
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #6 - கோவை 200 - இன்ஃபோ புக்

வணக்கம் சுட்டி நண்பர்களே...
‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.
உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், கோவை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?
சேலம், சென்னை, தருமபுரி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.
‘சேலம் 150’, ‘சென்னை டே 2018’ ‘தருமபுரி 200’, `மதுரை 200' `நெல்லை 200' ஆகியவற்றைத் தொடர்ந்து, இப்போது `கோவை 200' இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.
அன்பு கோவைச் சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

கோவை பயோகிராஃபி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்துக்கும், மாநகரத்துக்கும் நீண்ட வரலாறு உண்டு. பல்வேறு குறுநில மன்னர்களும் ஆங்கிலேயர்களும், தங்களது ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். இது குறித்து பள்ளி மாணவர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் மிகுந்திருக்கின்றன. வாருங்கள் கோவையைப் பற்றி வாசிப்போம்.
1. தொழில் வளம் மிகுந்த கோவை
கோவையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது, மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தப் பகுதி, தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2. நதிக்கரை நாகரிகம்
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள குருடி மலையில் உருவாகி, 49 கிலோமீட்டர் பயணிக்கிறது கௌசிகா நதி. இங்கு, சங்ககால மக்களின் தமிழ்ப் பிராமி எழுத்துகள், மண்கல ஓடுகள் கிடைத்திருப்பதால், இந்தப் பகுதி கி.பி 1 முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை, நதிக்கரை நாகரிகத் தலமாகவும் வணிகத் தலமாகவும் விளங்கியிருக்க வேண்டும் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

3. பெண்களுக்கு அழகு சேர்த்த அணிகலன்கள்
கௌசிகா நதிக் கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற ஓடுகள், செங்காவி பூசப்பட்ட மண்கல ஓடுகள், மெருகேற்றப்பட்ட இளஞ்சிவப்பு ஓடுகள், அதில் வரையப்பட்ட வெள்ளைக் கோடுகள், அகல் விளக்குகள், விளையாட்டுப் பொருள்கள், சுடுமண் குழாய்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட கழுத்தாணிகளுடன் பெண்கள் பயன்படுத்திய அணிகலன்களும் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம், இங்கு வசித்த பெண்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அணிகலன் அணியும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளனர் என அறிந்துகொள்ள முடிகிறது.
4. வசதியான ஓட்டு வீடுகள்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூரில், 2 ஏக்கர் பரப்பளவில், மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இது, 1800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியது என்கின்றனர் தொல்லியல் துறையினர்.
5. மரியாதை செலுத்துவதில் நம்பர் - 1
கொங்கு மண்டலத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டவர்கள் மரணமடைந்தபோது, அவர்களுக்கு வீரக்கம்பங்கள் அமைத்து மரியாதை செலுத்தியுள்ளனர் மக்கள். இதற்கு சாட்சியாக, கோவை மாவட்டத்தின் கரும்புரவிபாளையம், ஆவலப்பட்டி போன்ற பகுதிகளில் கிடைத்த வீரக் கம்பங்களும், சிற்பங்களும் சாட்சிகளாக உள்ளன.
6. மாடுபிடி வீரருக்கு நடுகல் பூஜை
பண்டைய காலத்துக் கொங்கு நாட்டில் மாடுபிடி விளையாட்டும் ஏறு தழுவுதலும் நடந்திருக்கிறது. மாடுபிடி விளையாட்டில் மரணித்த வீரருக்கு தொண்டாமுத்தூர்ப் பகுதியில் நடுகல் வைத்து பூஜை செய்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
7. மாவட்டப் பெயர் உருவான வரலாறு
சங்க காலத்தில், பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்த பகுதிகளாக இருந்திருக்கிறது கொங்கு மண்டலம். இந்தப் பகுதியில் ஆட்சி செய்த கோவனின் வழி வந்தவர்கள், கோசர் குலத்தவர்கள். அவர்கள் வணங்கிய தெய்வம், கோனியம்மன். கோவன், கோனியம்மன், கோசர் பெயர்களாலே கோவன்புத்தூர் என்றழைக்கப்பட்டு, கோயம்புத்தூராக மாறியுள்ளது கோவை.
8. சேரர்களின் செல்லப்பிள்ளை கோவை
கொங்கு நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்கள் ஒன்றுசேர்ந்து காணப்பட்டதால், குறுநில மன்னர்களையும், மக்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. சங்க காலத்தில், சேரன் செங்குட்டுவன் கரூரைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சிசெய்துள்ளார். இவரின் தளபதிகள் கொங்கு மண்டலத்தின் பெரும் பகுதிகளை வென்று ஆட்சி செய்து, சேர நாடாக மாற்றியிருக்கின்றனர்.

9. சத்தியமங்கலம் வழியே வந்தவர்களின் ஆட்சி
மைசூர்ப் பகுதியைத் தலைமை இடமாகக்கொண்டு ஆட்சி செய்தவர்கள், கன்னட இனத்தைச் சேர்ந்த கங்கர்கள். இவர்கள், தாங்கள் ஆட்சிசெய்த பரப்பை விரிவுபடுத்துவதற்காக கொள்ளேகால், சத்தியமங்கலம் வழியாகக் கோவைக்கு வந்தவர்கள், கி.பி 405ஆம் ஆண்டு முதல் 870ஆம் ஆண்டு வரை கொங்கு மண்டலத்தை ஆட்சிசெய்துள்ளனர்.
10. படைத்தளபதிகள் கொங்கு சோழர்கள் ஆன கதை
சோழர்களில் பெரும் வலிமைகொண்டவர்கள், தஞ்சையைத் தலைமை இடமாக்கி ஆட்சிசெய்த ஆதித்த சோழர்கள். இவர்கள், படைத்தளபதிகளைக் கொங்கு மண்டலத்துக்கு அனுப்பி, பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள். இவர்கள் மூலம் கொங்கு சோழர்கள் உருவானார்கள். கி.பி 980ஆம் ஆண்டு முதல் கி.பி 1305ஆம் ஆண்டு வரை கொங்கு மண்டலத்தில் கொங்கு சோழர்களின் ஆட்சி நடந்திருக்கிறது.
11. வீர ராசேந்திர சோழனும் கோவையும்
கொங்கு சோழர் வீர ராசேந்திரன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைக்காட்டில் உள்ள திருநாகேஸ்ரவர் கோயிலின் கல்வெட்டுகள், கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவை ஒவ்வொன்றும், கோவையிலுள்ள கிராமங்களின் பெயர்கள் எப்படி வந்தன என்பதை விவரிக்கின்றன.
12. கொங்கு சோழர்களும் கோட்டைமேடும்
1500 ஆண்டுப் பழைமை வாய்ந்தவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில். இது கொங்கு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது எனத் தகவல் தெரிவிக்கிறது இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.
13. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலே சாட்சி
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கட்டுமானமும், இங்குள்ள கல்வெட்டுகளும் 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்கிறது மத்திய தொல்லியல் துறை. 12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கொங்கு சோழர்கள், அர்த்த மண்டபத்தைக் கட்டியுள்ளனர். 14ஆம் மற்றும் 15ஆம் நூற்றாண்டில், ஹோய்சாளர்களும் விஜய நகர மன்னர்களும், பேரூருக்குப் பல்வேறு மானியங்களையும் நிலங்களையும் வழங்கியுள்ளனர் என்கிறது இங்குள்ள கல்வெட்டுகள்.
14. கரிகால சோழனின் ராஜ்ஜியம்
கொங்கு மண்டலத்தில் கரிகால சோழனின் ஆட்சியும் நடந்திருக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் கருவறை மற்றும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார் கரிகால சோழன். சோழர்களுக்குப் பின் பாண்டியர்களும், ஹோய்சாளர்களும் கொங்கு மண்டலத்தை ஆண்டுள்ளனர். பாண்டிய மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால், இந்தப் பகுதியை டெல்லி முகலாயர்களும் சில காலம் ஆட்சி செய்துள்ளனர்.
15. பேரூர் டு கோவை
கொங்கு மண்டலத்தில் உள்ள தென் பகுதியை, கி.பி 10 மற்றும், கி.பி 12ஆம் நூற்றாண்டு இறுதியிலும், கி.பி 13ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலும் வீரகேரளம் மரபினர் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் காலத்தில் பேரூர்ப் பகுதியையே கோயம்புத்தூர் என்று அழைத்துள்ளனர்.
16. பாண்டியர்கள் ஆட்சி செய்ததற்கான சாட்சிகள்
காரமடை அருகில், மருதூர் திம்மம்பாளையம் பகுதியில் உள்ள கோயில்களில் சில கல்வெட்டுகள் கி.பி 1285-ஆம் ஆண்டு முதல் கி.பி 1305-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த கொங்கு பாண்டியர்களில் ஒருவரான சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சார்ந்தவை. இங்குள்ள கல்வெட்டுகள் கொங்கு மண்டலத்தில் பாண்டியர்களும் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு சாட்சிகளாக உள்ளன.
17. விஜய நகரப் பேரரசின் விஜயம்
1545 ஆம் ஆண்டு, மதுரை சுல்தான்களிடமிருந்து விஜயநகர ஆட்சியாளர்கள் கொங்கு மண்டலப் பகுதிகளைப் போரிட்டு வென்றனர். 16 ஆம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள், கொங்கு மண்டலத்தில் குடியேறினர். முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்திலும், திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில், விஜயநகர அரசு அழிவைச் சந்தித்திருக்கிறது.
18. கொங்கு மண்டலத்தில் மைசூர் அதிகாரம்
திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலத்தில், கொங்கு மண்டலத்தில் பொறுப்பு, அதிகாரம் எல்லாமே மைசூர்ப் பேரரசின் கையிலேயே இருந்திருக்கிறது. இதனால், மைசூர்ப் பேரரசின் கலையும், இலக்கியமும் கொங்கு மண்டலத்தில் பரவியுள்ளன.
19. மைசூர்ப் பேரரசின் நீண்ட கால ஆட்சி
கர்நாடகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்சிசெய்து வலிமையான அரசராக இருந்தவர், ஹைதர் அலி. இவர், 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோவைப் பகுதியைத் தனது ஆளுகைகளுக்குக் கீழ் கொண்டுவந்தார். ஹைதர் அலியைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தானும் கொங்கு மண்டலத்தில் நீண்ட காலம் தங்களது அதிகாரத்தைச் செலுத்திவந்தார்.
20. ஆங்கிலேயர்களும் திப்புவும் மாறிமாறி மோதிக்கொண்ட கதை
கோயம்புத்தூரைத் தங்கள் வசம் வைத்திருக்க மைசூர் சுல்தான்களும் ஆங்கிலேயர்களும் போட்டிபோட்டனர். 1768ஆம் ஆண்டில், பிரிட்டிஷாரின் படைகள் கோவையைக் கைப்பற்றின. பின்பு, ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பகுதிகளை திப்பு சுல்தானிடம் திருப்பிக் கொடுத்தனர். ஆங்கிலேயர்கள் 1791ஆம் ஆண்டில் மீண்டும் படையெடுத்து கொங்குப் பகுதியைக் கைப்பற்றினர்.
21. மைசூர்ப் போரும், திப்புவின் வீர மரணமும்
1799ஆம் ஆண்டில் திப்பு சுல்தானும் ஆங்கிலேயரும் மோதிக்கொண்ட மைசூர்ப் போரில், திப்பு சுல்தான் வீர மரணமடைந்தான். அப்போது, ஆங்கிலேய பிரிட்டீஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹௌசி பிரபு, திப்புவின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் கொடுத்து அரசுரிமைகளைப் பறித்து அனைத்துப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். கி.பி 1800 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது கோவை.
22. வடகொங்கு, தென்கொங்கு
பவானி மற்றும் தாராபுரம் பகுதிகள், வடகொங்கு மற்றும் தென்கொங்கு என்றழைக்கப்பட்டன. பிரிட்டிஷார் காலத்தில், இந்த இரு பகுதிகள் இணைத்து, கோவை மாவட்டம் உருவாகியிருக்கிறது.
23. கோவைக்கு வயது 214
1804ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, கோவை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 24ஆம் தேதி கோவை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி, தனது 214வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது கோவை.
24. கோவைக்குக் கிடைத்த செல்லப் பெயர்
18ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் செயல்பட்டன. ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் நுழைந்ததும், கொங்கு மண்டலப்பகுதியில் பருத்தி உற்பத்தி செய்வதற்கு ஏற்ற மண் வகை இருப்பதை அறிந்து, கோவைப் பகுதியிலும் பருத்தி பயிரிடவும், பஞ்சாலைகள் தொடங்கவும் ஊக்குவித்தனர். இதனால் நூற்றுக்கணக்கான நூற்பாலைகளும்ப ஞ்சாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. தென்னிந்தியாவின் மான்செஸ்டராக மாறியது கோயம்புத்தூர். தற்போது, கோவை மாவட்டத்தில் பருத்தி ஆலைகளும் பருத்தி பயிர் செய்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன.
25. காபி எஸ்டேட்காரர் நகரத் தந்தை ஆன கதை
கோயம்புத்தூர் நகராட்சி 1866ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நீலகிரியில் காபி எஸ்டேட்டுகளைப் பெருமளவில் உருவாக்கினார் ராபர்ட் ஸ்டேன்ஸ் (Robert Stanes). இவரே கோவை நகராட்சியின் முதல் தலைவராகப் பதவியேற்றார். இவர், 1858ஆம் ஆண்டு குன்னூரிலும், 1861ஆம் ஆண்டு கோவையிலும் நிறுவிய ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ராபர்ட் ஸ்டேன்ஸ், பள்ளிகளுக்கு மட்டுமல்ல, கோவையின் விரைவான தொழில் வளர்ச்சிக்கும் முன்னோடியாக விளங்கினார். போக்குவரத்து, மருத்துவம், கல்வி என மக்களின் அடிப்படையான தேவைகளையும் நிறைவேற்றினார். இவரது காலத்தில்தான் நூற்பாலைகளும் பஞ்சாலைகளும் தொடங்கப்பட்டன.

