Published:Updated:

கலைஞரும் தமிழும்

கலைஞரும் தமிழும்
பிரீமியம் ஸ்டோரி
கலைஞரும் தமிழும்

காலத்தின் குரல்ந.முருகேசபாண்டியன்

கலைஞரும் தமிழும்

காலத்தின் குரல்ந.முருகேசபாண்டியன்

Published:Updated:
கலைஞரும் தமிழும்
பிரீமியம் ஸ்டோரி
கலைஞரும் தமிழும்
கலைஞரும் தமிழும்

மொழியானது, ஆறாவது புலனாக மனிதர்களைச் சமூகத்துடன் இணைக்கிற நுட்பமான பணியைச் செய்கிறது. உடலரசியல்போல மொழி அரசியல், சமூக மாற்றத்தில் முதன்மையிடம் வகிக்கிறது. பரந்துபட்ட நிலத்தினை நாடாக மாற்றுகிற அரசியல் செயல்பாட்டில், தமிழ் மொழி உருவாக்கிய ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு’ காத்திரமானது. இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் மொழி, காலந்தோறும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இடைக்காலத்தில் வைதீக இந்து மதமும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்தியபோது, அதற்கெதிரான குரல்களைப் புலவர்கள் படைப்புகளில் பதிவாக்கியுள்ளனர். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயிலில் இறைவனை வழிபாடுவதற்கு சம்ஸ்கிருதமும், கச்சேரிகளில் தெலுங்கும், ஆட்சிமொழியாக ஆங்கிலமும் நிலைபெற்றிருந்த தமிழகத்தில், நீதிக்கட்சியும் பெரியாரின் திராவிட இயக்கமும் முன்னிறுத்திய ‘தமிழ் மொழி அரசியல்’ கவனத்திற்குரியது.

திராவிடர் X ஆரியர், தமிழ் X சம்ஸ்கிருதம் என்ற அரசியலை முன்னெடுத்த சூழலில், தமிழ் மொழி கவனம்பெற்றது. தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு குறித்து பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சுகள், எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவர்களில் கருணாநிதி என்ற  சிறுவனின் செயல்கள், தனிச்சிறப்புடையன. திருவாரூரில் முப்பதுகளில் பள்ளி மாணவனாக இருந்தபோதே, ‘கலைஞர்’ என்ற கருணாநிதியின் தமிழ் மொழி மீதான ஈடுபாடு தொடங்கிவிட்டது. தாய்மொழியான தமிழை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் கலைஞரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. ஆரியர்களான பார்ப்பனர்களின் வைதீக சமயத்தின் வருணாசிரம நெறியானது, தமிழர்களை இழிவுபடுத்துகிறது; புராணக் கட்டுக் கதைகள், தமிழர் நெறிக்கு மாறானவை போன்ற கருத்துகள், பள்ளி மாணவப் பருவத்திலேயே கலைஞருக்கு ஏற்புடையதாயின.

கலைஞரும் தமிழும்

1938-ல் ராஜாஜி இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென முடிவெடுத்ததை பெரியார், அண்ணாதுரை போன்றோருடன் தமிழறிஞர்களும் எதிர்த்தனர். அப்போது, 14 வயதுச் சிறுவனான கருணாநிதி, பள்ளி மாணவர்களுடன் இந்தியை எதிர்த்து, கையில் தமிழ்க்கொடியுடன் திருவாரூர் தெருக்களில் ஊர்வலம் வந்தார். ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் /வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்’ எனக் கலைஞர் எழுதிய முழக்கம், ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்டது. கலைஞர் தனது 18-வது வயதில் எழுதிய ‘சாந்தா’ நாடகம் தொடங்கி, தனது படைப்புகளில் தமிழுணர்வை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதியுள்ளார். தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு குறித்த பேச்சுகளை உருவாக்கிட திட்டமிட்டுச் செயலாற்றிய கலைஞருக்கு இயல்பிலேயே தமிழ்மீது மாறாத பற்று இருந்தது. 1942-ல் துண்டறிக்கையாகத் தொடங்கப்பட்ட ‘முரசொலி’யில் தமிழைப் போற்றியும் இந்தியை எதிர்த்தும் எழுதிய கலைஞர், வாழ்நாளின் இறுதிவரையிலும் தமிழின் சிறப்புகளைப் பாராட்டி எழுதினார். கலைஞர் தமிழைக் குறிப்பிடும்போது, சுவைத்தமிழ், வீணைத்தமிழ், கவித்தமிழ், பொங்குதமிழ், வண்டமிழ், பொன்தமிழ் போன்ற அடைகளால் குறிப்பிடுவது வழக்கம். இதுபோன்று 92 அடைகளைப் பயன்படுத்தி, கலைஞர் தமிழைக்கொண்டாடியுள்ளார்.

