Published:Updated:

விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா

விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா
பிரீமியம் ஸ்டோரி
விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா
பிரீமியம் ஸ்டோரி
விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா

சென்னை, கே.கே.நகரின் பிரதான தெருவாசிகளுக்குக் கன்னியம்மாவின் பெயர்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கே அவரது அடையாளம் கீரைக்காரம்மா. 48 வயது என்கிறார். தோற்றத்திலோ அதைத் தாண்டிய முதிர்ச்சி. அது உழைத்துத் தேய்ந்த உடல் என்பது பார்த்த கணத்திலேயே புரிகிறது. தினமும் நம் வாசலுக்கு வரும் இவரைப் போன்ற வியாபாரிகளிடம் பேரம் பேசி ஒரு ரூபாயைக் குறைத்து, பொருள் வாங்குவதையே மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறோம். ஆனால், அவர்களின் தினசரி வாழ்வென்பது இதுபோன்ற நிறைய இழப்புகளைச் சுமந்தது என்பதை பேரங்களின் இடையில் கவனிக்கத் தவறிவிடுகிறோம். கன்னியம்மாவின் கதை, அவரைப் போன்றோரின் வலியை உணரச் செய்வதுடன், எளியோர் உழைப்பின் மீது மதிப்பையும் நேசத்தையும் கூட்டும்.

விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா

‘`மேல்மருவத்தூர்ல எலப்பாக்கம்னு ஒரு கிராமத்துல பிறந்து வளர்ந்தேன். அம்மா அப்பாவுக்கு என்னையும் சேர்த்து எட்டுப் பிள்ளைங்க. பெத்தவங்களுக்கு எங்களைப் படிக்க வைக்க வசதியில்லை. எனக்குப் பள்ளிக்கூட வாசமே தெரியாது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்ப எனக்கு 15 வயசு. சித்தாள் வேலைக்குப் போயிட்டிருந்தப்ப, பில்டிங்லேருந்து விழுந்து. தலையில அடிபட்டது. அதுல ஒரு கண்ல பார்வை போயிடுச்சு. அன்னிலேருந்து ஒரு கண்ணோடுதான் வாழ்ந்திட்டிருக்கேன். எத்தனையோ டாக்டருங்களைப் பார்த்தாச்சு. ஒண்ணும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க....’’ - இடுங்கின கண்ணில் இன்னல் மறைத்துத் தொடர்கிறார் கன்னியம்மா.

‘`மெட்ராசுல கட்டிக்கொடுத்தாங்க. வீட்டுக்காரர் கொத்தனாரா இருந்தார். அவர்கூட சேர்ந்து நானும் கட்டட வேலை பார்த்திட்டிருந்தேன். அப்புறம் பூ வியாபாரம், கீரை வியாபாரம்னு ஏதேதோ செஞ்சேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு மகன். என் வீட்டுக்காரர் வேலைக்கே போக மாட்டார். நான் ஒத்தையாளா மூணு பிள்ளைங்களையும் தூக்கிச் சுமக்கிறதைப் பார்த்துட்டு அக்கம்பக்கத்துல உள்ளவங்கல்லாம் திட்டுவாங்க. ஆனாலும், மனுஷன் கண்டுக்கவே மாட்டார். எப்போதும் தண்ணியடிச்சிட்டுப் போதையிலேயே கிடப்பாரு. சித்தாள் வேலைக்குப் போய் சம்பாதிச்ச காசுலதான் மூணு பிள்ளைங் களுக்கும் கல்யாணம் கட்டிக் கொடுத்தேன். 

எனக்கு ஒரு கண்ல பார்வை கிடையாதுங் கிற விவரம் எங்க வீட்டுக்காரருக்குக்கூடத் தெரியாது. அதோடதான் கீரை வியாபாரம் பண்ணிட்டிருக்கேன். நடுராத்திரி ரெண்டு மணிக்கு வீட்டை விட்டுக் கோயம்பேடு போவேன். என் வீட்டுக்காரரும் துணைக்கு வருவார். கையில காசிருக்கிறதைப் பொறுத்து அம்பதுலேருந்து நூறு கட்டு கீரையும் கொஞ்சம் காய்கறிகளும் வாங்கிட்டு வருவோம். வீட்டுக்குத் திரும்ப காலையில அஞ்சு மணி ஆயிடும். அதையெல்லாம் பிரிச்சு எடைபோட்டு வியாபாரத்துக்கு எடுத்துட்டுப் போவேன். வித்து முடிக்க மதியம் பன்னிரண்டு ஆயிடும். சில நாள் எல்லாம் வித்துடும். சில நாள் விற்காது. கீரையாச்சே... வெச்சு உபயோகிக்க முடியாது. வாயில்லா ஜீவன்களுக்குக் கொடுக்கவோ, தூக்கிப் போடவோ வேண்டியதுதான்.

