியா ரேடியோ வரை எங்கெல்லாம் பெண்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறதோ, அங்கெல் லாம் தன் எதிர்ப்புகளை அழுத்தமாகப் பதிவு செய்தார் கங்குபாய். எலும்புப் புற்றுநோய் தாக்கியபோதும் பாடுவதையும் கற்றுக்கொடுப்பதையும் போராடுவதையும் நிறுத்திக்கொள்ளவில்லை. மெள்ள மெள்ள அவர் விடுபடுவதற்குள் மகள் கிருஷ்ணாவை அதே நோய் பீடித்துக் கொண்டது. அம்மாவுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி பலருடைய பாராட்டுகளைப் பெற்ற கிருஷ்ணா 2004-ம் ஆண்டு தனது 75-வது வயதில் இறந்துபோனார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, 2009-ம் ஆண்டு தனது 97-வது வயதில் கங்குபாய் ஹங்கல் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைந்தபிறகு இந்துஸ்தானி இசையுலகம் கங்குபாயை ஒரு கடவுளாக உயர்த்தி, வழிபட விரும்புகிறது. ஒரு சமூகப் போராளியாக அடையாளம் கண்டு அவரைப் பின்பற்ற முயல்வதைக் காட்டிலும் இது அவர்களுக்குச் சற்று எளிதானதாக இருக்கிறது போலும்.

கங்குபாய் ஹங்கல் இந்துஸ்தானி இசையுலகுக்கு மட்டும் சொந்தமானவர் அல்லர். கங்குபாயை உள்வாங்கிக்கொள்ள அவர் மேன்மைப்படுத்திய ‘கிரனா கரானா’ பாரம்பர்யம் குறித்தோ இந்துஸ்தானி இசை அடிப்படைகள் குறித்தோ, ஒருவர் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எவரையும் எளிதில் பற்றிக் கொண்டுவிடும் வலிமை மிகுந்த இசை அவருடையது. ஒருவரை மென்மையாக வருடிக்கொடுக்கும் தன்மை கங்குபாயின் இசைக்கு இல்லை. மயக்கி இன்னோர் உலகுக்குக் கடத்திச்சென்றுவிடும் ஆற்றலோ, அற்புதச் சக்தியோ அதற்கில்லை. உங்களை இந்த உலகோடும் அதன் அத்தனை முரண் பாடுகளோடும் பிசகுகளோடும் சேர்த்துக் கட்டிப்போட்டு நிறுத்திவைக்கும் பலம் மட்டுமே அதற்கு இருக்கிறது. கால்களைப் பிணைக்கும் சங்கிலிகளை உணரச்செய்யவும் அறுத்தெறியவும் ஒரு குரலுக்கு எவ்வளவு வலிமை தேவைப்படுமோ அவ்வளவு வலிமை மட்டுமே கங்குபாயின் குரலுக்கு இருக்கிறது.