தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை!” - பாரதி பாஸ்கர்

“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை!” - பாரதி பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை!” - பாரதி பாஸ்கர்

வாசிப்பால் வந்த வசந்தம்

ண்டிகைக்காலம் என்றால் பட்டிமன்றம். பட்டிமன்றம் என்றாலோ பாரதி பாஸ்கர். 16 ஆண்டுகளாகப் பட்டிமன்றப் பேச்சாளராகத் தனக்கென ஓர் அடையாளத்துடன் இயங்கிக் கொண்டிருப்பவர். முன்னணி வங்கி ஒன்றில் மூத்த துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை, கோபாலபுரத்திலுள்ள பாரதி பாஸ்கரின் இல்லத்தில், ஒரு மாலைப் பொழுதில் தொடங்கியது இனிமையான உரையாடல்.

உங்கள் பேச்சாளர் பயணத்துக்கான அடித்தளம் பற்றி...

அப்பா, பள்ளித் தலைமை ஆசிரியர். அம்மா, மத்திய அரசு ஊழியர். மூன்று மகள்களில், நான் கடைக்குட்டி. மூவரும் பெண் பிள்ளைகளே எனப் பெற்றோர் ஒருநாள்கூட வருத்தப்பட்டதில்லை; அவர்கள் படிப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என்பதால், ‘படிப்பு மட்டுமே பெண்களை முன்னேற்றும்’ என்பதில் உறுதியாக இருந்தனர். படிப்புக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று சமையல், வீட்டு வேலைகளில் அதிகமாக நாங்கள் கவனம் செலுத்தக் கூடாது என்று கட்டளையிட்டனர்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிப் புத்தகங்களைத் தாண்டிய, படிப்பு உலகத்தால் ஈர்க்கப் பட்டேன். பிறகு பத்திரிகைகள், தமிழ் அறிஞர்களின் நூல்கள், பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றும் தொடர்களை ஆர்வமாகப் படித்தேன். அந்த ருசி ஒருகட்டத்தில் எனக்கு வெறியாக மாறியது. ஒரே நேரத்தில் நான்கு நூலகங்களில் உறுப்பினராக இருந்தேன். இரண்டே நாள்களில் பெரிய புத்தகத்தைப் படித்து முடித்து, நூலகத்தில் வேறு புத்தகம் கேட்பேன். ‘அதுக்குள்ளே படிச்சுட்டியா பாப்பா?’ என நூலகத்தினரே ஆச்சர்யப்படுவார்கள். அந்த வாசிப்புப் பழக்கம், ஒருபோதும் என் படிப்பைப் பாதிக்கவில்லை. படிப்பிலும் முதல் மாணவிதான்.

வாசிப்புப் பழக்கம் எதிர்காலத்தில் உதவும் என அப்போது நினைக்கவில்லை. அதனுடைய முழுப் பலனை, பட்டி மன்றப் பேச்சாளரானதிலிருந்து அனுபவிக்கிறேன். அப்போது பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செல்லும் என் அக்காவுடன் நானும் உடன் செல்வேன். அந்த மேடைப் பேச்சுலகம் பிடித்துப்போனது. தொடர்ந்து கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்குபெற்றேன். பி.டெக், எம்.பி.ஏ படித்தேன். அப்போது தூர்தர்ஷன் பட்டிமன்றங்களில் பேசிக் கொண்டிருந்தேன். உதவி மேலாளராக என் வங்கிப் பணியையும் தொடங்கினேன்.

“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை!” - பாரதி பாஸ்கர்

நட்சத்திரப் பேச்சாளராக உயர்ந்தது எப்படி?

வங்கிப் பணியில் சேர்ந்த அதே ஆண்டில், எனக்குத் திருமணம் நடந்தது. வேலை, குடும்பச்சூழல், குழந்தைகள் என நேரப் பற்றாக்குறையால், எல்லா மேடைப் பேச்சுகளையும் நிறுத்திக்கொண்டேன். ஆனால், வாசிப்புப் பழக்கத்தை மட்டும் விடவில்லை. சன் டி.வி-யின் பண்டிகைக் கால பட்டிமன்றங்கள் புகழ்பெற்றிருந்த காலம். எனக்கு சாலமன் பாப்பையா ஐயாவுடன் நல்ல பரிச்சயம். ஒருநாள், பட்டிமன்றத்தில் பேசவேண்டிய ஒருவர் வரவில்லை. என்னைப் பேச வரச் சொன்னார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பட்டிமன்றத்தில் பெரும் தயக்கத்துடன் பேசச் சென்றேன். பிறகு பண்டிகைக்கால மேடைகள் சிலவற்றில் பேச வாய்ப்பு கிடைத்தது. பட்டிமன்றத்தில் ஐந்து மற்றும் ஆறாவது நபராகப் பேசும் வாய்ப்பு கிடைப்பது அரிது. ஒருமுறை தோஹாவில் நடந்த பட்டிமன்றத்தில் ராஜா சாருக்குப் பிறகு, ஆறாவது நபராக எதிரணி சார்பில் பேசினேன். அடுத்து சென்னையில் நடந்த பட்டிமன்றத்தில் நாங்கள் இருவரும் ஒரே அணியில் பேசினோம். நிகழ்ச்சி தொடங்கும் முன்பு, ‘நீங்க ரெண்டு பேரும் வெவ்வேறு அணியில் பேசுங்க. ஒருவர் எழுந்து எதிரணி பக்கம் வாங்க’ என ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போதுதான் நானும் ராஜா சாரும் எதிரெதிர் அணியில் பேசுவதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது. பிறகு இப்போதுவரை நாங்கள் எதிரெதிர் அணிப் பேச்சாளர்களாகப் பேசிவருகிறோம்.

