Published:Updated:

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வேள்பாரி தொடர் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, இப்புதினம் குறித்து நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஏராளமான கேள்விகள்...  `எழுத்தாளரையே கேளுங்கள்’ என அறிவித்திருந்தோம். வந்துகுவிந்தன ஆயிரக்கணக்கான வினாக்கள். அவற்றில் சிறந்தவற்றுக்கான சு.வெங்கடேசனின் பதில்களின் தொகுப்பு இங்கே...

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேள்பாரி தொடர் வயதுவித்தியாசமற்று சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து வகையான வாசகர்களையும் ஈர்த்துள்ளது. இவ்வெற்றிக்குக் காரணமென்ன? 

குமரன்,  கரூர்


நமது மரபை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்திருக்கிற காலம் இது. வேள்பாரி உருவாக்கும் பேருலகம், மரபின் ஆகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. எனவே, இது எல்லா வகையான வாசகர்களாலும் கொண்டாடப்படுகிறது. இன்னொருபுறம் நமது தொல்மரபிலிருக்கும் கதைகள் முதன்முறையாக நவீன இலக்கியத்தில் எழுதிப்பார்க்கப்பட்டுள்ளன. ‘கூடலை இழந்த அகுதை’ என்று சங்கப்பாடலில் வரும் குறிப்புக்கு உரையாசிரியர்கள் இரண்டு வரிகளில் விளக்கமெழுதிக் கடந்துவிடுகின்றனர். ஆனால், அந்த அகுதையின் குலக்கதையை விரித்து எழுதும்பொழுது உயிர்பெற்று நிற்கும் நீலனை வாசகர்களால் கொண்டாடாமல் எப்படி இருக்க முடியும்?

பறம்புப் பெண்கதாபாத்திரங்கள் எல்லோரும் மிகவலிமையானவர்களாகப் படைக்கப்பட்டுள்ளதன் காரணமென்ன?

லதா, ஈரோடு


புலியை முறத்தால் விரட்டிய புறநானூற்றுச் சித்திரம்தான் பொதுவெளியில் சங்ககாலப் பெண்ணின் வீரமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. வேட்டைச் சமூகத்திலிருந்து வாழ்வு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த அந்தக் காலத்தில் பெண்கள்தாம் வாழ்வுக்கான பெரும்பங்களிப்பாளர்களாக இருந்தார்கள். அறிவிலும் நுட்பத்திலும் புதிய அலையை உருவாக்கியவர்கள் பெண்களே. அதன் குறியீடாகத்தான் பாரியின் போதாமையைக் கண்டுணர்பவளாக ஆதினியும் உதிரனை விஞ்சியவளாக அங்கவையும் இருக்கிறார்கள்.

இந்த மொத்தக் கதையையும் இரு குறியீடுகளாக மாற்றினால், அதில் ஒரு குறியீடு ஆதினி; மற்றொரு குறியீடு பொற்சுவை. பாண்டியநாட்டு இளவரசி, வணிகர்குலத் தலைவனுக்கு மகள் என்று பெருஞ்செல்வத்தின் உச்சியிலிருக்கும் பொற்சுவை தனக்கான சுதந்திரத்தை முற்றிலுமாக இழந்து நிற்கிறாள். ஆனால், மாந்தபுல் கூரையை வியந்து பார்க்கும் மலைமகள் ஆதினி தனக்கான முழுச்சுதந்திரத்துடன் வாழ்வைத் தேர்வுசெய்கிறாள். இக்குறியீடுகளின் வழியே பெண் ஏன், எவ்வாறு அடிமையானாள் என்ற அரசியல் விளக்கத்தை முழுமையாக எழுதலாம்.

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்நீண்ட தொடர்களும் வரலாற்றுத் தொடர்களும் காலாவதியாகிவிட்டன என்கிற கருத்தை வேள்பாரி உடைத்திருக்கிறது. இதை எப்படி சாதித்தீர்கள்?

பாபு, கடலூர்

ஒருவகையில் நாவல் என்பது தகவல்களின் கலை. சங்க இலக்கியம் எனும் பெரும்பரப்பைப் பின்னணியாகக்கொண்டு எழுதும்பொழுது எண்ணிலடங்கா தகவல்களின்மேல் பிரமாண்டமான கட்டடத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். நான் அதைத்தான் செய்துள்ளேன். எனவே இது தொடர்கதையின் தேக்கத்தை உடைத்து புதிய அலையை உருவாக்கியுள்ளது.

