Published:Updated:

`பொதுப் புத்தியிலிருந்து தனித்து சிந்திக்க புத்தகங்கள் அவசியம்!’ - பாலாஜி சக்திவேல்

`பொதுப் புத்தியிலிருந்து தனித்து சிந்திக்க புத்தகங்கள் அவசியம்!’ - பாலாஜி சக்திவேல்
`பொதுப் புத்தியிலிருந்து தனித்து சிந்திக்க புத்தகங்கள் அவசியம்!’ - பாலாஜி சக்திவேல்

``மனிதனைப்போல்தான் புத்தகமும் வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு. அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த, இன்றைக்கும் படைத்துவரும் மற்ற பொருள்கள் போன்று, அது ஒரு `பொருள்' மட்டுமல்ல” - மாக்சிம் கார்க்கி.

சமூகங்கள், புத்தகங்களின் கைப்பிடித்து நடக்கின்றன. சமூகமாற்றம், புரட்சி, வளர்ச்சி போன்றவற்றில் புத்தகங்கள் தவிர்க்க முடியாதவை. காலங்களின் சுழற்சியில் ஒவ்வொரு கருத்தும் இந்த உலகை ஆக்கிரமித்திருக்கிறது. கருத்துகள் உருவாவதிலும், ஆக்கிரமிப்பதிலும் புத்தகங்கள் அடிப்படையாக இருக்கின்றன. புரட்சியாளர்கள் அனைவருமே புத்தகங்களால் வளர்ந்தவர்கள் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்கின்றன.

`காதல்', `கல்லூரி', `வழக்கு எண் 18/9' போன்ற படங்களால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநர் பாலாஜி சக்திவேல், ``நான் எழுத்தாளனோ, பேச்சாளனோ அல்ல. சினிமாவைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது" என்ற சினிமாக்காரன், நம்மிடம் புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

``வாசிப்பு ஏன் முக்கியமானது?"

``புத்தகங்கள் வாசிப்பதை வெறுத்தவன் நான். நல்லா விளையாடுவேன், ஊர் சுற்றுவேன், சிட்டுக்குருவி மாதிரி இருப்பேன். மாக்சிம் கார்க்கியினுடைய தாய் நாவலை ஒருமுறை படித்தேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. நாம் பார்ப்பது மட்டுமே உலகமல்ல. இன்னோர் உலகமும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன்.  டால்ஸ்டாய், துர்கனேவ், தாஸ்தாவெஸ்கி என்று அயல்நாட்டு இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தேன். இப்படியாக என்னுடைய வாசிப்பு தொடங்கியது.

செய்திகள் வழியாக பல விஷயங்கள் நமக்குள் சேர்ந்துவிடுகின்றன. ஒவ்வொரு விஷயத்தையும் ஆரம்பத்தில் நம்முடைய சொந்த கண்ணோட்டத்தில்தான் அணுகுகிறோம். அந்தச் செய்தி தொடர்பாக வரும் கட்டுரைகளின் வழியாக அதுகுறித்த பல்வேறு கருத்துகளைப் படிக்கிறோம். எது உண்மை? எது பொய்? என்பதைப் புத்தகங்களை வாசிக்காமல் கண்டுபிடிக்க முடியாது. அனுபவத்தின் வழியாகவே ஒவ்வொன்றையும் அணுக முடியும். வாசிப்பு, மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறது; நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள தூண்டுகிறது. சுயமாகச் சிந்திக்க, சுயத்தைத் தெரிந்துகொள்ள புத்தகங்களைப் படித்துதான் ஆகவேண்டும். படிக்கும்போதுதான் நிறைய விஷயங்களைப் பேச முடியும். பொதுப்புத்தியிலிருந்து விடுபட்டுத் தனித்துச் சிந்திக்க, புத்தகங்கள் அத்தியாவசியமானவை.''

``நீங்கள் வாசகர்களுக்குப் பரிந்துரைக்கும் புத்தகங்கள்?"

``1) `காலம், ஒரு வரலாற்றுச் சுருக்கம்' - ஸ்டீஃபன் ஹாக்கிங்

காலம் பற்றிய அரிய கருத்துகளை ஸ்டீஃபன் ஹாக்கிங் இதில் முன்வைத்திருக்கிறார். அறிவியல் சார்ந்து விரிவான கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் இது. இந்தப் புத்தகம், பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில், நலங்கிள்ளி மொழிபெயர்த்துள்ளார். எதிர் வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.

2) சினிமா, கலையாவது எப்போது? - ராஜன் குறை

இந்தப் புத்தகம், நல்ல படங்களை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும். ஒரு சிறந்த வழிகாட்டி. ஆழ்மனதில் இருக்கும் சில விஷயங்கள் எப்படி கலையாக மாறுகின்றன என்பதை உளவியல்ரீதியாகச் சொல்கின்றன இந்தக் கட்டுரைகள். அவசியம் வாசிக்கப்படவேண்டிய புத்தகம். உயிர்மை பதிப்பகம், இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

3) மௌனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா

கோவையில் நடந்த மதக்கலவரங்களை, அதன் கொடூரங்களை அடிப்படையாகவைத்து எழுதப்பட்ட நாவல். இது வலி, துயரம், உயிர் பற்றி மிக ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறது. வன்முறைகளால் தொலைந்துபோகும் வாழ்க்கை பற்றிய சாட்சியாக, ஆவணமாக மௌனத்தின் சாட்சியங்கள் இருக்கின்றன. பொன்னுலகம் பதிப்பகம், இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

4) ஸ்டெர்லைட் போராட்டம், அரசு வன்முறை - உ. வாசுகி

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பற்றி, களத்துக்குச் சென்று ஆய்வுசெய்யப்பட்டு எழுதிய உண்மை அறியும் குழுவின் அறிக்கைதான் இந்தப் புத்தகம். மிக முக்கியமான ஆய்வாகவும் ஆவணமாகவும் உள்ளது. பாரதி புத்தகாலயம் இதை வெளியிட்டுள்ளது.

5) பெரியார் - இன்றும் என்றும்

சாதி, மதம், சமூகம், தேசியம் பற்றி பெரியார் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. விடியல் பதிப்பக வெளியீடு.

6) அரசியல் பேசும் அயல் சினிமா - இ.பா.சிந்தன்

அனைவரும் பார்க்கவேண்டிய படங்களைப் பற்றிய புத்தகம். அடிப்படையாக நாம் பயன்படுத்தும் பொருள்கள், உணவு ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அரசியலைப் பேசும் படங்களை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. சினிமா ப்ரியர்கள் மட்டுமின்றி, அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம். இதை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

7) இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை

இட ஒதுக்கீடு சார்ந்த முற்போக்குப் பார்வைகளை முன்வைக்கும் புத்தகம். சமூக அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம். இதை, கீழைக்காற்றுப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.''