26. தலைநகரமான கோவை
1866ஆம் ஆண்டு கோவை நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 24,000. நூறு வருடத்தில் அசுர வளர்ச்சியடைந்து, 1981ஆம் ஆண்டில் தமிழகத்தின் மூன்றாவது மாநகராட்சியாக மாறியது. போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் எனப் பல வசதிகள் தங்குதடையின்றிக் கிடைத்ததால், ராக்கெட் வேகத்தில் வளர்ச்சியடைந்து சென்னைக்கு அடுத்து அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகக் கோவை மாநகரம் மாறியுள்ளது.
27. தாய் மாவட்டமான கோவை
1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி, கோவை மாவட்டத்திலிருந்து நீலகிரி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு, மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தபோது, பாலக்காடு கேரளத்துடனும், கொள்ளேகால் மைசூருடனும் இணைக்கப்பட்டன. பின்பு, கரூர் தாலுக்கா, திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பிறகு, கரூரைத் தலைமையிடமாக்கி புதிய மாவட்டம் உருவானது. பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் பகுதிகள் ஈரோடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. திருப்பூர், உடுமலைப் பகுதிகளைப் பிரித்து, 2009 ல் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
28. இதமளிக்கும் காலநிலை
கோவையில் இதமளிக்கும் தட்பவெப்பநிலையாக 18 முதல் 35.7 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகிவருகிறது. மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலைகளும், தெற்கில் 4000 முதல் 5000 அடி உயரம்கொண்ட ஆனைமலையும், வடமேற்கில் குச்சும்மலையும் சூழ்ந்திருப்பதால், மலைச்சாரலும் மழைச்சாரலும் கலந்த மிதமான காலநிலை நிலவுகிறது.
29. மக்களைக் குளிரவைக்கும் மழைச்சாரல்
தென்மேற்குப் பருவமழையின் சாரல் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோவையைக் குளிரவைக்கிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்குப் பருவமழை ஓரளவுக்குப் பயன்கொடுக்கிறது. கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 550-900 மில்லிமீட்டர் மழை பதிவாகிறது.
30. கரிசல் மணம் வீசும் கோவை
கோவை மாவட்டத்தில் கரிசல் மண், செஞ்சுண்ணாம்பு மண், செம்மண், வண்டல் மண் எனப் பல வகையான மண்கள் காணப்படுகின்றன. செழிப்பான மண்வளம் உள்ள பகுதிகளில் வேளாண்மைத் தொழிலும் களைகட்டுகிறது.

31. வனங்கள் சூழ் பகுதி
கோவை மாவட்டத்தில் 693 சதுர கி.மீ வனப் பரப்பளவு கொண்டுள்ளது. கோவை மாவட்டத்தைச் சுற்றிலும் மலைகளும் வனங்களும் ஆறுகளும் சூழ்ந்திருப்பது சுற்றுச்சூழலுக்கு சாதகமாக இருக்கிறது. கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம் என்று 7 வனச்சரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மலைச்சரிவும், தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியும், ஆனைமலைக் காடுகளும் கோவை மாவட்டத்துக்கு ரம்மியத்தைக் கூட்டுகின்றன. யானை, காட்டெருமை, கரடி, மான், சிறுத்தை போன்ற விலங்குகள் உள்ளன.
32. கணிசமாகக் கிடைக்கும் கனிமம்
கனிம வளங்களான கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் ஆகியன கோவையில் மிகுந்து கிடைப்பதால், மதுக்கரைப் பகுதியில் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. தடாகம் உள்ளிட்ட பகுதிகள், செங்கல் சூளைகளுக்குப் பெயர் பெற்றவை.
33. சிற்றோடைகளின் சங்கமம்
மேற்குத்தொடர்ச்சி மலையில் 7 சிற்றோடைகள் இணைந்து, குஞ்சரான்குடி என்னும் பெயரில் சமவெளிக்கு வந்து, நொய்யல் எனப் பெயர் பெறுகிறது. பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துபாளையம் வழியாக 180 கிலோமீட்டர் பயணித்து, கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது. கோவை நகரம் உருவாக, நொய்யல் ஆறும் முக்கியக் காரணம்.
34. நொய்யல் டு குளம் - குளம் டு நொய்யல்
காட்டாறான நொய்யலின் நீரைப் பயன்படுத்த, கொங்கு மண்டலத்தை ஆண்ட சோழர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பு, நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே நொய்யலின் குறுக்கே 32 தடுப்பணைகள் கட்டப்பட்டு, குளங்களுக்கு வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுவருகின்றன. 32 குளங்களும் ஏரிகளும் நொய்யலினால் நிரம்புகின்றன. குளத்தில் நிரப்பப்படும் உபரி நீர் வீணாகாமல் மீண்டும் நொய்யல் ஆற்றில் சேரும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
35. நீர் மேலாண்மையில் 40 குளங்கள்
அச்சன்குளம், ஆணைப்பாளையம் குளம், ஆண்டிப்பாளையம் குளம், இருகூர்க் குளம், கந்தங்கன்னி குளம், கிருஷ்ணம்பதி, கொலரம்பதி, நரசம்பதி, செல்வம்பதி, பேரூர்க் குளம், புதுக் குளம், செங்குளம், வெள்ளலூர்க் குளம் என 40-க்கும் மேற்பட்ட குளங்கள் உருவாக்கப்பட்டு, நீரை முறையாகப் பயன்படுத்தும் வகையில் நீர் மேலாண்மை செய்துள்ளனர்.
36. இறந்த நதியான நொய்யல்
வீடுகளிலிருந்து கொட்டப்படும் திடக்கழிவு மற்றும் குப்பைகளும், திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளும், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் சுத்திகரிக்கப்பட்ட நீரும், நொய்யல் ஆற்றை `இறந்த ஆறாகவே' மாற்றியுள்ளன.
37. சுவையான குடிநீரைத் தரும் சிறுவாணி
உலகின் சுவையான குடிநீரை வழங்கும் நதியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது கோவை சிறுவாணி நதி. இது, கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு தாலுகாவில் பிறந்து, கோவையில் பாய்ந்து, ஈரோடு மாவட்டத்தில் குண்டாற்றுடன் சேர்கிறது.

