மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர்! - 1

நான்காம் சுவர்
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

புதிய தொடர் - 1பாக்கியம் சங்கர்

பேட்டை திருவிழாக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கையில் காப்பு கட்டியபடி பயல்கள் மஞ்சள் உடைதரித்து அலைந்து கொண்டி ருந்தார்கள். இரவு காப்பு களைதல் என்பதால் போத்தல்களைத் தயார் செய்யும் மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டி ருந்தார்கள் பேட்டை பெருசுகள். பாம்பு நாகராஜுக்கு போத்தலைப் பற்றிய கவலையே இல்லை. எப்போதும் நிஜாரின் வலது பாக்கெட்டில் கால்கிலோவும், இடது பாக்கெட்டில் மட்டை ஊறுகாயும் தயார் நிலையில் வைத்திருப்பார்.

நான்காம் சுவர்! - 1

தபேலாவின் டகாவை பும் பும்மென மேடையில் வாசிப்பவர் இழுத்தார். பாடகர் மைக்கை “செக்... செக்…” சோதித்துக்கொண்டார். சீரியல் விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தார்கள் ரெட்டை ஜடைப்பெண்கள். கிளாரிந்தாவும் ரெண்டடுக்கு பால்கனியில் சசியோடு நின்று மணி மாலையைக் கடித்துக்கொண்டிருந்தாள். பூசாரி காப்பைக் கழட்டியதும் வரிசையாய் வந்து கோயிலின் பின்புறம் ஊற்றி, தயாராக வைக்கப் பட்டிருந்த லோட்டாவைக் குடித்து விரதத்தை முடித்தார்கள். பாம்புதான் எல்லோருக்குமாக ஊற்றிக்கொண்டிருந்தார். தனக்கென யாருமில்லாத, ஆனால், பேட்டையே சொந்தம் கொண்டாடுகிற மனுசன். அளவைப் பார்த்து ஊற்றிக்கொண்டிருந்த பாம்பு கண்களால் ஜாடை செய்து அழைத்தார். “பவானியம்மன் திருக்கோவிலின் அருளோடு எங்கள் சங்கீதப் பறவைகள் இன்னிசைக் குழுவின் முதல் பாடலை எங்கள் ஆஸ்தானப் பாடகர் சின்ன எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடுவார்” மைக்கில் ராஜேஷ் ஏற்ற இரக்கத்தோடு சொல்ல “செல்லாத்தா… செல்ல மாரியாத்தா” என எல்.ஆர்.ஈஸ்வரி பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தார்.

“டேய் குஸ்மி… தேசப்பன் கிளாரிந்தாகிட்ட இந்த லட்டர குடுக்கணும்னு சொன்னாண்டா… ஃபுல் மப்புல இருக்குறான்… இன்னானமோ சொல்றாண்டா… ஒன்னும் புரில… மறக்காம குத்துர்றா” கோவிலின் பின்புறம் பெரிய மைதானம் என்பதால் மஞ்சள் நிற உடைகள் ஆங்காங்கே நின்றுகொண்டு விரதத்தை கர்மசிரத்தையாக முடித்துக்கொண்டிருந்தார்கள். கடிதத்தை நிஜார் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். கச்சேரி மேடையின் அருகிலேதான் கிளாரிந்தா வீடு.

“ஆடுங்கடா என்ன சுத்தி… நான் அய்யனாரு வெட்டு கத்தி…” என மேடையில் ஆரம்பிக்க உற்சாகத்தில் விசில் பறந்தது. விரதத்தைக் கடுமையாக முடித்த காப்புக்காரர்கள் பாடலுக் கேற்றார்போல பாவனை செய்து ஆடினார்கள்.

மேடை அருகில் தேசப்பனும் தனாவும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். உட்கார்ந்திருந்த ஜனத்தைத் தாண்டி தேசப்பனிடம் சென்றேன். போதையில் நிற்க முடியாமல் நின்றிருந்தான். பாம்பு கடிதம் கொடுத்த விஷயத்தை அவனிடம் சொன்னேன். மேடையின் பக்கவாட்டில் வைத்திருந்த ஸ்பிக்கர்களால் எதுவும் சரியாகப் பேச முடியவில்லை. தேசப்பன் துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தான். தேசப்பனின் விருப்பப் பாடலென சொல்லி பாடகர் பாடலானார். “வைகைக்கரை காற்றே நில்லு… வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு”- கிளாரிந்தாவைப் பார்த்து காதலாகி உருகிக்கொண்டிருந்தான். 

