Published:Updated:

நாய்களுக்காக நைட் ஷிஃப்ட்... 71 வயது கோவை முதியவரின் கதை!

நாய்களுக்காக நைட் ஷிஃப்ட்... 71 வயது கோவை முதியவரின் கதை!
நாய்களுக்காக நைட் ஷிஃப்ட்... 71 வயது கோவை முதியவரின் கதை!

"நான் சைக்கிள்ள எவ்ளோ தூரம் போனாலும், இதுங்க என் கூடவே வரும். மீதி இருக்கற என் நாள்கள, இதுங்களுக்காகத்தான் ஓடணும். அதுதான தம்பி நியாயம்!"

மெலிந்துபோன தேகம்… பழைய ஹெர்குலஸ் சைக்கிள்... அந்த சைக்கிள் கேரியரில் டைகர் என்ற நாய்... கோவை, ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் சத்தியநாதனையும், டைகரையும் தனித்தனியாகப் பார்ப்பது மிகவும் அரிது. பணிக்குச் செல்லும்போது கூட, டைகரை தன்னுடன் அழைத்துச் சென்று விடுகிறார் சத்தியநாதன்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் சத்தியநாதனைச் சந்தித்தோம். ஒரு திண்ணையில் சத்தியநாதன் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி டைகர் உட்பட 4 நாய்கள் படுத்திருந்தன. ``சின்ன வயசிலிருந்தே எனக்குப் பிராணிகள் வளர்க்க ஆர்வம் அதிகம். எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு இருக்காங்க. என் மனைவிக்கும், எனக்கும் பிரச்னை. பிரிஞ்சுட்டோம். நான் செக்யூரிட்டி வேலை பார்த்துட்டே, நம்ம நாட்டு இனத்தைச் சேர்ந்த 5 நாய்களுக்குச் சாப்பாடு போட்டு வளர்த்துட்டு இருந்தேன். தினமும் காலைல டீ குடிக்கப் போறப்ப, என் கூடவே வேட்டைக்குப் போற குதிரைங்க மாதிரி வரும். நான் டீ குடிச்சு முடிக்கிற வரை அங்கயே அமைதியா படுத்துக் கிடக்குங்க. அதுங்களுக்கு காலைல பிஸ்கட்டும், மதியம் கறியும் வாங்கிப் போடுவேன். பகல்ல அதுங்கள பார்த்துக்கறதுக்காகவே நைட் வாட்ச் மேன் வேலைக்குப் போய்ட்டு இருந்தேன்.

ஒரு நாள், காலைல நாய்களுக்குத் தெரியாம நான் டீ குடிக்கக் கிளம்பிப் போனேன். டீ குடிச்சுட்டு வெளிய வரப்ப, ஒரு குட்டி நாய் ஸ்கூல் பொண்ணோட துப்பட்டாவ பிடிச்சு இழுத்து சேட்டை பண்ணிட்டு இருந்துச்சு. கிட்டப் போய் பார்த்தப்ப, அதோட தோல்ல நிறைய பூச்சிகள் இருந்துச்சு. இதனால, அத வளர்த்தவங்க ரோட்ல விட்டுட்டாங்க. அது `பொம்மரேனியன்’ வகை நாய். எனக்கு மனசே கேட்கல. அத எடுத்துட்டு வந்து, ஆஸ்பத்திரி போய் சரி பண்ணிட்டேன். 6 வருஷத்துக்கு மேல ஆகுது. நான் எந்த நாய்க்கும் பேர் வைக்க மாட்டேன். `ஏய் வாமா.. போமா'னு தான் கூப்பிடுவேன். முதல் தடவையா இந்த நாய்க்கு டைகர்னு பேர் வெச்சேன். டைகர் மேல கொஞ்சம் பாசம் அதிகம். அதனால, எங்க போனாலும் என் சைக்கிள் கேரியர்ல ஏறி உக்காந்துக்கும்" என்று பேசிக்கொண்டிருந்தவர், டைகரின் பழைய படங்களைக் காட்டிப் பரவசப்பட்டார். சத்தியநாதனுக்கு டீ  வாங்கிக் கொடுத்தோம். டம்ளரில் பாதி டீயைக் குடித்தவர், மீதி டீயை தனது நாய்களுக்கு வைத்துவிட்டார். நாய்கள் டீ குடித்ததைத் திருப்தியுடன் பார்த்துவிட்டு சத்தியநாதன் மீண்டும் தொடர்ந்தார்,

``எனக்கு இப்ப 71 வயசு ஆகுது. ஒருமுறை, நான் நைட் ஷிப்டல அசந்து தூங்கிட்டேன். அப்ப, அங்க ஒரு பாம்பு வந்துருச்சு. அந்த சமயத்துல டைகர்தான் என்னைக் காப்பாத்துச்சு. நான் இப்ப வாழ்றதுக்கு டைகர்தான் முக்கியக் காரணம். முன்னாடி தினமும் 1 லிட்டர் பால், 5 பாக்கெட் பிஸ்கட், 50 ரூபாய்க்குக் கோழிக் கழிவுகள் வாங்கிப் போட்டுட்டு இருந்தேன். நான் வேலை பார்த்த இடத்துல, திடீர்னு, `கொஞ்ச நாள் கழிச்சுக் கூப்டறோம்’னு சொல்லி, என்ன வேலைய விட்டு நிறுத்திட்டாங்க. பாக்கி சம்பளக் காசும் தரல. அவங்க கொடுத்த செக்கும் பெளன்ஸ் ஆகிடுச்சு. இருக்கற காச வெச்சு அம்மா உணவகத்துல பசியாத்திட்டு இருக்கேன். அதுங்களுக்கு சாப்பாடு போட்டப்புறம்தான் எனக்கு உயிரே வரும். கறிக்கடைல முன்னாடி மாதிரி, கோழிக் கழிவுகள் தரது இல்ல. இப்ப எனக்கு இருக்கற சக்திக்கு 30 ரூபாய்க்குத்தான் கறி வாங்க முடியுது. அதுல கொஞ்சம்தான், நாய்களுக்குச் சாப்பாடு வைக்கிறேன். அது பத்தாது.

ஆகாரம் கம்மி ஆனதால இப்ப அதுங்க ரொம்ப சோர்ந்து போய்டுச்சு. அதனால, இதுங்களுக்காகவே வேலை தேடிட்டு இருக்கேன். ஒரு சிலர் உதவியால பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு. நான் சைக்கிள்ள எவ்ளோ தூரம் போனாலும், இதுங்க என் கூடவே வரும். மீதி இருக்கற என் நாள்கள, இதுங்களுக்காகத்தான் ஓடணும். அதுதான தம்பி நியாயம்" என்று புன்னகையுடன், டைகரின் தலையைப் பாசமாகக் கோதிவிட்டு, கறிக்கடையை நோக்கி நகர்ந்தார் சத்தியநாதன்.

பெற்ற தாயையும் தந்தையயும் குழந்தைகள் கொடுமைப்படுத்தும் காலத்தில், நாய்கள் காட்டும் அன்பும், அதற்காக சத்தியநாதன் காட்டும் அறமும் அழகியல்.

அடுத்த கட்டுரைக்கு