38. பாதுகாப்பான வனத்துக்குள் அணை
சிறுவாணி நீர் கோவைக்குச் சொந்தமானாலும், அதன் அணை கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது. பாது காக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருப்பதால், பொதுமக்களின் பார்வையிடலுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாக உள்ளது சிறுவாணி அணை.
39. பழம்பெரும் சாமக்குளங்கள்
கோவையின் வடக்குப் பகுதியில் முக்கியமான நீர்த்தேக்கமாக, சிறுவாணி நதியின் நீரைச் சேமிக்கும் இரண்டு முக்கிய ஏரிகளாக அக்ரகார சாமக்குளமும், சர்க்கார் சாமக்குளமும் அமைந்துள்ளன.
40. எட்டு முக்கிய `ஸ்மார்ட் சிட்டி' குளங்கள்
கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் குளம், உக்கடம் பெரியகுளம், நரசம்பதி, செல்வ சிந்தாமணி, வாலாங்குளம், சிங்காநல்லுார் ஆகிய எட்டுக் குளங்கள், கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளன. இந்தக் குளங்கள், `ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தி்ன்கீழ் ரூ.232 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன.
41. பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலம்
கோவை நகரத்துக்குள் இருந்தாலும் மாசு கட்டுப்படுத்தப்பட்டு, 396 வகை தாவரங்கள், 160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள், 22 வகை பாலூட்டிகள் என 720 வகையான பல்லுயிர்களுடன் சூழல் பாதுகாப்பில் முன்னிலையில் உள்ளது சிங்காநல்லூர் குளம். இது, தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
42. உயிர் வேலி உள்ள சின்னவேடம்பட்டி குளம்
ஆனைகட்டி கணுவாய் சங்கனூர்ப் பள்ளத்திலிருந்து, துடியலூர் வழியாக நீர் பாய்ந்தோடி, சின்னவேடம்பட்டி ஏரியில் கலக்கிறது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கும் 50-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கிவருகிறது இந்த ஏரி. தற்போது, ஏரியின் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ராஜவாய்க்காலைத் தூர் வாரியும், `உயிர் வேலி' அமைத்தும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
43. பயிர் சாகுபடி
கோவையின் மொத்த நிலப்பரப்பில் 65 சதவிகிதம் (1,77,313 ஹெக்டேர்கள்) பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை, பருத்தி, நிலக்கடலை, சோளம், கரும்பு, வாழை, நெல், பருப்பு வகைகள் எனப் பலவிதமான பயிர்கள் பயிடப்படுகின்றன. தண்ணீர்ப் பற்றாக்குறையாலும், தொழில்துறையின் ஆதிக்கத்தாலும் வேளாண்மைப் பரப்பளவும், விளைச்சலும் பல மடங்கு குறைந்திருக்கிறது.
44. சுவைமிகுந்த இளநீரும் தென்னையும்
தென்னை சாகுபடிக்கேற்ற பருவநிலையும், நல்ல பாசன வசதியும், குறையாத நிலத்தடி நீர்மட்டமும் இருப்பதால், பொள்ளாச்சிப் பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி, தேங்காய் உற்பத்திக்கும், சுவைமிகுந்த இளநீருக்கும் பெயர் பெற்றது.
45. குறையும் நிலத்தடி நீர்
நிலத்தடி நீர் இயற்கையிலேயே சற்று உவர்ப்புத்தன்மை மிக்கதாக இருக்கும் நிலையிலும், சில ஊர்களில் குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் 60 அடியிலிருந்த நீர், தற்போது 1200 அடிக்கு இறங்கியிருப்பது கவலை அளிக்கிறது.
46. நகரப்பகுதியில் அதிகரித்துவரும் மக்கள்தொகை
கிராமத்தையும் நகரத்தையும் கொண்டதுதான் கோவை மாவட்டம். 4,723 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. கோவை மாவட்டத்தின் மக்கள்தொகை 34 லட்சமாகும். இதில், கோவை மாநகரத்தில் மட்டுமே 20 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வசிப்பதாகவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நகரப்பகுதியில் 75 சதவிகித மக்களும், கிராமப்பகுதியில் 25 சதவிகித மக்களும் வசிக்கின்றனர்.
47. கோவை நகரத்தை நோக்கி முன்னேறும் மக்கள்
கோவை மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது, கோவை மாவட்டத்தின் கிராமப்பகுதியில் 10 சதவிகித அளவுக்கு மக்கள் தொகைக் குறைந்திருக்கிறது. ஆனால், கோவை நகரப் பகுதியில் மக்கள்தொகை 27 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஒரு சதுர கி.மீட்டர் தூரத்தில் 601 பேர் வசித்துவந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 731 பேராக உயர்ந்துள்ளது.
48. ஆணுக்கு இணையாக பெண்கள்
கோவை மாவட்டத்தில் ஆண் - பெண் பாலின விகிதம் 1000-க்கு 1000 என சமமாக உள்ளது. இது 2001 ஆம் ஆண்டில் 1000 : 968 என்று இருந்திருக்கிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 1- 6 வயதுள்ள குழந்தைகளில் 1000 ஆண் குழந்தைக்கு 956 பெண் குழந்தைகளே உள்ளனர்.
49. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்வு
கோவை மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2001ஆம் ஆண்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 78.5 சதவிகிதம். 2011ஆம் ஆண்டில் இது 83.98 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

50. கோவை மாவட்ட நிர்வாகப் பிரிவுகள் பகுதி-1
கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என மூன்று நகராட்சிகள், காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம், சர்க்கார் சாமக்குளம், தொண்டாமுத்தூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு,அன்னூர்,சூலூர், சுல்தான்பேட்டை என 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
51. கோவை மாவட்ட நிர்வாகப் பிரிவுகள் பகுதி-2
கோவை மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, இருகூர், கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், கோட்டூர், சிறுமுகை, சூலூர், பெரியநாயக்கன் பாளையம், மதுக்கரை, வெள்ளலூர், வேட்டைக்காரன் புதூர், ஜாமீன்ஊத்துக்குளி, ஒத்தக்கால்மண்டபம், ஒடையகுளம், கண்ணம்பாளையம், கிணத்துக்கடவு, சமத்தூர், சர்க்கார்சாமக்குளம், சூலேஸ்வரன்பட்டி, தாளியூர், N.S.N.பாளையம், பள்ளப் பாளளையம், பூளுவபட்டி, பெரியநெகமம், பேரூர், வேடபட்டி, வீரபாண்டி, ஆலந்துறை, இடிகரை, எட்டிமடை, செட்டிபாளையம், திருமலயம்பாளையம், தென்கரை, தொண்டாமுத்தூர், மோப்பிரிபாளையம் என 37 பேரூராட்சிகளும், 227 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
52. கோவை மாவட்ட வருவாய்ப் பிரிவுகள்
கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு, பொள்ளாச்சி என மூன்று வருவாய்க் கோட்டங்களும், கோயம்புத்தூர் தெற்கு, பேரூர், மதுக்கரை, சூலூர், கோயம்புத்தூர் வடக்கு, அன்னூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை என 10 வருவாய் வட்டங்களும் உள்ளன. 38 வருவாய் உள்வட்டங்கள், 295 வருவாய் கிராமங்கள் என மிகப்பெரிய எல்லையைக் கொண்டிருக்கிறது கோவை.
53. சட்டமன்றத் தொகுதிகளும் மக்களவைத் தொகுதிகளும்
கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், வால்பாறை என்று 10 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.
54. கோவை பெருநகர மாநகராட்சி
தமிழ்நாட்டில் சென்னை, மதுரைக்கு அடுத்ததாக கோவை பெருநகர மாநகராட்சியாக 1981ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், 5 மண்டலங்கள் உள்ளன. கோவை மாநகராட்சியின் அலுவலகம் டவுன்ஹால் பகுதியில் இயங்கிவருகிறது.
55. ஸ்மார்ட் சிட்டி
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட 20 நகரங்களில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு நகரங்களில் ஒன்று கோவை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மாதிரி சாலைகள் அமைப்பது, ஸ்மார்ட் டாய்லெட், வைஃபை மரம், சைக்கிள் ஷேரிங், குளங்களை மேம்படுத்துவது என்று தூய்மை மிகுந்த டிஜிட்டல் நகரமாக மாற்றப்படுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

56. தேசிய நெடுஞ்சாலைகள்
திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை உட்பட 6 பிரதான சாலைகளும், என்.ஹெச் 47 (சேலம் - கன்னியாகுமரி, கேரளா வழியாக) என்.ஹெச் 67 (குண்டுலு பேட்டை - நாகப்பட்டினம்), என்.ஹெச் 209 (பெங்களூரு-திண்டுக்கல்) என்று மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன.
57. பரபர பேருந்து நிலையங்கள்
காந்திபுரம் புறநகர் (திருப்பூர், ஈரோடு, சேலம், தாராபுரம், ஓசூர் மார்க்கம்) மற்றும் உள்ளூர்ப் பேருந்து நிலையங்கள், உக்கடம் (பொள்ளாச்சி, பழனி, கேரளா மார்க்கம்), சிங்காநல்லூர் (திருச்சி மற்றும் தென் மாவட்டங்கள் மார்க்கம்), சாய்பாபா கோயில் புதிய பேருந்து நிலையம் (மேட்டுப்பாளையம், நீலகிரி, கர்நாடகம் மார்க்கம்) என்று 5 பேருந்து நிலையங்கள் கோவையில் பரபரப்பாக இயங்கிவருகின்றன. இதைத்தவிர, காந்திபுரத்தில் ஆம்னி பேருந்து நிலையம் ஒன்றும் இயங்கி வருகிறது.

58. கோவை சந்திப்பு ரயில் நிலையம்
தெற்கு ரயில்வேயில் மிக முக்கியமான ரயில் நிலையமாகப் பரபரப்புடன் இயங்கி வருகிறது, கோவை ரயில் நிலையம். இது 1861ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. கோவையின் முதல் ரயில் நிலையமாக போத்தனூர் சந்திப்பே செயல்பட்டு வந்திருக்கிறது. 1956 ஆம் ஆண்டு, போத்தனூர் வழித்தடம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்துடன் இணைத்துள்ளனர். சென்னை, மும்பை, புது டெல்லி என மிக முக்கியமான நகரங்களுக்கு இங்கிருந்து அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
59. அதிக வருவாய் தரும் ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம், சேலம் கோட்டத்துக்குள் இயங்கிவருகிறது. சேலம் கோட்டத்தில் 45 சதவிகிதம் வருவாய், கோவை ரயில் நிலையத்தின் பங்களிப்பே. தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் அதிக வருமானத்தைத் தரும் ரயில் நிலையத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கோவை ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 75,000 பேர் பயணிக்கின்றனர்.
60. நகரங்களை இணைக்கும் பயணிகள் ரயில்
கோவை ரயில் நிலையத்திலிருந்து, நாகர்கோவில், மங்களூரு, ஈரோடு, கண்ணனூர், மேட்டுப்பாளையம், பாலக்காடு, சோரனூர், திருச்சூர் நகரங்களுக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை பிரதான ரயில் நிலையத்தைத் தவிர வடகோவை, போத்தனூர், பீளமேடு, சிங்காநல்லூர் ரயில் நிலையங்களும் இருக்கின்றன. இதில், போத்தனூர் ரயில் நிலையம், கேரள வழித்தடங்களில் செல்லும் ரயில்களுக்கு முக்கிய சந்திப்பாகத் திகழ்கிறது.
61. கோவை பன்னாட்டு விமான நிலையம்
1940ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது கோவை விமான நிலையம். ஆரம்பத்தில் இந்த விமான நிலையம் பீளமேடு விமானநிலையம் என்றும், கோயம்புத்தூர் சிவில் ஏரோட்ராம் என்றும் அழைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு கோவை பன்னாட்டு விமான நிலையமாக மாறியிருக்கிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோழிக்கோடு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என இந்திய நகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர், ஷார்ஜா என வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
62. சூலூர் விமானப்படைத் தளம்
சூலூரில் விமானப் படைத் தளத்தில் விமான ஒத்திகைப் பயிற்சி, விமானங்களைக் கையாளும் பயிற்சி மற்றும் விமானங்களைப் பழுது பார்த்தல், பராமரிப்பு போன்ற பணிகள் நடக்கின்றன.
63. வருகிறது மெட்ரோ
சென்னையை அடுத்து, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையைத் தமிழக அரசு தயாரித்துள்ளது.
தொழிற்சாலைகள்
சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களால் கோவை தனித்த அடையாளத்தைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் அசுர முன்னேற்றம் கண்டுள்ள மாவட்டமாக விளங்குகிறது கோவை.
64. கோயம்புத்தூரில் முதல் பஞ்சாலை
சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் 1888ஆம் ஆண்டு, கோவையில் ஸ்டேன்ஸ் பஞ்சாலையை நிறுவினார். இவர், தொழிலாளர் நலத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
65. லட்சுமி மில்ஸ்
ஜி.குப்புசாமி நாயுடு, 1905ஆம் ஆண்டு, கோவையில் முதன்முதலாகப் பருத்திக்கொட்டையிலிருந்து பருத்தியைத் தனியாகவும், அதன்பின் நூலாகவும் பிரித்தெடுக்கும் ஜின்னிங் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். துணி நெய்யத் தேவையான இயந்திரங்களைத் தயாரிக்கும் லட்சுமி இயந்திர வேலைகள் (LMV) உள்ளிட்ட நிறுவனங்களும் லட்சுமி மில்ஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது.