“மச்சி லட்டர குத்துட்டியாடா”

“குத்துர்றண்டா மச்சான்… பாடிகார்ட் போனவுடனே குத்துர்றேன்” தேசப்பனின் கண்கள் கலங்கியிருந்தன. பேட்டையின் பிரசித்திபெற்ற காதல்கதை. கிளாரிந்தாவுக்கு உள்ளூர தேசப்பன் மீது காதல் இருந்தாலும் வீட்டின் சொல்லைத் தாண்ட முடியாதவள் என்பதுதான் பிரச்னை. பால்கனியைப் பார்த்தேன். கிளாரிந்தா வின் அம்மா இப்போது இல்லை. இதுதான் தருணம். கூட்டத்தைக் கடந்து படிகளில் ஏறினேன். கிளாரிந்தாவும் சசியும் நின்றிருந்தார்கள். சசி பழைய நைட்டியில் அழகாகத் தானிருந்தாள். என்னைப் பார்த்ததும் ஒழுங்கு காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.  கிளாரிந்தாவிடம் லட்டரைக் கொடுத்தேன். சசி முறைத்தாள். “தேசப்பன் குத்தான் கிளாரி… உன் பதிலுக்குத்தான் காத்து கினுருக்கான்” என்றபோது தேசப்பன் கிளாரிந்தாவைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான். கடிதத்தை வாங்கிய கிளாரிந்தா எதுவும் சொல்லாமல் வீட்டுக்குள் சென்று விட்டாள். மஞ்சளும் பச்சையுமாக மாறி மாறி மின்னிய சீரியல் விளக்கு வெளிச்சத்தில் கிளாரிந்தா இல்லாத பால்கனியை வெகுநேரம் வெறித்துக் கொண்டிருந்தான் தேசப்பன்.
 
றுநாள் நானும் நூர்தினும் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தோம். ‘காதலின் சம்பளம் மரணம்’ போல தேசப்பன் இறுக்கிக்கொண்டான். மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருந்த அமரர் அறை உள்ளே ஒதுக்குப்புறமாக மாற்றப்பட்டிருந்தது அப்போதுதான் தெரியவந்தது.

ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் சாம்பல்நிற கட்டடம் தெரிந்தது. கருப்பு நிற பெயிண்டால் ‘அமரர் அறை’  என்று கட்டடம் முன்பு எழுதப்பட்டிருந்தது. பகலிலும் பிணவறையைப் பார்ப்பது ஏனோ ஒருமாதிரியாகத்தானிருந்தது. சுண்ணாம்பு காரைப்பெயர்ந்து சுவரெல்லாம் பழுதடைந் திருந்தது. 

நான்காம் சுவர்! - 1

சிலர் வெறித்த பார்வையில் செய்வதறி யாமல் கைபிசைந்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சிலர் அமர்ந்து கொண்டிருந் தார்கள். ஒருவர் சாப்பாட்டுப் பொட்டலத்தை வைத்து சாம்பாரைப் பிரிப்பதற்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். சரியாக பிணவறைக்குப் பின்னால் ரயில்வே மைதானம் என்பதால் ஏரியா பொடிசுகள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந் தார்கள். எப்போது பார்த்தாலும் சோபை இழந்திருக்கும் அமரர் அறை இப்போதும் அப்படியே தான் இருந்தது. 

தேசப்பனின் சுற்றங்கள் நின்று கொண்டிருந்தார்கள். பிணவறையின் வரவேற்பறையில் இன்சார்ஜிடம் பாம்பு நாகராஜ் பேசிக்கொண்டிருந்தார். நானும் நூர்தீனும் வரவேற்பறை அருகே சென்றோம். அன்றுபார்த்து நிறைய வரவுகள் என்பதால் தேசப்பன் மூன்றாவது என்று காத்திருக்கச் சொல்லிவிட்டார்கள்.

 பிணவறையின் இடதுபக்கம் ஒரு சிறிய பாதையில் நடந்தார் பாம்பு. அங்கே கொன்றை மரத்தைச் சுற்றி சிமெண்டால் நாற்காலி போல கட்டியிருந்தார்கள். அமர்ந்து கொண்டோம். பிணவறையின் அறுவை மேடை நாங்கள் உட்கார்ந்தி ருந்ததற்கு எதிரேதான் இருந்தது.

