Published:Updated:

திருவள்ளுவரா, குந்தகுந்தரா? - என்ன சொல்கிறது சமண ஆய்வு?

திருவள்ளுவரா, குந்தகுந்தரா? - என்ன சொல்கிறது சமண ஆய்வு?
திருவள்ளுவரா, குந்தகுந்தரா? - என்ன சொல்கிறது சமண ஆய்வு?

திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூர் பக்கம் என்கிறது ஒரு கூட்டம், இல்லை அவர் வந்தவாசியில் வாழ்ந்தவர் என்கிறார்கள் சமணர்கள்...

திருக்குறள் குறித்து சமண ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று காண்போம்.

உலகப்பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், சென்னை மயிலாப்பூரில் இரண்டாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுவரை, இடைப்பட்ட காலத்தில் பிறந்து வாழ்ந்தவர் என்றுதான் இதுவரையிலான தமிழ்ப் பாடநூல்கள் பதிவுசெய்து வந்துள்ளன. அதற்கான சான்றுகளையும் முன்வைத்துள்ளனர் தமிழ்மொழி ஆய்வாளர்கள். ஆனால், அதே சமயம் திருவள்ளுவரைப் பற்றிய வேறு பார்வையும் இங்கே முன்வைக்கப்படுகிறது. திருக்குறள் எவ்வித மதங்களின் சாயலுமற்றது  என்று கூறப்பட்டாலும் ஒவ்வொரு மதமும் திருவள்ளுவரை தங்களுக்கானவர் என்று உடைமையாக்கிக் கொள்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பத்து நிமிடம் பயணம் செய்யக்கூடிய தொலைவில் இருக்கிறது பொன்னூர் கிராமம். இது நெசவுத் தொழில் செய்பவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. ஏற்கெனவே, சமணர் படுகைகளும் சமணர்கள் வசித்து வந்ததற்கான எண்ணற்ற தடங்களையும் கொண்டது வந்தவாசி. இந்த நிலையில், பொன்னூர் கிராமத்தில்தான் உண்மையில் திருவள்ளுவர்வாழ்ந்தார் என்கிற சான்றுகளை முன்வைக்கிறார்கள் அங்கிருக்கும் சமண மதப்பற்றாளர்கள். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இன்றளவும் சமண மதத்தைச் சேர்ந்த, குறிப்பாக தமிழ்ச் சமணர்கள் அதிகம் இருக்கும் இடமாக வந்தவாசியும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பார்க்கப்படுகின்றன. அங்கே ஒவ்வொரு இந்துமதக் கோயில்களுக்கு அருகிலும் ஒரு சமண வாழ்வியல் நெறியாளர்களின் கோயில்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு தெருவுக்கும் பிள்ளையார் கோயில் இருப்பதுபோல அங்கே சமண வழிப்பாட்டுக் கோயில்கள் இருக்கின்றன. சமணர்களில் திகம்பரர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள்.

பொன்னூரில் இருக்கும் ‘குந்தக் குந்தர்’ மலையும், அதையொட்டி உள்ள தமிழ்ச் சமணச் சிறுவர்களுக்கான உண்டுஉறைவிடமும் இதில் அடக்கம். திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அதே காலகட்டத்தில்தான் அந்த மலையில் ‘குந்தக் குந்தர்’ என்னும் சமண முனிவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சமண மதத்தில் ‘திரி’ என்கிற சொல்லாடல் புழக்கத்தில் உண்டு. 'குந்தக் குந்தர்’ அந்த மலையில் அமர்ந்து எழுதிய ‘திரிகுறள்’ தான், திருக்குறளாக மாற்றம் அடைந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். சுமார் இருநூறு அல்லது முந்நூறு படிகளை உடைய அந்தப் பொன்னூர் மலையின் அடிவாரத்தில் சமண ஸ்தூபம் ஒன்று நம்மை வரவேற்கிறது. செங்குத்தாக இருக்கும் அந்தப் படிகளில் ஏறி, உச்சியை அடைந்தால் அங்கே குந்த குந்தர் என்று எழுதப்பட்ட ஒரு சிறு மண்டபத்துக்குள்ளே பாதங்கள் வைக்கப்பட்டு அதற்கு அருகிலேயே படுகை ஒன்றும் பதிக்கப்பட்டிருக்கிறது. அதில் குந்தகுந்தரின் பெயரும் அவர் வாழ்ந்த காலம் உள்பட சில தமிழ்ச் சமணப் பாடல்களும் பதியப்பட்டிருக்கின்றன.

மலைமுகட்டிலிருந்து வந்தவாசி முழுவதும் தெரிகிறது. கூடவே மலையின் கீழ் இருக்கும் உண்டு உறைவிட இல்லமும் அடக்கம். இல்லத்திற்குச் சென்றதும் அங்கிருக்கும் பிள்ளைகள் ‘ஜீனேந்திரா’ என்று வணக்கம் சொல்லி நம்மை வரவேற்கிறார்கள். எல்லோரும் பெரும்பாலும் ஆறாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள். அவர்களுக்கு மதம் பற்றிய எந்தமாதிரியான புரிதல்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை. அங்குள்ள பிள்ளைகளுக்கு மத போதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்கிற கேள்வியும் ஒருபக்கம் இருக்கிறது. ஆனாலும், தமிழ்வளர்க்கும் சமூகமாக அந்த இல்லத்தின் நிர்வாகிகள் இருக்கிறார்கள். இல்லத்தை தலைமுறை தலைமுறையாக நிர்வகிக்கும் சமணர்கள், மாதந்திர திருக்குறள் ஆய்வுக்கூட்டத்தையும் நடத்தி, அது தொடர்பாக விவாதிக்கிறார்கள். திருவள்ளுவரை மதச்சாயமற்றவர் என்று கூறப்பட்டாலும் சமணர் என்பது தொடர்பான ஓலைச்சுவடி ஆதாரங்கள், உண்டுஉறைவிட நிர்வாகிகள்வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளுவர் ஏன் மதங்களைச் சார்ந்தவராகப் பார்க்கப்படுகிறார்? திருக்குறளுக்கு ஏன் மயிலாப்பூர் என்றும், வந்தவாசி என்றும் மத அடையாளம் பூசப்படுகிறது?. அப்படியென்றால் உண்மையிலேயே திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய உண்மை ஆய்வுகள்தான் என்ன என்கிற கேள்வி எழுகிறது.

அடுத்த கட்டுரைக்கு