66. ஸ்ரீரங்க விலாஸ் மில்
1922 ஆம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி தொடங்கப்பட்ட ஸ்ரீரங்க விலாஸ் மில் தற்போதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகத்தை தனியாரும் அரசாங்கமும் நிர்வகிக்கின்றனர்.
67. கைத்தறி நெசவுத் தொழில்
சிறுமுகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில், கைத்தறி நெசவு புகழ்பெற்றது. காஞ்சிபுரம் பட்டுக்கு இணையாக, சிறுமுகை கோரா பட்டு பிரபலம். விசைத்தறிப் பரவலுக்கு மத்தியில் இதற்குத் தனி மவுசு உள்ளது. கருமத்தம்பட்டி ஒட்டியுள்ள பகுதிகளில், பவர் லூம்கள் அதிகம். இங்கே நெய்யப்படும் துணி ரகங்கள், அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
68. கனரக தயாரிப்பு
பூ.சா.கோ தொழிலகங்கள், சக்தி குழுமம், லட்சுமி மெஷின் வொர்க், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், எல்.ஜி. எக்யூப்மென்ட்ஸ், ரூட்ஸ் போன்ற நிறுவனங்கள் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி வருகின்றன. இவை, ஆண்டுதோறும் அதிக வருமானத்தை ஈட்டுவனவாகவும், இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களாகவும் திகழ்கின்றன.
69. டெக்ஸ்டூல்
1939ல் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் இயந்திரத்தை உருவாக்கினார்கள். இதன் பிறகுதான் பலவிதமான மோட்டர்கள் தயாரிக்கப்பட்டன. 1944ஆம் ஆண்டு, டெக்ஸ்டைல் மில்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைத் தயார் செய்யும் `கோயம்புத்தூர் இன்ஜினீயரிங் அண்டு டிரேடிங் கம்பெனி' தொடங்கப்பட்டது. 1955ல் விவசாயத்துக்கான பம்பு செட்டுகளையும், டீசல் மூலம் இயங்கும் மோட்டார்களையும் தயாரித்து வருகிறது.
70. நீரேற்றிகள் தயாரிப்பு
இந்தியாவில் இயங்கும் 60 சதவிகித நீரேற்றி மோட்டார்கள் கோவையில் தயாரிக்கப்படுபவை. இங்கு தயாரிக்கப்படும் மோட்டார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்களாக ஷார்ப் தொழிலகம், சி.ஆர்.ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ, டெக்கான் பம்ப்ஸ் நிறுவனங்கள் உள்ளன.
71. ஃபவுண்டரிகள்
ஜவுளித் தொழிலுக்கு அடுத்தபடியாக இருப்பது, ஃபவுண்டரிகள். இவை இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தொழில் நேரடியாக 2 லட்சம் பேர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கின்றன. ஃபவுண்டரிகளின் வருட வருமானம் மட்டுமே 1600 கோடி ரூபாய்.
72. காற்றாலைத் தொழிற்சாலை
தேசிய அளவில் காற்றாலை உற்பத்தியில் கோவையும் கொங்கு மண்டலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி சார்ந்த இடங்களில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, தமிழக மின்பகிர்வுக் கழகத்துக்கு வழங்கிவருகிறார்கள்.
73. வெட்கிரைண்டர் உற்பத்தி
இந்தியாவில் வெட்கிரைண்டர் உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில், கோவை நகரம் முன்னணி இடத்தில் உள்ளது. வெட்கிரைண்டர் தயாரிப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. கோவை வெட்கிரைண்டருக்கு புவிசார்புக் குறியீடு கிடைத்துள்ளது.
74. தகவல் தொழில்நுட்பம்
சென்னைக்கு அடுத்தபடி, ஐ.டி துறையில் அதிகம் முன்னேற்றம் கண்டிருப்பது கோவையே. இந்திய மென்பொருள் திட்டத்தின் கீழ், உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பப் பூங்காவை இங்கு அமைத்துள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ஏற்றுமதி 300 கோடி ரூபாயாக உள்ளது. கீரநத்தம் பகுதியிலும், அவிநாசி சாலையில் உள்ள டைட்டில் பார்க்கில், அதிகமான ஐ.டி., கம்பெனிகள் அமைந்துள்ளன.
75.செங்கல் உற்பத்தி
கோவைப் புறநகர்ப் பகுதியான கணுவாய், தடாகம், சின்னத்தடாகம், பெரிய தடாகம், சோமையம் பாளையம், கரடிமடை, ஆனைகட்டி, மாங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன.
76. சிறுதானிய உற்பத்தி
கரும்பு அதிகம் பயிரிடப்படும் ஊர் இது. அதனால், கரும்பு ஆராய்ச்சி நிலையமும் இங்குள்ளது. பணப்பயிர்கள் மட்டுமன்றி, சிறுதானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, தினை, சோளம் போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றன. தென்னைமரம் அதிகம் காணப்படுவதால், அதிலிருந்து கிடைக்கும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
77. தங்க நகரம்
சுதந்திரத்துக்கு முன்பு மைசூரு, கேரளா, மதுரை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் வசித்துவந்த கொல்லர்கள், கோவைக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது கோவையில் 20,000 நகைப் பட்டறைகளில் பல்லாயிரம் பேர் வேலை செய்கின்றனர்.

78. கொடிசியா
கொடிசியா என்பது கோவை மாவட்ட சிறுதொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (Coimbatore District Small Scale Industry Association) என்பதன் ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்தான் CODISSIA. 1969ஆம் ஆண்டு 40 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 5200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். புதுடெல்லியின் பிரகதி மைதானத்துக்கு அடுத்து, தென்னிந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை வணிகக் காட்சிக் கூடமாகவும் விளங்குகிறது கொடிசியா.
79. லேத் பட்டறைகள்
கோவையின் முக்கியப் பகுதிகளாக கணபதி, சங்கனூர், பீளமேடு, ஹோப் காலேஜ், நீலம்பூர், அரசூர் போன்ற இடங்களில் லேத் பட்டறைகள் அதிகம் உள்ளன. இவை கோவைப் பகுதியில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைத் தயாரித்து உதவுகின்றன.
80. சிட்கோ
தமிழக அரசின் சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டை குறிச்சிப் பகுதியில் அமைந்துள்ளது.
81. ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள்
ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிப்புக்குச் சிறந்த இடமாக உள்ளது கோவை. இங்கு கியர் பாகங்கள், மோட்டார் பாகங்கள், கிளட்ச்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இவை, அந்நிய முதலீட்டில் அதிக பொருளாதாரத்தை ஈட்டுகின்றன.
82. ராணுவத் தளவாட மையம்
கோவை கொடிசியாவில், ராணுவத்துக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிப்பதற்கான ராணுவத் தளவாட உற்பத்திப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
83. மரத்தொழில் செய்பவர்கள்
கோவை மாவட்டத்தில், மரக்கடை, அன்னூர், புளியம்பட்டி, கோவில்பாளையம் போன்ற இடங்களில் மரத்தொழில் செய்பவர்கள் அதிகம். இங்கு, வீடுகளுக்குத் தேவையான கதவு, ஜன்னல், அலமாரி, கைவினைப் பொருள்களைத் தயாரிக்கின்றனர்.
கல்வி நிலையங்கள்
கோவை மாவட்டத்துக்குத் தொழில்நிறுவனங்கள் சிறப்பு சேர்ப்பதுபோல், இங்குள்ள கல்வி நிலையங்களும் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.
84. அரசு கலைக் கல்லூரி
1852ஆம் ஆண்டு, ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட பள்ளி, 1861ஆம் ஆண்டு, இடைநிலைப் பள்ளியாகவும், 1867ஆம் ஆண்டு, உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்திருக்கிறது. அதன்பின்பு 1868ஆம் ஆண்டு, கல்லூரியாக மாறி இளங்கலைப் படிப்பும், 1964ஆம் ஆண்டு முதல் முதுகலைப் படிப்பும் வழங்கி வருகிறது கோவை நகரின் மத்தியில் 13.6 ஏக்கரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி. இங்கே படித்த மாணவர்களில் பலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
85. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
1971ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். ஆரம்பத்தில் ஜி.டி நாயுடு பெயரால் அழைக்கப்பட்ட நிறுவனம் 1990ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. இந்திய அளவில் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி விரிவாக்கச் சேவைகள் என்று தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

86. அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி
`ஆர்தர் ஹோம் நுட்பவியல் கல்லூரி'தான் பிற்காலத்தில், அரசு தொழில் நுட்பக் கல்லூரி (GCT) என்று அழைக்கப்பட்டது. தடாகம் சாலையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில் படித்த அனைவரும், உலக அரங்கில் சாதனை படைத்துவருகிறார்கள். இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், சந்திராயன்-1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இங்கு படித்து உயர்ந்தவர்களில் முதன்மையானவர். அவிநாசி சாலையில் உள்ளது அரசினர் பாலிடெக்னிக், காந்திபுரம் பகுதியில் உள்ளது மகளிர் பாலிடெக்னிக் காந்திபுரம் பகுதியில் உள்ளது
87. அரசு சட்டக் கல்லூரி
கோவை, மருதமலைப் பகுதியில் அமைந்துள்ள சட்டக்கல்லூரி, 1970-80 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஏழு சட்டக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
88. பாரதியார் பல்கலைக்கழகம்
1982 ஆம் ஆண்டு, கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 112 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன.
89. அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம்
2007 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டபோது உருவானதுதான், கோவை அண்ணா பல்கலைக்கழகம். தற்போது அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இது மருதமலை சாலை, ஜோதிபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதன்கட்டுப்பாட்டில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று அரசினர் பொறியியல்/தொழில்நுட்பக் கல்லூரிகள், இரண்டு அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகள், 98 சுயநிதிக் கல்லூரிகளும் செயல்படுகின்றன.
90. கோவை மருத்துவக் கல்லூரி
அவினாசி சாலையில் அமைந்துள்ளது கோவை மருத்துவக் கல்லூரி. 1966 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த காமராஜரின் முயற்சியால், கோவையில் உள்ள தொழிலதிபர்கள் கொடையாக அளித்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளுள் இதுவும் ஒன்று.

