Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

லகம் முழுவதும் படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்குமான அச்சுறுத்தல்கள் அவ்வப்போது எழுகின்றன. ‘இந்தப் படைப்பு எங்கள் மனதைப் புண்படுத்துகிறது’ என்ற குரல்கள் சாதி, மதம், இனம், மொழி, தேசியம் ஆகியவற்றின் பெயரால் முன்வைக்கப்படுகின்றன. இவை வெறும் எதிர்ப்புகள், விமர்சனங்கள், எதிர்க்குரல்கள் என்ற அளவில் இருக்கும்போது பிரச்னையாவதில்லை. ஆனால், அவை மிரட்டல்கள், படைப்புகளைத் தடைசெய்வது என்ற வடிவத்தை எடுக்கும்போதுதான் பிரச்னைகளாகின்றன.

தலையங்கம்

‘படைப்புச் சுதந்திரத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எல்லைகள் கிடையாது. எது ஒன்றின் பேராலும் தணிக்கையோ தடையோ மேற்கொள்ளப்படுவது ஜனநாயக விரோதம்’ என்று படைப்பாளிகளுக்கு ஆதரவான குரல்கள் ஒருபுறம்; ‘எல்லாவற்றுக்கும் எல்லைகள் உண்டு. படைப்பாளிகளுக்குச் சுதந்திரம் இருப்பதைப்போலவே பொறுப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம். எந்த இனக்குழுவின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதத்தில் படைப்புகள் இருக்கக் கூடாது. படைப்பு என்பது படைப்பாளியின் சுதந்திரம் என்றால், எதிர்ப்பு என்பது மனம் புண்படுபவர்களின் சுதந்திரம். எதிர்ப்பு என்பது எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் நிகழலாம்’ எனும் இன்னொரு தரப்பின் வாதங்கள் மறுபுறம். படைப்பாளிகளேகூட இருவேறு தரப்புகளின் பக்கம் நிற்கிறார்கள்.  சமயங்களில் தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப எதிரெதிர் முகாம்களுக்கு மாறுவதும் நடைபெறுகிறது.

‘படைப்புச் சுதந்திரத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எல்லைகள் உண்டா, இல்லையா?’ என்பது வரலாறுதோறும் எழும் கேள்வி. அதைச் சில விநாடிகளிலோ சில சமூகவலைதளப் பதிவுகளின் மூலமோ தீர்மானித்துவிட முடியாது. அதேநேரத்தில் ஒரு படைப்பு என்பது அதன் உண்மையான அம்சத்துடன்தான் புரிந்துகொள்ளப்படுகிறதா, அதற்கு முன்வைக்கப்படும் எதிர்ப்புகளும்கூட அந்தப் படைப்பின் ஆன்மாவைப் புரிந்துகொண்டுதான் முன்வைக்கப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

பொதுவாகவே படைப்பு என்பது நுட்பமானது. நமது வாழ்வியல் எதார்த்தத்துக்கும் படைப்பு சித்திரிக்கும் உலகத்துக்கும் இடையில் ஏராளமான இடைவெளிகள் உள்ளன. நம்பிக்கையாக, அடையாளமாக வெகுமக்கள் தரப்பால் கடைப்பிடிக்கப்படும் ஒன்று, ஒரு படைப்பில் வெவ்வேறு குறியீடுகளாக, அடையாளங்களாக, படிமங்களாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ‘எனது நம்பிக்கை இது. அதைத்தான் உன் படைப்பு சிதைக்கிறது’ என்று மூர்க்கத்தோடு கண்டனக்குரல்கள் எழும்போது, படைப்பாளி தன்னளவில் உடைந்துபோகிறார்.

கலையும் இலக்கியமும் மக்களுக்கானவைதாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எல்லாப் படைப்பு நுட்பங்களும் எல்லா மக்களுக்கும் புரிந்துவிடும் என்றோ அதற்கான சாத்தியங்கள் உண்டு என்றோ சொல்லிவிட முடியாது. இத்தகைய இடைவெளிகள் நிலவும்போது, படைப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதங்களில் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியவில்லை.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். ‘தன் படைப்பு தடைசெய்யப்படலாம்; தணிக்கைக்கு உட்படுத்தப்படலாம்’ என்ற அச்சம் படைப்பாளிகளிடம் மிகும்போது, நுட்பமான படைப்புகள் மெள்ள மெள்ள அழிந்துபோகும். அந்த ஆபத்தான நிலைக்கு எதிரான உரையாடல்களைத் தொடங்குவோம்!

-ஆசிரியர்