Published:Updated:

``என் மாற்றுத்திறனாளி மகனைக் கவனிச்சுக்க, நான் 100 வருஷம் வாழணும்!" - தந்தை வீரப்பன்

"எனக்கு வயசு 70 ஆயிட்டு. என் காலத்துக்குப் பிறகு இவன் கதி என்னன்னு நினைச்சாலே, நெஞ்சு பதறுது. இந்த நினைப்புலேயே பல நாள் நான் தூங்குறதில்லை. ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கலாமான்னுகூட யோசிப்பேன்."

``என் மாற்றுத்திறனாளி மகனைக் கவனிச்சுக்க, நான் 100 வருஷம் வாழணும்!" - தந்தை வீரப்பன்
``என் மாற்றுத்திறனாளி மகனைக் கவனிச்சுக்க, நான் 100 வருஷம் வாழணும்!" - தந்தை வீரப்பன்

"'ஒரு மனிதனுக்கு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் கஷ்டம் வரலாம்'ன்னு சொல்வாங்க. ஆனா, என் குடும்பத்துக்கு அது நான் வளர்த்த ஒரு நாய் மூலமா வரும்னு கனவுலகூட நினைக்கலைங்க. அந்த நாயால் என் மகன் மாற்றுத்திறனாளியாகி, அவன் சாப்பிட, கழிவறைக்குப் போக, அக்கம்பக்கம் அழைச்சுட்டுப் போகன்னு எல்லாத்துக்கும் ஒரு ஆள் தேவைப்படுது. இதனால, என் மகன் படுற கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லைங்க. ஒவ்வொரு பொழுதும் விடியும்போதெல்லாம், அவன் படுற கஷ்டத்தைப் பார்த்துட்டு, என் நெஞ்சு நொறுங்கிப்போயிருது" என்று கனத்த மனதோடு குரல் உடைந்து பேசுகிறார் வீரப்பன்.

மனைவியும் தவறிவிட, கை-கால்கள் இயங்காத 30 வயது மகனுக்காக எல்லாமுமாக இருக்கவே வீரப்பனுக்கு அன்றாடப் பொழுதுகள் சரியாக இருக்கின்றன. வீரப்பனின் மகன் பெயர் செந்தில்குமார். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள கருப்பூர்தான் அவர்களின் சொந்த ஊர். குடும்பமே வறுமையின் பிடியில் சிக்க, மகனை வைத்து தள்ளிச் சென்ற வீல்சேரும் ரிப்பேராகிவிட, செந்தில்குமாருக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உடனடியாக வீல்சேர் ஒன்றை, இவரது வீட்டுக்கே வந்து கொடுத்து, ``என்னை உன் அண்ணனாக நினைச்சுக்க. நான் இருக்கேன்" என்று நம்பிக்கை கொடுக்க, இருண்டு கிடந்த செந்தில்குமாரின் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளிக்கீற்று மின்னத் தொடங்கியிருக்கிறது.

மகனை எண்ணி சிறு வீட்டில் உள்ளம் குமுறியபடி அமர்ந்திருந்த தந்தை வீரப்பனிடம் பேசினோம்.

``இவனால சரியாப் பேசக்கூட முடியாது. தட்டுத்தடுமாறி சாப்பிடவே ரெண்டு மணி நேரம் ஆவும். டாய்லெட் அழைச்சுட்டுப் போக, படுக்கவைக்க, அவனைக் குளிப்பாட்ட, உடை மாத்திவிடன்னு எல்லாப் பணிவிடைகளையும் நான்தான் பார்க்கணும். `புள்ள இப்படி ஆயிட்டானே'ன்னு மனசு மருகி மருகி, 13 வருஷத்துக்கு முன்னாடியே என் பொண்டாட்டி சடையம்மாள் எங்களை அம்போன்னு விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டா. அன்னையில இருந்து, நான்தான் இவனுக்கு எல்லாம். கூலி வேலைக்குக்கூடப் போக முடியலை. நாலு காசு சம்பாதிக்க முடியலை. ரேஷன் அரிசியை வெச்சுதான் வயித்துப்பாடு தீருது. ரெண்டு, மூணு ஆடுகளை வளர்க்கிறேன். அதுதான் வருமானம். 24 மணி நேரமும் இவன்கூடவே இருக்கணும். இல்லைன்னா கீழ விழுறது, மூச்சு விட சிரமப்படுறதுன்னு அல்லாடிப்போயிருவான். அதுக்கு பயந்தே நான் வேலைக்குப் போறதில்லை.

இவன் பொறந்தப்ப எல்லா குழந்தையைப்போலவும் நல்லாதான் இருந்தான். ஆனா, இவனுக்கு விதி நாங்க வளர்த்த ஒரு நாய் ரூபத்துல வந்துச்சு. இவன் பொறந்து ரெண்டு மாசம் கழிச்சு, தொட்டியில் இவன் படுத்திருந்தப்பதான் அந்தப் பொல்லாத சம்பவம் நடந்துச்சு. நாங்க வளர்த்த நாய் வீட்டுக்குள்ள ஓடின பூனையைத் தொரத்திக்கிட்டு வேகமா ஓடுச்சு. என் மகன் படுத்திருந்த தொட்டியோடு அவனை இழுத்துக்கொண்டு போய் சுவத்துல மோதவிட்டுட்டு ஓடிடுச்சு. கதறித் துடிச்ச அவனுக்கு, கொஞ்ச நேரத்துல ஜன்னி வந்துடுச்சு. அப்போ, வண்டி வாகனத்துக்கு வழியில்லாததால, வீட்டுல இருந்த வலி எண்ணெயை உடம்பு முழுக்கத் தேய்ச்சுட்டு, எல்லா சாமிகளையும் வேண்டிக்கிட்டோம்.