விற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை! - கன்னியம்மா

வீட்டுக்காரர் டி.வி.எஸ் 50 வண்டியில காய்கறிகளை வெச்சு எடுத்துட்டு வருவார். மழை, குளிர் சீஸன்ல தினமும் நடுஜாமத்துல எழுந்து கோயம்பேட்டுக்குப் போக முடியாது. சில நாள் உடம்புக்கு முடியாம போயிடும். காலையில எழுந்திருக்க முடியாது.  வியாபாரம் நடக்குதோ, இல்லையோ... தினம் அவருக்குத் தண்ணியடிக்க 120 ரூபாய் கொடுத்தாகணும். பணம் கொடுக்கலைனா அசிங்கமா பேசுவாரு. தகராறு பண்ணுவாரு. அடிப்பாரு. ‘இது என் வீடு... வெளியில போ’னு விரட்டுவாரு. மூணு வேளை சோறு இல்லைன்னாலும்  இருக்க இடமாவது வேணுமில்லையா? பல வருஷங்களா கூடையைத் தூக்கிட்டுப் போறதுல தலைவலி, கழுத்துவலி தாங்க முடியலை. ரொம்ப அதிகமானா ஆஸ்பத்திரிக்குப் போய் ஊசி போட்டுட்டு வருவேன். முடியலையேனு படுத்தா எங்க வயித்துப் பொழைப்புக்கு யாரும்மா தருவாங்க?’’ -  அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த ஆற்றாமை அதற்கு மேல் அவரைப் பேசவிடாமல் கண்ணீராகப் பெருக்கெடுக்கிறது.

‘`வயசாயிட்டே போகுது. மனசுல தெம்பு போய் பல வருஷமாச்சு. உடம்புல ஒட்டிக் கிட்டிருக்கிற கொஞ்சநஞ்ச தெம்பும் நாளுக்கு நாள் குறைஞ்சுட்டே போகுது. ராத்திரியில படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது.

என் பையனுக்கும் சரியான வேலையில்லை. ஆட்டோ ஓட்டுறான். அவனுக்குக் கடன் அதிகம். அவன் குடும்பத்தைப் பார்த்துக்கவே முடியாம திணறிட்டிருக்கான். அந்த நிலைமையில எங்களுக்கு எப்படி உதவி செய்வான்? பொண்ணுங்க வாழ்க்கையும் பெரிசா சுகமா இல்லை. ஒவ்வொரு நேரம் செத்துடலாமானுகூடத் தோணும். ‘அம்மா நீயும் இல்லைனா எங்களுக்குனு வேற யாரு இருக்காங்க’னு அழற பிள்ளைங்களுக்காகத் தான் எல்லாக் கஷ்டத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ்ந்திட்டிருக்கேன்.

அன்னன்னிக்கு எனக்கு அரைவயிறு நிறையுமாங்கிறதை என் உடம்புதான் தீர்மானிக்குது. எந்திரிச்சுப் போக முடிய லைன்னா, வயித்துல ஈரத்துணியைப் போட்டுக்கிட்டு, புருஷனோட கெட்ட வார்த்தைகளைக் கேட்டுக்கிட்டு விதியை நொந்தபடி இருக்க வேண்டியதுதான். சின்னதா ஒரு கடை போடவோ, தள்ளுவண்டி வாங்கவோ கையில நாலு காசு இருந்தாகூட சமாளிச்சுடுவேன். அடுத்தவேளை சாப்பாடு கிடைக்குமாங்கிற கேள்விக்கே பதில் தெரியாத எனக்கு எதிர்காலம் எப்படி யிருக்கப்போகுதுங்கிற கேள்விக்கு மட்டும் விடை தெரிஞ்சிடுமா என்ன?’’

விற்காமல் மிஞ்சிய கீரைகளை மாடுகளுக்கு இரையாகத் தந்துவிட்டு, வெறுமை சுமந்து வீடு திரும்புகிறார் கன்னியம்மா.