Published:Updated:

`தொழிலை மாற்றினாலும் கவிதை எழுதுவதை நிறுத்தவே இல்லை!’ - 59 வயது பாத்திர வியாபாரியின் தமிழ் ஆர்வம்

வீட்டின் வறுமையைப் போக்க சைக்கிளில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்தாலும், தமிழ் மொழி மீதுகொண்ட ஆர்வத்தால் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டிருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த ஒரு முதியவர்.

`தொழிலை மாற்றினாலும் கவிதை எழுதுவதை நிறுத்தவே இல்லை!’ - 59 வயது பாத்திர வியாபாரியின் தமிழ் ஆர்வம்
`தொழிலை மாற்றினாலும் கவிதை எழுதுவதை நிறுத்தவே இல்லை!’ - 59 வயது பாத்திர வியாபாரியின் தமிழ் ஆர்வம்

திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. 59 வயதான இவர், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாகத் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எவர்சில்வர் பாத்திரங்களை விற்று வருகிறார். தன்னுடைய சைக்கிளில் பாத்திரங்களை ஏற்றிக் கட்டிக்கொண்டு வீதி வீதியாகச் சென்று விற்பனை செய்துவரும் ஜோதிக்குத் தமிழ் மொழியின்மீது தீராக் காதல். வாழ்க்கையில் பல்வேறு விதமான கூலித் தொழில்களைச் செய்து பிழைப்பை நடத்தினாலும் ஒரு பக்கம் தமிழ் மொழிமீது இவர்கொண்ட மோகம் மட்டும் குறையவேயில்லை.

தான் பார்த்த பல்வேறு விதமான மனிதர்களைப் பற்றியும், மறக்க முடியாத சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் இவர் தொகுத்திருக்கும் பல கவிதைகள் இவர் மீது ஆச்சர்யம்கொள்ளவே வைக்கின்றன. வழக்கம்போல தன்னுடைய சைக்கிளில் பாத்திரங்களை கட்டிக்கொண்டு திருப்பூர் வீதிகளில் குரலெழுப்பி வியாபாரம் செய்துகொண்டிருந்த முதியவர் ஜோதியை டவுன்ஹால் என்ற பகுதியில் வைத்துச் சந்தித்தோம்.

``எனக்கு இப்போது 59 வயசு ஆகுதுப்பா. பொண்டாட்டி பேரு வசந்தாமணி. எங்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க. சின்ன வயசில் இருந்தே எனக்கு தமிழ்னா அவ்வளவு பிடிக்கும். எனக்கு 11 வயசு இருக்கும்போதே என்னுடைய அப்பா இறந்துபோயிட்டார். அப்போது இருந்தே குடும்பத்தைக் காப்பாற்ற நெசவு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டேன். ஒருவழியாகக் கல்யாணமும் நடந்து முடிந்தது. ஆனால், ஒருகட்டத்துக்குப் பிறகு இங்கே நெசவுத் தொழிலில் பெரிதாக வருமானம் இல்லை. அதனால் என்னுடைய மனைவியைக் கூட்டிக்கொண்டு பெங்களூருக்குச் சென்றுவிட்டேன். அங்கு பட்டு நெசவுத் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில்தான் என் வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்யமான சம்பங்களை அடிப்படையாக வைத்து கவிதைகளை எழுதத் தொடங்கினேன். ஆனால், மனதளவில் ஒரு வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. 

இப்படியே பெங்களூரிலேயே தங்கிவிட்டால் என் பிள்ளைகள் தமிழ் மொழியை மறந்து கன்னடத்தில் திளைத்துவிடுவார்களோ என்ற அச்சம்தான் அது. அந்த மனவருத்தம் என்னைச் சூழ்ந்துகொண்டதால், வேறுவழியின்றி மீண்டும் குடும்பத்தோடு திருப்பூருக்கே திரும்பிவிட்டேன். இங்கு வந்ததும் காலமாற்றம் காரணமாக நெசவுத் தொழிலில் ஈடுபட முடியாமல், வீடுவீடாகச் சென்று பாத்திர வியாபாரத்தில் ஈடுபட்டேன்.

பொருளாதாரத் தேவைக்காகத் தொழிலை நான் மாற்றிக்கொண்டாலும், கவிதை எழுதுவதை மட்டும் ஒருபோதும் நிறுத்திக்கொண்டதே இல்லை. அப்படித் தொடர்ந்து நான் எழுதிய கவிதைகளைட் தொகுத்து, `ஒரு சாமானியனின் கவிதை' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். மேலும், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பல இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளேன். குறிப்பாக உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில், `சாதியே நீ எந்த சாதி’ என்னும் தலைப்பில் நான் எழுதியிருந்த கவிதைகள், பலராலும் பாராட்டப்பட்டது” என்று உணர்ச்சி பொங்க சொல்லி முடித்தார்.

முதியவர் ஜோதியின் மனைவியான வசந்தாமணி பேசும்போது, ``காலையில் தொழிலுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும் நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்துவிடுவார். அவரது ஆர்வத்தைப் பார்த்து நாங்களும் அவரது போக்கிலேயே விட்டுவிட்டோம்” என்றார். இன்றைய காலகட்டத்தில் நன்கு படித்த நபர்களே தமிழில் பிழையில்லாமல் எழுதத் திணறிக்கொண்டு இருக்கும்போது, 5-ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் ஜோதி ஐயா, பாத்திர வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டே தமிழில் கவிதைப் புத்தகம் எழுதியிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள் கவிஞரே!