Published:Updated:

``சட்டத்தை மதிக்காமல் இருக்கிறார்கள்!” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி

``சட்டத்தை மதிக்காமல் இருக்கிறார்கள்!” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி
``சட்டத்தை மதிக்காமல் இருக்கிறார்கள்!” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் எழுவர் விடுதலை தொடர்பாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதன் மீது பல நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகம் உள்பட உலக நாடுகளில் உள்ள பல தமிழர்கள் கடிதம் மூலமாக ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் சைக்கிள் பயணம், அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் போன்ற பல சம்பவங்கள் நடந்தன. இருந்தும், ஏழுபேர் விடுதலைத் தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் விளக்கமும் தரவில்லை.  ‘ஏழுபேரின் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றுடன் 100 நாள்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?’ என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தான் புதிதாகத் தொடங்கியுள்ள  ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அற்புதம்மாளைத் தொடர்புகொண்டு பேசினோம், “ எனது மகனின் நீதிக்காக, கடந்த 28 ஆண்டுகளாகப் போராடிவரும் எனக்கு, மக்கள்தான் ஒரே பலம். எனது வயது மூப்பு சில நேரங்களில் என்னை இயங்கவிடாமல் செய்துவிடுகிறது. சமங்களில் விடுதலை முயற்சிக்கான சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத சூழலும் ஏற்படுகிறது.  இது மட்டுமில்லாமல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் நேரில் சென்று அறுதல் கூறவேண்டும் என எண்ணினேன். மேலும், என்னைச் சந்திக்கும்போதெல்லாம்  ‘அம்மா விதை நெல் மணிகள் தருகிறேன் பயிரிடுங்கள்’ என்று வாஞ்சையுடன் பேசிய நெல் ஜெயராமனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும், அவர்களில் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியவில்லை என்ற வருத்தம், ஏக்கம் இருக்கிறது. அதற்கான தீர்வாகத்தான் ட்விட்டருக்கு வந்தேன்.  என்னுடைய கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த மேலும் ஒரு புது முயற்சியாகவே சமூக வலைதளத்தில் இணைந்துள்ளேன். அறிவு உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றுடன் சரியாக 100 நாள்கள் நிறைவடைகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் என் மகன் விடுதலைக்காகக் குரல்கொடுத்தும், ஆளுநர் இன்னும் மௌனம் காக்கிறார். அதை வலியுறுத்தும் விதமாக என் முதல் பதிவை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளேன். 

இதைப் பார்க்கும்போது, சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறும் அதிகாரத்தில் உள்ளவர்களே சட்டத்தை மதிக்காமல் இருக்கிறார்களே என்ற கேள்விதான் எழுகிறது. தீர்ப்பு வெளியான உடனேயே தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பிவைத்தனர்.  ‘எங்களால் முடிந்தவரை நாங்கள் முயற்சிசெய்துள்ளோம் இனி நாங்கள் எதுவும் செய்யமுடியாது. நாங்கள் அனுப்பிய கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து மட்டுமே இடவேண்டும்’ என அரசு தரப்பில் கூறுகின்றனர். ஆனால், ஆளுநர் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியும், ஆளுநர் இன்னும்  மௌனம் காக்கிறார். அதற்குப் பலர் பல காரணங்களைக் கூறுகின்றனர். இருந்தும், எங்களுக்கு முறையான பதில் தெரியவில்லை” என்று வருத்தமாகப் பேசினார்.

இவரைத்தொடர்ந்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார் பேசும்போது,  “ராஜீவ் காந்தி கொலையின்போது பாதிக்கப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர்களின் மனு செல்லாது, அதைக் காலாவதியானதாக அறிவிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்செய்துள்ளது. ஒரு வழக்கின்மீது தடை ஆணை  இருந்தால்தான், அவரின் விடுதலை பாதிக்கும். மாறாக, அவர்மீது வழக்குகள் இருந்தால் அது விடுதலையைப் பாதிக்காது. இத்தைதான் நாங்கள் முன்பிருந்து வலியுறுத்திவருகிறோம். ஏழு பேர் விடுதலையில் எந்தத் தடையும் இல்லாதபோது, ஆளுநர் ஏன் இன்னும் மௌனமாக உள்ளார் எனத் தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மக்கள் அற்புதம்மாளைத் தொடர்புகொண்டு, இன்னும் பெரிய அளவில் போராட்டம் நடத்தலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர், ‘ஆளுநர் கோப்புகளில் கையெழுத்திடுவார் என எனக்கு நம்பிக்கையுள்ளது’ என்பது மட்டுமே கூறிவருகிறார். நாங்களும் எழுவர் விடுதலைக்காக முடிந்தவரை போராடிவருகிறோம்” என்று கூறி முடித்தார்.