Published:Updated:

`கிறிஸ்துமஸ் குடிலில் விழிப்புஉணர்வு’ - மறுவாழ்வுக்குக் குரல்கொடுக்கும் தூத்துக்குடி ஆசிரியர் #Gaja

`கிறிஸ்துமஸ் குடிலில் விழிப்புஉணர்வு’ - மறுவாழ்வுக்குக் குரல்கொடுக்கும் தூத்துக்குடி ஆசிரியர் #Gaja
`கிறிஸ்துமஸ் குடிலில் விழிப்புஉணர்வு’ - மறுவாழ்வுக்குக் குரல்கொடுக்கும் தூத்துக்குடி ஆசிரியர் #Gaja

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மறுவாழ்வு குறித்து ஓவிய ஆசிரியர் ஒருவர் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் குடில் அமைத்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் இசிதோர். ஒவ்வொரு வருட கிறிஸ்துமஸ் விழாவின்போதும், அந்தந்த வருடத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் வீட்டில் குடில் அமைத்து வருகிறார். இதுவரை புவிப்பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு, பழங்கலைகள் பாதுகாப்பு, உலக சமாதானம், செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகள், சிட்டுக்குருவிகள் அழிவு, இயற்கைச் சீற்றங்கள், போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்  குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் அமைத்துள்ளார்.

இந்த வருடம் `கஜா மறுவாழ்வுக்குக் கைகொடுப்போம்’ என்ற தலைப்பில் கஜா புயலால் தென்னை, வாழைகள் சாய்துகிடக்கும் காட்சி, இடிபாடுகளில் கால்நடைகள் உயிரிழந்த காட்சி, வாகனங்கள் சேதம், வீடுகள் சேதம், மின்கம்பங்கள் சரிவு, படகுகள் கவிந்தகாட்சி ஆகியவற்றைச் சித்திரிக்கும் வகையில் சார்ட் அட்டையில் வரைபடங்களாக வரைந்து காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன், கஜா புயலுக்குப் பிந்தைய மறுவாழ்வு குறித்து பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்குப் பிற மாவட்ட மக்கள் நிவாரணப் பொருள்கள் பெறுவது போலவும் வரையப்பட்டு இருந்தது.

இதில், கஜா புயலின் அனைத்து வித பாதிப்புகளை ஹெலிகாப்டரில் பறந்தபடியே முதலமைச்சர் ஆய்வு செய்வதுபோலவும் கச்சிதமாக வரையப்பட்டிருந்த வரைபடம் கவனிக்கத்தக்கது.இவற்றுக்கு நடுவில் உடைந்த முட்டை ஓடுகளைக் கொண்டு சுவர் எழுப்பியும், ஐஸ் குச்சிகளை மேற்கூரையாக வைத்தும், தரைத்தளத்தில் புற்கள் பரப்பி அமைத்துள்ள குடிலில் குழந்தை இயேசு பிறந்துள்ள காட்சியும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஓவிய ஆசிரியர் இசிதோரிடம் பேசினோம், ``கஜா புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் பேராவூரணி வரை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவில் சேதம் அடைந்து அப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகளில் இருந்து அவ்வளவு எளிதில் மக்களால் மீண்டு வர முடியாது. வீடுகள், உடமைகள், கால்நடைகளை இழந்து கண்ணீருடன் தவிக்கும் மக்களுக்கு எந்த ஆறுதலும் சொல்ல முடியாது.

அவர்களது இழப்புக்கு எந்த ஈடும் அளித்திட முடியாது. தமிழகத்துக்கே உணவளித்த நெற்களஞ்சியமான தஞ்சையைச் சுற்றியுள்ள டெல்டா மாவட்ட மக்கள் தற்போது உணவுக்குக் கையேந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த மக்களுக்கு பிற மாவட்ட மக்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கைகோத்து நிவாரண பொருள்கள் அளித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற பெரும் துயரச்சம்பவம் இதுதான். இப்புயலின் பாதிப்புகள் குறித்தும் அவற்றின் மறுவாழ்வு குறித்தும் நாளிதழ்கள், வார இதழ்களில் வெளியான படங்கள், சார்ட் அட்டைகளில் நான் கைப்பட வரைந்த ஓவியங்கள், இதுதொடர்பான விளையாட்டுப் பொம்மைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளேன். இந்தப் பாதிப்புகள் குறித்த படங்களில் பெரும்பாலானவை ’ஆனந்த விகடன்’ மற்றும் ’ஜூனியர் விகடன்’ இதழ்களில் வெளிவந்துள்ளவை. நான் விகடனின் தொடர் வாசகன் என்பதால் இவை எனக்கு எளிதாகக் கிடைத்தது.

இந்த ஆண்டு அமைத்துள்ள குடிலில் கஜா பாதிப்புகள் தொடர்பாகக் காட்சிக்கு வைத்துள்ள ஓவியங்கள் வரையும் பணியில் கடந்த 23 நாள்களாகப் பள்ளி முடிந்ததும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஈடுபட்டேன்” என்றார். இது போன்ற இயற்கைச் சீற்றங்களின் பாதிப்புகள் குறித்தும், இப்பாதிப்புகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவிட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ள இந்த விழிப்பு உணர்வு கிறிஸ்துமஸ் குடிலை  மாணவர்கள், அப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.