குடும்பம்..?

தினமும் காலை 10 மணிக்கு வங்கிப் பணியில் இருப்பேன். சராசரியாக இரவு 8 - 9 மணிக்குத்தான் வீட்டுக்குள் நுழைவேன். குடும்பத்தினரின் தேவை களைக் கவனித்துவிட்டு, இரவு 10 - 12 மணிவரை வாசிப்புப் பழக்கம். வார இறுதி நாள்களில், நிச்சயம் ஒருநாள் அல்லது இரு நாள்களிலும் பட்டிமன்றப் பயணம் இருக்கும். இப்படி, வருடத்துக்கு 60 - 80 மேடைகளில் பேசுகிறேன்.  இதனால், ‘ஒருநாள்கூட வீட்டில், எங்களுக்காக இல்லைனா எப்படி?’ என்று முன்பு மகள்கள் இருவரும் என்மீது நிறைய வருத்தப்பட்டார்கள்; கோபப்பட்டார்கள். அது நியாயம்தானே!

என் பேச்சாளர் பயணத்துக்கு எப்போதும் முழு ஊக்கம் தருபவர், என் கணவர் பாஸ்கர். என் மாமியார் ஒரு மேடைப் பாடகி. குடும்ப நிர்பந்தத்தால், பாடுவதை ஒருகட்டத்தில் கைவிட்டவர், தன் 46 வயதில் காலமானார். பாடாமலிருந்த ஏக்கம் அவர் மனதில் இருந்திருக்கலாம். அப்படியான ஒரு நிகழ்வு எனக்கு ஏற்படக் கூடாது எனக் கணவர் நினைக்கிறார். இதை மகள்களுக்கும் ஒருகட்டத்தில் அவர் புரியவைத்தார்.

தாயாக நீங்கள்?

நான், என் மகள்கள் காவியா, நிவேதிதா மூவரும் தோழிகள். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் முதலில் மகள்களுக்குப் புரியவைப்பேன். ‘களத்தில் இறங்கிப் பணியாற்று; வெற்றி, தோல்வி முக்கியமே இல்லை’ என்பேன். அவர்களைக் கைப்பிடித்தே அழைத்துச் செல்லும் தாயாக நானிருப்பதில்லை. அதேநேரம் அவர்களுக்கு ஒரு பிரச்னை வரும்போது, முதலில் அரவணைப்பது என் மடியும் தோளும் கைகளும்தான். நான் சூப்பர் வுமனா எனத் தெரிய வில்லை. ஆனால், சூப்பர் மதர் என்பதில் பெருமை!

குடும்பத்தலைவி, வங்கிப் பணியாளர், பேச்சாளர் என மூன்று பணிகள். நேர மேலாண்மையை எப்படிக் கடைப்பிடிக்கிறீர்கள்?

நேரம் கடும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. என் தூக்கத்திடம்தான் நேரத்தைக் கடனாகப் பெறுகிறேன்; திருடுகிறேன். நேரத்தின் அருமை தெரியாதவர் வெற்றியாளர் ஆக முடியாது. அதனால், ஒவ்வொரு செயலுக்கும் நேரத்தைத் திட்டமிட்டுச் செலவிடுகிறேன். பயணங்களில்கூட, தொலைப்பேசி வாயிலான உரையாடல்கள், நினைவூட்டல்கள் அதிகம் நடக்கும். சில நேரம், ‘எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணம் வரும். ஆனால், அடுத்த மேடையில் மக்களுக்கு நல்ல கருத்துகளைக் கூறி கைத்தட்டல் பெறுகிறபோது கவலை களுக்குத் தற்காலிக நிவாரணம் கிடைக்கும். ‘சிரமமாக இருந்தால், நீ வேலையைக்கூட விட்டுவிடு. ஆனால், பேச்சாளர் பயணத்தை நிறுத்திவிடாதே!’ என்று என் கணவர் சொல்வார். அடிக்கடி என் முன்னால் இரண்டு விரலை நீட்டி, ‘வேலையா? பேச்சாளரா?’ எனக் கேட்டுக்கொண்டு, இரண்டு விரல்களையுமே சேர்த்துப் பிடித்துக் கொள்வேன்.