“யோவ் திருப்பாலு… திருப்பாலு” என்று எங்களுக்கு எதிரே இருந்த ஜன்னலைத்  தட்டினார் பாம்பு. சிறிது நேரத்தில் ஜன்னல் திறக்கப்பட்டது. மரத்திற்கும் ஜன்னலுக்கும் பத்தடி தூரம்தான் இருக்கும். ஒருவர் ஜன்னலில் இருந்து வெளிப்பட்டார். மேலுக்குச் சட்டையில்லாமல் ஆங்காங்கே ரத்தத் திட்டுகளோடு கையில் கத்தியுடன் பாம்பைப் பார்த்து சிரித்தார். கறைபடிந்த அவரது பற்களும் பிணம் போலவே இருந்த அவரது முகபாவங்களும் என்னைப் பீதியடையச்செய்தன. உள்ளேயிருந்து வந்த நிணம் குமட்டியது. திரும்பிக் கொண்டேன். “டேய் குஸ்மி… திருப்பாலு என்னோட தோஸ்த்து… ஏம்ப்பா நம்ம ஏரியா புள்ளீங்கோ” என்று எங்களை அறிமுகம் செய்துவைத்தார் பாம்பு. திருப்பால் சிரித்தபடியே “வணக்கம் வாத்தியாரே” என்றார். எனக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் பாம்பைப் பார்த்தேன்.

“நம்மள்து எப்போ சிநேதா”

“வாத்யாரே காடாத்துணி  அஞ்சு மீட்ரு... பிளாஸ்டிக் கவரு... கல்லு உப்பு ரெண்டு படி... ஒரு லைப்பாய் சோப்பு, பாண்ட்சு பவுட்ரு வாங்கியாந்துடு... அடுத்த பீசு உங்கள்துதான்” என்று ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டார்.

வெளியே போய் சொன்னதெல்லாம் வாங்கிக்கொண்டு மீண்டும் தலத்திற்குள் வந்தோம்.

“திருப்பாலை” குரல் கொடுத்தார் இன்சார்ஜ். ஒரு கதவைத் திறந்து வெளிப்பட்டார் திருப்பால். நாலரை அடி கூட இருக்க மாட்டார்். மதுவில் ஊறிய அவரது கண்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் ஒருசேரக் கொண்டிருந்தன. ஒரு கால் மட்டும் தாங்கித் தாங்கி நடந்தார். டவுசர் மட்டும் அணிந்திருந்தவர் என்னைப் பார்த்து சிரித்தார். பாம்பு, பொருட்களைக் கொடுத்ததும். “பின்னாடி மரத்தாண்ட உக்காரு வாத்யாரே… பத்து நிமிசந்தான்… பீசு முடியப்போவுது… பொட்லம் கட்டி அனுப்பிட்டு வரேன்” என்று கையை ‘சியர்ஸ்’ என்பது போல காட்டினார்.

டூடொண்டி பிளேடால் ஒரு கீறு கீறினார். பெரியவர் ஒருவரின் பொட்டலம் டிரங்க் பெட்டியைப் போல திறந்துக்கொண்டது. அருகில் இருந்தவன் பெரியவரின் நெஞ்சாங்கூட்டு எலும்பை சுத்தியலால் வெட்ரூமை கொண்டு ஓங்கி அடித்தான். சல்லிசாகப் பிளந்தது. உள்ளிருந்து ஈரலை வெட்டியெடுத்தார் திருப்பால். விஸ்ராவுக்காக ஒரு துண்டை வெட்டி பாட்டிலில் போட்டுவைத்தார். திருப்பால் குடலை அறுத்து எடுத்துப்பார்த்தார். பாஸ்கர் டாக்டரிடம் காண்பித்தார். டாக்டர் சிறிது நேரம் குடலைப் பார்த்தார். கைவைத்து தேய்த்துப் பார்த்தார். குறிப்பேட்டில் புரியாத கையெழுத்தில் எதையோ எழுதிக்கொண்டார். குடலை வாங்கிப் பெரியவரின் பொட்டலத்தில் போட்டார் சகாயம். 

பெரியவரின் மனைவி மட்டும் வெளியே நின்றிருந்தார். பொட்டலமாக பெரியவர் ஸ்டெச்சரில் வெளியே வந்தார். “உன் சிநேதகாரன் பீச முடிச்சிடலாமா?” என்றான் உடனிருந்தவன். “ப்ளேட புடிக்க முடியலடா… கைலாம் நடுங்குது… பீச அறுத்து விஸ்ரா மட்டும் எடுத்துவை…. சரக்க போட்டு வந்துர்ரேன்”.