முற்போக்கு எழுத்தாளராகிய நீங்கள் வேள்பாரி எழுத வேண்டிய தேவையென்ன?

ரமேஷ், வத்தலக்குண்டு


புராணங்கள் திரும்பத் திரும்ப எழுதப்பட்டு, அவற்றைத் தமிழ்மரபின் பகுதியாக மாற்றும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. தமிழ்மரபென்பது வைதீக புராண மரபுக்கு நேரெதிரானது. அதை எழுதவேண்டியது இன்றைய அடிப்படைத் தேவையென உணர்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் கணினி மற்றும் வரைகலைத் [Graphics]  துறை பெருவளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் புராணங்கள் காட்சி ஊடகத்தின் வழியே மிகவலிமையாக இளந்தலைமுறையிடம் கொண்டுசேர்க்கப்படுகின்றன; அவற்றைத் தவிர்க்க முடியாது. ஆனால் அவ்விடத்துக்கான நம்முடைய கதைகள், காவியங்கள் எங்கே என்னும் கேள்வியையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். கேள்வியை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்காமல் எனது பங்களிப்பைச் செய்துள்ளேன். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், நான் எனது காலத்தின் எதிரிகளை அவர்களின் களத்தில் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்களின் அடுத்த படைப்பு என்ன?

முத்துப்பாண்டி, திருப்பூர்


கைவசம் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், திட்டங்களுக்குள்ளிருந்து மட்டும் படைப்பு உருவாகிவிடுவதில்லை.

இன்றைய இலக்கியங்களில் இயற்கையைப் பற்றிய நுட்பமான பதிவுகள் இல்லாமல் போய்விட்டதேன்?

சந்திரசேகர், கோபி


மரத்தின் பெயரையும் மலர்களின் பெயரையும் இழந்துவிட்ட நகரவாசிகளின் மொழியாகத்தான் இன்றைய தமிழ் இருக்கிறது.

இயற்கையுடனான நமது நுண்மரபு அறுபட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகின்றன. சங்க இலக்கியத்திலிருக்கும் இயற்கை பற்றிய குறிப்பு அதன் பின்னர் ஆயிரத்து எண்ணூறாண்டுக் கால இலக்கியத்திலும் சிறுபகுதியாகக்கூட இல்லாமற்போய்விட்டது. பக்தி இலக்கியங்களின் பேரோசையில் கானகத்துக் குயில்களும் மயில்களும் தம்முடைய குரல்களை இழந்துவிட்டன. சங்க இலக்கியப் பதிவுகளின் வழியேயும் இன்றும் நமது சமூகத்தில் மிஞ்சியுள்ள தொல்நினைவுகளின் வழியேயும் நமது இயற்கையியல் மரபை மீட்க வேண்டியுள்ளது. அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் வேள்பாரி.

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

முருகன்வள்ளி தமிழ் நிலத்தின் ஆதி நினைவு. அவர்களை ‘வேள்பாரி’ அளவுக்கு விரித்து எழுதும் சாத்தியமில்லையா? 

வள்ளியப்பன், காரைக்குடி


சாத்தியம் இருக்கிறது. இன்றளவும் முருகன்வள்ளிதான் தமிழ்மரபில் காதல் கடவுளர்கள். இந்திரன், கண்ணன், மன்மதன் இவர்களையெல்லாம் வைதீக இலக்கியங்கள் பின்னர் கொண்டுவந்து சேர்த்தன. சங்க இலக்கியத்தின் ஆதிகாலந்தொட்டு இன்றைக்கு வரை அறுபடாமல் வந்துகொண்டிருப்பது முருகவழிபாடு மட்டும்தான். வைதீக மதம் முருகனை சுப்பிரமணியனாக மாற்ற எவ்வளவோ முயன்றுள்ளது. ஆனால் அம்முயற்சி முழு வெற்றியடைய முடியாமைக்குக் காரணம் சங்க இலக்கியம் வடிவமைத்த முருகனின் அடையாளமே. காதலின் பெருங்கடவுளாகவும் காதலர்களின் அருளாளனாகவும் முருகன் இருப்பதால் வைதீகம் அவன்மேல் தன்னை முழுமையாகப் பொருத்திக்கொள்ள முடிவதில்லை. முருகன்மீது படிந்துள்ள பிற அம்சங்களை எல்லாம் நீக்கிவிட்டு சங்க இலக்கியத்தில் உள்ள வள்ளிமுருகனை அடிப்படையாகக்கொண்டு பெருங்காவியமே எழுதலாம். வேட்டை சமூகத்துக்குள் உழவுத் தொழில் உருவாகத் தொடங்கிய காலத்தில் உருவான அழகான காதல் கதை. தமிழில் காப்பியங்களை எழுதியவர்கள் எல்லாம் சமண, பெளத்த அறங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்ததால் முருகன் வள்ளியின் காதல் தனித்த காவியமாக உருவாகாமலே போய்விட்டது.

