
தாணு பிச்சையா, ஓவியம் : கருப்பசாமி
மீன்களையொத்த
விழிகளையுடைய
பழையாற்றுப் பெருங்கிழவன்
நீள் மயிரிழை வாரிமுடிந்த
பாண்டியங் கொண்டையன்
கோள்வழி நாள்வழி
காட்சியில் தெளிந்து
கீழ்க்கணக்கில் ஒழுகிய
இம்முதுகுடி அறிவன்
பின்னாளில்
யாககுண்ட ஜுவாலையால்
விழுங்கப்பட்ட கருதுகோளின்
முந்தைய காதை இது
அய்யனவன்
பெருமனை அகரத்தில்
தான் ஊன்றிவைத்த
சூடாமணி சிறுகல் குழைந்து
வயிரம் பரவி உள்விரிந்து
குன்றமாகி ஒளிர்ந்த காலங்களில்
வகுக்கப்படாத திணைப்புலங்கள்
தழுவ விழைந்தன அதன் ஒண்வெளியை
அய்யனவன்
சுழற்குறியின் திசைகாட்டலில்
கிளைவளர்த்த தாமக்கொடிகள்
தற்காம மயக்கத்தில் பிரிவிலகி
கயிறாய்த் திரிந்தன பின் அவை
குடை அரவங்களாக மாறி
நெடிதுயர்ந்து உமிழ்ந்தன
நஞ்சினும் கொடிய காழ்ப்பை

பொதுமன்ற அரும்பலகையில்
சம்மணம்கொள்ளும்
பெருந்தளத்தான் எவர்யெனும்
வாதப்போர் வழிமுறையாய்
மாற்றாரோடு நேர் அமர்ந்து
அவரவர் கைகொண்ட நெடுங்குறடால்
ஒருவர் செவியில் மற்றொருவரென
பிணைக்கப்பட்டதில்
மீன்கள் இரண்டும் குழம்பி
உட்புறம் விரைந்து நீந்தி
அடியாழத்தில் சென்று பதுங்க
வெல்லும் சொற்களால்
அய்யன் தோற்கடிக்கப்பட்டான்
வென்றவரோடு
வழுதியரும் சேர்ந்திணைந்து
அய்யனது பழங்குன்றம் எறிந்து
பூதவழி ஆற்றிய
கருவியரைக் கொன்று
மண்டியிட்ட களிறுகளோடு
பொன் நிறை அருங்கலமும்
பெண்டுகளைக் கவர்ந்து சென்ற
படுகள கொடுங்காதையை
கொம்மை கொட்டி பாடுகின்றன
கரைமோதும் அலை நுரைகள்
அய்யனவன்
தன்னைப் பலிகொள்ள
ஒப்புதல் அளிக்கும் விதம்
இடை உடுப்பை இழக்கையில்
காலம் வெட்கி இருண்டது
பூச்சூடிய வார்கூந்தலின்
முடி அவிழ்த்து மழிக்கையில்
பழையாற்றங்கரையின்
பெருமரமொன்று தன்
இலைகள் உதிர்த்தது
குதத்தில் புகுத்திய கழுமரம்
நரகலின் நாற்றத்தோடு
உதிரத்தில் நனைகையில்
உதிர்ந்த இலைகள்
மீன்களாய்த் துடித்தன
ஈரல்குலை சிதைந்து
பிளந்து படுகையில்
துள்ளிய மீன்கள்யாவும்
சிறகடித்தன திசைகளற்று
அய்யனவன்
வலத்தோள் கழுத்திடையே
கழுமரத்தின் கூர்முனை
துளைத்து மேலெழும்பியதும்
கண்களின் எஞ்சிய ஒளியை
விண்மீன்கள் வாங்கிக்கொண்டன
ஒவ்வொரு
பனிக்கால முடிவின்
வைகறைப் பொழுதுகளில்
ஆற்றின் மேற்பரப்பில்
குவிந்த உதடுகளால்
மீன்கள் யாசிக்கின்றன
மிளிரும் அதன் கண்களுக்கு
முதல் வெண்மீன் கடத்துகின்றது
அந்த நுண் ஒளியை
ஒவ்வொரு
கூதிர் காலத் தொடக்கத்தின்
யாமத்து இருளில்
முதுமரத்தின் அடியில்
மண்டிய இலைகள் மக்கி
மண்ணில் வேர்பிடித்து
முளைவிடுகின்றனவாம்
மயிர் துளிர்த்த குதங்கள்யென
ஆயிரம் ஆயிரமாய்
(ஆசான் செந்தீ அண்ணாச்சிக்கு)