Published:Updated:

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

Published:Updated:
வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்
வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி தொடர் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து  இப்புதினம் குறித்து நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஏராளமான கேள்விகள்...  `எழுத்தாளரையே கேளுங்கள்’ என அறிவித்திருந்தோம். வந்துகுவிந்தன ஆயிரக்கணக்கான வினாக்கள். அதில் சிறந்தவற்றுக்கான சு.வெங்கடேசனின் பதில்கள் இங்கே... 

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வேள்பாரி கதையை இவ்வளவு விரைவாக ஏன் சார் முடிச்சீங்க?”

- சாந்தி.


“இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை எழுதிய பின்னும் எண்ணற்ற வாசகர்கள் இதே கேள்வியைக் கேட்டுள்ளனர். படைப்பின் வெற்றியையும் பாரியின் வெற்றியையும் வாசகர்கள் கொண்டாடுவதன் வெளிப்பாடே இக்கேள்வி. பறம்புக்குள் நுழையும்பொழுது வியப்புறும் கபிலர், கடைசியில் நிகழும் குருதியாட்டு விழாவின்பொழுதும் வியப்பு குறையாமல் உயர்த்திய புருவத்துடனேயே இருக்கிறார். பேராசான் கபிலரையே கிறங்கச்செய்யும் பறம்பு மக்களின் அறிவும் ஆற்றலும் வாசகர்களை விட்டுவிடுமா என்ன?  எவ்விடத்தில் முடித்தாலும் இக்கேள்வி எழத்தான் செய்யும். ஆனால் இவ்விடமே இப்படைப்பை முடிப்பதற்கான சிறந்த இடம் எனக் கருதியதால் இங்கு முடித்தேன்.”

“ஒரு வாசகராக வேள்பாரியின் முடிவு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், ஓர் எழுத்தாளராக நீங்கள் எண்ணிய முடிவு இதுதானா? “

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்- விஜயரமணா.


“ஆம். வால்மீகியைப்போல ராமனின் மரணம் வரை ராம கதையை எழுதலாம்; கம்பனைப்போல போர் முடிந்து பட்டாபிஷேகத்தோடும் முடிக்கலாம். நான் கம்பனின் கட்சி. வியாசனைப் போல பாண்டவர்களின் மரணம் வரை பாரதக் கதையை எழுதாமல் போர்வெற்றியுடனே முடித்தார் வில்லிபுத்தூரார். கம்பனும் வில்லி புத்தூராரும் மட்டுமல்ல, வால்மீகியும் வியாசனும் கூட போர் முடிந்த இடத்திலேயே கதையை முடித்திருக்கலாம். வாழ்வின் நிலையாமையையும் பற்றறுதலே வாழ்வின் நோக்கம் எனச் சொல்லும் தத்துவத்தை நிலைநிறுத்தவும் பின்னர் வந்த பருவங்கள் எழுதிச்சேர்க்கப்பட்டன என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்து.

இலக்கியங்களை, ஆளும் தத்துவங்கள் தமதாக்குகின்றன. தத்துவங்களை இலக்கியங்கள் உட்செரிக்கின்றன. அதனால்தான் முப்பதாயிரம் பாக்களைக்கொண்ட பாரதக்கதை இரண்டரை லட்சம் பாக்களாக மாறுகிறது. இராமகதையும் சில ஆயிரம் பாக்களிலிருந்து பல லட்சம் பாக்களாக மாறுகிறது.

“சோக ஸ்லோகமாயிற்று” என்று கூற எந்தப் படைப்பாளியும் விரும்பியிருக்க மாட்டான். வாழ்வின் கனவு வாழ்வாங்கு வாழ்தலே!”