கையில் ஸ்வீட் பாக்ஸோடு வந்தார் திருப்பால். மரத்தின் கீழ் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். வந்தவர் சம்மணம்கூட்டி உட்கார்ந்து கொண்டார். “இந்தா வாத்யாரே ஸ்வீட்டு…” டவுசரிலிருந்து போத்தலை எடுத்துவைத்தார். நூர்தின் பாசந்தியை எடுத்து கொஞ்சமாய் பிய்த்து வாயில் போட்டான். “இன்னா சிநேதா ஸ்விட்டுலாம் பலமா இருக்குது?” பாம்புவும் போத்தலைத் திறந்து கொண்டார். “அத ஏன் கேக்குற… இன்னிக்கு மொத பீசே சேட்டு பீசு… சேட்டுக்கு இன்னா புடிக்கும்னு கேட்டன்… பாசந்தின்னா புடிக்குன்னு சேட்டம்மா சொல்லிச்சு… நம்ம சகாயம் சைக்கிள் கேப்புல… ‘ஒரு கிலோ வாங்கியா சேட்டம்மா… போவும் போது பாசந்திய வவுத்துல வச்சு தச்சு அனுப்புறோம்… சேட்டு சந்தோசமா போவாப்பல’ன்னு ஃபீலிங்க வுட்டான்… ஆனா வாத்தியாரே… ஒரு பாசந்திய சேட்டு வயித்துல வச்சுதான் தச்சு அனுப்புனோம்…” என்று பாசந்தியின் டப்பாவைத் திறந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சிரித்தார். பாசந்தியின்பால் மோகம்கொண்டு இப்படி ஆகிவிட்டதேயென்று நூர்தீன் பாதி பாசந்தியுடன் திருத்திருவென முழித்தான்.

ஒரே இழுப்பில் குவளையை வைத்தார் திருப்பால். “இன்னா சிநேதா... வூட்ல எல்லாம் சுகந்தான?” என்று கேட்டார் பாம்பு. “அதுங்குளுக்கு இன்னா... ஜம்முன்னு இருக்குதுங்க... பெரிய வூடு கூட ரப்சர் பண்ணாது... இந்த சின்னவூட்டுக்காரம்மா இருக்குதே நய் நய்னு வூட்டுக்கு வா... வூட்டுக்கு வான்னு ஒரே ரப்சர் குடுக்கும்... ஒரே லவ்வு வாத்யாரே”, நூர்தின் சிரித்துக்கொண்டு கவனமாக மிக்சரை வாயில் போட்டுக் கொண்டான். போதை மிகுந்த அவரது கண்கள் இப்போது காதலால் கசிந்து கொண்டிருந்தது. திருப்பால் மனிதராக எனக்குள் சகஜமாகிப்போன தருணமது. 

நான்காம் சுவர்! - 1

நானும் உற்சாகத்தில் இருந்ததால் “உங்களுக்கு பேய் பயம்லாம் கெடையாதா அண்ணே?” என்று கேட்டுவிட்டேன். என்னை சற்று நேரம் உற்றுப்பார்த்தவர். “ஏன் இல்ல நெறயா இருக்குது... ஆனா அதுங்கல்லாம் பேசுற பேயிங்க.... மத்தவன் சொத்த ஆட்டய போட்ற பேயிங்க ... எவன் குடிய கெடுக்கலான்னு அலையுற பேயிங்கன்னு நெறய பேயி மேல எனக்குப் பயம் இருக்குது வாத்தியாரே...” மீண்டும் குவளையை இழுத்துக்கொண்டார். நாங்களும் போத்தலை முடித்தோம். ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டார். “நம்மளாண்ட வர்றதுங்கலாம் குழந்தைங்க மாதிரி... காலிப் பெருங்காய டப்பா. வாசனையும் இருக்காது... வருத்தமும் இருக்காது... “ என்றார். “எல்லாத்தையும் போறபோக்குல எடுத்துக்குற… உனக்குலாம் துக்கம் கண்ணீரு இதெல்லாம் வராதுல்ல…?” நூர் பளிச்சென்று கேட்டான். “ஆமா வாத்யாரே… பீச பாத்து பாத்து மரத்துபோச்சு… என் அப்பன் செத்தப்ப கூட துளி கண்ணீரு இல்ல… எல்லாரும் பொணத்த அறுக்குறவனுக்கு கண்ணீரு எங்க இருந்துய்யா வருன்னு சொன்னானுங்க… அவனுங்க சொன்னதுலயும் உண்ம இருக்குதுதான் போல… ஆனா எங்க அப்பனும் பொணத்த அறுத்தவன்தான். எனக்கு பதினாறு வயசிருக்கும்.. கத்திய புடிக்க கத்து குடுத்தவனே எங்க அப்பந்தான்… ஒரு வகையில எனக்கு குரு… அதனால அப்பன் மேல அன்புலாம் இல்ல… மரியாததான் இருக்கு… ஆனா வாத்தியாரே அன்புதான் இன்னொரு உயிரக் கொல்லும்… மரியாத எப்பவுமே மரியாதையாத்தான் இருக்கும்…” என்று சொல்லிக்கொண்டே தனது நிஜாரின் பாக்கெட்டிலிருந்து ஒரு டிரான்சிஸ்டரை எடுத்தார்.