மொழி என்பது, மனிதர்களுக்கிடையில் தகவல் பரிமாற்றக் கருவி என்பதற்கு அப்பால், மொழி கட்டமைத்திடும் நுண்ணரசியல் அழுத்தமானது. அன்றைய காலகட்டத்தில் பார்ப்பனர்களால் தமிழ்  ‘நீஷ பாஷை’ எனவும் சம்ஸ்கிருதமானது  ‘தேவ பாஷை’ எனவும் குறிப்பிடப் பட்டபோது, அதற்கு எதிரான கலகக் குரலாகத்தான் திராவிட இயக்கத்தாரின் செயல்பாடுகள் இருந்தன. ‘இலக்கணக் கொத்து’ என்ற இலக்கண நூலின் பாயிரத்தில் சாமிநாத தேசிகர், ‘சம்ஸ்கிருதத்தில் இல்லாத ழ, ற, ந, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகள் மட்டும் தமிழில் இருக்கின்றன. மற்றவை சம்ஸ்கிருதத்தில் இருக்கின்றன. எனவே, ஐந்து எழுத்துகளால் ஆன தமிழை ஒரு பாஷை என்று சொல்லிக்கொள்ள அறிவுடையோர் நாணுவர்’ என்கிறார். சம்ஸ்கிருதம் என்ற மொழியை முன்வைத்துத் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வைதீக மத அரசியல், பிரச்னைகளைத் தோற்றுவித்தது. ‘தமிழ் மொழியின் கட்டமைப்பு, இலக்கணம், இலக்கியம், தொன்மம் போன்றவை சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளிலிருந்து முற்றிலும் வேறானது. தமிழ்ப் பண்பாடு, சம்ஸ்கிருதப் பண்பாட்டினைவிட உயர்வானது, தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சம்ஸ்கிருதமும் இந்தியும் நசுக்கிட முயலுகின்றன’ போன்ற கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறவகையில் கலைஞரின் எழுத்துகளும் செயல்பாடுகளும் அமைந்திருந்தன.

1957-ல் நடைபெற்ற ‘இந்தி எதிர்ப்பு மாநாடு’, தி.மு.க-வினரின் மொழிக் கொள்கையை நடுவண் அரசுக்கு வெளிப்படுத்தியது. “மொழிப் போராட்டம், எங்கள் பண்பாட்டைப் பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை. மேலும், இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, எடுப்புச் சாப்பாடு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஆவேசத்துடன் கலந்துகொண்ட கலைஞர், சிறைத் தண்டனையை அனுபவித்தார். தமிழ் குறித்து இளம்வயதில் கலைஞருக்கு ஏற்பட்ட பெருமித உணர்வு, அவருடைய வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்தது. இந்தி பேசாத இந்திய மக்கள்மீது இந்தியைத் திணிப்பதை எதிர்த்து, தமிழும் ஆங்கிலமும் போதும் என்ற தி.மு.க-வின் நிலைப் பாடானது, இந்திய அளவில் பரவியுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனக் கலைஞர் கோரியது, இன்று இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சார்ந்த இந்திய அறிவுஜீவிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