விடிஞ்சதும் பார்த்தா, இவனுக்கு கைகால் நரம்புகள் இழுத்துக்கிச்சு. நானும் என் பொண்டாட்டியும் எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் தூக்கிட்டு ஓடினோம். கோயில் கோயிலா ஏறி இறங்கினோம். ஆனா, சரிபண்ண முடியலை. கடந்த 15 வருஷம் வரை பல ஆஸ்பத்திரிகளுக்குத் தூக்கிட்டுப் போய், கொஞ்சம் கொஞ்சமா கடன் வாங்கி அப்பப்போ 3 லட்சம் ரூபாய் வரை செலவுபண்ணினோம். புண்ணியமில்லை. அப்புறம், `மொத்தமா 6 லட்சம் ரூபாய் வரை செலவு செஞ்சா, இவனை சரிபண்ணலாம்'ன்னு ஒரு ஆஸ்பத்திரியில சொன்னாங்க. அவ்வளவு செலவு பண்ண வழியில்லை. அதனால, அப்போதைய கலெக்டர்கிட்ட கோரிக்கை வெச்சோம். அவர் ஒரு வீல்சேரைக் கொடுத்தார். `விதி விட்ட வழி'ன்னு அந்த வீல்சேர்ல இவனை உட்காரவெச்சு, நடமாட வெச்சோம். `பெத்த புள்ளைக்கு இப்படி ஆயிடுச்சே'ன்னு என் மனைவியும் போய்ச் சேர்ந்துட்டா. நான் இவன் படுற அவஸ்தையை தினமும் பார்த்துப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கேன்.

எனக்கு வயசு 70 ஆயிட்டு. என் காலத்துக்குப் பிறகு இவன் கதி என்னன்னு நினைச்சாலே, நெஞ்சு பதறுது. இந்த நினைப்புலேயே பல நாள் நான் தூங்குறதில்லை. ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கலாமான்னுகூட யோசிப்பேன். ஆனா, என் மனைவி இவனை நல்லாப் பார்த்துக்கணும்னு சாவுற தருவாயில் சொன்ன சத்திய வார்த்தைகள் என்னைத் தடுத்துடும். ஒரு மாசத்துக்கு முன்னாடி இவனை உட்காரவெச்சு அழைச்சுட்டுப் போற வீல்சேரும், பயன்படுத்த முடியாத அளவுக்குப் போயிட்டு. புதுசா வாங்கணும்னா 7,000 வரை ஆவும்ன்னாங்க.

என்னால பணத்தைப் புரட்ட முடியலை. அப்பதான், எங்க ஊரு புது பள்ளிக்கூடக் கட்டடத்தைத் திறக்க கலெக்டர் அன்பழகன் வந்தார். அவரைப் பார்த்து, `பையனுக்கு புது வீல் சேர் வேணும்'னு கோரிக்கை வெச்சோம். பல ஊழியர்கள் தடுத்ததை மீறிதான் அவரை நெருங்கி விவரத்தைச் சொன்னோம். `பார்க்கலாம்'னு சொன்னார். `வழக்கமான அரசு ஊழியர்களோட பதில்தான்!'ன்னு நினைச்சுக்கிட்டு, மனம் நொந்து வீட்டுக்குப் போனோம். ஆனா, அன்னைக்கு இரவே புது வீல்சேர், மூன்று சக்கர சைக்கிள், இன்னும் சில உதவிகள்னு என் ஓட்டை வீட்டுக்கே வந்து கொடுத்தார் கலெக்டர். அதுவும், வண்டியைவிட்டு வீல்சேரை அவரே இறக்கித் தள்ளிக்கிட்டு வந்து, என் மகனை உட்காரவெச்சு அழகுபார்த்தார். `என்னை உன் அண்ணனா நினைச்சுக்க. எந்த உதவி வேணும்னாலும் தயங்காம கேளு. மனசை மட்டும் தளரவிட்டிராத'ன்னு என் மகன்கிட்ட சொன்னார். நாங்க நெகிழ்ந்துட்டோம். என் மகனைப் பார்த்துக்கிறதுக்காகவே நான் 100 வயசு வரைக்கும் வாழணும்னு எல்லா சாமிகளையும் வேண்டிக்கிட்டு இருக்கேன்" என்று சோகம் கப்பிபோன குரலில் முடிக்கிறார். 

அந்த வார்த்தைகளைக் கேட்டு செந்தில்குமாரின் முகத்திலும் மலர்ச்சி பிறக்கிறது. அந்த மலர்ச்சி, அவரது காலம் முழுக்க நிலைக்கட்டும்!