ஆன்டனாவை இழுத்துவிட்டுக் கொண்டார். டிரான்சிஸ்டரை ஒலிக்கச்செய்தார். அலை வரிசையை மாற்றிக்கொண்டே வந்தவர் ஒரு நிலையத்தை தேர்வு செய்தார். “உள்ளத்தில் நல்ல உள்ளம்… உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா… வருவதை எதிர்கொள்ளடா…” என்று சீர்காழி உருகிக் கொண்டிருந்தார்.

“பொணத்த அறுக்கும்போது… உன்னாலலாம் எப்படிண்ணே பாட்டு கேக்க முடியுது?” என்று கேட்டேவிட்டேன். திருப்பால் சற்று கோபமடைந்தார். “நீங்க கார் ஓட்டும்போது கேப்பீங்க… ஃபேக்டரில வேல செய்யும்போது கேப்பீங்க… ஓட்டல்ல கேப்பீங்க… வூட்ல கேப்பீங்க… ஆனா நாங்க கேக்க கூடாதா…? இது எங்களுக்கு வேல… ஒரு நாளு வந்துட்டு போற உனுக்கு… எல்லாமே தப்பாதான் தெரியும்… பொணத்தோட வாழ்ந்து பாரு… அப்பத்தெரியும்… எனக்கு இருந்தாலும் பாட்டுத்தான்… அறுத்தாலும் பாட்டுத்தான்…” என்று சொல்லிவிட்டு காலை தாங்கித்தாங்கி நடந்து சென்றார்.

தேசப்பன் பொட்டலமாக வெளியே வந்தான். ஆம்புலன்ஸில் தேசப்பனை ஏற்றி கூடவே கிளம்பினான் நூர். நானும் பாம்புவும் கிளம்பத் தயாரானோம். “சிநேதா… ரிப்போர்ட் ரெண்டு நாள்ல வந்துரும்… நானே வாங்கி வைக்கிறன் சரியா?” என்றார்.  அப்போதுதான் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே நுழைந்தது. மணி சரியாக மதியம் நான்கு. ரெண்டு போலிஸ்காரர்களோடு இறங்கியது ஒரு மூன்று அல்லது நான்கு வயது பிள்ளையின் பிரேதம். இறப்பில் சந்தேகம் கொண்டு பரிசோதனைக்கு வந்திருக்கிறது. அதுவரை இயல்பாய் இருந்த திருப்பால், குழந்தையின் பிரேதத்தைக் கண்டதும் இயல்பிலிருந்து வேறு ஒருவரானார். தகப்பனும் தாயும் அழுது கண்ணீர் வற்றிய முகத்தோடு ஆம்புலன்ஸிலிருந்து இறங்கினார்கள். குழந்தைகள் பிரேதத்தை எப்போது பார்த்தாலும் அது பிணமாக தெரிவதில்லை. குழந்தையாகத்தான் தெரிகிறது.