கலைஞரும் தமிழும்

“தந்தை பெரியார் ஊட்டிய தமிழ் இன மான உணர்வும் பேரறிஞர் அண்ணா  புகட்டிய கலை, பண்பாடு காக்கும் உணர்வும் இணைந்து என்னுள்ளே நுழைந்து, என் வாழ்வே தமிழியக்கமாக அமைந்துவிட்டது” என்று குறிப்பிடுகிற கலைஞர், தமிழிலக்கியத்தின் பாரம்பர்யமான போக்கை மாற்றிட முயன்றார். அதுவரையிலும் ‘தேவாரம்’,  ‘திருவாசகம்’, ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ போன்ற மதம் சார்ந்த நூல்களை வாசிப்பது என்றிருந்த நிலையை மறுதலித்துவிட்டு, ‘சங்க இலக்கியம்’,  ‘சிலப்பதிகாரம்’, ‘குண்டல கேசி’, ‘திருக்குறள்’,  ‘தொல்காப்பியம்’ போன்ற படைப்புகள் குறித்துப் பேசவும் எழுதவும் தொடங்கிய கலைஞருக்குத் தெளிவான அரசியல் பார்வை இருந்தது.

வைதீக இந்து சமயக் கருத்தியலைப் பரப்பிடும் ‘வேதங்கள்’, ‘மநு தருமம்’, ‘பகவத் கீதை’, உபநிஷதங்கள் போன்றவற்றைக் கொண்டாடுகிற பிராமணர்களின் செயல்களை மறுத்திடும் வகையில்  ‘திருக்குறள்’ நூலை முன்வைத்த கலைஞரின் இலக்கிய அணுகுமுறை, அரசியல்ரீதியானது. திருக்குறளின் சிறப்புகளைத் தமிழர் பண்பாட்டுடன் பொருத்திக் காண்கிற கலைஞர், அது குறித்த பேச்சுகளை உருவாக்கிட முயன்றார். திருக்குறளுக்கு உரை எழுதியதுடன், ஓரளவு இலக்கியப் பயிற்சியுள்ளோரும் வாசிப்பதற்காகக்  ‘குறளோவியம்’ எழுதினார். ‘ஐயன் திருவள்ளுவர்’ என்று போற்றிய கலைஞர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டமும் திருவள்ளுவர் சிலையும் தமிழின் சிறப்பையும் தமிழ்ப் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கின்றன; பொதுமக்களுக்கு திருவள்ளுவரையும் திருக்குறளையும் அறிமுகம் செய்கின்றன.

‘சிலப்பதிகாரம்’ காப்பியத்தை மறுவாசிப்பு செய்து, ‘பூம்புகார்’ திரைப்படமாக்கிய கலைஞரின் செயல், தமிழர் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்கிற செயலாகும். தமிழ்ப் புலவரான இளங்கோ தொடங்கி, இறுதியில் வடபுலத்து மன்னரான கனக விசயன் தலையில் கல்லைக்கொண்டு வந்து, கண்ணகிக்குச் சிலைசெய்து வழிபாடு செய்தது என்ற விவரிப்பில் தமிழின் பெருமையும் தொன்மையும் வெளிப்பட்டுள்ளன. இசை, நாட்டியம், அழகுக்கலை போன்றவற்றுடன், தமிழரின் பத்தினிக் கடவுள் கண்ணகி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதக் காப்பியங்களின் பெருமைகளைப் புகழ்ந்திட்ட வைதீகக் கும்பலுக்கு மறுப்பாகச் சிலப்பதிகாரக் கதையின் உன்னதம் கலைஞரால் முன்வைக்கப் பட்டுள்ளது. பண்டைத் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பினை அடங்கியொடுங்கி இருக்கும் தமிழர்களுக்கு எடுத்துரைப்பதாக  ‘பூம்புகார்’ காப்பியம் அமைந்துள்ளது.

முதலமைச்சராகப் பதவியேற்றபோது, தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கலைஞர், தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார். அவர் ஆட்சி அதிகாரத்தின்போது, இளம் வயதில் தமிழ் குறித்துக் கண்ட கனவுகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டார். பண்டைத் தமிழ்ப் படைப்புகளை முன்வைத்து கலைஞர் உருவாக்கியுள்ள நினைவுச் சின்னங்கள் குறிப்பிடத்தக்கன.  ‘சிலப்பதிகாரம்’ கதை தொடங்கிடும் கடலோரக் கிராமமான பூம்புகாரில் 1974-ல் கண்கவர் வேலைப்பாடுகள் மிக்க  ‘சிலப்பதிகாரக் கலைக்கூடம்’, ‘பாவை மன்றம்’, ‘நெடுங்கால் மண்டபம்’ கட்டப்பட்டன. ‘சிலம்பு’ காப்பியத்தை முன்வைத்து, கலைஞர் திட்டமிட்டு உருவாக்கிய கட்டடங்கள், சமகாலத்திலிருந்து பார்வையாளர்களை வரலாற்றுக்குள் இழுத்துச் செல்கின்றன.

