Published:Updated:

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

இயற்கை விவசாய இயக்கத்தின் தந்தை!திரைகடல்

உலகெங்கும் கோலோச்சும் வெற்றிகரமான இயற்கை வேளாண் முயற்சிகள், வழிமுறைகள், இயற்கை வாழ்வியல் ஆகியவற்றை முன்னிறுத்தும் இயக்கங்கள். பற்றிய விழிப்பு உணர்வுத் தொடர் இது.

ஜெர்மானிய மொழி பேசும் பகுதிகளில், இயற்கை வழி வேளாண்மையும் ‘பயோடைனமிக்’ (உயிர் ஆற்றல்) வேளாண்மையும் முன்னெடுக்கப்பட்ட சூழலில்... ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளில் அதைவிட அதிகமாக இயற்கை வேளாண்மைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ‘இயற்கை விவசாய இயக்கத்தின் தந்தை’ என்று, இன்று பலராலும் ஒத்துக்கொள்ளப்படும் சர் ஆல்பர்ட் ஹவர்டு (Albert Howard-1873-1947), ஓர் ஆங்கிலேயர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஹவர்டு, இங்கிலாந்தின் காலனியாக இருந்த மேற்கிந்திய தீவுகளில் (British West Indies) அரசின் வேளாண் துறையிலும், இங்கிலாந்தில் கல்லூரி ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். பிறகு 1905-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். 1931-ம் ஆண்டு வரை (26 ஆண்டுகள்) இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் பணிபுரிந்த ஹவர்டு, ஒரு தேர்ந்த வேளாண் விஞ்ஞானியாக இங்கிலாந்து திரும்பினார்.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

எரு தயாரித்தல், மண்வளம், பயிர் நலன், பயிரைத் தாக்கும் நோய்கள் ஆகியவை குறித்த தன்னுடைய ஆய்வுகள் மற்றும் அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வெளியிட்டார். அவை பரவலாக வாசிக்கப்பட்டன. 1940-ம் ஆண்டில் அவர் வெளியிட்ட ‘ஆன் அக்ரிகல்ச்சுரல் டெஸ்டமென்ட்’ (An Agricultural Testament) என்ற புத்தகம், இன்றளவும் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் முக்கியப் புத்தகமாகப் பலராலும் வாசிக்கப்பட்டு வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

மட்கக்கூடிய அனைத்துவிதமான கழிவுகளையும் குப்பைகளையும் மண்ணுக்கே திரும்ப அளிக்க வேண்டும் என்ற ‘திருப்பியளிக்கும் விதி’யை (The Law of Return) இந்தப் புத்தகத்தில் ஹவர்டு வலியுறுத்துகிறார். இதன் மூலம், மட்கையும் மண் வளத்தையும் கூட்ட முடியும் என்று அவர் எழுதினார். இன்று இயற்கை விவசாயத்தில் பலராலும் அறியப்பட்ட ‘இந்தூர் எரு தயாரிக்கும் முறை’ (Indore Process) அவர் உருவாக்கியதே.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

‘மண், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது எனவும், மண்ணை வளமாக வைத்துக் கொள்வதன் மூலமே, மற்ற உயிரினங்களின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்’ எனவும் அவர் வலியுறுத்தினார். அவரின் முதல் மனைவி காப்ரியல், காப்ரியல் இறந்த பிறகு காப்ரியலின் சகோதரி, ஹவர்டின் இரண்டாவது மனைவி லூயிஸ் ஆகியோர் ஹவர்டுடன் சேர்ந்து ஆய்வுப் பணிகளையும் களப்பணிகளையும் மேற்கொண்டனர். இவர்கள்தான் இங்கிலாந்திலும், வட அமெரிக்காவிலும் இயற்கை விவசாயம் பரவக் காரணமாக இருந்தவர்கள்.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