91. தனியார் கல்வி நிறுவனங்கள்
பி.எஸ்.ஜி., ஹிந்துஸ்தான், குமரகுரு மற்றும் கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா கல்வி நிலையம், அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம், என ஏராளமான தனியார் கல்லூரிகள் கோவை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கின்றன.
92. சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்
`பறவை மனிதர்' சலீம் அலி புகழைப் போற்றும் வகையில், கோவை மாவட்டம் ஆனைகட்டிப் பகுதியில், `சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்' 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பறவையியல் ஆராய்ச்சி மையமானது, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. பறவைகள், அவற்றின் தகவமைப்பு, உடற்கூறு ஆகியவற்றைப் பற்றி இங்கு ஆய்வு செய்துவருகிறார்கள்.
93. விமானப் படை நிர்வாகக் கல்லூரி
கோவையின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ளது, விமானப்படைக் கல்லூரி. 1949 ஆம் ஆண்டு முதல், மேம்படுத்தப்பட்ட கல்லூரியாக விளங்குகிறது. இந்தக் கல்லூரியில், விமானத்தில் பணி மற்றும் விமானப் படையில் சேர்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது, மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்குகிறது.
94. வனக் கல்லூரி
மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது,வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம். காடுகள், மலைகள், விலங்கினங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் திறமையான ஆராய்ச்சியாளர்கள் இங்குள்ளனர். இது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது.
95. சுதந்திரத்துக்கு முன்பே தேசிய கீதம்
1926 ஆம் ஆண்டு பி.எஸ்.ஜி கல்வி குழுமத்தால் நிறுவப்பட்டது சர்வஜனா பள்ளி. 1926 ஆம் ஆண்டில் இங்கு வருகை புரிந்த இரவிந்திரநாத் தாகூர், `ஜன கன மன' பாடலை மாணவர்களுக்கு பிரார்த்தனைப் பாடலாகக் கற்றுக்கொடுத்தார். பின்னாளில் அந்தப் பாடலே நமது தேசிய கீதமாக மாறியது.
96. சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
லண்டன் மிஷன் உயர்நிலை மற்றும் ஒன்றிய உயர்நிலைப் பள்ளி என்ற பெயர்கள்கொண்ட தென்னிந்திய திருச்சபை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 1831-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோவை மாவட்டத்திலே தொடங்கப்பட்ட முதல் முதலாவது பள்ளி என்ற பெருமைக்குரியது. ஆண்டுதோறும் 2000 த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள்.
97. மருத்துவ நகரம்
சென்னைக்கு அடுத்து மருத்துவ நகரம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது கோவை. கே.எம்.சி.ஹெச், பி.எஸ்.ஜி, குப்புசாமி நாயுடு, ஜெம் என்று பல தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கோவையில் உள்ளன. இங்கு அதிகளவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
98. கோவை அரசு மருத்துவமனை
ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும் முக்கிய மருத்துவமனையாக இருப்பது, கோவை அரசு மருத்துவமனை. நாள்தோறும் சுமார் 8,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 20 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் இந்த மருத்துவமனை, நூற்றாண்டைக் கடந்துள்ளது.
99. இ.எஸ்.ஐ மருத்துவமனை
520 கோடி ரூபாய் மதிப்பில், சிங்காநல்லூர்ப் பகுதியில் இயங்கிவருகிறது, இ.எஸ்.ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. மருத்துவக் கல்லூரியுடன் இணைந்திருக்கும் இந்த மருத்துவமனை 24 மணிநேரமும் இயங்கிவருகிறது.
100. ஆயுர்வேத மருத்துவமனை
கணபதிப் பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தியன் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து வகையான நோய்களுக்கும் பாரம்பர்ய ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
101. மலிவு விலை மருத்துவமனை
நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின், ஜன் அவ்ஷாதி கேந்திரா திட்டத்தின் கீழ், மலிவுக் கட்டண மருத்துவமனை இயங்கி வருகிறது. சித்தாப்புதூர், சரோஜினி சாலையில் உள்ள இந்த மருத்துவமனையில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 4.30-9.30 மணிவரையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் முதல் மலிவுக் கட்டணமாக ரூ.50 பெறப்படுகிறது.
102. காவல்துறை அருங்காட்சியகம்
கோவை ரயில் நிலையம் எதிரே, 1918-ஆம் ஆண்டு ஹாமில்டன் என்ற போலீஸ் அதிகாரியால், போலீஸ் கிளப் தொடங்கப்பட்டது. தற்போது, அது காவல்துறை அருங்காட்சியமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறையால் பயன்படுத்தப்பட்ட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
103. காஸ் அருங்காட்சியகம்
கௌலி பிரெளன் சாலையில் வனத்துறை அலுவலக வளாகத்தில் காஸ் அருங்காட்சியகம் உள்ளது. இது, இந்திய வன அருங்காட்சியகங்களில் மிகவும் பழைமையானது. 'காஸ்' என்ற தனி நபரின் முயற்சியில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒரு வரலாற்றைச் சுமந்து நிற்கிறது..
104. பூச்சிகள் அருங்காட்சியகம்
இந்தியாவிலேயே முதன்முறையாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சிகள் அருங்காட்சியகம் இயங்கிவருகிறது. 6,691 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டுள்ளது.
105. மைய நூலகம்
கோவையின் மைய நூலகம் கௌலி பிரெளன் சாலையில் இயங்கிவருகிறது. இங்கு 2.5 லட்சத்துக்கும் கூடுதலான புத்தகங்களும், 60,000-க்கும் அதிகமான உறுப்பினர்களும் உள்ளனர். இங்கே மாற்றுத்திறனாளிகளுக்காக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
106. மத்திய சிறையும் நீதிமன்றமும்
காந்திபுரம் பகுதியில் கோவை சார்நிலை நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்திருக்கிறது `கோவை மத்திய சிறை'. 1872-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தச் சிறை, 167.76 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தொழிலாளர் நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் எனப் பல நீதிமன்றங்கள் இந்த வளாகத்தில் இயங்கிவருகின்றன.
107. கோவை போலீஸ்
கோவையில் மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாநகரப் பகுதி, மாநகர கமிஷினரின் தலைமையிலும், புறநகர்ப் பகுதி, எஸ்.பி தலைமையிலும் இயங்கிவருகிறது. நாட்டின் சிறந்த காவல் நிலையம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது, கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம்.
108. அறிவியல் மையம்
பள்ளி மாணவர்களுக்கு அறிவூட்டும் வகையில், அவினாசி சாலையில், அறிவியல் மையம் இயங்கிவருகிறது. அறிவியலை எளிதில் புரிந்துகொள்வதற்காக இங்கே காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
109. அரசு அச்சகம்
மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ், 1964-ம் ஆண்டு கோவை மத்திய அரசு அச்சகம் திறக்கப்பட்டது. 133.7 ஏக்கரில் இயங்கி வரும் இந்த அச்சகத்தில், பணியாளர்கள் வெகுவாக குறைந்துவிட்ட போதும், ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபம் ஈட்டி வருகிறது.
110. கரும்பு இனப்பெருக்க நிறுவனம்
வீரகேரளம் பகுதியில் கரும்பு இனப்பெருக்க நிறுவம் இயங்கி வருகிறது. 1912-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உலகப் புகழ்பெற்ற கரும்பு வகைகள் உள்பட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு வகைகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
111. மத்திய பாதுகாப்புப் படைப் பயிற்சி
துடியலூர் அருகே, கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய பாதுகாப்புப் படை பயிற்சிக் கல்லூரி உள்ளது. தொடக்கத்தில் ஆவடியில் இருந்த இந்தக் கல்லூரி, 1997-ம் ஆண்டு கோவைக்கு மாற்றப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையில் சேரும் வீரர்களுக்கு இங்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.
112. தமிழ் கல்லூரி
தமிழகத்தில் மூன்று சைவ தமிழ்க் கல்லூரிகளில், கோவைத் தமிழ் கல்லூரியும் ஒன்று. தவத்திரு சாந்தலிங்க அடிகளார்களால் 1953-ம் ஆண்டு, பேரூரில் தொடங்கப்பட்டது. கவிஞர் புவியரசு மற்றும் கோவை வரலாற்றை எழுதிய கோவைக்கிழாரும் உள்பட பல தமிழ் அறிஞர்களை உருவாக்கியுள்ளது, இந்தத் தமிழ்க் கல்லூரி.
கோவையில் உள்ள முக்கியமான பகுதிகள்
113. ஒப்பணக்கார வீதி
விஜய நகரப் பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர், பணம் கொடுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால், ஒப்பணக்கார வீதி எனப் பெயர் பெற்றது. இங்கு வணிக வளாகம், அங்காடிகள், துணிக் கடைகள் அதிகமாக உள்ளன.

114. டவுன்ஹால்
விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகளானதை நினைவூட்டும் வகையில், 1887-ஆம் ஆண்டில் மாநகராட்சியின் மையப் பகுதியில் நகர மண்டபம் கட்டப்பட்டது. 1892-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான், டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது. துணிக் கடை முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் வரை மக்களின் ஷாப்பிங் பாய்ன்ட் இதுதான்.
115. சாந்தி கியர்ஸின் சமூகச் சேவை
சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் சாந்தி கியர்ஸ், சமூகச் சேவைக்கு பெயர் பெற்றது. ஜி.எஸ்.டி வரியால் மக்களைப் பயமுறுத்தும் ஹோட்டல்களுக்கு மத்தியில், உயர்தர சைவ உணவகங்கள் வழங்கும் தரத்தில் 25 ரூபாய்க்கு புல் மீல்ஸ் (ஜி.எஸ்.டி இல்லை) கொடுக்கிறது சாந்தி கியர்ஸ். பெட்ரோல், மருத்துவம் என மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகமிகக் குறைந்த விலையில் சேவை செய்கின்றனர், சாந்தி கியர்ஸ்.
116. ராஜா வீதி
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டம்தான் அன்றைய 'மதோராஜா மஹால்'. மைசூர் அரசின் அதிகாரியான மதோராஜா, அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் 'ராஜா வீதி' என்று பெயர் பெற்றது.
117. டூ இன் ஒன் பூங்கா
நகரத்தின் மத்திய இடமான காந்திபுரத்தில், பசுமை எழில் பொங்கும் பூங்காவும், மிருகக்காட்சி சாலையும் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வ.உ.சி. பூங்கா.
118. ரேஸ்கோர்ஸ்
கோவை நகர மக்களின் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றாக உள்ளது ரேஸ்கோர்ஸ். இங்கு, இரண்டு கி.மீ தூரத்துக்கு மரத்தடி நிழலில் இருக்கைகள் அமைந்திருப்பதால், கோவை நகர மக்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக உள்ளது ரேஸ்கோர்ஸ்.
119. ஸ்டார் ஹோட்டல்கள்
லீ மெரிடியன், விவண்டா தாஜ், தி ரெசிடென்ஸி, ஜென்னி கிளப் என மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கோவை நகரத்தை அலங்கரிக்கின்றன.
120. ஷாப்பிங் மால்கள்
கோவையில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள `ப்ரூக் ஃபீல்ட்ஸ்' ஷாப்பிங் மால். தற்போது அவிநாசி சாலையில் ஃபன் மால், சரவணம்பட்டியில் ப்ரோசோன் மால் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறைநாட்களில் அதிக மக்கள் குவியும் இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
121. தியேட்டர்கள்
கோவையில் சத்யம் (ப்ரூக் ஃபீல்ட்ஸ்), ஐநாக்ஸ் (ப்ரோசோன்) கே.ஜி பிக் சினிமாஸ், சென்ட்ரல், செந்தில், அர்ச்சனா, நீலம்பூர் மல்டிபிளக்ஸ், கங்கா என்று டிஜிட்டல் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

