Published:Updated:

`கேரளா இயல்புநிலைக்குத் திரும்பும் வரை போக மாட்டோம்' - மனித நேயத்தை உயிர்ப்பிக்கும் லண்டன் குழு

`கேரளா இயல்புநிலைக்குத் திரும்பும் வரை போக மாட்டோம்' - மனித நேயத்தை உயிர்ப்பிக்கும் லண்டன் குழு
`கேரளா இயல்புநிலைக்குத் திரும்பும் வரை போக மாட்டோம்' - மனித நேயத்தை உயிர்ப்பிக்கும் லண்டன் குழு

பெரு மழை ஏற்பட்டு ஐந்து மாதங்களாகியும் இன்னும் கேரளாவில் தங்கி மறுவாழ்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறது ஒரு குழு.

நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் கொட்டித்தீர்த்த பெரு மழையால், ஒட்டுமொத்த மாநிலமும் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஒட்டுமொத்த மக்களும் நிலைகுலைந்துபோனார்கள். பெரு மழையால் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 488 பேர் உயிரிழந்தனர். தற்போதுதான் மெள்ள மெள்ள வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆரம்பித்துள்ளது கேரளா. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வுத் திட்டங்களை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, நவ கேரளம் திட்டத்தின் மூலம் நிதி திரட்டப்பட்டுவருகிறது. அரசைப் போலவே தனியார் அமைப்புகளும் உதவிவருகின்றன. 

இந்நிலையில்,பெரு மழை ஏற்பட்டு ஐந்து மாதங்களாகியும் இன்னும் கேரளாவில் தங்கி மறுவாழ்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறது ஒரு குழு. லண்டனைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் தனியார் தொண்டு நிறுவனம் 'கல்சா உதவி மையம்' (Khalsa Aid). இவர்கள்தான் இன்னும் கேரளாவில் தங்கி அம்மக்களின் மறுவாழ்வுக்காக உதவிவருகிறார்கள். இந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவரும், பஞ்சாபில் இருந்து லண்டனுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது தெரிந்ததும் அங்கு விரைந்தனர். அங்கு தங்கி, இத்தனை நாள்களாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். சமீபத்தில், கேரளாவில் இருந்து இந்தக் குழு ட்வீட் போட்டிருந்தது. அதில், ``கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது. நாங்கள் இன்னும் இங்குதான் இருக்கிறோம். பேரழிவுக்குப் பின்னர் சில நாள்களில் நாங்கள் அங்கிருந்து செல்லவில்லை. இன்னும் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்" என்று பதிவிட்டிருந்தனர். இது, வைரல் ஆனது.

இது தொடர்பாகப் பேசியுள்ள அந்தக் குழுவின் உறுப்பினர் அமர்பிரீத் சிங், ``வாழ்வை இழந்த மக்களின் மறுவாழ்வுக்காக நாங்கள் இப்போதும் கேரளாவில் தங்கியிருக்கிறோம். ஆலப்புழா பகுதிகளில் எங்களது குழுவினோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் புதுப்பித்துத்தருவது மற்றும் சில பணிகளைச் செய்துவருகிறோம். இதேபோல, சிதிலமடைந்த இரண்டு பள்ளிகளைச் சீரமைத்து வருகிறோம். பள்ளிகள் சிதிலமடைந்துள்ளதால், அங்குள்ள குழந்தைகள் படிக்க முடியாமல் இருக்கின்றனர். விரைவில் அவர்கள் பள்ளி திரும்பும் வகையில் செயல்படுகிறோம். இதேபோல, அந்தப் பகுதி மக்கள் சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். அதற்காக எங்களது குழு உழைத்துவருகிறது. அது வரை அங்கிருந்து திரும்ப மாட்டோம்" என்று கூறியுள்ளார். இவர்களது மனிதநேயத்துக்கு  வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.