Published:Updated:

``துடிப்பான ஜனநாயகத்துக்குச் சுதந்திரமான ஊடகம் தேவை!" - தேசியப் பத்திரிகை தின சிறப்புப் பகிர்வு

இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளங்கள் வளர்ந்துவருகின்றன. செய்திகளை மொபைல் போன் மூலமே இப்போது பெறுகின்றனர். இம்மாதிரியான வளர்ச்சி, ஊடகத் துறையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றுள்ளது.

``துடிப்பான ஜனநாயகத்துக்குச் சுதந்திரமான ஊடகம் தேவை!" - தேசியப் பத்திரிகை தின சிறப்புப் பகிர்வு
``துடிப்பான ஜனநாயகத்துக்குச் சுதந்திரமான ஊடகம் தேவை!" - தேசியப் பத்திரிகை தின சிறப்புப் பகிர்வு

``நான் இங்கு பத்திரிகையாளர் ஆக வேலை பார்க்க விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பைத் தாங்கள் வழங்க வேண்டும்" எனக் கேட்டு ஓர் இளைஞர், பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தார். அவரைப் பரிசோதிக்க விரும்பிய அந்தப் பத்திரிகை ஆசிரியர், ``முக்கியப் பிரமுகர் ஒருவரின் வீட்டில் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. நீங்கள், அங்குப் போய்ச் செய்தி சேகரித்து வாருங்கள். அதில், உங்களது திறமையைப் பார்த்துப் பணி தருகிறேன்" என்றார். 

சந்தோஷத்துடன் புறப்பட்ட அந்த இளைஞர், நேராக அந்தத் திருமண வீட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கு எதிர்பாராதவிதமாகச் சிறு கலவரம் ஏற்பட்டதையடுத்து திருமணம் நின்றுவிட்டது. இதனால் வெறுப்புற்ற அந்த இளைஞர், அடுத்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்டுவந்து ஆசிரியரிடம் நடந்ததைக் கூறினார். ``திருமண மண்டபத்தில் சிறு கலவரம் ஏற்பட்டதையடுத்து, திருமணம் நின்றுவிட்டது. இதனால், திருமணம் பற்றிய முழுச் செய்தியையும் சேகரிக்க முடியவில்லை" என்றார். இதைக்கேட்ட ஆசிரியர், ``அடப்பாவி... அங்கு நடந்த கலவரத்தைக் கோட்டைவிட்டு விட்டாயே? அதுதானே இன்று பெரிய செய்தியாக வரும்?! எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியாமல் நீ எப்படிப் பத்திரிகையாளர் பணிக்கு வந்தாய்?" என்று அந்த இளைஞரைத் திட்டியதுடன் வேலைதராமல் திருப்பி அனுப்பிவைத்தார். பத்திரிகையாளர் பணி என்பது அந்த இளைஞர் நடந்து கொண்டதைப்போன்று அலட்சியமானது அல்ல...பொறுப்பு வாய்ந்ததும், சிக்கல் நிறைந்ததும் ஆகும். 

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய பத்திரிகை உலகில், கண்ணில் காணும் நிகழ்வுகளை எல்லாம் தன் கையில் வைத்திருக்கும் கைப்பேசியில் பதிவுசெய்து, தன் நிறுவனம் சார்ந்திருக்கும் சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டுசேர்த்து விடுகின்றனர் இன்றைய இளம் தலைமுறை பத்திரிகையாளர்கள். அதுபோன்று சவால் நிறைந்த பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும்விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. 

பத்திரிகையின் சிறப்பு என்னவென்பதை பாவேந்தர் பாரதிதாசன் தன்னுடைய கவிதையில் அழகாகக் குறிப்பிட்டிருப்பார்.

``காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்றுசேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்தபத்திரிகைப் பெண்ணே!"
 

பாரதிதாசனால் இவ்வாறு போற்றப்படும் பத்திரிகையில் வெளியிடப்படும் செய்தி, அதன் கருப்பொருளால் மட்டும் செய்தியாவதில்லை. அதனோடு தொடர்புடைய மக்களின் பரப்பளவை, எண்ணிக்கையை ஒட்டியும் செய்தியாகிறது. இதைத்தான் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள், ``ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்" என்கிறார். 