122. டிலைட் தியேட்டர்
'தென்னிந்தியத் திரையரங்குகளின் தந்தை' என்றழைக்கப்படும் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால், தொடங்கப்பட்ட தியேட்டர் `டிலைட்'. நூற்றாண்டைக் கடந்தும், வெரைட்டி ஹால் சாலையில் தற்போதும் இயங்கிவருகிறது.
123. கோவை பூ மார்க்கெட்
ஆர்.எஸ்.புரம் அருகில் உள்ள கோவை பூ மார்க்கெட் மிகவும் பிரபலம். இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் பூக்கள் வாங்கலாம். காரமடை, மேட்டுப்பாளையம், துடியலூர்ப் பகுதியிலிருந்து மல்லி, முல்லை, ரோஜாப் பூக்களும், வெளி மாவட்டங்களிலிருந்து சம்பங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, அரளி மற்றும் துளசி போன்றவை இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது.
124. காய்கறிக்கு எம்.ஜி.ஆர் மார்க்கெட்
கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறி மொத்தமாக மற்றும் சில்லறையாகவும் வாங்கலாம்.வடவள்ளி, சிங்காநல்லூர், லாலிரோடு போன்ற பகுதிகளில் உழவர் சந்தைகள் அமைந்துள்ளன.
125. சைனா பஜார்
கோவை டவுன்ஹால் பகுதியில், சைனா பஜார் உள்ளது. குறைந்த விலையில் மொபைல், லேப்டாப் உதிரிப்பாகங்கள் குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால், இங்கு வாங்கும் பொருள்களுக்கு கேரன்டி, வாரன்டி கிடையாது.
126. லாரிபேட்டை மீன் மார்க்கெட்
கோவை நகர மக்கள் மீன் வாங்க, உக்கடம் லாரிபேட்டைக்கு அதிகளவில் வருகிறார்கள்.
127. பொள்ளாச்சி சந்தை
ஆசியாவிலேயே மிகப்பெரிய வெல்லச் சந்தை பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை. பொள்ளாச்சி காய்கறிச் சந்தை, கேரளாவுக்கு காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்று. தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகளும் பொள்ளாச்சியில் அமைந்துள்ளன.
128. கிராமமாக மாறும் சிட்டி
மாட்டுப் பொங்கல் தினத்தன்று, கோவை நகரம் கிராமமாக மாறிவிடும். அன்றைய தினம், தங்களது வீட்டில் வளர்க்கும் மாடுகளை, குளிப்பாட்டி வர்ணம் பூசி, கோவை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு அழைத்து வருகின்றனர்.இது, கிராமத்தில் நடக்கும் திருவிழா போன்று காட்சி அளிக்கும்.
129. பட்டாசுக்கு நோ சொல்லும் கிராமம்
சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிட்டாம்பாளையம் பசுமை நிறைந்த பகுதி. இங்கு பறவைகள் வருகை அதிகம் என்பதால், 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பட்டாசு வெடியில்லாமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர் கிட்டாம்பாளையம் மக்கள்.
130. வட இந்தியர்களுக்கு சுக்ரவார்பேட்டை
சென்னையில் வட இந்தியர்களுக்கு சவுக்கார்பேட்டை போன்று, கோவையில் சுக்ரவார்பேட்டை உள்ளது. இங்கு ஜெயின் கோயில், ஸ்வீட் கடைகள் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் வட இந்தியர்களைப் பார்க்க முடியும்.
131. ஏரியாவுக்கு ஊரு பேர்
ராமநாதபுரம், வடமதுரை, வீரகேரளம் இவையெல்லாம் கோவையில் இருக்கும் பகுதிகளில் சிலவற்றின் பெயர். இப்படி, மாநிலம் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை சில ஏரியாக்கள் கொண்டுள்ளன.
132. பாளையங்கள்
பாப்பாநாயக்கன் பாளையம், குரும்பபாளையம், சுண்டபாளையம், சீரநாய்க்கன்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், காளம்பாளையம், ஓணப்பாளையம் என்று பல பகுதிகள் பாளையம் என்றுதான் முடியும். அதேபோல, புரம், புதூர் போன்ற பெயர்களில் அதிக பகுதிகள் உள்ளன.
133. முதல் நீளமான கான்கிரீட் சாலை
கோவை - பொள்ளாச்சி இடையே 27 கி.மீ தொலைவுக்குத் தேசிய நெடுஞ்சாலையில் கான்கிரீட் சாலை போடப்பட்டு வருகிறது. தமிழத்தில், இவ்வளவு தொலைவுக்கு கான்கிரீட் சாலைப் போடப்படுவது இதுவே முதல் முறை. ரூ.412 கோடி செலவில் இந்தச் சாலை போடப்பட்டு வருகிறது.
134. களைகட்டும் மாநகராட்சி கலையரங்கம்
ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி கலையரங்கம் உள்ளது. பட்டிமன்றங்கள், நாடகங்கள் என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இந்தக் கலையரங்கத்தில் நடக்கும். மேலும், மாநகராட்சி சார்ந்த மற்றும் அரசு நிகழ்ச்சிகளும் இந்த அரங்கத்தில் நடைபெறும்.
135. கடும் சரிவில் திராட்சை விவசாயம்
கோவையில் தொண்டாமுத்தூர், நரசிபுரம் திராட்சை சாகுபடிக்குப் பெயர் பெற்ற பகுதிகள். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் திராட்சை விவசாயம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மூன்றாயிரம் ஏக்கரில் இருந்த திராட்சை விவசாயம், தற்போது 500 ஏக்கராக குறைந்துவிட்டது.
136. 24 மணி நேர கால்நடை மருத்துவமனை
டவுன்ஹால் பகுதியில், கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு, ஆடு், மாடு், நாய் உள்ளிட்டவற்றுக்கு தடுப்பு ஊசி போடப்படுவதுடன் 24 மணிநேரம் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.

137.கால்நடைத் திருவிழா
வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்த 2015-ம் ஆண்டு முதல் பொள்ளாச்சியில் கொங்கு நாட்டு வேளாண் மற்றும் கால்நடைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
138. பலூன் திருவிழா
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, அரசு மற்றும் தனியார் இணைந்து, பொள்ளாச்சியில் கடந்த 4 ஆண்டுகளாக பொங்கல் விடுமுறை தினங்களில் சர்வதேச பலூன் திருவிழாவை நடத்தப்படுகிறது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
139. புத்தக பிரியர்களுக்கு
கோவையில் புத்தக பிரியர்களுக்கு உதவும்வகையில் ஒவ்வொரு ஆண்டும், கொடிசியா அரங்கத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
140. சிட்டுக்குருவிகளுக்குப் பாதுகாப்பு
சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க, கோவையில், சிட்டுக்குருவிகள் காப்பு இயக்கம் இயங்கி வருகிறது. இந்த இயக்கம், கோவை நகரத்தின் பல்வேறு இடங்களில், சிட்டுக்குருவிகளுக்குப் பெட்டி அமைத்து, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
141. யானைகள் முகாம்
மேட்டுப்பாளையம் தேக்கடியில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் யானைகள் முகாம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோயில்களிலும் மடங்களிலும் உள்ள யானைகள் இந்த புத்துணர்வு முகாமுக்கு அழைத்து வரப்படுகின்றன. இந்த முகாம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. யானைகளை மொத்தமாகப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள்.
142. முன்மாதிரி கிராமங்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி ஸ்மார்ட் கிராமங்களாக கோவையில் ஓடந்துறை மற்றும் குருடம்பாளையம் கிராமங்கள் உள்ளன. இங்கு அனைவருக்கும் வீடு, தட்டுப்பாடில்லாத குடிநீர், மின்சாரம், டிஜிட்டல் வசதி என ஸ்மார்ட் சிட்டிகளுக்கு முன்மாதிரியாக உள்ளன.
143. ராமாயணப் பூங்கா
பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ணா வித்யாலயா வளாகத்தில், ராமாயணப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில், ராமாயண கதாபாத்திரங்கள் வடிவில் விளையாட்டு பொருட்கள் உள்ளன. இது சுட்டீஸ்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக இருக்கிறது.
144. யுனெஸ்கோவில் ஆனைமலை
ஆண்டுக்கு 2000 மி.மீ முதல் 5000 மி.மீட்டர் வரை மழைப்பொழிவு, அருவிகள், நீர்த்தேக்கங்கள், காடுகள், புல்வெளிகள், மலைச்சிகரங்கள், இதமான சூழ்நிலையுடன் இயற்கை போர்த்திய ஆனைமலைப் பகுதியானது, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
145. சாடிவயல் யானை முகாம்
ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், உடல்நிலை சரியில்லாத யானைகளைக் காப்பாற்றவும், கோவையில் கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சாடிவயல் முகாமில் இந்த கும்கிகள் பராமரிக்கப்படுகின்றன.
146. நேரு ஸ்டேடியம்
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான தடகளம் மற்றும் கால்பந்துப் போட்டிகளால் எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கும் கோவை நேரு ஸ்டேடியம். இங்கு ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமும் அவ்வவ்போது நடைபெற்றுவருகிறது. நேரு ஸ்டேடியத்தில் 30,000 பேர் அமர்ந்து விளையாட்டு போட்டிகளைக் காணலாம்.
147. கோவையின் ரேஸ் ட்ராக்
கரி மோட்டர் ஸ்பீடு வே ட்ராக், 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2.1 கி.மீ தொலைவுள்ள இந்த ட்ராக்கில், தேசிய அளவிலான ரேஸ்கள், ஃபார்முலா 3 போட்டிகள் நடைபெறுகின்றன.
148. சினிமா ஹப்
தமிழ் சினிமாவுக்குச் சென்னை கோடம்பாக்கம் மையமாக இருந்தாலும், ஒருகாலத்தில் சேலமும் கோவையும்தான் பல தமிழ் சினிமாக்களை உருவாக்கின. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலில் வசனம் எழுதிய 'ராஜகுமாரி' படம் சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோவில்தான் உருவானது.
149. பெண்களுக்குப் பாதுகாப்பு
தேசியக் குற்றவியல் கழகத்தின் அறிவிப்பின்படி, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் கோவை நகரம் முதலிடத்தில் உள்ளது.
150. செம்மொழி மாநாடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்தது. அன்றைய முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், உலகம் முழுவதுமான தமிழ் அறிஞர்கள் கோவையில் குழுமினர்.
151. தாவரவியல் பூங்கா
கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில், பொட்டனிகல் கார்டன் எனப்படும் தாவரவியல் பூங்கா இயங்கிவருகிறது. இந்தப் பூங்காவில் மருத்துவ குணம் வாய்ந்த செடிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு தமிழக அரசின் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
152. யானை உலா வரும் பகுதிகள்
கோவை புறநகரில் வனத்தை ஒட்டிய தடாகம், சின்னத்தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி பகுதி பகுதிகளில், அவ்வபோது காட்டு யானைகள் உலா வருகின்றன.
153. கோவையின் கலை மையம்
அவிநாசி சாலை அரவிந்த் மருத்துவமனை அருகே அமைந்துள்ள கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் கலை மையம், மொகஞ்சதாரோ காலத்திலிருந்து, 19-ம் நூற்றாண்டு வரை ஆடை, அணிகலன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய ஓவியங்கள் தனி அறைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் காணக்கிடைக்காத பல்வேறு படைப்புகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. தினமும் காலை 9 மணி முதல் 5 மணி வரை இந்த மையத்தைக் காணலாம். ஞாயிறு மற்றும் முக்கிய அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை.
154. ஆர்ஷ வித்யா குருகுலம்
ஆனைகட்டியில், மறைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஆர்ஷ வித்யா குருகுலம் தொடங்கப்பட்டது. இங்கு, வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் குறித்து, குருகுல பயிற்சி வழங்கப்படுகிறது.
155. பதிமலை
கோவையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குமிட்டிபதி கிராமம். இங்கு, பதிமலை என்று ஒரு மலைக்குன்று உள்ளது. குன்றின் மேல் முருகன் கோயிலும், கீழே பண்டைய தமிழர்களின் குகை ஓவியங்களும் உள்ளன. வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள அந்த ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை. இந்த ஓவியங்கள் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழைமையானவை என்று கூறப்படுகிறது.
156. அறிவுக் கோயில்
ஆழியாற்றில், `அறிவுத் திருக்கோயில்' என்றழைக்கப்படும் குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை, வேதாத்ரி மகரிஷி 1984-ம் ஆண்டு நிறுவினார். இந்த அறிவுத் திருக்கோயிலானது ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள்
கோவை மாவட்டத்தில் பல இடங்கள் சுற்றுலாத் தலங்களாகவும், சுற்றுலாவாசிகளைப் பரவசப்படுத்தும் இடங்களாகவும் உள்ளன.

157. வார இறுதியில் ஊட்டி
கோவையில் இருந்து ஊட்டிக்கு 85.7 கி.மீ. தொலைவுதான். கோவை கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் தங்களது வார இறுதியைக் கொண்டாடும்வகையில் ஊட்டிக்கு கிளம்பி விடுகின்றனர்.
158. மலை ரயில்
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலுக்கு வயது 110. தொடக்கத்தில், மேட்டுப்பாளையம் டூ குன்னூர் வரை இயக்கப்பட்ட இந்த ரயில், ஊட்டிக்கு நீட்டிக்கப்பட்டது. நீராவி இன்ஜினால் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணம் செய்ய, சுற்றுலாப் பயணிகளிடம் ஆர்வம் அதிகம்.

159. குளுகுளு கோவைக் குற்றாலம்
சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ள கோவை குற்றாலம், பறவைகளும் விலங்குகளும் நிறைந்த கானகச் சுற்றுலாத் தலம். இது, வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திராகாந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசிய பூங்காவின் கிழக்கு மூலையில், 110 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், சோலா மற்றும் மான்ட்டேன் வகை மரங்கள் அடர்ந்த உயிரியல் பல்வகை அமைந்த மலைக்காட்டுப் பகுதியாக உள்ளது.

160. உலகப் பாரம்பர்ய களமாகும் டாப் ஸ்லிப்!
'இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம்' மற்றும் தேசியப் பூங்காவின் ஒரு பகுதியான டாப் ஸ்லிப்பில், இயற்கை எழிலுடன் ட்ரெக்கிங், யானை சவாரி, ஜீப் சவாரி பிரசித்தம். பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை வட்டங்களில் அமைந்துள்ள டாப் ஸ்லிப் வனவிலங்கு உய்வகம், உலகப் பாரம்பர்ய களமாக அறிவிக்கப்படவுள்ளது.
161. வைதேகி நீர்வீழ்ச்சி
யானைகளின் நடமாட்டமுடைய நரசிபுரத்தில், வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது, இந்த வைதேகி நீர்வீழ்ச்சிக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
162. பொள்ளாச்சி ஆழியாறு
1962-ம் ஆண்டு, காமராஜரால் கட்டப்பட்ட அணைகளில் ஒன்றான பொள்ளாச்சி ஆழியாற்று அணையில் மனமகிழ் பூங்காவும், மீன் காட்சியகமும் செயல்பட்டுவருகிறது. விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும்.
163. ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முதன்மை நீர்த்தேக்கமான 160 அடி கொள்ளளவு சோலையாறு அணை, ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை ஆகும். இந்த அணை வால்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
164. தென்னிந்தியாவின் சிரபுஞ்சி
கோவை மாவட்டத்தின் வால்பாறைப் பகுதியில் உள்ள 'சின்னகல்லாறு' என்னும் சிற்றூர், மழைப் பொழிவின் காரணத்தால் `தென்னிந்தியாவின் சிரபுஞ்சி' என்றழைக்கப்படுகிறது.
165. குரங்கு நீர்வீழ்ச்சி
பொள்ளாச்சி டு வால்பாறை சாலையில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. குரங்குகள் அதிகமாக இருப்பதால், Monkey Falls என்றழைக்கப்படுகிறது.
166. பொள்ளாச்சியும் படப்பிடிப்பும்
பொள்ளாச்சி என்றால் தென்னை மரங்கள் மட்டுமல்ல, சினிமாப் படப்பிடிப்புகளும். இதுவரை 1,500 தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் நடந்துள்ளன. கோலிவுட்காரர்களுக்கு பொள்ளாச்சி பேவரைட் ஸ்பாட்டாக இருக்கிறது.
167. ஏழைகளின் சுவிட்சர்லாந்து
கோவை மாவட்டத்தில் இருக்கும் வால்பாறை, `ஏழைகளின் சுவிட்சர்லாந்து' என்றழைக்கப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள், சுற்றுலாத்தலங்கள் நிறைந்த வால்பாறை, கோவைச் சுற்றுலாத்தலங்களில் மோஸ்ட் வான்டட் ஏரியா.
168. பொன்னூத்து மலை
கோவை மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பொன்னூத்து மலையும் ஒன்று. காட்டு யானைகள் அதிகமாக நடமாடும் இந்தப் பகுதி, தற்போது இளம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதியாக மாறியுள்ளது.
169. மினி ஊட்டி
கோவை ஆனைகட்டிப் பகுதி, 'மினி ஊட்டி' என்றழைக்கப்படுகிறது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஆனைகட்டி பகுதியும் ஒன்று. இதமான தட்வெப்பம், சற்றுத் தொலைவில் கேரளா என்பதால், ஆனைக்கட்டியும் கோவைச் சுற்றுலாத்தலங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
170. பில்லூர் அணை
கோவையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பில்லூர் அணை, கோவை - நீலகிரி மாவட்ட எல்லையான மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் உள்ளது. இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 100 அடி. இதன் உபரி நீர், பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
171. ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம், 6 வனச்சரகங்களை உள்ளடக்கியது. இந்திரா காந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. புலிகள், யானைகள், கரடிகள், நீலகிரி தார், நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வந்துசெல்கின்றன.
172. பரம்பிக்குளம்
கேரள மாநிலம், பாலக்காட்டில் பரம்பிக்குளம் அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜரால் கட்டப்பட்ட இந்த அணையைப் பராமரிப்பது தமிழகமாக இருந்தாலும், கேரளா உரிமைகொண்டாடுகிறது. அதிக அளவிலான நீர்த் தேக்கம்கொண்ட அணைக்கட்டுகளில் இந்தியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் 10 அணைக்கட்டுகளில் ஒன்றாகவும் உள்ளது.
173. காடாம்பாறை அணை
அட்டகட்டியிலிருந்து 15 கி.மீ தொலைவில், காடாம்பாறை அணை இருக்கிறது. அந்த வழித்தடத்தில் ஒரே ஒரு பஸ்தான் இயங்குகிறது. அணைக்கட்டின் சுற்றுவட்டாரப் பகுதியைச் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், காடாம்பாறை அணைக்கட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
174. பர்லிக்காடு
கோவையிலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கிறது, பர்லிக்காடு. இங்கு வனத்துறை பரிசல் சவாரிக்கு வசதிகள் செய்திருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிசல் சவாரி செய்யலாம். சவாரி செய்பவர்களுக்கு, பழங்குடி மக்களின் பராம்பர்ய உணவு கிடைக்கிறது
175. கல்லாறு அரசுத் தோட்டக்கலைப் பண்ணை
கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை, மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ளது. 1900-ம் ஆண்டு இந்தத் தோட்டக்கலைப் பண்ணை தொடங்கப்பட்டது. வேளாண்மக்களுக்குத் தேவையான தரமான நாற்றுகள், விதைகள், மரக்கன்றுகள் இங்கு கிடைக்கின்றன. 8.92 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை, கோவையின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் மாறியுள்ளது.
176. தீம் பார்க்
மேட்டுப்பாளையத்தில் பிளாக் தண்டர், காளம்பாளையம் பகுதியில் கோவை கொண்டாட்டம், நீலம்பூரில் மகாராஜா என்று 3 தீம் பார்க்குகள் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளன.
கோவையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்
177. கோனியம்மன் வரலாறு
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன், நகரத்தின் மத்தியில் வீற்றிருந்து மக்களை ஆட்சி புரிகிறாள். முன்பு, நொய்யலாற்றின் அருகே கோயில் அமைந்திருந்தது. ஆறு பெருக்கெடுத்து அழித்ததால், அம்மனைக் கோட்டைமேட்டில் வைத்தார்கள். கோனியம்மன் தேரோட்டம் மிகவும் பிரசித்திபெற்றது.
178. மாசாணியம்மன் கோயில்
பொள்ளாச்சி, ஆனைமலை அருகே மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. தை மாதத்தின் 18 நாள்கள் திருவிழா நடைபெறும். பல்வேறு பரிகாரங்களுக்குத் தீர்வு கிடைக்க, மிளகாய் அரைத்து வழிபடுவது வழக்கம்.

