Published:Updated:

மறைந்தது ‘மகாநதி!’

மறைந்தது ‘மகாநதி!’
பிரீமியம் ஸ்டோரி
மறைந்தது ‘மகாநதி!’

படம்: புதுவை இளவேனில்

மறைந்தது ‘மகாநதி!’

படம்: புதுவை இளவேனில்

Published:Updated:
மறைந்தது ‘மகாநதி!’
பிரீமியம் ஸ்டோரி
மறைந்தது ‘மகாநதி!’

ரபும் நவீனமும் கலந்த படைப்பாளுமை எழுத்தாளர் பிரபஞ்சன். அவரது மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நவீன இலக்கியவாதிகளில் இருவிதமான பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் உண்டு. சங்க இலக்கியம், பழந்தழிழ் இலக்கியங்களில் புலமையும் ஈடுபாடும் கொண்ட புதுமைப்பித்தன், ரகுநாதன், கு.அழகிரிசாமி போன்றோர் நடந்த இடது சாய்மானப் பாதை ஒன்று. சங்க இலக்கிய ஈடுபாடு இல்லாத - உலக இலக்கியங்களின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட க.நா.சு., கு.ப.ராஜகோபாலன், மௌனி, சுந்தர ராமசாமி போன்றோர் நடந்துசென்ற இன்னொரு பாதை. இந்த இருபோக்குகளிலிருந்தும் சாரமானவற்றை எடுத்துத் தன்வயமாக்கி எழுதிய தனித்துவம் மிக்க ஆளுமை பிரபஞ்சன்.

1961-லிருந்து இறக்கும்வரை 57 ஆண்டுகாலம் இடைவெளியின்றி எழுதியவர் அவர். ‘பிரபஞ்சகவி’ என்கிற புனைப்பெயரில் நிறையக் கவிதைகள் எழுதினார். அதில் ‘ஈரோடு தமிழர் உயிரோடு’ என்கிற பெரியார் பற்றிய கவிதை நூல் குறிப்பிடத்தக்கது. முந்நூறுக்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள் மூன்று பெரும் தொகுப்புகளாக வந்துள்ளன. ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’, ‘மகாநதி’, ‘ஆண்களும் பெண்களும்’, ‘நாளை ஒரு பூ மலரும்’ போன்ற பல நாவல்களை எழுதினார். புதுச்சேரியின் வரலாற்றை பிரெஞ்சு ஆட்சியில் துபாஷாக இருந்த ஆனந்தரங்கம்பிள்ளையின் டைரிக்குறிப்புகளின் மீது நின்று சமூகப் பார்வையுடன் எழுதிய நாவலே ‘மானுடம் வெல்லும்’.

மறைந்தது ‘மகாநதி!’

1978-லிருந்து அவருடன் எனக்குத் தோழமை தொடர்ந்தது. அவரின் இணையர் மற்றும் மூன்று குழந்தைகளுடன், பொருளாதார நெருக்கடிகளுடன் நகர்ந்த குடும்ப வாழ்க்கையே அவருக்கு வாய்த்தது. மிகக் குறுகிய காலம் தஞ்சையில் ஆசிரியர் பணியை ஆற்றியிருக்கிறார். அங்கே தஞ்சை பிரகாஷ் என்கிற ஆளுமையைச் சந்தித்தபின், அவரது வாழ்க்கைக் கண்ணோட்டம் மாறியது. அதன் பிறகு உத்தியோகம் எதையும் தேடாமல் சென்னை வந்து, எழுத்தே எல்லாம் என வாழ்ந்தார். வார இதழ்கள் சிலவற்றில் சில காலம் பணியாற்றினார். சுதந்திரமான மனப்போக்குள்ள அவரால் நிறுவனங்களுடன் பயணம் தொடர இயலவில்லை.