ஹவர்டின் சமகாலத்தவரான, மேஜர் ஜெனரல் சர் ராபர்ட் மெக்காரைசன் (Robert McCarrison-1878-1960), குன்னூர் ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய ஆங்கிலேய மருத்துவர். மண்வளம், உணவுத் தரம், மனிதர்களுக்கான ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டவர். நைட்ரஜன் சத்துக்காக ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால், உணவின் தரம் குறைகிறது என்று தன் ஆய்வின் மூலம் நிரூபித்தார். ரசாயன உரங்கள், உணவின் தரம், மனித உடல்நலன் ஆகியவை குறித்து முதலில் ஆராய்ச்சிகள் செய்தவர், மெக்காரைசன்தான். மண், பயிர்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்தையும் தொடர்புப்படுத்தி ‘நலச் சக்கரம்’ (Wheel of Health) என்ற கொள்கையை உருவாக்கிய மெக்காரைசன்... ‘இயற்கை இடுபொருள்கள், மண்ணின் வளத்தைக் கூட்டி, பயிர்களைச் செழிப்பாக வளரச் செய்து, விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்குக் காரணமாக அமைகின்றன’ என்று அறிவியல்பூர்வமாகப் பேசி வந்தார். இதையேதான் ஹவர்டு தன்னுடைய ‘சாயில் அண்டு ஹெல்த்’ (Soil and Health) என்ற புத்தகத்தில் பயிர்களுக்கோ, விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ உண்டாகும் நோய்களுக்கு... நலமற்ற மண்ணே காரணம் என்றும், இயற்கை வேளாண் முறைகள், மண்ணையும் அதன் மேல் வாழும் உயிரினங்களையும் நலமாக வைத்திருக்கும் என்றும் எழுதினார்.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

ஹவர்டு, ‘மண்வளம், அதிலுள்ள உயிர்மக் கழிவுகளான மட்கைப் பொறுத்து அமையும்’ என வலியுறுத்தினார். மண்வாழ் உயிரினங்களான வேர்ப்பூஞ்சணங்கள் (Micorrhizae) மற்றும் பாக்டீரியாக்கள் மண்ணின் மேலுள்ள பயிர்கள், கால்நடைகள், மனிதர்களின் நலனை உறுதி செய்யும் விதம் மற்றும் அவற்றுக்கிடையில் எப்படி ஒரு ‘உயிர்மப் பாலம்’ நிலவுகிறது என்பன குறித்தும் விளக்கினார். எரு தயாரித்தல் மற்றும் மண்வளம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், ஒரு விஞ்ஞானியாகப் பயிர் வளர்ப்பு, பாசனம், வேர்ப்பூஞ்சணங்கள், வேரமைப்புகள், மண்ணின் காற்றோட்டம், பழ மரங்கள் வளர்ப்பு, அறுவடைக்குப் பிறகு மகசூலை எடுத்துச் செல்லும் தொழில்நுட்பம், களை மேலாண்மை, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நோய்கள் என ஏராளமான விஷயங்களில் தன்னுடைய ஆய்வுகளினால் ஒளி பாய்ச்சினார். இந்தச் சாதனைகளுக்காக 1934-ம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கியது.

1946-ம் ஆண்டில் ஹவர்டு தான் எழுதிய ‘தி வார் இன் தி சாயில் (The War in the Soil)’ என்ற புத்தகத்தில், ‘வளமான மண் தரும் பசுமையான உணவு’ என்ற தலைப்பில்... ‘மனித குலத்தின் பிறப்புரிமைக்கும், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளைத் தயாரிக்கும் சில வணிக நிறுவனங்களின் நலனுக்கும் இடையிலுள்ள போராட்டத்தின் காரணமாக, மண்ணில் ஒரு போர் நடக்கிறது’ என்று சாடினார். மேலும், இயற்கை வேளாண் முறையின் பலன்கள் குறித்து அரைகுறை ஆய்வுகள் மூலம் முடிவுக்கு வரமுடியாது எனவும், இயற்கை மற்றும் ரசாயன வேளாண்மை முறைகளுக்கு, மண், மண்புழுக்கள், பயிர்கள், கால்நடைகள் ஆகியவை எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளக் குறைந்தது பத்தாண்டுகள் தொடர்ந்த ஆராய்ச்சிகள் தேவை எனவும் அவர் உறுதிபட நம்பினார்.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

