Published:Updated:

``புனித நதிகளைவிட பிறருக்காகச் சிந்தும் கண்ணீர் உயர்ந்தது.”- பாரதி கிருஷ்ணகுமார்

``புனித நதிகளைவிட பிறருக்காகச் சிந்தும் கண்ணீர் உயர்ந்தது.”- பாரதி கிருஷ்ணகுமார்
``புனித நதிகளைவிட பிறருக்காகச் சிந்தும் கண்ணீர் உயர்ந்தது.”- பாரதி கிருஷ்ணகுமார்

செங்கை புத்தகத் திருவிழாவுக்காக விழா அரங்கம் முழுவதிலும் திரண்டிருந்தார்கள் மக்கள். ஆடை போர்த்திய உடலுக்கு இதமான மார்கழி குளிர். விடிந்தால் புத்தாண்டு. கண்களுக்கு விருந்தாய் நடனம். அறிவுத் தேடல்களுக்கு அடுக்கடுக்காய் புத்தகங்கள். திரண்டு வந்திருந்த பெருங்கூட்டம் செவிமடுத்துக் கேட்க, ஆகச் சிறந்த பேச்சாளரும் வந்திருந்தார். அவரின் உரைக்காக எல்லோரும் காத்திருந்தனர். ஆம்,செங்கல்பட்டு புத்தகத் திருவிழா மூன்றாவது ஆண்டாகத் தொடங்கியுள்ளது...

மூன்றாவது `செங்கை புத்தகத் திருவிழா’ செங்கல்பட்டு நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கவியரங்கம், பட்டிமன்றம், கலந்துரையாடல், கலை நிகழ்ச்சிகள் என தினம்தினம் செங்கல்பட்டு நகர மக்கள் இந்தப் புத்தகத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். குழந்தைகளுக்காக அழகு தமிழில் அ, ஆ-வைத் தேடும் பெற்றோர், அறிவியல் புத்தகத்தைத் தேடும் மாணவர்கள், கவிதை, இலக்கியம், வரலாறு என வாசிப்பைத் தொடங்குவதற்கென ஒரு கூட்டம், ஓய்வில் படிக்கப் புத்தகங்கள் தேடும் ஒரு கூட்டம் எனப் பல தரப்பினரும் ஆவலோடு புத்தகங்களை வாங்கக் குவிந்திருந்தார்கள்.

கலைநிகழ்ச்சியைத் தொடர்ந்து, இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் நிகழ்த்திய உரை கருத்தரங்கிற்கு முத்தாய்ப்பாக அமைந்தது. ``இந்த இரண்டாயிரம் ஆண்டுக்கால ஓட்டத்தில் புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையைத் தமிழர்கள் வாழ்ந்தது இல்லை. படிக்காமல் வாழ்கின்ற ஒரு வாழ்க்கையை இந்த நாட்டில் உள்ள சாதி கட்டமைப்பு உருவாக்கியது. சாதி கடப்பது புதியது; சாதி பார்ப்பது பழையது; இழிவு! உயர் வகுப்பினர் மட்டுமே கற்றுவந்த குறிப்பிட்ட ஒரு மொழியைப் படிப்பதற்கு தற்போது கோடிக்கணக்கில் செலவு செய்கிறது இந்திய அரசு. 1919-ம் ஆண்டுவரை பெண்கள் பெரும்பாலும் பள்ளிக்குச் சென்றது கிடையாது.

மழை எங்கிருந்து புறப்படுகிறது எனப் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்டாள் பாடியுள்ளார். கடல் நீர் மேகமாகி கருத்து திரண்டிருக்கிறது. அவ்வாறு திரண்ட மேகத்தைக் கண்ணனுக்கு ஒப்பாகப் பார்க்கிறார் அவர். உலகின் வேறு இனங்கள் அறிந்திராதவற்றைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், பெய்கின்ற மழையைக் காப்பாற்ற முடியாமல் இன்றைய தமிழன் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் குடித்துக்கொண்டிருக்கிறான்.

`பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது' என்கிறார் குமரகுருபரன். அந்தக் கூற்றுப்படி, திருக்குறள் புதியது; தேவாரம் புதியது; கம்பன் புதியவன். இந்தச் சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக எழுதப்பட்ட படைப்பு அண்மையில் எழுதப்பட்டிருந்தாலும் அது பழையது. புதியது, பழையது என்பது காலம் சார்ந்தது அல்ல; அது கருத்து சார்ந்தது. பூமி உருண்டையா, தட்டையா என்று மேற்கு உலகம் அறிவியல் பூர்வமாகத் தீர்மானிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது உருண்டையான, அசைகின்ற, பெரும்பகுதி தண்ணீரைக் கொண்டது எனத் தமிழ்ப் புலவன் கம்பன் பாடினான்.

