Published:Updated:

தடை செய்யப்பட்ட தமிழ் நூல்கள்

தடை செய்யப்பட்ட தமிழ் நூல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தடை செய்யப்பட்ட தமிழ் நூல்கள்

வீ.அரசு படங்கள் : எஸ்.தேவராஜ்

ச்சு ஊடகம் நடைமுறைக்கு வந்த காலம் முதல், ஒரு குறிப்பிட்ட கருத்திற்கு எதிராகக் கண்டன நூல் எழுதும் மரபு தமிழில் உருவானது. ஆனால், அரசு அதிகாரத்தின்கீழ் அச்சு ஊடகம் வந்த பிறகு, அரசுக்கு எதிராக எழுதப்படும் புத்தக வடிவிலான எழுத்துகளைத் தடைசெய்யும் வழக்கம் உருவாயிற்று.  தடைசெய்வதில் பல அடிப்படையான அம்சங்கள் உள்ளன- ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் என்று கருதித் தடைசெய்வது, ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினருக்கு உகந்ததாக இல்லை என்று தடைசெய்வது, ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துகிறது என்ற நோக்கில் தடைசெய்வது, குறப்பிட்ட தேசிய இனத்தைத் தவறாக விமர்சிப்பது என்று தடைசெய்வது, மிகப் புகழ்வாய்ந்த ஆளுமைகள் குறித்துத் தவறான சித்திரிப்புகளை மேற்கொண்டிருப்பதாகக் கருதித் தடைசெய்வது, ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எழுதுவது என்று தடைசெய்வது என்று இது நீள்கிறது.

  இருபதாம் நூற்றாண்டில், பாரதி எழுத்துகளுக்கே முதன்முதலில் தடைவிதிக்கப்பட்டது. டிசம்பர் 6, 1911-ல், பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் நூலுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நூலில், சாதிப் பிரிவுகளுக்கு எதிராகவும் சமய முரண்பாடுகள் குறித்தும் பாரதி எழுதினார். ‘ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது.  மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது.” இந்தச் சிறிய நூலில் பாரதி பிரம்ம சமாஜத்தில் ஈடுபாடுகொண்ட இளைஞனைப் பற்றிப் பேசுகிறார். அவ்விளைஞன்மூலம் மடாதிபதிகள், சன்னிதானங்கள் ஆகியோரை விமர்சனம் செய்கிறார். ‘நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால், நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?’ என்று கேட்கிறார் பாரதி. ‘ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்துவம் எனும் கொள்கைகளை நிலை நிறுத்துவது என்றால் அது ஸாதாரண வேலையா?’ என்றும் இந்தப் புத்தகத்தில் பாரதி பேசுகிறார்.   ‘எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்பு சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய் விடுவார்கள்’ என்றும் பாரதி கூறுகிறார். பாரதி பேசியுள்ள கருத்துகள் தடைசெய்யும் அளவுக்கு தவறானதாகப் படவில்லை. ஆனால், பாரதியின் எழுத்துகளை மொழிபெயர்த்து, பிரித்தானியருக்குக் கொடுத்தவர்கள் இந்தக் கருத்துகளுக்கு உடன்பாடு இல்லாதவர்களாக இருந்திருக்க வேண்டும். பிரித்தானிய அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பாரதியைக் கண்டிக்க இது ஒரு சாக்காயிற்று.

