பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ் எழுதிய ‘நிரபராதிகளின் காலம்’ புத்தகத்தை நான் விரும்பிப் படிப்பேன். இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான நாவல். அதிகார வர்க்கம் தன் படுகொலைகளைச் செய்வதற்கு எந்த மாதிரியான நியாயங்களை உருவாக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார். உள்ளடக்கம் நிறைந்த இந்தப் புத்தகத்தை வாசகர்களும் படிக்க வேண்டுமென விரும்புகிறேன்”

- திரைப்பட இயக்குநர் கோபி நயினார்

புக் மார்க்

சாகசவாதியா, அவதாரப் புருஷரா? யார் அவர்? “இரண்டுமில்லை. சமூக விடுதலையின்பால் நம்பிக்கைகொண்டு, முன்னகர்ந்த தோழரே, என் காதல் கணவர் சேகுவேரா” என்கிறார் போர்க்களத்திலும், இல்லறத்திலும் அவரோடு வாழ்வைப் பகிர்ந்துகொண்ட அலெய்டா மார்ச். சே-வுடனான தமது வாழ்வை ‘என் நினைவில் சே’ என்று அலெய்டா பதிவு செய்த தொகுப்பு நூல் இது. இதில் கியூபாவின் விடுதலைக்குப் பாடுபட்ட சேகுவேராவின் அரசியல் செயல்பாடுகள் கடந்து, “குழந்தைகளுடன், சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு விளையாடும் அன்பான அப்பா, துணைவிக்குக் கவிதை எழுதும் கவிஞன், காலைக் காபியைத் தனக்குப் பிடித்த கோப்பையில் மட்டுமே பிடித்துப் பருகும் ரசிகன், ‘என்னை மட்டுமே விரும்புவாய்’ எனத் துணைவியிடம் பொசசிவ் ஆகும் காதலன், தன்னைக் கொஞ்சவேண்டும் என்பதற்காக அவ்வப்போது சேட்டைகள் செய்யும் குறும்பன்” எனப் புதிய பரிமாணத்தில், புத்தகம் முழுக்கப் பன்முகங்களில் விரவிக்கிடக்கிறார் சேகுவேரா.

அலெய்டா-விடம், ‘நான் மொத்தமாய் உன்னைச் சரணடைகிறேன்’ என்கிறார். நம்மையும் மொத்தமாக சரணடையச் செய்கிறது ‘என் நினைவில் சே’ என்ற காதல் பெட்டகம்.

அடையாளம் பதிப்பகம், தமிழ் மொழிபெயர்ப்பு: அ. மங்கை, விலை: ரூ 250

புக் மார்க்

கோவையில் உள்ள கொடிசியா அமைப்பு சார்பில்  ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிப்பார்கள். இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கவிருப்பதாக கொடிசியா அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்ட இவ்விருது வழங்கும் விழா கொடிசியா அரங்கில் ஜூலை 21-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

புக் மார்க்

புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பிடித்தமான, பரிச்சயமான ஒன்று தஸ்தயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான ‘வெண்ணிற இரவுகள்’. இந்தப் பெயரையுடைய முகநூல் பக்கம் தற்போது கவனம்பெற்று வருகிறது. வெண்ணிற இரவுகள்- புத்தக அறிமுகம் என்ற இந்தப் பக்கத்தில் தமிழில் வெளியாகும் கவனிக்கத்தக்க படைப்புகள் குறித்த வீடியோ அறிமுகம் வழங்குகிறார்கள். நாவல், கட்டுரை, சிறுகதை என அனைத்துப் படைப்புகளையும் வாசகர் பார்வையிலிருந்து அணுகுவது இவர்களின் சிறப்பு.

புக் மார்க்

‘ஆசியாவும் மேல்நாட்டு ஆதிக்கமும்’ என்ற நூல் கே.எம்.பணிக்கரால் எழுதப்பட்டு 1953-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது. நவீன இந்தியாவின் கொள்கைகளை வடிவமைத்ததில் இவரது பங்கும் முக்கியமானது. இந்த நூல், ஆசியா ஏன் மேல்நாட்டு ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டது, அடிமைப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன போன்ற கேள்விகளை எழுப்புகிறது. ‘காலனியநீக்கம்’ குறித்த மிகச்சிறந்த கோட்பாட்டு விளக்க நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலைத் தமிழில் 1969-ம் ஆண்டு இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 450 பக்கங்களில் வெளியிட்டது. தற்போது நமது ஒட்டுமொத்த வாழ்க்கைப் பழக்கங்களிலும் இது ஐரோப்பியப் பண்பாடா, இது ஆசியப் பண்பாடா என விவாதம் எழுந்துள்ளது.  1969-ல் இப்புத்தகத்தின் முதல் பதிப்பு வந்திருக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் இது மறுபதிப்பு காணவில்லை. அப்படி ஆகும்பட்சத்தில் இந்த விவாதத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவதுடன் நமது சமகாலப் பண்பாட்டு உருவாக்கத்தின் அரசியலைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

புக் மார்க்

பூட்டானில் ஆண்டுதோறும் ‘Mountain Echoes’ என்ற இலக்கியத் திருவிழா நடக்கிறது. பூட்டான் ராணி ஆஷி டோர்ஜிவாங்மோவின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த இலக்கியத் திருவிழாவுக்கு இந்த ஆண்டோடு ஒன்பது வயதாகிறது. ஒவ்வோர் ஆண்டும் சில குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் சந்திப்புகளும் நிகழ்வுகளும் நடக்கும். இந்த ஆண்டு ஆன்மிகம், தத்துவம், பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் திருவிழா களைகட்டப்போகிறது. உலகம் முழுவதிலுமுள்ள முக்கிய எழுத்தாளுமைகள் இமயமலைச் சாரலில் கூடிக் கதைக்கப் போகிறார்கள்.