“கபிலர், பறம்பில் ஏறத் தொடங்குவதிலிருந்து கதையைத் தொடங்கியது நல்ல உத்தி. வாசகனை உடனழைத்துக்கொண்டே செல்ல சிறந்த வழி. முதலிலேயே இப்படித்தான் முடிவுசெய்தீர்களா... அல்லது வேறு வகையான தொடக்கம் பற்றி யோசித்தீர்களா?”

- பா.சதீஷ், திருச்சி.

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

“பாரி மகளிரை மணமுடித்துக்கொடுத்துத் தன் கடமைகளை நிறைவுசெய்கிற கபிலர் பெண்ணையாற்றங்கரைக்கு வந்து குடில்வேய்ந்து தங்குகிறார். பாரியின் வரலாற்றை மாகாவியமாக எழுதி முடித்தபின் பெண்ணையாற்றின் நடுவிலிருக்கும் கல்லில் தீவளர்த்து அதில் இறங்குகிறார். காவியத்தை எழுதத்தொடங்கும் அவரது எண்ணவோட்டத்தின் வழியே வேள்பாரியைத் தொடங்கி நான்கு அத்தியாயங்கள் எழுதிப்பார்த்தேன். தாங்கிக்கொள்ளவே முடியாத துயரம் ஒவ்வொரு சொல்லுக்குள்ளிருந்தும் பீறிட்டது. அவலத்தின் பெருங்காவியமாக அது வளர்ந்தது. அதனை எழுதவும் முடியாது, படிக்கவும் முடியாது என்று தோன்றியது. அதனால் கபிலரின் இறுதிக்கட்டத்தை எழுதாமல் அவர் பறம்புக்குள் நுழையத் தொடங்கியதிலிருந்து எழுதிப்பார்த்தேன். வியப்பின் வேகம் கட்டற்றதாக இருந்தது.”

“வேள்பாரியில் உங்களுக்குப் பெரும் சவாலாக அமைந்த கதாபாத்திரம் எது, ஏன்?” 
                      
- ஆர்.பிரபாகரன்.


“திசைவேழர். வானியல் பேராசான். சங்க காலத்து வானியல் முறைகளைப்பற்றித் தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே அக்கதாபாத்திரத்தை வலிமையோடு உருவாக்க முடியும். சங்க காலத்தில் தமிழகத்துக்கும் செங்கடல் பகுதிக்கும் இடையில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கடல்வணிகத்திற்கு அடிப்படையாக இருந்தது வானியல் அறிவு. ஆனால், அது பற்றி நம்மிடம் இருக்கும் குறிப்புகளும் ஆய்வுகளும் மிகமிகக் குறைவே. அந்த வானியல் அறிவை ஓரளவாவது புரிந்துகொள்ளவில்லையென்றால் இக்கதாபாத்திரத்தை வார்த்தெடுக்க முடியாது.

காலம், கணிதம், மொழி ஆகியவற்றைப்பற்றிய தெளிவைப்பெற அதிகளவு உழைக்க வேண்டியிருந்தது. வானத்தின் மகா ஞானநூலெனக் கூறப்படும் ஜோதிடசாஸ்திர நூல்கள், பூமி சாஸ்திரம், மாலுமி சாஸ்திரங்கள், இவற்றிற்கு முன்னோடியான சங்க இலக்கியக் குறிப்புகள், யவனர்களின் வானியல் குறிப்புகள், அவர்களுக்கு முன்னோடியான கல்தேயர்களின் வானியல் சிந்தனைகள் எனப் பெரும்வாசிப்புப் பரப்புக்குள் மூழ்க வேண்டியிருந்தது. வானத்தை அண்ணாந்து பார்த்து விண்மீன்களையும் கோள்மீன்களையும் அறிந்துகொள்வதையே பல மாதங்கள் வேலையாக வைத்திருந்தேன். திசைவேழரைக் கண்டாலே அந்துவன் உள்ளிட்ட அவர் மாணவர்கள் எல்லாம் பயந்து நடுங்குவார்கள். உண்மையில் அவரைக் கண்டு அதிகம் நடுங்கியது நான்தான்!”