வேள்பாரிக்குக் கிடைத்த முக்கியப் பாராட்டுகள்?

டேவிட், சமயநல்லூர்


எவ்வளவோ சொல்லலாம். குறிப்பாக எண்ணற்றோர் தங்கள் வீட்டுக்குழந்தைக்கு வேள்பாரியில் வரும் கதாபாத்திரங்களின் பெயரைச் சூட்டியுள்ளனர். உணர்ச்சிப்பெருக்கோடு அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர். சிறந்த படைப்புகள் எத்தனையோ உண்டு. இன்னும் பலவற்றை உருவாக்க முடியும். ஆனால், வாசகர்கள் உணர்வுபூர்வமாகக் கொண்டாடும் பெரும்படைப்பாக வேள்பாரி மாறி நிற்கிறான். படைப்பாளிக்கு வேறென்ன வேண்டும்.

இந்நாவலில் எந்த அத்தியாயத்தை அல்லது எந்தப்பகுதியை எழுத அதிக கால அவகாசம் தேவைப்பட்டது? 

சாந்தி, லால்குடி


போர்க்காட்சிகள், திசைவேழர், சூல்கடல் முதுவன், யவன வணிகர்கள், பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தது என்று ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவிதத்தில் பேருழைப்பைக் கோரியவை. தனித்த அத்தியாயம் என்று பார்த்தால் முருகனும் வள்ளியும் நான்கு நிலங்களிலும் காதல்கொள்ளும் அத்தியாயத்தைச் சொல்லலாம். அந்த ஓர் அத்தியாயத்தை எழுத ஏறக்குறைய இருபது பக்கங்களுக்கு மேல் குறிப்பெடுத்தேன். முருகனும் வள்ளியும் ஆறு காலங்களில் ஐந்திணைகளில்  நான்கு நிலங்களில் வெவ்வேறு வகையான பூக்களை நுகர்ந்தபடி காதலில் கனிந்திருப்பர்.அவர்கள் காணும் பூக்கள் அந்தந்த நிலத்துக்குரிய பூக்கள் மட்டுமல்ல,  அந்தக் குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட பருவத்தில் எந்த வகையான பூக்கள் பூக்குமோ அந்த வகையான பூக்களைத்தான் எழுதியுள்ளேன். 
       
கர்ணனையும் பாரியையும் ஒப்பிடுக. 
  
சுப்பு, நெல்லை


கர்ணன் இதிகாச கதாபாத்திரம். வேள்பாரி வரலாற்று நாயகன். பெருங்கொடையாளனாகக் கர்ணனைச் சித்திரிக்கிறது பாரதம். தன் உயிர் காக்கும் கவச குண்டலங்களை அவன் தானமாக வழங்குகிறான். பாரி இருப்பதை வழங்கும் கொடையாளன் மட்டுமல்லன்; இயற்கையில் எல்லா உயிர்க்குமிருக்கும் உரிமை எதன் பொருட்டும் குலையக்கூடாது என நினைக்கும் பல்லுயிர்க் காப்பாளன். இருவரும் இருவகையான சிந்தனைகளின் வெளிப்பாடு. முல்லைக்குத் தேரைக் கொடுப்பது, இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்கும் செயலல்ல. எதன் பொருட்டும் யாதும் அலைவுறக் கூடாது எனக் கருதும் செயல். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு.


வள்ளல்கள் என்போரைத் தமிழ் இலக்கியம் எந்த அடிப்படையில் வரையறை செய்கிறது?

அ. முத்து, ஈரோடு.


தமிழ் இலக்கியம் எழுவரை வள்ளலெனக் கூறுகிறது. அந்த எழுவரும் சிறுகுடித் தலைவராகவும் குறுநில மன்னராகவும்தான் இருக்கின்றனர். வேந்தர்களில் ஒருவரைக்கூட வள்ளலாகத் தமிழ் இலக்கியம் கூறவில்லை.வள்ளல் தன்மை என்பது கொடுக்கப்பட்ட கொடையால் மட்டும் அளவிடப்படவில்லை; குணத்தாலும் சிந்தனையாலும்  அளவிடப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.

வேள்பாரிக்கு உருவாகியுள்ள பெரும் வாசகப்பரப்பை ஓர் எழுத்தாளராக எப்படித் தக்கவைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

முத்துச்செல்வம், புதுச்சேரி.


ஒரு சொலவடை உண்டு. “யானை அழகாக நடக்க முயலக் கூடாது; அதன் நடைதான் அழகு.”

அறக்கோட்பாடுகள், அற இலக்கியங்கள் – இவற்றுள் எது முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? 
      
சந்திரசேகரன், தேனி


கோட்பாடுகளும் சிந்தனைகளும் கற்றூண்களைப் போன்றவை. ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்ற பெரும்வலிமை தேவை. ஆனால், கதைகள் உருண்டோடும் பந்தைப் போன்றவை. ஒருமுறை உருவாக்கப்பட்டுவிட்டால் காலங்களைக் கடந்து பயணித்துக்கொண்டிருப்பவை. இலக்கியங்களாக உருமாறிய கோட்பாடுகள் எளிதில் வீழ்ச்சியடைவதில்லை!

வேள்பாரியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை போர்க்காட்சிகள். பல புதிய உத்திகளைப் போர்க்காட்சிகளில் விளக்கியிருந்தீர்கள். இவை உண்மையானவையா?

முத்துச்சாமி, கோவில்பட்டி


போர்க்காட்சிகள் என்றால் புராணங்களில் வரும் மந்திரதந்திரக் காட்சி பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன. நம்முடைய வீரக்கலைகள் முறையாகத் தொகுக்கப்படவில்லை. அதைப்பற்றி ஆய்வுகளும் நிகழவில்லை. போர் நடவடிக்கைகளின் வெற்றிதோல்விகளை உணர்ச்சிகளின் வழியாகவே இலக்கியங்கள் அணுகின. போரியல் கண்ணோட்டத்தோடு அதன் விவர நுட்பங்கள் போதுமான அளவிற்குப் பதிவாகவில்லை. போர் பற்றிய அனைத்தையும் கண்டறிந்து, உருவாக்குவதுதான் இந்நாவலில் மிகுந்த சவால் நிறைந்ததாக இருந்தது. துணிந்தே இச்சவாலை எதிர்கொண்டேன். ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதிக்கும் மேல் போர்க்களத்தில்தான் கதை நிகழ்கிறது. செவ்வியல் இலக்கியத்திலும் வாய்மொழி இலக்கியத்திலும் கிடைக்கும் நுண்தகவல்களைக்கொண்டு தட்டியங்காட்டின் பெரும்போரினை நடத்திமுடித்தேன்.  

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

வணக்கம்

வா
சகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலாக வெளிவரவிருக்கிறது. இதுவரை இல்லாதவகையில் மிகமிக பிரமாண்டமாக இந்த நூல் வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கே, எப்போது, யார் யார் முன்னிலையில் இது நடைபெறும் என்ற தகவல்கள் விரைவில்...

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

நிறைய வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேள்பாரி தொடரிலிருந்து பெயர் தேர்வு செய்து சூட்டியிருக்கிறீர்கள். அவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. அப்படி பெயர் சூட்டிய பெற்றோர்கள் velpari@vikatan.com என்ற மின்னஞ்சலில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்மேலும், விழா நாளன்று வாசகர்கள் பங்குகொள்ளும் விவாத நிகழ்ச்சி ஒன்றையும் திட்டமிடுகிறோம். இதில் கலந்துகொண்டு பேச விரும்பும் வாசகர்கள் ‘வேள்பாரித் தொடரின் சிறப்புகள் என்ன?’ என்பதை 2 நிமிட வீடியோவாகப் பதிவு செய்து  ‘8754444121’ என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும். வேள்பாரி ஆசிரியர் சு.வெங்கடேசன் வெற்றியாளர்களைத் தேர்வு செய்வார். அவர்களுக்கு விவாத நிகழ்ச்சியில் வேள்பாரி பற்றிப் பேசும் வாய்ப்புண்டு.

விழா தொடர்பான அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:  https://www.facebook.com/groups/500337410392609/