தடை செய்யப்பட்ட தமிழ் நூல்கள்

பாரதி உயிரோடு இருந்தபோது, அவருக்குத் தடைவிதித்ததுபோல் இறந்த பின்பும் பாரதி பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. 1928-ல், இரட்டை ஆட்சிமுறை நடைமுறையில் இருந்தபோது,  ‘சுயராச்சியக் கட்சி’, ‘நீதிக்கட்சி’ ஆகியவை செல்வாக்குடன் இருந்தன. பாரதியின் பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டபோது, சட்டசபையில் அதை எதிர்த்து 76 பேரும், ஆதரித்து 12 பேரும், நடு நிலைமையாக 15 பேரும் வாக்களித்தனர். சுமார் இரண்டாயிரம் பாரதியாரின் பாடல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  பின்னர், அடுத்த ஆண்டில், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் தடை நீக்கப்பட்டு, திருப்பிக் கொடுக்கப்பட்டன.  இவ்வாறு, பாரதிதான் தமிழ் நூல் தடைகள் வரலாற்றில் முதன்மையானவராக இருக்கிறார். பின்னர் அவரது தாசனான, பாரதிதாசன் எழுதிய ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நூலுக்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து திராவிட இயக்கச் சார்பாக அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’, ‘கம்ப ரசம்’, ‘தந்தை பெரியாரின் பொன்மொழிகள்’, ‘புலவர் குழந்தையின் இராவண காவியம்’ போன்ற பல நூல்களுக்கு அரசு தடைவிதித்தது. பெரியார் ராமாயண எதிர்ப்பு என்பதைச் சுயமரியாதை இயக்க வேலைத்திட்டமாகவே நடைமுறைப் படுத்தினார். அவருடைய கருத்தைப் பின்பற்றிய புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’ 1948-ல் தடைசெய்யப்பட்டது.  ஆரியர் - திராவிடர் என்ற கருத்துநிலை ராமாயணத்தில் பேசப்படுவதாகவும் அதில் திராவிடர் என்ற தேசிய இனம் இழிவு படுத்தப்படுவதாகவுமே ‘இராவண காவியம்’ எழுதப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட இத்தடையை, கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின், 17.5.1971-ல் நீக்கினார். தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில், திராவிட இயக்கம், அதற்கு எதிர்நிலை என்ற கருத்தாக்கச் செயல்பாடுகளுக்கும் தமிழ் நூல்கள் தடைவிதிக்கப்பட்ட வரலாற்றுக்கும் நெருக்கமான உறவு உண்டு.  அதைப்போல காந்தியின் பாலுறவுப் பரிசோதனை குறித்த  தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘முதலிரவு’ என்ற நாவலும் தடைசெய்யப்பட்டது.

இந்திய தேசிய விடுதலை, திராவிட இயக்கம், காந்தியம் ஆகிய கருத்துநிலைகள் சார்ந்து தடைசெய்யப்பட்ட மரபு என்பது, அண்மைக் காலங்களில் சாதியத் தன்மைகள் சார்ந்தவையாக மாறியுள்ளன. மதுரை வீரனின் உண்மை வரலாறு என்று குழந்தை ராயப்பன் எழுதிய நூல் 2013-ல் தடைசெய்யப்பட்டது. இந்த வரிசையில்  கே.செந்தில் மள்ளர் என்பவரால் எழுதப்பட்ட ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ எனும் நூல் அதே ஆண்டில் தடை செய்யப்பட்டது. இந்த நூல்களில் ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் குறித்த பெருமை பேசப்படுகிறது. வேறு சில சாதிப் பிரிவினர் விமர்சனம் செய்யப்படுகின்றனர்.  இத்தன்மைகள் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 153-A மற்றும் 153 - B ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தப் பின்புலத்தில், இந்த நூல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தடை செய்யப்பட்ட தமிழ் நூல்கள்

காட்சி ஊடகம், ஓவியம் ஆகிய பிறவற்றிலும் தடைசெய்யப்பட்ட வரலாற்றை நாம் அறிகிறோம். அந்தவகையில், அச்சு ஊடகங்களான இதழ்கள், புத்தகங்கள் தடைசெய்யப்படுவதும் நிகழ்கிறது.

தமிழ் நூல்கள் தடைசெய்யப்பட்ட வரலாற்றிற்கும் தமிழ்ச் சமூகத்தில் உருவான பல்வேறு சமுக இயக்கங்களுக்குமான தொடர்பையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.  தடைசெய்யப்படுவது என்பது, அண்மைக்காலங்களில் பல புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது.  அரசாங்கமே தடைசெய்வது என்ற நிலைக்கு மாறாக, தனிப்பட்ட சாதிக் குழுக்கள், சமயக் குழுக்கள் ஆகியவை தாங்களே நேரடியாகக் களத்தில் இறங்கி நூல்களைத் தடைசெய்யக் கோருகின்றன. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நூலுக்கு இக்கதி நேர்ந்தது. தமிழ்நாடு முழுதும் இத்தன்மைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  சமூகத்தில் உள்ள இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்குமான முரண்பாடுகள் இவ்வகையான செயல்களின் மூலம், பொதுவெளியில் அரங்கேறுவதை நாம் பார்க்கிறோம்.