அவரின் கனவை நனவாக்கும் வகையில், இங்கிலாந்தில், லேடி ஈவ் பால்ஃபோர் (Lady Eve Balfour), 1939-ம் ஆண்டிலிருந்து 1969-ம் ஆண்டு வரை, இயற்கை மற்றும் ரசாயன வேளாண் முறைகளை ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார். தன்னுடைய முடிவுகளை அவர், ‘தி லிவிங் சாயில் அண்டு தி ஹாக்லி எக்ஸ்பிரிமென்ட்’ (The Living Soil and the Haughley Experiment) என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். முதலில் 1943-ம் ஆண்டிலும், பிறகு மறுபதிப்பாக 1974-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பரவலாக வாசிக்கப்பட்டதுடன், இயற்கை வேளாண் இயக்கத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது.

ஹவர்டு, ‘இயற்கை வேளாண் இயக்கத்தின் தந்தை’ என்று போற்றப்பட்டாலும், இயற்கை விவசாயம் (Organic Farming) என்ற சொல்லாடல், வால்டர் நார்த்போர்ன் 1940-ம் ஆண்டில் எழுதிய ‘லுக் டு தி லேண்டு’ (Look to the Land) என்ற புத்தகம் வந்த பிறகே, பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1940-1978-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இயற்கை மற்றும் ரசாயன வேளாண் விஞ்ஞானிகள் குழுக்கள் இரு துருவங்களாகப் பிரிந்து நின்றன. அந்தக் குழுக்களுக்கிடையில் ஆரோக்கியமான விவாதங்கள் ஏதும் நடக்கவில்லை.   

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

இந்தக் காலகட்டத்தில்தான், ஹவர்டின் புத்தகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அமெரிக்கத் தொழிலதிபரும், பதிப்பாளருமான ஜெரோம் ரோடேல், பென்சில்வேனியா மாகாணத்தில், ஆலன்டவுன் நகருக்கு அருகில் ஒரு பண்ணையை வாங்கி இயற்கை வேளாண் ஆய்வுகளை முன்னெடுத்தார். 1942-ம் ஆண்டில், ஹவர்டை இணை ஆசிரியராகக் கொண்டு, ‘ஆர்கானிக் ஃபார்மிங் அண்டு கார்டனிங்’ (Organic Farming and Gardening) என்ற பத்திரிகையை வெளிக்கொண்டு வந்தார். 1945-ம் ஆண்டில் அவர் எழுதிய ‘பே டர்ட்’ (Pay Dirt) என்ற புத்தகம், இயற்கை வேளாண்மையின் அடிப்படைகளை விளக்கியது. 1948-ம் ஆண்டில், ரசாயன வேளாண் முறைகளைச் சாடும் ‘தி ஆர்க்கானிக் பிரன்ட்’ (The Organic Front)’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஹவர்டு, பயோடைனமிக் விவசாயத்தின் விசிறியல்ல என்றாலும், ரோடேல், பென்சில்வேனியாவிலிருந்த ரூடால்ஃப் ஸ்டைனரின் மாணவரும், விஞ்ஞானியான பய்ஃபெரிடம் (Ehrenfried Pfeiffer) நட்பு பாராட்டினார். அவரின் கட்டுரைகளையும் தன்னுடைய பத்திரிகையில் வெளியிட்டார். இப்படி ரோடேல் நடத்திய பத்திரிகையும், அவர் எழுதிய புத்தகங்களும், இயற்கை வேளாண் முறைகளை அமெரிக்காவில் பரவலாக அறிமுகப்படுத்தின.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3
வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

இதே காலகட்டத்தில், ரசாயன விவசாயத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள், இயற்கை வேளாண்மை முறைகளை விமர்சித்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வந்தனர். 1962-ம் ஆண்டில் ரேச்சல் கார்சன் எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring) புத்தகம் ரசாயன விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் மீது பேரிடியாக இறங்கியது. மௌன வசந்தம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலுமிருந்த இயற்கை வேளாண் இயக்கங்களுக்கு உரமூட்டியது. அடுத்த இருபது ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. உதாரணத்துக்கு அமெரிக்காவில் 1960-ம் ஆண்டில் 2,60,000 பிரதிகள் மட்டுமே விற்பனையான ‘ஆர்கானிக் கார்டனிங்’ (Organic Gardening) பத்திரிகை 1980-ம் ஆண்டில் 13,00,000 பிரதிகள் விற்பனையானது.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3
வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

