Published:Updated:

காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி!

காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
News
காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : மை மார்னிங் ரொட்டீன் (My Morning Routine)

ஆசிரியர் : Benjamin Spall and Michael Xander

பதிப்பகம் : Portfolio Penguin


திகாலையில் எழுந்து அன்றைக்குச் செய்யவேண்டிய செயல்களைக் குறித்துத் திட்டமிடுகிறவர்கள், பெரிய அளவில் வெற்றி பெறுகிறார்கள் எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுகிறோம்..?

நீங்கள் காலை எட்டு மணிக்குத் திடுக்கென எழுந்து, காலை உணவைக்கூட  சாப்பிடாமல் அவசர அவசரமாக வேலைக்குச் சென்றிருக்கிறீர்களா? வெற்றி பெற்ற பல மனிதர்கள் எப்படி அந்த வெற்றியை அடைந்தார்கள், அவர்கள் செய்வதில் எதை நான் செய்வதில்லை, என்னுடைய வாழ்க்கையில் நான் முழு அளவிலான கட்டுப்பாட்டைப் பெறுவது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்கிறீர்களா...?

இவை குறித்துத்தான் பெஞ்சமின் ஸ்பால் மற்றும் மைக்கேல் ஸான்டர் என்ற இருவர் எழுதிய ‘மை மார்னிங் ரொட்டீன் – ஹெள சக்சஸ்ஃபுல் பீப்பிள் ஸ்டார்ட் எவ்ரி டே இன்ஸ்பையர்டு’ என்னும் புத்தகம் அலசுகிறது.

நம்மில் பலரைப்போல, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களும் காலையில் அடித்துப்பிடித்து எழுந்து, மொபைலில் மெசேஜ் மற்றும் மெயில் செக் செய்து, அரக்கபரக்க வேலைக்குச் சென்று, அரையும்குறையுமாக எதையோ செய்துமுடித்து களைத்துப் போய் வீடு திரும்பி, மீண்டும் தூங்கி எழுந்து பணிக்குச் சென்று வந்திருக்கிறார்கள். 

காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம்மில் பெரும்பாலானோருக்கு இதுவே ஒரு தொடர் விஷயமாகப் போய்விட்டது இல்லையா? ஒரு நாளுக்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு உகந்த காலம் என்பது காலை நேரம்தான். அப்படிக் காலையில் திட்டம் தீட்டி, அதற்கேற்ப நாம் பகல் முழுவதும் செயல்பட்டால் மாலையில் ஒரு திருப்தியுடன் அந்த நாளை முடிக்க முடியும். மாறாக, திட்டங்கள் ஏதும் இல்லாமல் செயல் பட்டால், வேலை பார்த்த களைப்பு மட்டுமே மிஞ்சும். அதுதான் தினசரி நடக்கிற விஷயமாச்சே என்கிறீர்களா...?

காலைப் பொழுதை எந்த அளவுக்கு உபயோகமாகச் செலவிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுடைய நாளை வசப்படுத்திக்கொள்ள முடியும். உங்களுடைய காலைப் பொழுது எப்படிச் செலவிடப் படுகிறதோ, அதை வைத்தே உங்களுடைய நாளின் தரம் (உற்பத்தித் திறன், நிம்மதி போன்றவை) நிர்ணயிக்கப் படுகிறது.

நீங்கள் என்னதான் திட்டம் போட்டாலும், எல்லா நாளும் திட்டமிட்டபடி நடந்து விடுகிறதா என்ன என்று நீங்கள் கேட்பீர்கள். பல நாள்கள் திட்டமிட்டபடி அமைந்து விடாமல் பல்வேறு இடைஞ்சல்கள் வருவதால்தான், மீதமிருக்கும் நாள்களில் திட்டத்துடன் செயல்படுவது பலன்தர வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஒரே வாரத்தில் இதுபோல காலையில் திட்டமிட ஆரம்பித்து, வெற்றி கண்டுவிட முடியாது. உங்கள் துறை, தொழில், இயல்பு போன்றவற்றிற்கேற்ப, பல நாள்கள் பல்வேறு மாதிரியானத் திட்டங்களை தீட்டி, அவை வெற்றி பெறுகிறதா என்பதைக் கண்டறிந்த பிறகே ஒரு திட்டவட்டமான திட்டம் தீட்டும் முறையைக் கண்டறிய முடியும்.

‘‘வாழ்க்கை என்பது நீங்கள் மிகவும் பிஸியாக உங்களுடைய திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும்போதே முடிவடைந்துவிடுவது’’  என்றார் அறிஞர் ஒருவர். நாம் நம்மை அறியாமல் செய்துகொண்டிருக்கும் பல விஷயங்களே நம்முடைய வாழ்க்கையை அமைத்துவிடுகின்றன என்பதாலேயே, காலையில் திட்டமிடல் என்பது அவசியமாகிறது. ஒரு சீரிய நோக்கத்துடன் தீட்டப்படும் திட்டங்களே நல்லதொரு நாளை உங்களுக்கு நிச்சயமாகத் தரும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி!

காலைப்பொழுது என்பது ஒரு மாசில்லாத எழுதுவதற்குத் தயாராக இருக்கும் வெற்று எழுத்துப்பலகையாக (க்ளீன் ஸ்லேட்) நம் அனைவருக்கும் இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் கழிப்பறைக்குச் செல்வது என்பதைப் பழக்க மாகக் கொண்டிருந்தீர்கள் என்றால், அதுவே அடுத்தடுத்த செயல்களுக்கு வழிவகை செய்கிறது இல்லையா!

கண் முழித்தவுடன் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டளையை மூளை பிறப்பிக்கிறது. அதன்பின் பல் துலக்கவேண்டும். அப்புறம் என்ன..?, அடுப்பைப் பற்றவைத்து காபி அல்லது டீ என்ற போடுவதுதானே!  இதற்கு மாறாக, காலையில் எழுந்த வுடன் போனை கையில் எடுத்தீர்கள் என்றால், எப்படி இருக்கும், இதனால் எந்த மாதிரியான தொடர் பழக்கவழக்கங்கள் வரும் என நினைத்துப்பாருங்கள்.

அதிகாலையில் நமக்கு இருக்கும் புத்துணர்வும், மனோ சக்தியும் பிரமாதமான திட்டங்களைத் தீட்ட வல்லது. நாளின் பொழுது செல்லச் செல்ல நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் களைப்படைகிறோம். களைப்படையக் களைப்படைய நம்முடைய மனோசக்தியும் (வில்பவர்) குறைய  ஆரம்பிக்கிறது.

மனோசக்தி குறைய ஆரம்பித்தபின்னால் தீட்டப்படும் திட்டங்களைவிட, மனோசக்தி முழுமையாக இருக்கும்போது தீட்டப்படும் திட்டங்களே மிகுந்த வெற்றிபெற வல்லவையாக இருக்கும் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் இல்லையா என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள்.

அப்படியென்றால், நான் அதிகாலையில் எழுந்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வியைக் கேட்பீர்கள். டெக்னாலஜியால் உந்தப்படும் இந்த உலகில் அதிகாலை எழுதல் என்பது முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான விஷயமாக இருப்பதில்லை என்றே இந்தக் காலகட்டத்தில் வெற்றியாளர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அப்படியென்றால், காலைப்பொழுது என்றால் என்ன என்று கேட்டீர்கள் என்றால், நீங்கள் தூங்கி எழும் நேரம்தான் உங்களுடைய காலைப் பொழுது என்ற புது விளக்கத்தைத் தருகின்றனர் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னாலும் ஒருசில வெற்றியாளர்களிடம் அந்த அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள விஷயங்களை அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்களா, அது எவ்வாறு அவர்களுக்கு உதவுகிறது என்ற நேர்காணலில் கிடைத்த விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

காலையில் குறித்த நேரத்தில் எழுந்து கொள்வது எப்படி, அதை நடைமுறைப்படுத்தப்போகும் விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பது எப்படி, காலையில் உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது, மாலையில் செய்யவேண்டிய முக்கிய விஷயங்கள், உறக்கம், பெற்றோர்களின் நலன் பேணுவது, நம்முடைய நலன் பேணுவது, வீட்டில் இல்லாமல் பணி நிமித்தம் வெளியூர்களுக்குப் பயணிக்கும் போது இவற்றை எப்படித் தொடர்வது, வெற்றிகளும், தோல்விகளும் மாறிமாறி வரும் இந்த வாழ்க்கையில் அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் இந்தப் பழக்கவழக்கங்களை  செயலாக்குவது எப்படி என்பனவற்றையெல்லாம் தனித்தனி அத்தியாயங்களாக விரிவாகத் தந்துள்ளனர் ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை உள்வாங்கிக்கொள்ளுங்கள். புதுமையான ஒரு நாளை ஆரம்பிப்பதற்கான திட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தீட்டுங்கள். வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடாது என்பதில் திட்டவட்டமாக இருங்கள்.

அதேசமயம், நாம் செல்லும் பாதை நம்மை வெற்றியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் செல்லவல்லது என்பதில் அதீத நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை என்பதை நம் எண்ணத்தால் மாற்ற முடியும் என்பதை நிச்சயமாக வாழ்ந்து பார்ப்பதன் மூலம் உணர்வீர்கள் என்று முடிக்கிறார் ஆசிரியர்.

ஒரு வெற்றிகரமான புது வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற அனைவரும், காலையில் திட்டமிடுவதால், கச்சிதமான வெற்றியை எப்படிப் பெறமுடியும் என்ற சூட்சுமங்களை அறிந்துகொள்ள கட்டாயம்  படிக்க வேண்டிய புத்தகம் இது!

- நாணயம் விகடன் டீம்

முத்தான முதல் 60 நிமிடங்கள்!

காலையில் எழுந்தவுடன் கிடைக்கும் முதல் 60 நிமிடங்களில் எந்த அளவுக்குத் திட்டமிடுதலைச் செய்கிறீர்கள் என்பதிலேயே வெற்றிக்கான வழி இருக்கிறது. “அதெல்லாம் சரி, என்னுடைய மனைவி அதிகாலையில் கண்விழிப்பதே இல்லை. எட்டு மணிக்குத்தான் விடிகிறது அவளுக்கு. அவளைச் சொல்லியும் குற்றமில்லை. அவளுடைய வேலை அப்படி. குறைந்தபட்சம் இரவு 1 மணிக்குத்தான் தூங்கப்போகிறாள். இரவில் நீண்ட நேரம் கழித்து தூங்கப் போய், அதிகாலையில் தூங்கும்போது நாம் எங்கே சார் உட்கார்ந்து நாளுக்கான திட்டங்களைத் தீட்டுவது” என்கிறீர்களா? உங்களுக்கு ஒரு குழந்தையிருந்து, அது காலையில் தூங்கினால் என்ன செய்வீர்கள்..? அதுபோல நினைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற இருவரும் இருவேறு விதமான செயல்பாடுகள் (பணி நிமித்தத்தினாலோ அல்லது இயல்பான செயல்பாடுகளினாலோ) கொண்டவர் களாக இருக்கும்பட்சத்தில், காலையில் திட்டமிட உங்களைத் தயார்படுத்திக்கொள்வது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.