Published:Updated:

`களத்தில் கொல்லப்பட்டால் என் சடலத்தின் மீது இந்தக் கொடியைப் போர்த்துங்கள்!’ - `நவீன காலப் புரட்சியாளன்’ ஆம்ரோ

`களத்தில் கொல்லப்பட்டால் என் சடலத்தின் மீது இந்தக் கொடியைப் போர்த்துங்கள்!’ - `நவீன காலப் புரட்சியாளன்’ ஆம்ரோ
`களத்தில் கொல்லப்பட்டால் என் சடலத்தின் மீது இந்தக் கொடியைப் போர்த்துங்கள்!’ - `நவீன காலப் புரட்சியாளன்’ ஆம்ரோ

மேல்சட்டை இல்லாமல், கையில் பாலஸ்தீன கொடியுடன் போராட்டக் களத்தில் இருக்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. 

Yousef Munayyer Twitter Image
 

பிரெஞ்சுப் புரட்சியைச் சித்திரிக்கும் லிபர்டி ஓவியம் நினைவிருக்கிறதா? போர்க்களத்தில் மேல்சட்டை களைந்த நிலையில் பெண் ஒருவர் கைகளில் கொடியுடன் மக்களை முன்னின்று வழிநடத்தும் ஓவியம் அது. அந்த ஓவியத்தைச் சுதந்திரத்துக்கான (Liberty) அடையாளம் என்பார்கள். ஓவியத்தில் பெண்ணின் கைகளில் இருந்த அந்தக் கொடிதான் பின் நாளில் பிரான்ஸ் நாட்டின் கொடியானது. பிரெஞ்சு புரட்சியைச் சித்திரிக்கும் அந்த லிபர்டி ஓவியத்துடன் பாலஸ்தீனக் கொடியுடன் இருக்கும் இளைஞரின் புகைப்படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்ஸ் பகிர்ந்து வருகின்றனர். 


 

மேலும் சிலர், ` கோலியாத்தை தாவிது எதிர்த்துப் போரிடும் காட்சி’ என்று வர்ணித்து வருகின்றனர். முதலில் இந்தப் புகைப்படம் எந்தச் சூழலில் யாரால் எடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்...

காஸா... அன்றாடம் செய்திகளில் இடம்பெறும் ஒரு பெயர். பாலஸ்தீன நகரான காஸாவின் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டின் சத்தங்கள் ஒலித்துக்கொண்டே இருக்குமாம். 1948-ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் நடந்த போரில் அந்நாட்டு மக்கள் அகதிகளாகச் சிதறிச் சென்றனர். இஸ்ரேல் என்னும் சுதந்திர நாடு நிர்மாணிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அகதிகளாகப் பிற பகுதிகளுக்குத் துரத்தப்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமைகளை மீட்பதற்காகத்தான் காஸா-இஸ்ரேல் எல்லையில் இன்றுவரை  போராட்டம்  தொடர்கிறது. 


2014-ம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அந்தப் போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போருக்குப் பிறகு காஸாவில் இயங்கும் ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உக்கிரமானது. இது ஒருபுறம் இருக்க காஸா மக்களும் தங்கள் முன்னோர்களின் உரிமைகளை மீட்க, அதாவது, இஸ்ரேலின் எல்லையில் உள்ள நிலங்களை மீட்கப்போராட்டத்தில் குதித்துவிட்டனர். கடந்த ஏழு மாதங்களாகப் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேல் ராணுவமும் வான்வழித் தாக்குதல்களை அடிக்கடி நிகழ்த்தி உயிர்களைப் பலிகொண்டு வருகிறது. 

 `காஸா எல்லைப் பகுதியில் தற்போது இஸ்ரேலாக இருக்கும் பகுதியில் உள்ள தங்கள் முன்னோர்களின் நிலங்களைத் திரும்ப தர வேண்டும். அந்தப் பகுதிகளுக்குள் செல்ல மூதாதையர்களை அனுமதிக்க வேண்டும்’ என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. காஸா மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தரப்பில் கூறப்படும் காரணம் ஒன்றே ஒன்றுதான். `நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிராகத்தான் தாக்குதல் நடத்துகிறோம்.’ இப்போது அந்த வைரல் புகைப்படத்துக்கு வருவோம். அதை வைரல் புகைப்படம் என்று கூறி சிறுமைப்படுத்திவிட முடியாது. அதற்குப் பின்னால் பெரிய வரலாறே உள்ளது. கண்களில் ஒருவித வெறியுடன் கைகளில் கொடியுடன் சீறிவரும் அந்த இளைஞனின் பெயர் `ஆம்ரோ.’  முழுப்பெயர் A’ed Abu Amro. 20 வயதான இவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கொடியைப் பிடித்துக்கொண்டு கல்வீச்சு நடத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அக்டோபர் 20-ம் தேதி துருக்கி ஊடகத்தின் புகைப்படக் கலைஞர் முஸ்தஃபா ஹஸ்வானா என்பவரால் எடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை யூசஃப் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். 

மங்கலான கரும் புகை பின்னணியில், கூரிய புருவங்களைச் சுருக்கி எதிரே உள்ள இஸ்ரேல் ராணுவம் மீது கல்லை வீசுகிறார் ஆம்ரோ. மேல் சட்டைக் கிடையாது, ஒரு கையில் கொடி, மற்றொரு கையில் கற்களை வீச உதவும்  ஸ்லிங்ஷாட் ஸ்விங். பின்புறத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் அணிந்து களத்தில் இருக்க ஆம்ரோ மேல் சட்டைகூட இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

 Aljazeera ஊடகம் ஆம்ரோவைத் தேடிப்பிடித்து இந்தப் புகைப்படம் குறித்துக் கேட்டுள்ளது. அதற்கு ஆம்ரோ... “யார் போட்டோ எடுத்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அங்கு புகைப்படக்காரர்கள் இருந்தார்கள் என்பதுகூட தெரியாது. நான் வழக்கமான இங்கு போராட்டத்தில் கலந்துகொள்வேன். எங்கள் உரிமைகளுக்கான போராட்டம் இது.

`ஒரு கையில் கொடியுடன் ஏன் போராட்டத்துக்கு வருகிறாய். கைகளில் கொடியுடன் கற்களை வீசுவது சிரமம்’ என்று என் நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள். நான் போராட்டக்களத்திலேயே ஒருவேளைக் கொல்லப்பட்டால், என் நாட்டுக் கொடியை என்  உடலில் சுற்றி என் உயிரற்ற உடலை அப்புறப்படுத்துங்கள் என்பேன் அவர்களிடம்” என்று பேசியிருக்கிறார்.

`ஆம்ரோ புகைப்படத்தைப் பகிர்பவர்கள் அந்த இளைஞரை மிகைப்படுத்துகிறார்கள்’ என்று சிலர் விமர்சனங்களையும் வீசுகின்றனர். ஆம்ரோனுக்கு பெரும்பாலான இணையவாசிகள் கொடுத்துள்ள பெயர் என்ன தெரியுமா? `நவீன கால புரட்சியாளன்’ Modern Day Revolutionist!