Published:Updated:

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக 6,000 கி.மீ ஸ்கேடிங் பிரசாரம் செய்யும் ராணா!

6,000 கிலோமீட்டர் ஸ்கேடிங் பயணத்தில், பெண் கல்விக்கான நிதி திரட்டியும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புரிதலையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் ராணா உப்பலபட்டி.

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக 6,000 கி.மீ ஸ்கேடிங் பிரசாரம் செய்யும் ராணா!
பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக 6,000 கி.மீ ஸ்கேடிங் பிரசாரம் செய்யும் ராணா!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்த விழிப்புஉணர்வை அதிகரிக்க, 6,000 கிலோ மீட்டர் ஸ்கேடிங் பயணம் மேற்கொண்ட 37 வயது ராணா உப்பலபட்டி, சென்னை வந்திருந்தார். டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களையும் தொடும் `தங்க நாற்கரப்’ பாதையில் ஸ்கேடிங் பயணம் செய்த ராணா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பதின்பருவம் அடைந்த பெண் குழந்தைகளுக்குப் பள்ளிக்கல்வி நிறுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முறியடிக்க, பெண் கல்வி அவசியம். `எகோ’ என்ற பெயரிலான கல்வி மேம்பாட்டு முன் முயற்சியை டைட்டன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. எகோவுடன் கைகோத்த ராணா, தன்னுடைய ஸ்கேடிங் பயணத்தின் மூலம் மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார்.  

``ஸ்கேடிங் தெரிந்த எனக்கு, அதைச் சமூக நலப்பணிக்குப் பயன்படுத்த நினைத்தேன். அப்போதுதான் இந்த `ஸ்கேடிங் பிரசாரம்’ ஐடியா க்ளிக்கானது. பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புரிதலின் தேவையைப் பரப்புவதற்காக இந்தப் பயணத்தைத் திட்டமிட்டேன்” என்கிறார் ராணா. 2016-ம் ஆண்டு, மார்பகப் புற்றுநோய் குறித்த 600 கிலோமீட்டர் விழிப்புஉணர்வு பயணத்தை மேற்கொண்டதே ராணாவின் முதல் முயற்சி. இந்தமுறை பயண தூரம் அதிகமானது, பிரசாரத்தின் கருவும் மிக முக்கியமானது. 6,000 கிலோமீட்டர் ஸ்கேடிங் பயணத்தில், பெண் கல்விக்கான நிதி திரட்டியும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புரிதலையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். 


செப்டம்பர் மாதம் ஓசூரில் தொடங்கிய இந்தப் பயணம் கர்நாடகத்தின் துமகூரு, சிரா, சித்ரதுர்கா, ஹூப்ளி, பெல்காம் வழியாக மகாராஷ்டிராவின் மும்பை, பூனே, கோலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து, குஜாராத் சென்றடைந்தார். பின் டில்லி, லக்னோ, பாட்னா, வாரணாசி, தன்பாத், கொல்கத்தா, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்டு சமீபத்தில் சென்னை வந்தார். இதுவரை, 5500 கிலோமீட்டரைக் கடந்துள்ள அவர், 16,200 ஏழைப் பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான நிதி திரட்டியுள்ளார். இந்தப் பயணத்தின்போது அவரிடம், போதுமான நிதி வசதி இல்லாததே பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுவதற்கான முக்கியக் காரணம் என்று பலரும் முன்வைத்துள்ளனர்.

ராணாவின் 90 நாள்கள் பயணத்தில், 150-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை, கிராம மக்களைச் சந்தித்து பெண் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். ``நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, ஸ்கேடிங் பயண வழியிலும் மக்களைச் சந்தித்தேன். நேஷனல் ஹைவேயில் இவர் ஏன் ஸ்கேடிங் செய்ய வேண்டும் எனக் குழம்பிய மக்கள், இந்தப் பயணத்தின் நோக்கத்தைக் கேட்டறிந்தனர். பெண் கல்வி விழிப்புஉணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியபடி கிராமப்புறங்களைக் கடந்தோம். பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தீர்வாகாது. பிரச்னை குறித்த புரிதல் வேண்டும்” என்றார் உறுதியாக. ஸ்கேடிங் பயணத்தின் ராணா எதிர்கொண்ட அனுபவங்களைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மும்பை கே.சி மகேந்திரா கல்வி அறக்கட்டளை, டெல்லி ஐஐஎம் பேக்ட் ஆகியவையும் ராணாவின் பயணத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

``பெண் குழந்தை” என கூகுளில் டைப் செய்து பாருங்கள். பெண் குழந்தைகளுக்கு எதிரான செய்திகள் வந்து குவிகின்றன. சென்னை, சேலம் மட்டுமல்ல, மாநிலங்கள் கடந்து நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்தப் பிரசாரத்தின் தேவையை உறுதி செய்கின்றன.