நகைச்சுவை உங்களின் இயல்பா... இணைத்துக்கொண்டதா?

இணைத்துக்கொண்டதுதான். என் ஆரம்பக்கால பட்டிமன்றங்களில் எதிரணியினர் பற்றிப் பேசும்போது, ஏ.கே-47 ரகத் துப்பாக்கியால் சுடுவதுபோல என் முகபாவனைகள் இருக்கும். அப்போதைய என் பேச்சில் நகைச்சுவை துளியும் இருக்காது. ‘எதுக்குங்க இவ்வளவு கோபம். நம்ம கருத்துதான் மக்களைச் சென்றடைய வேண்டுமே தவிர, கோபமல்ல’ என ராஜா சார்தான் எனக்கு ஆலோசனை கொடுத்தார். அப்போதுதான் என்னைச் சுயபரிசோதனை செய்துகொண்டேன். எதிரணியினர் பேசிய கருத்துகளை உள்வாங்க வேண்டும்; நிதானமாக, நகைச்சுவையோடு அவர்கள் கருத்தை அப்படியே திருப்பி நம் கருத்துகளுடன் சிந்திக்கும் விதமாகப் பேச வேண்டும். கோபப்படுவது எளிது. ஆனால், நகைச்சுவை உணர்வுடன் பேசுவது கடினம். அது எளிதில் எனக்கு வரவில்லை. தொடர் பயிற்சிகளும், என் மகள்களின் உதவியும் கை கொடுத்தன. எந்த ஓர் ஆழமான, அவசியமான கருத்தும் நகைச்சுவையாகச் சொல்லும்போதுதான் மக்களைச் சென்றடைகிறது என்பது தெரிந்தது.  காமெடியாகப் பேசுவதால், மக்கள் பெரிதும் ரசிக்கிறார்கள். இதனால்  இப்போது ஒரு மணி நேரத் தொடர் பேச்சானாலும் எனக்குச் சோர்வு ஏற்படுவதில்லை.
இன்றைக்குப் பட்டிமன்றங்களுக்கான வரவேற்பு எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்? 

தமிழில் இருக்கும் கலை வடிவத்தில் ஒன்று, பட்டிமன்றம். சமூகக் கருத்துகள், தன்னம்பிக்கை, இலக்கியம், மக்களின் வாழ்வியல், அறிவியல் சார்ந்த பல தலைப்புகளிலும்  நிறைய பட்டிமன்றங்கள் நடக்கின்றன. அவையும் இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில், எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைகின்றன. அதனால், இப்போதுதான் பட்டிமன்றங்களின் காலம் வசந்த காலமாக இருக்கிறது!

“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை!” - பாரதி பாஸ்கர்

ராப்பிட் ஃபயர் கேள்விகள்!

உங்கள் பொறுப்புகளை வரிசைப்படுத்துங்கள்...
அம்மா, பேச்சாளர், வங்கிப் பணியாளர், மனைவி.

முதல் பட்டிமன்ற சம்பளம்?
80 ரூபாய். 

‘வாங்க பேசலாம்’ என யாருக்கு அழைப்பு விடுப்பீர்கள்?
ஜெயமோகன்.

பிடித்த பேச்சாளர்?
மறைந்த ஆ.ச.ஞானசம்பந்தன்.

பிடித்த பட்டிமன்றப் பேச்சாளர்?

ராஜா சார்.

பிடித்த நாவல்?

மோகமுள்.

ஒருவருக்கு நன்றி சொல்வதென்றால்..?

சாலமன் பாப்பையா ஐயா. என் குரு. தன் மகள்போல என் மீது அன்பு செலுத்துபவர்; தந்தையைப்போன்று அவர் மீது நான் மதிப்பும் மரியாதையும் செலுத்துகிறேன்.

கடைசியாக மன நிறைவுடன் சிரித்த தருணம்?

சமீபத்தில் ‘சதிலீலாவதி’ படம் பார்த்து க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் வரும் அளவுக்குச் சிரித்தேன்.

தூக்கம்?
ஒவ்வொரு நாளின் விடியலில்தான் என் தூக்கம் தொடங்கும். நான் ஆழ்ந்த, நீண்ட துயில் கொண்ட நாளே நினைவில் இல்லை. ‘கிடைக்கமாட்டியா?’ எனத் தூக்கத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.

இழப்பு?
ஓடிய ஓட்டத்தில் என் பெற்றோருடன் அதிக நேரம் செலவிடாமல்போய்விட்டது. திடீரென அத்தை, அம்மா, அப்பா என மூவரும், அடுத்தடுத்து காலமானார்கள். அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கலாம் என மனம் நினைக்கிறது. எக்காரணம் கொண்டும் பெற்றோருடன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள்.

கு.ஆனந்தராஜ், படங்கள் : சி.ரவிக்குமார்