சென்னையின் பரபரப்பான நுங்கம்பாக்கத்தில் கலைஞர், திருக்குறளுக்காக உருவாக்கியிருக்கும் வள்ளுவர் கோட்டம், கல்லில் வடிவமைக்கப்பட்ட தேர் முக்கியமானவை. தமிழரின் அடையாளமாகக் கருதப்படுகிற திருக்குறள் நூலைப் போற்றும் வகையில் 1,330 திருக்குறள்களையும் கல்லில் பதித்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம், தமிழர் வரலாற்றில் முக்கியமான பதிவு.

குமரிமுனையில் கடலின் நடுவில் 133 அடியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையானது, தமிழ்க் கவிஞருக்குச் செய்யப்பட்ட உயர்ந்தபட்ச மரியாதையாகும். உலகில் இதுவரையிலும் இதுபோன்று கவிஞர் ஒருவருக்குச் சிலை நிறுவப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. பிரமாண்டமான முறையில் சிலையை நிறுவியுள்ள கலைஞரின் செயல்திட்டத்தின் பின்புலத்தில் தமிழ் அரசியல் பொதிந்திருக்கிறது.

காங்கிரஸ் அமைப்பைச் சார்ந்தவரும் விடுதலைப் போராட்ட வீரருமான கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை,  இறுதிக்காலத்தில் பொருளாதாரரீதியில் சிரமப்பட்டபோது, கலைஞர் மாதந்தோறும் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார். ‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ எனப் பாடிய கவிஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த வீட்டை ‘நினைவு இல்லமாக’ ஆக்கியதுடன், சென்னைக் கோட்டையில் அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டடத்திற்கு அவருடைய பெயர் வைக்கப்படக் காரணமாகயிருந்தார். 

விடுதலைப் போராட்ட வீரரும் பத்திரிகையாளரும் படைப்பாளருமான பரலி சு.நெல்லையப்பருக்குத் தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் நிதியுதவி வழங்கிட கலைஞர் ஆவனசெய்தார். இருவரும் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களெனினும், அவர்கள் செய்த தமிழ் இலக்கியச் செயல்களைக் கருத்தில்கொண்டு, பாரபட்சமின்றிச் செயல்படும் மனம் கலைஞருக்கு இருந்தது.

தமிழுக்கெனத் தனி அமைச்சகம் ஏற்படுத்தி, தமிழ் வளர்ச்சியை மேம்படுத்திய கலைஞர், நடுவண் அரசுடன் போராடி, தமிழுக்குச் ‘செம்மொழி’ தகுதி பெற்றிட முதன்மைக் காரணமாக விளங்குகிறார். ஆங்கிலம் இன்று எல்லா நிலைகளிலும் தமிழர் வாழ்க்கையில் மேலாதிக்கம் செலுத்துகிற நெருக்கடியான காலகட்டத்தில், தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, தமிழின் மேன்மைகளை இளைய தலைமுறையினருக்கு புரிதலேற்படுத்திடக் கலைஞர் முயன்றுள்ளார்.

கலைஞரும் தமிழும்

2006-ம் ஆண்டுக்குப் பின்னர், 110 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டு, ரூ.7.27 கோடி, அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத்தொகை வழங்கிட கலைஞர் ஆணையிட்டார். இதனால், தமிழில் படைப்புகள் படைத்திட்ட மூத்த படைப்பாளிகளுக்குக் கௌரவம் கிடைத்ததுடன், அவர்கள் படைப்புகள் எங்கும் பரவிட வழியேற்பட்டுள்ளது.

கலைஞர், அரசியல் வாழ்க்கையுடன் கலை, இலக்கிய வாழ்க்கையை இணைத்துச் செயல்பட்டார். அவரைப் பொறுத்த வரையில் கலை, இலக்கியமும் அரசியலும் இரு கண்கள். பதின்பருவத்தில் ‘முரசொலி’ பத்திரிகையில் பிரசுரமான தனது படைப்புகளைத் தொகுத்து, ‘கிழவன் கனவு’ என்ற முதல் நூலை வெளியிட்டார். அன்று தொடங்கிய அவருடைய இலக்கியப் பயணம், 92-வது வயதிலும் ‘இராமானுஜர்’ எழுதுமளவு தொடர்ந்தது. அவர் எழுதிக் குவித்த புத்தகங்கள், இலக்கியம் குறித்த அவருடைய ஆளுமைக்குச் சான்றாக விளங்குகின்றன. “…நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னோக்கி அடியெடுத்துவைத்தேன். இப்போது எண்ணினாலும் எனக்கொரு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது. எழுத்தாளன் ஆவதற்கு எத்தனை இன்னல்களை ஏற்றிருக்கிறோம் என்று! அதுவும் சமுதாயத்தில் எதிர்நீச்சல் போடும் எழுத்தாளன்…” என்று தனது படைப்பாக்கம் குறித்து கலைஞர் சொல்லியிருக்கிறார்.

2,000 ஆண்டு வரலாற்றுப் பழைமையான இலக்கியப் படைப்புகளை இளந்தலைமுறை யினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில்தாம்  ‘சங்கச் சித்திரங்கள்’, ‘தொல்காப்பியப் பூங்கா’ போன்ற நூல்களைக் கலைஞர்  எளிய முறையில் எழுதியுள்ளார். இந்தச் செயல், ஒருவகையில் தமிழ்ப் பண்பாட்டினை மீட்டுருவாக்கம் செய்வதாகும்.

நாடகம், நாவல், சிறுகதை, கடிதம், கவிதை என எழுதிய கலைஞரின் எழுத்துகளில் அடியோட்டமாகத் தமிழ் பற்றிய கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. சம்ஸ்கிருதம் கலந்து பேசப்பட்ட தமிழ்த் திரைப்படத்தின் மொழியையும் நடையையும் மாற்றியமைத்திட்ட கலைஞரின் மொழி ஆளுகை, அழுத்தமானது. மேடைப் பேச்சு வடிவத்தின்மூலம் பரந்துபட்ட அளவில் தி.மு.க-வின் கொள்கைகளை எடுத்துச் சென்றதில் கலைஞரின் அடுக்குமொழியும் அலங்காரமும் கவனத்திற்குரியன. ‘சேரன் செங்குட்டுவன்’, ‘சாக்ரடீஸ்’ போன்ற நாடகங்கள் அன்றைய காலகட்டத்தில் கலைஞரின் மொழித்திறனுக்காகப் பெரிதும் கொண்டாடப்பட்டன. திரைப்படப் பாடல்களைப் பாட்டுப் புத்தகமாக விற்ற காலகட்டத்தில், ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘மந்திரி குமாரி’ போன்ற திரைப்படங்களின் வசனங்கள் அடங்கிய மலிவுப் பதிப்புப் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் விற்பனையானது, கலைஞரின் மொழியாளுமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

‘பராசக்தி’ திரைப்படத்தின் வசனம் அடங்கிய இசைத்தட்டுகள், தமிழர் வாழ்கிற இடங்களில் எல்லாம் ஒலிபரப்பப்பட்டு, லட்சக்கணக்கானோர் கேட்டு ரசித்தது, தமிழை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. தமிழ் பற்றிய பேச்சுகளைப் பல்வேறு வழிகளில் உருவாக்கிட கலைஞர் செய்திட்ட முயற்சிகள், காத்திரமானவை. வெறுமனே தமிழ் என்று அரசியல் பேசிடாமல், ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது, தமிழ் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயலாற்றியதுடன், தமிழில் தொடர்ந்து படைப்புகளைப் படைத்து, அவற்றைத் தமிழர்களிடம் கொண்டுசென்று, தமிழ் பற்றிய காத்திரமான பேச்சுகளை அரசியல்ரீதியாக உருவாக்கியதில் கலைஞருக்கு நிகராகச் சொல்ல யாருமில்லை.