இந்தச் சூழலில்தான், 1980-ம் ஆண்டில் அமெரிக்க வேளாண் துறையின் (USDA) செயலராக இருந்த ராபர்ட் பெர்க்லேண்டு தலைமையில், இயற்கை வேளாண்மை குறித்து தேசிய அளவில் கருத்துக்கணிப்பும், கள ஆய்வும் நடத்தப்பட்டு... ‘இயற்கை விவசாயத்தின் மீதான அறிக்கை மற்றும் பரிந்துரைகள்’ (Report and Recommendations on Organic Farming) என்ற ஆவணம் வெளியிடப்பட்டது. அமெரிக்க அரசின் இந்த ஆய்வறிக்கை, இயற்கை வேளாண்மை இயக்கம் இன்னும் வேகமாகப் பயணிக்க உதவியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் 1990-ம் ஆண்டில் இயற்கை வேளாண் உற்பத்திச் சட்டமும் (Federal Organic Foods Production Act), 2002-ம் ஆண்டில் இயற்கை வேளாண் சான்றிதழ் (USDA Certified Organic) விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

இப்படிச் சென்ற நூற்றாண்டில் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த இயற்கை வேளாண் இயக்கம், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே விரைவு ரயில் வேகத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அந்தப் பயணத்தில் நாமும் இணைந்து கொள்வோம் வாருங்கள்.

- பயணம் தொடரும் 

- க.சரவணன்

வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 3

மனிதக்கழிவிலிருந்து உரம்!

எஃப்.எச்.கிங் (Franklin Hiram King) என்ற அமெரிக்க வேளாண் அதிகாரி... சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ‘பார்மர்ஸ் ஆஃப் ஃபார்ட்டி சென்ச்சுரிஸ்’ (Farmers of Forty Centuries Or Permanent Agriculture In China, Korea And Japan) என்ற புத்தகத்தை எழுதினார். அவர் இறந்த பிறகு, 1911-ம் ஆண்டில் அப்புத்தகம் வெளியிடப்பட்டது. ஹவர்டு சொன்னதைப்போல... கீழை நாடுகளின் விவசாயிகள் தாவர, விலங்குக் கழிவுகளை மண்ணுக்கே திரும்ப அளிக்கும் விதம் குறித்து கிங் இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். சீனாவிலும், ஜப்பானிலும், மிகச்சிறப்பான மழைநீர்ச் சேகரிப்பு கட்டமைப்புகள் இருந்ததையும், வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடந்ததையும் பதிவுசெய்யும் கிங்... குறிப்பாக மனிதக் கழிவுகள், சிரத்தையுடன் சேகரிக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டோ அல்லது நொதிக்க வைக்கப்பட்டோ உரமாக மாற்றப்பட்டது குறித்தும் அவை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது குறித்தும் எழுதியுள்ளார். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகரங்களிலும் மனிதக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன என்றும், மனிதக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் வளமாகியது ஒருபுறமிருக்க, கழிவுகளைச் சேகரிப்பவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்தது என்றும் பதிவு செய்துள்ளார், கிங்.

பார்வை:

1.    Vogt G (2007). Lockeretz W, ed. Chapter 2: The Origins of Organic Farming. Organic Farming: An International History. CABI Publishing. pp. 9-30 (பார்க்க)

2.    Paul Kristiansen (2006). Paul Kristiansen Acram Taji and John Reganold, ed. Chapter 1: Overview of organic agriculture. Organic Agriculture: A Global perspective. CSIRO. Publishing. pp. 4-12 (பார்க்க)

3.    J. R. Heckman, A history of organic farming: Transitions from Sir Albert Howard’s War in the Soil to USDA National Organic Program, published in Renewable Agriculture and Food Systems 21(03):143 - 150 September 2006 (பார்க்க)