எவற்றையெல்லாம் இயற்கையைப் பார்த்து நாம் கற்றுக்கொண்டோமோ, அவை அனைத்தையும் பத்தே நூற்றாண்டில் தொலைத்து நிற்கிறோம். கடனை வாங்கியாவது தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக் கொள்கிறோம். ஆனால், இந்த உலகில் முதன்முதலில் தனக்கென ஒரு வீட்டை உருவாக்கிக் கொண்டவை பறவைகள்தான். பறவைகளைப் பார்த்து கூடு கட்டிய நாம் பறவைகளுக்குக் கூடு இல்லாமல் செய்துவிட்டோம். பாம்பு ஏன் தூக்கனாங் குருவிக்கூட்டிற்குள் செல்வதில்லை என்பது அந்தப் பறவைக்கும், பாம்புக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். மனிதன் அறிவால் இன்னும் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாம்பின் பல்லைப் பார்த்து மருத்துவ ஊசியும் வௌவால்களைப் பார்த்து லேசர் கருவியையும் கண்டுபிடித்தோம். வீடு கட்ட மரம் தேவைப்பட்டாலும் வெட்டவெட்ட வளரும் மூங்கிலைத்தான் வீடுகட்ட பயன்படுத்திக் கொள்வார்கள் ஆதிவாசிகள். இயற்கையை அழித்து ஒரு போதும் ஆதிவாசிகள் வாழவில்லை.

யானைகள் உணவுக்காகப் பெருங்கூட்டமாக பல கிலோ மீட்டர் நடக்கும். அந்தப் பாதையை மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அதனால், யானைகள் இன்று உணவு கிடைக்காமல் மனிதன் அமைத்த மின் வேலிகளைத் தாண்ட பழகிக் கொண்டன. நம்மிடத்தில் மொழி இருப்பதால் `யானைகள் அட்டகாசம்’ என்று எழுதுகிறோம். யானையிடத்தில் மொழி இருந்தால் `மனிதர்கள் அட்டகாசம்’ என்று எழுதும். உயரத்தில் இருக்கும் உணவைப் பறித்து உண்ணும் யானை. அவை மிச்சம் வைத்த உணவை மரத்தின் மீது ஏற முடியாத சிறிய விலங்குகள் உண்ணும். எறும்புக்கும் கறையானுக்கும் மூளை கிடையாது. அவைதான் மழை நீர் புகாத புற்றைக் கட்டுகின்றன. இப்படி ஒவ்வொன்றாக விலங்குகளைப் பார்த்து நாம் வாழவும், வீடுகட்டிக் கொள்ளவும் கற்றுக் கொண்டோம். ஆனால், அந்த விலங்குகளுக்கு இந்த உலகத்தில் இடம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம்.

பார்ப்பதற்குக் கடினமாகத் தெரியும் மலைகள் உண்மையிலேயே பஞ்சுப் பொதிகள். பெய்கின்ற மழையை உறிஞ்சிக் குடித்துவிடும். சிறுகச் சிறுகக் குடித்த நீரை தனக்குள்ளே வைத்துக்கொள்ளாமல் அருவிகளாய், ஓடைகளாய் மெள்ளமெள்ள வெளியேற்றும். தாகம் வரும்போதெல்லாம் தண்ணீரைக் கொடுக்கும் மலைகளை அழிக்கும் ஒரு வாழ்க்கை இந்தப் புத்தாண்டில் வரக் கூடாது. இயற்கை உருவாக்கிக் கொடுத்த எதையும் தனது சுயலாபத்திற்காகச் சீரழிக்காதீர்கள். மணல் திருடியது போதும்; கனிம வளம் கொள்ளையடித்தது போதும். மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காக வரும் எனப் பல ஆண்டுகளாக எச்சரிக்கிறார்கள். இன்னொரு மனிதனுக்காகக் கண்ணீர் விட்டு அழுதால் அந்தக் கண்ணீர், கண்ணின் நடுப்பகுதி வழியாக உருண்டோடிக் கன்னத்தை நனைக்கும். அது உப்புக் கரிக்காது. ஏனெனில், உலகின் எந்தப் புனிதமான நதிகளை விடவும் மற்றவர்களுக்காகச் சிந்தும் கண்ணீர் உயர்ந்தது; சிறந்தது!” என்றார்.

அவரின் இந்தக் கூற்றை புத்தகத் திருவிழாவில் குழுமியிருந்த மக்கள், `ஆம்' என்பது போல தலையசைத்து நகர்ந்தனர்.