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரிடம், எப்போதும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கனவு இருக்கும். ஆனால், அதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட விரும்பமாட்டார். இதுகுறித்து நிருபர்கள் ஒருமுறை காமராஜரிடம் காரணம் கேட்டதற்கு, ``அரைகுறையாகப் போட வேண்டாம். நம் அரசாங்க எந்திரம் பற்றி மக்களுக்கு ஒன்றும் தெரியாது. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டால், உடனே திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. அதிகாரிகள் அதுபற்றி ஆலோசித்து, பண ஒதுக்கீடு செய்து அப்படி, இப்படி என்று ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை ஆகிவிடும். எனவே, திட்டம் நடந்த பிறகு சொல்வதே சரியாக இருக்கும்" என்று பதிலளித்தார். குறிப்பாக, பத்திரிகையில் செய்தி வெளியிடுவதிலும், பொது நன்மை கருதி செயல்படுவதிலும் தெளிவான எண்ணம் கொண்டிருந்தவர் காமராஜர். 

ஒரு செய்தியை உலகுக்கு எடுத்துரைப்பதற்காகப் பத்திரிகையாளர்கள் பலரும் தங்களின் உயிரையும் பணயம் வைக்கின்றனர். அவர்களுடைய பணி குறித்தும், தேசிய பத்திரிகை தினம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அவர் தமது ட்விட்டர் பதிவில், ``நமது ஊடகத்தின் கடும் உழைப்பு, குறிப்பாகச் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களின் அயராத உழைப்பை நான் பாராட்டுகிறேன். இவர்கள்தான் களத்தில் இறங்கி, செய்தி சேகரித்து, நாடு மற்றும் இந்த உலகத்தையே வடிவமைக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளங்கள் வளர்ந்துவருகின்றன. செய்திகளை மொபைல் போன் மூலமே இப்போது பெறுகின்றனர். இம்மாதிரியான வளர்ச்சி, ஊடகத் துறையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றுள்ளது. ஊடகத் துறையின் ஜனநாயகம் மற்றும் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும். ஒரு துடிப்பான ஜனநாயகம் அமைய, சுதந்திரமான ஊடகம் தேவை. பத்திரிகைச் சுதந்திரத்தை அனைத்து வகைகளிலும் நிலைநாட்ட நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 125 கோடி இந்தியர்களின் திறமை, வலிமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், ஊடகத் துறையை நாம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்” எனப் பாராட்டியிருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ``ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகை துறை, செய்திகளை உள்ளது உள்ளபடி நடுநிலையோடு மக்களுக்குத் தெரிவிப்பதோடு, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசென்று மக்களுக்கும் அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்துவருகிறது" என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். 

ஆனாலும், ``பத்திரிகையாளர்கள் வாழ்வில் அப்படி ஒன்றும் ஒளிவீசுவதில்லை என்னும் குரல்தான் பரவலாக ஒலிக்கிறது" என்கிறார்கள், மூத்த பத்திரிகையாளர்கள். ``பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை, அரசியல் தலைவர்கள் உட்பட பலரின் பக்கங்களைப் புரட்டுபவர்கள். அதில் நன்மை, தீமை இரண்டுமே இருக்கும். பத்திரிகையாளர்களின் செய்தியால் அல்லது ஊடக வெளிச்சத்தால் வளர்ந்தவர்கள், அவர்களைப் பாராட்டுகின்றனர்; பாதிக்கப்படுவோர் பத்திரிகையாளர்களைப் பலிகடாவாக்குகின்றனர். அதேநேரத்தில், இன்றைய உலகில் ஒருசில பத்திரிகைகளின் தவறான செய்திகளால் எல்லாப் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இன்று, குறிப்பிட்ட சில பத்திரிகைகளைத் தவிர்த்து, ஏனைய பெரும்பாலான பத்திரிகைகள் நடுநிலைத்தன்மையுடனும், உண்மையான தகவல்களை வெளியிடுபவையாகவும் இருப்பதில்லை. நேர்மையுடன் செய்திகளை வெளியிடும் குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு அரசின் ஆதரவு கிடைப்பதில்லை. அதனால்தான் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் மரணம், படுகொலைகள் அதிகரித்துவருகின்றன. என்னதான் பேனாக்கள் முறிக்கப்பட்டாலும், பேப்பர்கள் முடக்கப்பட்டாலும் அது ஒருபோதும் அழியப்போவதில்லை. அவையனைத்தும் ஆணி வேர் என்பதால், வேறு வகையில் விருட்சமாக உருப்பெறும்" என்கிறார்கள் உறுதியாக.

கௌரி லங்கேஷ்களை வேண்டுமானால் விஷமிகள் அழித்துவிடலாம்... ஆனால், அதுபோன்றோரின் நோக்கங்களையும், அவர்கள் விட்டுச் சென்ற தியாகங்களையும் யாரும் சிதைத்துவிட முடியாது.