நான்கு மணியோடு வேலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது பிணவறையின் விதி. தஸ்தாவேஜுகள் முடித்து பிள்ளையை அன்றிரவு அங்கேயே வைத்து மறுநாள்தான் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனச்சொல்லிவிட்டார்கள், தாயும் தகப்பனும் அந்த இரவை எப்படி கடக்கப்போகிறார்கள் என நினைக்கும்போதே என் உடம்பெல்லாம் நடுங்கியது… இந்த இரவு அவர்களின் வாழ்வில் விடியவே விடியாதுதான். “அய்யா என் பிள்ளய அறுத்துடாதீங்கய்யா… நா பெத்த என் கனிய அறுத்துடாதிங்கய்யா” என்று மண்ணில் புரண்டு அழுத தகப்பனுக்கு திருப்பாலிடம் எந்தப் பதிலும் இல்லை. திருப்பால் பாம்பை அழைத்தார். அவரது கைகள் சற்று நடுங்கிக்கொண்டிருந்தன. “சிநேதா… ஒரு குவாட்ரு வாங்கி குத்துட்டு போய்யா…” என்றார். காசை வாங்கிக்கொண்டு திரும்ப “வாத்தியாரே… அப்டியே ரெண்டு புரோட்டாவும் சால்னாவும் வாங்கிக்கய்யா” என்று ஒரு அம்பது ரூபாய்த்தாளை கொடுத்தார்.

சற்று இருட்டியிருந்தது. குழந்தையின் சுற்றங்கள் சிலர், பெத்த வயிற்றைத் தேற்றிக் கொண்டிருந் தார்கள். அந்த கணத்தில் எந்த வார்த்தைகளும் புலன்களில் சேராமல் நிலைகுத்திய அவர்களின் பார்வைகள் சக்தியற்று இருந்தன. இல்லாத அந்தப் பிள்ளையின் ‘அப்பா’ என்ற குரல் மட்டுமே அத்தகப்பனுக்கு ஒலித்துக் கொண்டிருக்கும் என நினைத்துக்கொண்டேன். அதுவரை துவண்டிருந்த பிள்ளையின் தாய் ஆங்காரத்தோடு கத்திக்கொண்டு எழுந்தாள். அழுது ஓய்ந்திருந்த கண்கள் சிவந்து எரிந்து கொண்டிருந்தன. அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிச்சுருட்டிக்கொண்டாள். பிணவறை வாசலை நோக்கி நடந்தாள். எனக்கும் பாம்புவிற்கும் ஒன்றும் புரியவில்லை. வாசலில் நின்றவள் “நந்துமா உன்ன சீரழிச்சுக் கொன்ன அந்த .....ப்பையன அறுத்து உன்கிட்ட போட்றண்டா பட்டே… போட்றண்டா…” என்று தீர்க்கமாய்ச் சொன்னவள் வெளியே வெறித்தனமாக ஓடினாள். சுற்றங்கள் அவரை பிடித்து நிறுத்தி ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அவளது ஆங்காரமும், அவனைக் கொல்ல முடியவில்லையே என்கிற இயலாமையும் சேர்ந்து “நந்தும்மா…” என பெருத்த ஓலமிட்டாள். 

“குஸ்மி தேசப்பன் சாவறதுக்காவது காதல்னு ஒரு காரணம் இருந்துச்சு… இந்த பச்சமண்ணு காரணமே இல்லாம ஏண்டா பையா சாவணும்… போயி குத்துட்டு வாடா… சுடுகாடு போவணும்” பாம்புவின் முகம் இறுக்கமாய் இருந்தது. திருப்பாலிடம் குவாட்டரைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் வெளியே வந்தேன். வண்டியை எடுக்கப்போனபோதுதான், திருப்பாலுக்கு பரோட்டாவும் சால்னாவும் கொடுக்க மறந்தது நினைவுக்கு வந்தது. பாம்பை நிற்கவைத்துவிட்டு திரும்ப நடந்தேன். பிணவறை வெளியே சகாயம் நின்றிருந்தார். உள்ளே இருப்பதாக ஜாடை காட்டினார். தலத்தின் பின்பக்கம் சென்றேன்.

கொன்றைப்பூக்கள் வழியெங்கும் சிதறிக்கிடந்தன. அறையின் ஜன்னல் திறந்தபடியே இருந்தது. எட்டிப்பார்த்தேன். திருப்பால் பிள்ளையின் நகக்கீறல் விழுந்த முகத்தின் ரத்தத்துளிகளை வெண் பஞ்சுகளால் துடைத்துக்கொண்டிருந்தார். என்னால் அவரைக் கூப்பிட முடியவில்லை. உணவுப்பொட்டலத்தை ஜன்னல் கம்பியினூடாக உள்ளே வைத்தேன். திருப்பாலின் டிரான்சிஸ்டர் “என்ன… என்ன கனவு கண்டாயோ சாமி… வாழ்க்கை ஒரு கனவு தானய்யா…” என்று பாடிக்கொண்டிருந்தது.

- மனிதர்கள் வருவார்கள்...

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்