“கடல் தொடாத நதியாகவே வைகை நதியை அறிகிறோம். ஆனால் வைப்பூர்த் துறைமுகம் என்பது கற்பனையா அல்லது சங்க காலத்தில் வைப்பூர்த் துறைமுகத்திற்கான குறிப்புகள் இருக்கின்றனவா? “

  - கண்ணன், வேடசந்தூர்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

“வைகை கடலில் கலக்குமிடத்தில் துறைமுகம் ஒன்று இருந்தது அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வின் மூலம் கண்டறியப்பட்டது. மிகப்பழைமையான துறைமுகம் அது. யவனத்துக்கும் இத்துறைமுகத்துக்கும் இடையில் வணிகம் நடந்ததற்கான சான்றுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இத்துறைமுகம் பற்றி சங்க இலக்கியக் குறிப்பேதும் இல்லை.

அழகன்குளத்தின் பழைய பெயர் அருகன்குளம். கிரேக்க வரலாற்றாளன் தாலமி தமிழகத்தின் துறைமுகத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது அருகுரு துறைமுகம் என்று சொல்கிறார். அருகன்குளத்தைத்தான் அருகுரு துறைமுகம் என்று தாலமி கூறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வைகை கடல்புகும் ஊராதலால் ‘வைப்பூர்’ என அவ்வூருக்குப் பெயரிட்டேன். கதையின் போக்கில் அத்துறைமுகம் அழிந்ததற்கான காரணமும் இணைந்துகொண்டது.

இத்துறைமுகம் அழிந்த பின்னர் பொருநை நதி கடலில் கலக்கும் இடமான கொற்கையில் புதிய துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கலாம்.

வைகையின் பேரளவு நீர் முகவைக் கண்மாயில் சேகரமாகிவிடுவதால், வைகையைக் கடலைத் தொடாத நதி என்கிறோம். அக்கண்மாய் சங்க காலத்தில் இல்லை; பின்னாளில் வெட்டப்பட்டது. மேலும், அந்தக் கண்மாய் நிறைந்த பின் வழியும் நீர் அழகன்குளத்தின் அருகில் இன்றும் கடலில் கலக்கிறது.” 

“இத்தனை வகையான `கள்’ பற்றி எப்படிச் சேகரித்தீர்கள்? இதில் உங்களுக்குப் பிடித்த கள் வகை எது?”

– முத்துக்குமார், தென்காசி


“நான் சேகரித்தது குறைவு; எழுதியது அதிலும் குறைவு. கள்ளினும் மயக்கம் தருவது கதைகள். நான் மயங்குவதும் அதில்தான்; தெளிவதும் அதில்தான். சங்க காலக் குடிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கென்று தனித்துவமான கள் வகைகளைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கள் வகைக்கும் ஒரு பண்பாட்டு வரலாறு உண்டு. பொதினி மலைக்குச் சாணைக்கல் தேடி வரும் பாரியும் வாரிக்கையனும் தங்களின் கள் வகையான ஆலம்பனைக்கள்ளைக் கொண்டுவருவர். பொதினியின் தலைவன் மேழகன் தனது குடியின் கள் வகையான ஐஞ்சுவைக் கள்ளினைக் கொடுத்து அவர்களை வரவேற்பான். பொதினி மலை என்பது இன்றைய பழனி மலை. கோடை மலை அதாவது கொடைக்கானல் மலையின் தொடர்ச்சி. பொதி நீர் என்பதுதான் பொதினி என மருவியது. பொதி நீர் என்றால் பழத்தினுள் பொதிந்துள்ள சாறு என்று பொருள். சாறு நிறைந்த பழங்களும் கள் வகைகளும் நிறைய கிடைக்கும் மலையாதலால் அப்பெயர் வந்தது. அம்மலையின் பூர்வகுடிகள் பயன்படுத்திய ‘கள்’தான் ஐஞ்சுவைக்கள். தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவற்றின் நொதியில் உருவாவது. இவற்றுடன் காலமாற்றத்தினூடே புதிய பழவகைகள் இங்கே வந்து சேர்ந்தன. ஆதிக்குடிகளின் கள்ளையும் கடவுளையும் பெருமதங்கள் உள்வாங்கிக்கொண்டன. பேரீட்சம் பழம் உள்ளிட்டவற்றைக் கலந்து ஐஞ்சுவைக்கள்ளை பஞ்சாமிருதம் என்று வடமொழியாக்கினர், முருகன் சுப்பிரமணியன் ஆனதைப்போல. கள் வற்றும்; கதை வற்றாது.”