‘எனக்குத் தினமும் இரண்டு வேளைச் சாப்பாட்டுக்கு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால், இன்னும் சிறப்பானக் கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத் தந்திருப்பேன்’ என்று அவரே சொல்லும்படியாகத்தான் அவரது வாழ்வு அமைந்தது. அவரின் ஒரு மகன் தொடர்ந்து சிகிச்சை பெறும் நிலையிலேயே இருந்ததும் - இருப்பதும் அவருக்குத் தீராத மனத்துயரை அளித்தது. இரு பையன்கள் உத்தியோகம் பெற்று வாழ்க்கையில் சற்றே ஆசுவாசம் கொள்ளும் வாய்ப்பு வந்தபோது, அவரின் இணையர் காலமானார். ஆனாலும், இந்த வாழ்க்கையின் மீதும் அவருக்கு எந்தப் புகாரும் இல்லை. ‘பாரதியும் பாரதிதாசனும் பட்ட கஷ்டங்களோடு ஒப்பிட்டால் நான் சௌகரியமாகவே வாழ்கிறேன்’ என்றுதான் சொல்வார். இயற்கையும் காலமும் அவரிடம் இன்னும் சற்றுக் கருணையுடன் நடந்திருக்கலாம் என்றெனக்கு அடிக்கடி தோன்றும். அவற்றுக்கென்ன அறிவும் உணர்வுமா இருக்கிறது?

பிரெஞ்சுக் கலாசாரத்தில் வளர்ந்த புதுச்சேரியின் வரலாற்றையும், அப்பண்பாட்டின் வேர்களையும் அடையாளம் காட்டிப் பேசவும் எழுதவும் நமக்குக் கிடைத்திருந்த ஒரே படைப்பாளுமை பிரபஞ்சன்தான். புதுச்சேரியின் வரலாற்றை மூன்று பெரும் காலப்பிரிவாகப் பிரித்து, மூன்று தொகுதிகளாக எழுதும் பணிகளை விரைவில் தொடங்க இருந்தார். புதுச்சேரி அரசும் அப்பணிக்கு வேண்டிய உதவிகளை அளிப்பதாக அறிவித்திருந்தது. அதற்குள் காலம் அவரை முடக்கிவிட்டது. புதுச்சேரி மண்ணையும் அதன் மக்களையும் அவர் அவ்வளவு நேசித்தார். தன் கதைகளில் கொண்டாடினார். அதேசமயம் புதுச்சேரியின் ஆட்சியாளர்களை, அவர்கள் பிரெஞ்சுகாரர்களானாலும் சரி... அப்புறம் வந்தவர்களானாலும் சரி, அவர்களையெல்லாம் வெறுத்தார். மக்களைச் சுரண்டுபவர்களாகவும் மக்கள் மீது அதிகாரமும் ஆணவமும் செலுத்துபவர்களாகவும் அவர்களைச் சரியாகத் தனது படைப்புகளில் அடையாளம் காட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறைந்தது ‘மகாநதி!’

எழுத்தைத் தாண்டி அவர் பேசுவதைக் கேட்பதும் அவருடன் பேசுவதும் பேரானந்தம் தரும் அனுபவங்களாகும். இளம் படைப்பாளிகளின் எழுத்துகளை அக்கறையுடன் வாசித்துத் தன் பேச்சிலும் எழுத்திலும் கொண்டாடும் மகத்தான குணம் அவரது அடையாளம். தன்னை அழகாக வைத்துக்கொள்வதிலும் தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்வதிலும் அக்கறையுடன் இருப்பார். எழுத்தாளன் என்கிற கம்பீரம் அவரது முகத்திலும் உடல்மொழியிலும் எப்போதும் ததும்பி நிற்கும்.

‘எழுத்து, இசை, கலை, பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானேயன்றி வேறு எதற்கும் இல்லை. அன்பால் இணைந்து, அன்பால் புரிந்துகொண்டு, அன்பே பிரதானமாக ஓர் உலகத்தை உருவாக்கும் ஒரு தொழிலை நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனிதகுலம் அன்பினால் மட்டுமே தழைக்கும் என்பதே என் செய்தி’ என்று அவரது வலைதளத்தில் எழுதியிருப்பார். அதுவே நமக்கான அவரது வாழ்வின் செய்தியும்கூட!

-  ச.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism