Published:Updated:

``எளிமையான வாழ்க்கை வாழ ஆரம்பியுங்கள்” - ஆளுநர் அட்வைஸ்!

``எளிமையான வாழ்க்கை வாழ ஆரம்பியுங்கள்” - ஆளுநர் அட்வைஸ்!
``எளிமையான வாழ்க்கை வாழ ஆரம்பியுங்கள்” - ஆளுநர் அட்வைஸ்!

``எளிமையான வாழ்க்கை வாழ ஆரம்பியுங்கள். எளிமையாக வாழ ஆரம்பித்த குறிப்பிட்ட சில காலத்திலேயே வறுமையையும், ஊழலையும் ஒழிக்க முடியும். இதுதான் சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவு” என பாரதியார் பிறந்தநாள் விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் விழா அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கொண்டாடப்பட்டது. 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாரதியார் வேடமணிந்த, 137 பள்ளி மாணவ, மாணவிகள் ``வந்தே மாதரம்” கோஷம் எழுப்பியும், பாரதியாரின் பாடல்களைப் பாடியும், எட்டப்ப மன்னனின் அரண்மனையில் இருந்து ஊர்வலமாகச் சென்று, அவரது இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, பாரதியாரின் மணி மண்டபத்தில் பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சொல்லரங்கம் நடைபெற்றது. இதில், நடிகர் டெல்லிகணேஷ், எழுத்தாளர் ரவிக்குமார், பத்திரிகையாளர் மாலன், நல்லிகுப்புசாமி, தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தினமணி நாளிதழ் சார்பில், 2018-ம் ஆண்டுக்கான `மகாகவி பாரதியார் விருது' மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 58 ஆண்டுக்காலம் பாரதியாரின் நூல்களைத் தேடியும், ஆய்வு செய்தும், கட்டுரைகள் எழுதியும் சுமார் 10 ஆயிரம் பக்கங்களில் நூல்கள் வெளியிட்ட 85 வயது பூர்த்தியான முதுபெரும் ஆய்வாளர் சீனிவிசுவநாதனுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். முன்னதாக, மணி மண்பம் வந்த அவர், பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார், மேடைக்கு வரும் வழி நெடுக்கிலும், பாரதியார் வேடம் அணிந்த இளம் பாரதிகள் ஆளுநருக்கு  ரோஜா மலர் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர், ``அனைவருக்கும் வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க…, சவுக்கியமா, தமிழ் மொழி இனிமையானது” எனத் தமிழில் பேசினார். அவரது தமிழ் பேச்சைக் கேட்டதும் மாணவ, மாணவிகள் கைதட்டினர்.  பின்னர் தன் உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார், `` மகா கவிஞர் என அழைக்கப்படும் பாரதியார் சுதந்திரப் போராட்டத்தில் உற்சாகத் தீ மூட்டியவர்.  சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.  அவரின் கவிதைகள், உரைநடைகள் படைப்புகள், முழக்கங்கள் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன் இளமையில் 11வது வயதிலேயே மிகுந்த கவிதைப் புலமையுடன் விளங்கியதால், அவருக்கு இதே ஊரில் உள்ள அரண்மனையில் `பாரதி' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பத்திரிகை உலகில் இவரின் பங்கு மிக முக்கியமானது. பாரதியாரின் படைப்புகளில் வெளிப்படும் இலக்கிய ஆளுமை, மிகுந்து காணப்பட்ட மொழி வளத்தால் அனைத்து தமிழ் ஆர்வலர்கள் மாணவர்களிடத்தில் இவர் முன்மாதிரி லட்சிய கவிஞராகவே காணப்படுகிறார். பாலகங்காதர திலகர், அரவிந்தர் ஆகியோருடன் இணைந்து சுதந்திர போராட்டங்களில் பங்குகொண்டு போராடினார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பாடல் பாடி எழுச்சியை ஊட்டினார். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பாரதியார் போன்றவர்கள் கனவு கண்ட இந்தியா தற்போது இருக்கிறதா? இல்லவே இல்லை.

அப்படிப்பட்ட இந்தியா உருவாக நாம் என்ன செய்ய வேண்டும். இதில், இரண்டு விஷயங்கள் உள்ளன. ஊழலை ஒழிக்க வேண்டும். வறுமையை இல்லாமல் ஆக்க வேண்டும். மக்களாகிய நாம் அனைவரும் எளிமையாக வாழ வேண்டும். இவ்வாறு எளிமையாக வாழத் துவங்கிவிட்டால், குறிப்பிட்ட சில காலத்திலேயே ஊழல், வறுமை இல்லாத நாடாக மாற்ற முடியும்” என்றார்.