Published:Updated:

“சாமான்யனாகக் கூட சுதந்திரமாக வாழ முடியாது!”

“சாமான்யனாகக் கூட சுதந்திரமாக வாழ முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சாமான்யனாகக் கூட சுதந்திரமாக வாழ முடியாது!”

புலியூர் முருகேசன்

“சாமான்யனாகக் கூட சுதந்திரமாக வாழ முடியாது!”

“உண்மையில் உங்களுக்கு என்னதான் நடந்தது?”

“என்னுடன் 25 வருட நட்பிலிருந்த ஒரு தமிழ்த் தேசிய உணர்வுள்ள ஆசிரிய நண்பரிடம், எனது சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தேன். ஒரு கதையில் அவருடைய சாதி குறிப்பிடப் பட்டிருப்பதைப் பார்த்துக் கொந்தளித்து, நூற்றுக் கணக்கில் அதைப் பிரதியெடுத்து எல்லோரிடமும் கொடுத்து என் மீதான எதிர்ப்பைக் கட்டமைத்தார். ஊர்ப் பெரியவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசி, குறிப்பிட்ட தேதியில் ஊர்க்கோயிலுக்கு வந்து வருத்தம் தெரிவிக்கச் சொல்லியிருந்தனர். இதனிடையே, சாதிச் சங்கத் தலைவர்கள் ஊதிப் பெரிதாக்க, ஒரு பகற்பொழுதில் நானும் என் மனைவியும் மட்டும் வீட்டிலிருக்கையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதி இளைஞர்கள் வீட்டினுள் புகுந்து என்னைத் தாக்கத் தொடங்கினர். அதில் முதலாவதாக அடித்தவர்கள், என்னுடைய பால்ய காலத்து நண்பர்கள் என்பதுதான் விநோதம். கதறி அழும் என் மனைவியின் கண்முன்னே என் தலையை உடைத்து ரத்தம் வரவைத்தவர்கள், காருக்குள் தூக்கிப்போட்டுக் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். பின்னாலேயே நூற்றுக்கணக்கான பைக்குகளில் இளைஞர்கள். மயங்கிக் கிடந்த என்னைத் தண்ணீர் தெளித்து எழுப்பி மீண்டும் அடித்தனர். ஒவ்வொரு இடமாக மாற்றி மாற்றி காரை ஓட்டிச்சென்று அடித்துத் துவைத்தனர். வேப்பமரக் கிளைகளை முறித்து வட்டமாக நின்றுகொண்டு, விடாமல் அடித்தனர். கூலிப்படைக்குத் தகவல் சொல்லிவிட்டதாகவும் ஆள் வந்துகொண்டிருப்பதாகவும் பேசிக்கொண்டனர். இடையில் எப்படியோ காவல்துறைக்குத் தகவல் போய், கார் ஓட்டியவரை அவர்கள் தொடர்புகொண்டு மிரட்ட, கடைசியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் என்னை உருட்டிவிட்டுத் தப்பித்தனர். அதன்பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் புலியூரில் வாழும் சூழல் இல்லாததால் தஞ்சைக்கு வந்துவிட்டேன். நான்கு வருடங்கள் முடியப்போகின்றன.

“சாமான்யனாகக் கூட சுதந்திரமாக வாழ முடியாது!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“ஒரு படைப்பில் எல்லாவற்றையும் நேரடியாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”

“நேரடியாகச் சொல்ல வேண்டியவற்றை நேரடியாகச் சொல்லலாம். மறைபொருளாகச் சொல்ல வேண்டியிருப்பின் அப்படிச் சொல்லுதலே நல்லது.”

“அந்த சம்பவத்திற்குப் பிறகு, ஒரு படைப்பாளியாகச் சுதந்திரமாகச் செயல்படுவதாக, எழுதுவதாக நினைக்கிறீர்களா? உள்ளுக்குள் தடையுணர்வு ஏதும் உள்ளதா?”

“இல்லை. சுதந்திரமாகச் செயல்படச் சாத்தியமில்லை. இருந்திருந்தால், இந்நேரம் ஒரு முறையாவது புலியூருக்குச் சென்று வந்திருப்பேன். அதற்கு வாய்ப்பில்லாத சூழல் இருக்கும்போது, படைப்பாளியாக மட்டுமல்ல, ஒரு சாமான்யனாகக்கூட சுதந்திரமாக வாழ முடியாது.”

“அந்த வகையில் கிராம அமைப்பு, நகரத்தைவிட சிக்கலானது, ஆபத்தானது என்று கருதுகிறீர்களா?”

“ஒருவகையில் சரிதான். கிராமங்களில் இன்னும் சாதியப் பெருமிதங்கள் கெட்டித்துக் கிடப்பதால், லேசாகக் கீறினாலும் கொந்தளிப்பு நிகழ்கிறது. இன்னொன்று, கிராமமானாலும் நகரமானாலும் ஒரு குழுவாகச் சாதியப் பெருமிதர்கள் வசிக்கும் இடங்களில் பிரச்னை எழத்தான் செய்யும்.”

“அந்தப் பிரச்னையின்போது உங்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவு கிடைத்தது?”

“பல காலமாகப் பழகிவந்த உள்ளூர், வெளியூர் நண்பர்கள் ஓர் ஆதரவுச் சொல்லுமின்றி, தங்கள் கூடுகளுக்குள் பதுங்கிக்கொண்டார்கள். ஆனால், முற்போக்கு அமைப்புகளும் படைப்பா ளுமைகளும் இலக்கிய இதழாளர்களும் தங்களது ஒட்டுமொத்த ஆதரவைத் தெரிவித்துக் காத்துநின்றனர். ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’, படைப்பாளியின் மீதான தாக்குதலைக் கண்டித்து உடனடியாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இன்ன பிற முற்போக்கு இலக்கிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தனர். தி.மு.க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்தன.”

“சாமான்யனாகக் கூட சுதந்திரமாக வாழ முடியாது!”

“தமிழ்ச் சூழலில், ஒருவர் எழுத்தாளராக இருப்பதையே பெரும்பாலும் குடும்ப அமைப்பு விரும்பாது. இவ்வளவு பிரச்னைக்குப் பிறகும், எழுத்தாளராகத் தொடரும் உங்களுக்கு குடும்பத்தினர் எவ்வளவு பக்கபலமாக இருக்கிறார்கள்...”

“என் குடும்பம் எனக்குப் பெரிய பலம். இந்தப் பிரச்னை, சமூகம் பற்றிய சரியான புரிதலை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் வழங்கியிருக்கிறது. யார் உடனிருப்பார், யார் விலகிச் செல்வார் என்பதைக் கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் கண்டுவருகிறோம். எழுத்தை மட்டுமே நம்பி வாழும் வாழ்க்கையின் மீதுதான் குடும்பத்தாருக்குச் சற்று வருத்தம். ஆனாலும், புதிய தோழமைகள் வாழ்வதற்கான நம்பிக்கையை அதிகரித்து வருகின்றனர்.”

 படம்: ம.அரவிந்த்