179. மருதமலை
மருதமலை முருகன் கோயில், கோவை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 837 படிகளுடன் அமைந்துள்ள இந்தக் கோயிலில், வரதராஜப் பெருமாள், சப்த கன்னியர், பாம்பாட்டி சித்தர், இடும்பன் ஆகியோருக்கும் சந்திநி கள் உள்ளன. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய காலகட்டங்களில் மருதமலை விழாக் கோலம் பூண்டிருக்கும்.
180. வெள்ளியங்கிரி மலை
கோவை, பூண்டி அருகே அமைந்துள்ளது, வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில். அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்திநி உள்ளது. ஆனால், சுயம்பு (லிங்கம்) கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி உயரத்தில் உள்ளது. 7 மலைகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பதால், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே மலைக் கோயிலுக்கு அனுமதி. இது தென் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

181. ஈஷா யோக மையம்
கோவை, பூண்டி அருகே ஈஷா யோக மையம் உள்ளது. 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஈஷாவுக்கு, உலகம் முழுவதும் 150 மையங்கள் உள்ளன. கோவையில் உள்ள இந்தப் பிரதான மையத்தில், தியான லிங்கம், லிங்க பைரவி, ஆதி யோகி போன்ற சிலைகள் உள்ளன. இதில், ஆதி யோகி சிலை 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
182. சூலக்கல் மாரியம்மன் கோயில்
கோவை - பொள்ளாச்சி செல்லும் வழியில் அமைந்திருக்கிறது, சூலக்கல் மாரியம்மன் கோயில். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சூலக்கல் அம்மனைப் பிரார்த்திப்பது வழக்கம். பலருக்குத் தீர்வும் கிடைப்பதால், சூலக்கல் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.
183. வன பத்திரகாளியம்மன் கோயில்
மேட்டுப்பாளையத்தில் அமைந்திருக்கிறது, வன பத்திரகாளியம்மன் கோயில். இங்கே ஆடிக்குண்டம் மிகவும் பிரபலம். இந்த விழாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள்.
184. அறுபடை கோயில்
முருகனின் அறுபடை வீடுகளும் தமிழகத்தின் வெவ்வெறு பகுதிகளில் அமைந்துள்ளன. ஆனால், அறுபடை வீடுகள் அனைத்தையும் சேர்த்து, சூலூர் அறுபடை முருகன் கோயிலில் காணலாம். கோவையின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில்.
185. சாய்பாபா கோயில்
கோவை சாய்பாபா காலனி அருகே, சாய்பாபா கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்காகவே அந்தப் பகுதி, 'சாய்பாபா கோயில்' என்று பெயர் மாறிவிட்டது. தினசரி பூஜைகள் நடைபெற்றாலும், வியாழக்கிழமை நடக்கும் சிறப்பு பூஜை பிரசித்தி பெற்றவை.
186. அனுபாவி சுப்பிரமணியர் கோயில்
தடாகம் பகுதியில் அனுபாவி சுப்பிரமணியர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கும், மருதமலைக் கோயிலுக்கும் பண்டைய காலம் தொட்டே தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான வழி இருப்பதாகவும், சித்தர்கள் அந்த வழித்தடங்களைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
187. பாலமலை
பாலமலையில் அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது. 11-ம் நூற்றாண்டு தொட்டு இந்தக் கோயிலுக்கு வரலாறு உள்ளது. சனிக்கிழமைகள் மற்றும் சித்ரா பௌர்ணமி தினங்களில் இந்தக் கோயிலில் தரிசிப்பது சிறப்பு.

188. ஈச்சனாரிப் பிள்ளையாரும்... புலியங்குளம் விநாயகர் கோயிலும்...
கோவையில் பிள்ளையார் என்றால் ஈச்சனாரிப் பிள்ளையார்தான் முதலில் நினைவுக்கு வருவார். மதுரையிலிருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வைக்க எடுத்துச் செல்லப்பட்டதாகவும், ஈச்சனாரி அருகே வண்டியின் அச்சு முறிந்துவிட்டதால் அங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டதாவும் சொல்வார்கள்.
புலியங்குளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயில், 1982-ம் ஆண்டு நிறுவப்பட்டது. விநாயகர் சிலை, 19 அடி உயரம், 190 டன் எடை கொண்டது. ஆசியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான்.
189. தேவாலயங்கள்
கிறிஸ்துவர்களின் வழிபாட்டுக்காக சி.எஸ்.ஐ, சிரியன், பிஷப் தேவலாயங்கள், கோவைப்புதூர் குழந்தை ஏசுகோவில் போன்றவை நகரின் மையப் பகுதியில் உள்ளன. மேலும், காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையமும் உள்ளது. இந்த மையம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
190. வேசுக்கோ… தீசுக்கோ…
ரங்கே கவுடர் வீதி மற்றும் ராஜ வீதி ஆகிய இரண்டு இடங்களிலும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். குறிப்பாக,விஜயதசமியை முன்னிட்டு, பக்தர்கள் தங்களது வயிறு மற்றும் கைகளில் கத்தியால் வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்திவருகிறார்கள். அப்போது, தெலுங்கில் வேசுக்கோ, தீசுக்கோ (போட்டுக்கோ, வாங்கிக்கோ என்று கோஷம் எழுப்புவார்கள்.
191. சாட்டையடித் திருவிழா
பூசாரிபாளையம் அருகே பனைமரத்தூர்ப் பகுதியில் புகழ்பெற்ற அடைக்கலம்மன் கோயில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கொடி கட்டிய பிறகு, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல், பிடிமண் எடுத்து வருதல், அம்மன் ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக, பக்தர்கள் சாட்டையால் தங்களை தாங்களாகவே அடித்துக் கொள்ளும், சாட்டையடித் திருவிழா மிகவும் பிரபலம்.
192. கோட்டைமேடு மசூதி
கோவை கோட்டைமேட்டு பகுதியில் இருக்கும் மசூதிதான், கோவையில் முதன்முதலாக எழுப்பப்பட்ட மசூதி. இதன் பிறகு, செல்வபுரம், போத்தனூர், பூ மார்க்கெட் பகுதிகளில் பல பெரிய மசூதிகள் வந்துவிட்டாலும், மிகவும் பழைமையான மசூதி கோட்டைமேடு மசூதிதான்.
193. சுதந்திரப் போராட்டத்தில் கோவை பிரபலங்கள்
நம் சுதந்திரப் போராட்டத்தில் கோவையின் பங்கும் கணிசமாக இருந்துள்ளது. திருப்பூர் குமரன், சுப்ரமணியம் என்கிற சுப்ரி, கோவை அய்யாமுத்து, அவினாசிலிங்கம் செட்டியார், சி.பி.சுப்பையா என்று பலர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, காந்தி தண்டி யாத்திரையில் ஈடுபட்டிருந்த நாள்களில் அவர் போராட்டம் நடத்திய நாள்களெல்லாம், கோவையில் ஊர்வலங்களை நடத்தினார் சுப்ரி.
194. நாட்டின் முதல் நிதியமைச்சர்
1947-ம் ஆண்டு, முதல் நிதி அமைச்சர் பதவியில் அமர்ந்தவர், கோவையைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம். நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர், சிறந்த பேச்சாளர், தமிழ்ப் பற்றாளர் எனப் பன்முகத்தன்மை உடையவர்.

195. ஜி.டி.நாயுடும் அவரது கண்டுபிடிப்புகளும்
கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி நாயுடு, மோட்டார் வாகனத்தில் மிகப்பெரிய புரட்சியைச் செய்துள்ளார். பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதற்கு அந்தக் காலத்திலே ஓர் இயந்திரத்தைத் தயாரித்தார். மோட்டார் ரேடியருக்கு இணையாக ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினார். அவர் நினைவாக, அவினாசி சாலையில் ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் இயங்கிவருகிறது.
196. நடத்துநர் டூ சி.பி.எஸ்.இ
கோவை அரசுப் பேருந்தில், கடந்த நடத்துநராக பணியாற்றி வருபவர் யோகநாதன். இவர் நடத்துநராக முழு நேரம் பணியாற்றினாலும், சுற்றுச்சூழல் மீது அதிக ஆர்வம். இதனால், தனி ஒரு மனிதனாக சுமார் மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். யோகராஜின் பணிகள் குறித்து, சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் பாடம் வந்துள்ளது.
197. பேடுமேன்
முருகானந்தம் என்றால் இவரைப் பலருக்கும் தெரியாது. ஆனால், பேடுமேன் என்றால் பாலிவுட் வரை தெரியும். நாப்கின் வாங்கினால், செலவு கட்டுப்படியாகாது என்று தனது மனைவி சொன்ன ஒரே வார்த்தைக்காக, பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு குறைந்த விலையில் நாப்கின் தயாரித்தார். முருகானந்தம் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். பாலிவுட்டில் வெளியான, “PADMAN” படம் இவரின் வாழ்க்கை வரலாறு என்பது குறிப்பிட்டத்தக்கது.
198. மண்ணின் மைந்தர்
இந்தியாவின் பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், கோவையைச் சேர்ந்தவர். ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்துகொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்தியாவின் மைக்கேல் ஷூமேக்கர் எனப்படும் நரேன் கார்த்திகேயன், கார் ரேஸில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
199. எழுத்தாளர்களின் சொற்கபுரி
கோவை வரலாற்றை எழுதிய கோவை கிழார், நாஞ்சில் நாடன், புவியரசு, சிற்பி, கோவை ஞானி, இரா.முருகவேள், சி.ஆர்.ரவீந்திரன் எனத் தமிழில் முக்கியப் படைப்புகளை கொடுத்த ஏராளமான எழுத்தாளர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள்.

200. மணக்கும் கொங்கு தமிழ்
கோவை என்றாலே கொஞ்சும் கொங்கு தமிழ் தான் நினைவுக்கு வரும். மரியாதை மிதக்கும் அந்தத் தமிழை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. வா கண்ணு. வணக்கங்கணா என்று இந்த மக்கள் பேசும் கொங்கு தமிழுக்கு, தமிழகத்தின் மற்றப் பகுதியினர்தான் ரசிகர்கள். கொங்கு தமிழை பேசி நடித்த பல முன்னணி நடிகர்கள், இன்று வேற லெவலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : இரா.குருபிரசாத், கார்த்திகா, கௌசல்யா
உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்
படங்கள்: தி.விஜய்
நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை