Published:Updated:

மலேசிய மாநாட்டில் வைக்கப்படும் திருவள்ளுவர் சிலை - வழியனுப்பிவைத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

மலேசிய மாநாட்டில் வைக்கப்படும் திருவள்ளுவர் சிலை - வழியனுப்பிவைத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
மலேசிய மாநாட்டில் வைக்கப்படும் திருவள்ளுவர் சிலை - வழியனுப்பிவைத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக ரூ. 2 லட்சம்  மதிப்பில் இரண்டரை அடி உயரம், 920 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் ஆன  திருவள்ளுவர் சிலையை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் மலர் தூவி மரியாதைசெய்ததோடு, மலேசியாவுக்கு வழியனுப்பிவைத்தார்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை உலகத் திருக்குறள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் செல்கின்றனர். அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்த விவாதங்கள் நடைபெறுவதோடு, அவர் புகழ் குறித்தும் பேசப்படும் இந்த மாநாட்டில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட உள்ளது. 

இதற்காக, தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் ரூ. 2 லட்சம்  மதிப்பில் இரண்டரை அடி உயரம், 920 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் ஆன திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வந்த சிலையைத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். இதற்காக பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு, திருவள்ளுவர் சிலையை வழியனுப்பிவைத்தனர். 

இதைதொடர்ந்து திருச்சி, உளுந்துார்பேட்டை வழியாக சென்னை செல்லும் சிலை 4-ம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் மலேசியா செல்கிறது. இது குறித்து தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார்கோவில் குணா கூறியதாவது, ``தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் இதுவரை 7 திருவள்ளுவர் சிலையை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்குக் கொடுத்துள்ளோம். மத்திய அமைச்சர் தருண் விஜயிடமும் திருவள்ளுவர் சிலை கொடுத்துள்ளோம்.

தற்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலகத் திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக 2 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டரை அடி உயரத்தில் 920 கிலோ எடையில் கருங்கல்லால் திருவள்ளூவர் சிலையை வடிவமைத்துள்ளோம். இந்தச் சிலை கன்னியாகுமரியில் ஒரு சிற்பக்கூடத்தில் செய்யப்பட்டது. மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ந்து 3 நாள்கள் இந்தத் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு இருக்கும். மாநாடு முடிந்தவுடன் சிலை அவர்களிடமே ஒப்படைக்கப்படும்” என்றார்.