“நாவலில் இடம்பெறும் இயற்கை சார்ந்த அறிவுச்செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வளவு செய்திகளைப் புனைவுக்குள் பின்னியிருக்கும் உங்களது  நீண்ட தேடலில் பெரும் ஆச்சர்யம் தந்த ஒரு செய்தி குறித்துச் சொல்லுங்கள்?”

– சிவமணி, தி.மலை


“எத்தனையோ உண்டு. உதாரணமாக கபிலர் பறம்புக்குள் நுழைந்த அன்று இரவு வேட்டுவன் பாறையில் தங்கவைத்திருப்பர். மறுநாள் காலை வேட்டூர் பழையன் சிறு கூடை ஒன்றில் நாவற் பழத்தைக் கொண்டுவந்து வைத்து, ‘எடுத்துக்கொள்’ என்பார். கபிலர் எடுக்கும் நாவற் பழத்தை வைத்து காடுபற்றி அவருக்கு இருக்கும் அறிவைக் கண்டறிவர்.

இது, எனக்கு நடந்தது. மேற்குமலை அடிவார ஊர் ஒன்றுக்கு தோழர்கள் அழைத்துப் போயிருந்தார்கள். அப்பொழுது நார்த்தட்டு நிறைய நாவற்பழம் கொண்டுவந்து கொடுத்தனர். நான் உட்கார்ந்து பேசியபடியே சற்று நேரங் கழித்துச் சாப்பிடுவோம் என்று வைத்திருந்தேன். அப்பொழுது என்னை அழைத்துச்சென்ற பெரியவர் கூறினார், ‘முன்பெல்லாம் நாவற்பழத்தை எடுத்தால்தான் காட்டுக்குள் அழைத்துச் செல்வார்களாம்’ என்றார். ஏன் எனக் கேட்டதற்கு நாவற்பழம்கொண்டு காடு பற்றிய அறிவைக் கணிக்கும் முறையை விளக்கினார்.”

“ ‘காற்று’ என்பதன் பெண்பாற் சொல்லாக ‘காற்றி’ என்ற சொல்லாடல் வேள்பாரியில் வருகிறது. காற்றி என்பது புனைவா இல்லை அப்படி உண்மையில் இருக்கிறதா?” 
 
  - காவியா ராமச்சந்திரன், அண்ணாநகர்


“இயற்கையின் எல்லாமும் தன்னைப் போலவே ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறது என ஆதிமனிதன் நம்பினான். அந்நம்பிக்கையின் வழியே தழைத்த கற்பனையே காற்றி.

மேகசாஸ்திரத்தில் ஆண் மேகம், பெண் மேகம் பற்றிய குறிப்பு வருகிறது. மேகங்கள் ஒன்றினையொன்று விரட்டியும் விலகியும் கூடியும் கரைந்தும் முடிகின்றன. ஆணாகவும் பெண்ணாகவும் நிகழும் அக்கூடுகையிலேதான் மழைபொழிந்து மண் செழிக்கிறது.

மேகமே இருபாலினமாக இருப்பதாக ஒருவன் கற்பனை செய்துள்ளான். காற்று அப்படி இருக்காதா என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism