Published:Updated:

இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!

இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!
பிரீமியம் ஸ்டோரி
News
இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!

இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!

டந்த வாரத்தில் ஒரு நாள் விகடன் நிருபர் ஒருவர் பாலகுமாரனிடம் பேட்டி கண்டார். பத்திரிகைக்கு அவர் அளித்த கடைசி பேட்டி. ‘‘பாலகுமாரன் யார்? இதோ வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கிற இந்த உடம்பா... இல்லை. இந்த இடது மார்புல விரல் அளவு ஆழத்துல ஒண்ணு ஓடிக்கிட்டு இருக்கு. அது நின்னுப்போனா பாலகுமாரனுக்குப் பேர் என்ன? பாடி!’’ இப்படியாக முடிகிறது அந்தப் பேட்டி. மரணத்தின் முடிவுரை போல அதைச் சொல்லியிருக்கிறார்.

மெர்க்குரிப் பூக்கள், இரும்பு குதிரைகள், கரையோர முதலைகள், ஆனந்த வயல், உள்ளம் கவர் கள்வன், பயணிகள் கவனிக்கவும்... எனத் தொடர்கதை உலகில் அவர் தக்கவைத்த வாசகப் பட்டாளம் பிரமிப்பானது. தமிழின் முன்னணி இதழ்களில் ஒரே நேரத்தில் ஏழு தொடர்கதைகளை எழுதி, அத்தனை வாசகர்களையும் தன் எழுத்தை நேசிக்கவைத்தவர். காதலையும் மானுட உறவுகளையும் உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லிப் பரவசப்பட வைக்கும் எழுத்து அவருடையது. ஒரு கட்டத்தில் வரலாற்று ஆர்வம் தொற்றிக்கொள்ள, சோழர்களை ஆராதிக்க ஆரம்பித்தார். ராஜேந்திர சோழன், அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன். ‘உடையார்’ சரித்திர நாவல் இப்போதும் புத்தகக் காட்சிகளில் பரபரப்பாக விற்பது, அவரது ஆளுமையை உணர்த்தும். இன்னொருபக்கம் ஆன்மிகக் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுதினார். `‘இப்பவும் எழுதுறேன். எழுதலன்னா, எழுத முடியலைன்னா செத்துப் போயிடுவேன். எழுதாம ஒருபோதும் என்னால இருக்க முடியாது” என்றவர்.

இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!

200 நாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இவற்றோடு 24 திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனங்கள் என எழுதிக்குவித்த இவரின் பக்கங்கள் மக்களின் மனதுக்கு நெருக்கமானவை.

கமலுக்கு ஒரு ‘நாயகன்’. ரஜினிக்கு ஒரு ‘பாட்ஷா’ இரண்டுமே இருவரின் வாழ்விலும் திருப்புமுனைப் படங்கள். ‘‘நாலு பேருக்கு நல்லது பண்றதா இருந்தா எதுவுமே தப்பில்ல’’ என ஒரு வரியில் கள்ளக்கடத்தல் தலைவனைப் புனிதப்படுத்திவிடும் எழுத்து அவருடையது. ‘‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’’ என்ற புதிர் அவிழாத கேள்வியோடு நாயகன் படத்தை நிறுத்தியிருப்பது வசனத்தின் வெற்றியன்றி வேறென்ன? ‘‘நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி’’ - இது பாட்ஷா பட்டாசு. ஒரு வரியில் செய்கிற மேஜிக்.

தீவிர எழுத்தாளர்கள், ஜனரஞ்சக எழுத்தாளர்கள் என தமிழிலே எழுதுபவர்களை ரகம் பிரிப்பது வழக்கம். இரண்டுக்கும் பாலமாக இருந்தவர்களில் முக்கியமானவர் பாலகுமாரன். சிற்றிதழ்களில் ஆரம்பித்த அவருடைய பயணம், வணிக இதழ் வாசகர்களுக்கும் சென்று சேர்ந்தது. மனப்போராட்டங்களுக்கு, வாழ்க்கைச் சிக்கல்களுக்கு ஆன்மிகரீதியான பரிசீலனையை அவர் தன் எழுத்துக்களில் முன்வைத்தார். ‘எழுத்துச் சித்தர்’ என்ற அடையாளம் வாசகர்களுக்கும் அவருக்கும் பிடித்திருந்தது. தமிழ் எழுத்தாளன் ஒருவன் தன் எழுத்தின்மீதுள்ள நம்பிக்கையை மட்டும் வைத்து சக்கரவர்த்தி போல வாழ முடியும் என நிரூபித்த சமீபத்திய உதாரணம் அவர். எழுத்தால் ஆண்ட எழுத்தாளர். இதற்குத்தானே ஆசைப்பட்டார் பாலகுமாரன்!

- தமிழ்மகன், படம்: க.பாலாஜி