Published:Updated:

வேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை? - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை? - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்!
வேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை? - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

பிரீமியம் ஸ்டோரி

புத்தகத்தின் பெயர் : தி ரைட் அண்டு ராங் ஸ்டஃப் (The Right and Wrong Stuff)

ஆசிரியர் : Carter Cast

பதிப்பாளர் : PublicAffairs

‘எத்தனையோ ஆண்டுகள் கஷ்டப்பட்டு வேலை பார்த்தும், பதவி உயர்வு பக்கத்தில்கூட வந்துபோக மாட்டேன்கிறதே!’ என்று புலம்புபவர்கள் நம்மில் பலர். புலம்புவதை விட்டுவிட்டு, என்ன செய்தால், நமக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாக சொல்கிறது கார்ட்டெர் காஸ்ட் என்பவர் எழுதிய ‘தி ரைட் அண்டு ராங் ஸ்டஃப்’ புத்தகம்.

‘நம்மில் நிறைய பேர் நம்மால் பல விஷயங்களை சூப்பராகச் செய்ய முடியும்’ என்று பெருமிதம் கொண்டு திரிகிறோம். அதில் எள்ளளவும் உண்மை இல்லை’ என்கி்ற வார்த்தைகளுடன் அதிரடியாக ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

“என்னுடைய 32 வயதில் பெப்சி நிறுவனத்தின் ப்ரிட்டோ லே பிரிவில் நான் ஒரு சீனியர் புராடெக்ட் மேனேஜராக பணியில் இருந்தேன். பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு, தற்போது பெப்சியில் சிறப்பாகச் செயல்பட்டுவருவதாக நினைத்திருந்தேன். பல பதவி உயர்வுகளை நான் வாங்கிவிட்டேன். கன்ஸ்யூமர் மார்க்கெட்டிங் துறையில் கில்லாடி நான். அந்தத் துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் பிஸ்தா என்றெல்லாம் நானும் என்னைச் சுற்றியிருப்பவர்களும் முழுமையாக நம்பிவந்த வேளையில் என்னுடைய அந்த வருடத்திற்கான அப்ரைசல் வந்தது. அந்த அப்ரைசல் படிவத்தில் ஒரு பணியாளர் எதிர்காலத்தில் எந்தப் பதவிக்கு தகுதியானவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

வேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை? - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்!

இதற்குமுன்னால் வந்த அப்ரைசல்களில் எல்லாம் ‘எல்18+’ என்றிருக்கும். ‘எல்18’ என்பது சீனியர் வைஸ் பிரசிடென்ட் என்கிற நிலையைக் குறிக்கும். இந்த முறை ‘எல்13’ என்றிருந்தது. அதாவது, சீனியர் மேனேஜர் என்ற குறைந்த நிலைப் பதவி. அதாவது, நான் தற்போது பார்க்கும் வேலையின் பதவி. அதற்குமேல் நகர்த்த / நகர முடியாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

காதில் புகைவர என்னு டைய அதிகாரியைச்  சந்தித் தேன். பெரிய  பீடிகை யெல் லாம் போடாமல், ‘தம்பி, நீ பல விஷயங்களைச் சரியாகச் செய்யவில்லை’ என்றார். கூட்டுறவுடன் செயல்பட லாயக்கில்லாமை, எதிர்த்து நிற்கும் குணம், சமாளிக்க முடியாத வகை யிலான எண்ணம் மற்றும் செயல்பாடு போன்றவையே என்னுடைய குறைபாடுகள்’ என்றார் அவர்.

‘‘உதாரணத்துக்கு, சந்தை குறித்த ஓர் ஆராய்ச்சிக்கு  கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல் படச் சொன்னோம். நீங்களோ எனக்குத் தெரியாத சந்தையா என்று அவர்களுடன் இம்மியளவும் இணைந்து செயல்பட மறுத்தீர்கள். அதை விடுங்கள். மரியாதை நிமித்தம் அவர்களை ஒருமுறைகூட நீங்கள் பார்க்கவில்லை. இது சரியா?’ என்றார் அவர்.

அன்றைக்கு எனக்குச் சரியாகத் தெரிந்தது, இன்றைக்கு எனக்குத் தலைகீழாகத் தவறாகத் தெரிந்தது  –  புரோமோஷன் மறுக்கப்பட்டதால் அல்ல. நிஜமாகவே இது என்னுடைய தவறுதான் என்று உணர்ந்தேன்” என்கிறார் ஆசிரியர்.

“எதனால் இந்த நிலை? பெரிய நிறுவனங்கள் கொஞ்சம் மெதுவாகவே நகரும் தன்மை கொண்டவை. எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் செய்துவிட முடியாது. அடிமேல் அடிவைத்துத்தான் எதையும் நகர்த்த முடியும். அதேசமயம், செய்யும் வேலையில் கில்லாடியாக இருந்தால், மதிப்பும் மரியாதையும் எக்கச்சக்கமாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு, வேலைகளை வேகமாகச் செய்து முடித்துவிடலாம்.

‘அட போங்கப்பா, இந்தச் சட்டதிட்டமெல்லாம் உங்களை மாதிரி மெதுவாகச் செயல்படும் ஆசாமிக்குத்தான். நாங்களெல்லாம் சாதனை யாளர்கள். எங்களுக்கு நிறுவனத்தின் சட்ட திட்டமெல்லாம் வளைந்து கொடுக்கும், இல்லை யென்றால் நாங்களே வளைத்துக்கொள்வோம்’ என்று சொல்லிவிட்டு செய்யலாம்.

இப்படிச் செய்யும்போது வேலைகள் நடக்கும். ஆனால், பதவி உயர்வுக்கான அப்ரைசல்களில் விவகார மாகிவிடும். ‘இருக்கிற பதவியிலேயே இந்த ஆட்டம் என்றால், இவரெல்லாம் பெரிய பதவிக்கு வந்தால் கம்பெனி தாங்குமா?’ என்ற கேள்வி நிர்வாகிகள் மனதில் தோன்றத்தானே செய்யும்!

வேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை? - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்!

நிச்சயமாக எனக்கு திறமைக்குறைவு என்பது இல்லவே இல்லை. திறமை யான ஆள்தான். ஆனால், ‘உன்னையெல்லாம் இப் போதே சமாளிக்க முடிய லையப்பா’ என்கிறார் பாஸ். யோசித்துப் பார்க்கும் போது அவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது.

அப்படியென்றால், எது திறமைக்காரர்களின் முன்னேற்றப்பாதையில் தடைக்கல்லாக இருக்கிறது, பணியிடத்தில் திறமையானவர்களில் சிலர் மட்டுமே ஏன் முன்னேறுகின்றனர், சிலர் ஏன் முன்னேற்றம் காண்பதில்லை என்ற கேள்வி எழுகிறதில்லையா? யாருக்கெல்லாம் முன்னேற்றத் தில் தேக்க  நிலை வரும் என ஆராய்ந்தால், ஐந்து விதமான இயல்புகள் கொண்டவர்களைப் பட்டியலிடலாம்” என்கிறார் ஆசிரியர். அந்த ஐந்துவிதமான இயல்புகளில் ஒன்றிரண்டு உங்களிடம் இருக்கலாம். 

கேப்டன் ஃபென்டாஸ்டிக்

“நான், என்னுடைய என்ற வார்த்தைகளை மட்டுமே கொண்டிருக்கும் சாதனையாளர்கள் இவர்கள். கூடவே வேலை பார்ப்பவர்களைப் பற்றி எள்ளளவும் கவலைகொள்ளாது செயல்படுபவர் கள். செயல்திறனும், வேகமும், நான் என்ற குணமும் ஆரம்பத்தில் பெர்ஃபாமென்ஸ் காட்டும். ஆனால், ஒரு லெவலுக்கு மேல் நகராது போய்விடும்.

தனி ஒருவன்

‘அவரிடம் கொடுங்கள் இந்த வேலையை. தனி ஒருவனாய் கச்சிதமாக முடிப்பார்’ என்பார்கள். சரிதான். ஆனால், தனி ஒருவனாக மட்டுமே முடிக்கக்கூடிய வேலைகள் பெருநிறுவனங்களில் மிக மிகக் குறைவு இல்லையா? இவரைப் போன்றவர்கள் நிர்வாகிகள் ஆகும்போது டீம் என்பதைப் பற்றி எல்லாம் சிந்திக்கவே முடியாது. டீம் என்று இருந்தாலும்கூட, ‘ஓரமா நில்லுங்கப்பா, நான் செய்து காட்டுறேன்’’ என்று வேட்டியை மடித்துக்கொண்டு இறங்குவது மட்டுமே எப்போதும் நடக்கும். இது  கம்பெனிக்கு சரிப்பட்டு வருமா?

வெர்ஷன் 1.0

இவர்களும் சூப்பர் செயல்திறன் கொண்டவர்களே. ஆனால், அப்டேட் என்பதே கிடையாது. ஏனென்றால், மாற்றம் என்பதை ஒப்புக்கொள்ளாத பிசினஸிற்கு உதவாத மனிதர்கள் இவர்கள்.  அப்ரைசலில் க்ளீன் போல்டு என்பது இவர்களுக்கு உறுதி. ‘மாற்றமா, வாட் நான்சென்ஸ்’ என்று எதிர்க்கும் இவர்கள் மாற்றப்படு வார்கள் வேறு நிறுவனத்திற்கு!

ஒரு திறமை, ஓகோன்னு வாழ்க்கை

இவர்களால் ஒரு வேலையை (ஒரே ஒரு வேலையை) சூப்பராகச் செய்ய முடியும், அவ்வளவேதான். இவர்கள் வேலைக்குச் சேர்ந்தபோது அந்த வேலை அதிமுக்கியமானதாக இருந்திருக்கும். அதைத் திறம்பட செய்வதில் திறமைமிக்கவர்களாக உருவெடுத்திருப்பார்கள். வெர்சன் 1.0 என்பது மாற்றத்திற்கு எதிர்ப்பு சொல்லும் கூட்டம். இந்த ஒரேயொரு திறமை ஆசாமிகளுக்கோ மாறிக் கொள்ளவேண்டும் என்பதே தெரியாது. செக்குமாடு மாதிரி  ஒரே வேலையைச் செய்யும் இவர்களுக்குப் பக்கத்தில்கூட பதவி உயர்வு வராது.

வெட்டிப் பரபரப்பு மனிதர்கள்

என்னவோ  தலையில் தீப்பிடித்ததைப் போல் அங்குமிங்கும் சுற்றுவார்கள். ஒரு வேலையில் உருப்படியாக இருக்க மாட்டார்கள். ஆனால், ‘நான் ஒரே பிசி என்பார்கள்.’ இவர்களைப் பார்த்து அலுவலகமே ‘ஆமா, அவர் படுபிசி’ என்று சாட்சி சொல்லும். இவர்கள் செய்யும் எல்லா வேலை களையும் பட்டியலிட்டால், அது அவர்களையே சார்ந்திருப்ப தாகக் காட்டும். ஆனால், எதுவும் உருப்படியாக முடிந்திருக்காது. ஏன்..? ‘நான் ரொம்ப பிசி’ என்பதே காரணம்.”

இந்தப் புத்தகம், இந்த ஐந்து நிலைகளிலிருந்து நம்மைச் சரிசெய்துகொள்வது எப்படி என்பதைச் உதாரணங்களுடன் விளக்கமாகச் சொல்கிறது. இதுதான், இப்படித்தான் என்று இல்லாமல், எந்தப் பணியிலும் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி காண்பது எப்படி என்பதையும் இந்தப் புத்தகம் விளக்கமாகச் சொல்கிறது. தேக்கநிலையிலிருந்து விடுபட்டு, வேகமாக முன்னேற்றம் காணத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றையும்  விளக்கியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.”

- நாணயம் விகடன் டீம்

திறமை மட்டும் போதாது!

“திறமையின் வெளிப்பாடு நம்மை வேகமாகச் செயல்பட வைக்கிறது. அந்தச் செயல்பாடுகளில் நாம் செய்யும் எதிர்வினைகள், நம் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களில் அவ்வப்போது நம் பாஸால் நினைவுகூறப்பட்டே வருகிறது. ‘எல்லாவற்றையும் செய்கிறார், ஆனால்...’ என்ற அந்த ஆனால்தான் நம் பதவி உயர்வுக்கும், வேலைக்கும் வேட்டு வைக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு வரையிலான மேனேஜர்களுக்கு இந்த நிலைமையே வருகிறது எனலாம். பலருக்கும் பதவி உயர்வு கிடைப்பதில்லை. ‘நீங்கள் திறமைக்காரர் பாஸ். அதனால் நீங்கள் இங்கேயே செயல்படுங்கள். உங்கள் அதிகார துஷ்பிரயோகங்களை இப்போது இருக்கும் நிலையிலேயே செய்து மகிழ்ந்து சாதியுங்கள். தப்பித்தவறி மேலே வந்துவிடாதீர்கள். கம்பெனி தாங்காது’ என்பதே இது போன்றவர்களுக்குச் சொல்லப்படும் விஷயமாக இருக்கிறது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு