Published:Updated:

கோவையில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது!

கோவையில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது!
கோவையில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது!

எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு, கோவையில் பாரதி விருது வழங்கப்பட்டது.

பாரதியின் புரட்சியை இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட `பாரதி பாசறை' சார்பில், கோவை ராம் நகரில் பாரதி விழா 2018 மற்றும் `கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா -2019' அறிமுக நிகழ்ச்சியை நடத்தியது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் நிரம்ப நடைபெற்ற இவ்விழாக் கூடலில் சாகித்திய அகாதமி விருது பெற்ற பொன்னீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் மற்றும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார், பாரதி விருதைப் பெற்றுக்கொண்டார். வங்கிப் பணியாளராக இருந்த பாரதி கிருஷ்ணகுமார் பாரதியார் மீதும் தமிழ் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக `உண்மையின் போர்க்குரல், எனக்கு இல்லையா கல்வி, என்று தணியும், ராமையாவின் குடிசை' போன்ற புத்தகங்களையும் பாரதியாரைப் பற்றி எழுதப்படாத வாழ்க்கை பக்கங்களை ஆய்வு செய்து `அருந்தவப்பன்றி' என்னும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். நான்கு முறை சிறந்த ஆவணப்பட இயக்குநர் விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது என முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

விருதைப் பெற்ற உவகையோடு பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில் ``பாரதி விருட்சம் கிடையாது, அவர் மண், தமிழ் மண். அந்த மண்ணில் விளைந்த விதைகள் நாங்கள். விதைகள் நிழலில் விளைவதில்லை. ஆனால், நாங்கள் பாரதியின் நிழலில் விளைந்தவர்கள்" என்று பாரதியாரின் பெருமை கூறினார்.

கோயம்புத்தூரில் நடக்கவிருக்கும் `கோயம்புத்தூர் புத்தக திருவிழா-2019' அறிமுகத்தைப் பற்றி பேசிய பா.விஜய் ஆனந்த், ``வழக்கமாகக் கோயம்புத்தூர் புத்தக திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இம்முறை அவ்விருது மட்டுமன்றி மூன்று இளம் படைப்பாளிகளுக்கும் விருது வழங்கப்பட உள்ளதாகவும் மக்களின் பங்களிப்பால் ஜெய்ப்பூர் இலக்கிய விழா போலவே கோயம்புத்தூர் புத்தக விழாவும் பிரமாண்டமாக இருக்கப்போகிறது" எனவும் கூறி மகிழ்ந்தார்.