Published:Updated:

சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!

சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!

இந்திரன்

“எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது நான் எப்படிச் சாக வேண்டும் என்பதைத்தான் இத்தனை காலமும் கற்று வந்திருக்கிறேன்.” -  லியோனார்டோ டாவின்ஸி

செத்துப்போனவர்கள் வசதியான வீரர்கள், அவர்களைப் பற்றி நாம் ஜோடித்துக் காட்டும் பொய்களை மறுப்பதற்காக அவர்கள் தங்கள் கல்லறையிலிருந்து எழுந்து வரப்போவதில்லை. எனவே, நாம் நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நிம்மதியாக நம் குழந்தைகளுக்குப் போதிக்கலாம், ‘அவர் மிகப்பெரிய மனிதர்’ என்று.

பிரபஞ்சன் என்ற எழுத்தாளரைப் பற்றி நினைத்துப் பார்க்கிறபோது, அவரது மிகப்பெரிய சாதனை என்று நான் கருதுவது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் படித்த வைத்தியலிங்கம் சாரங்கபாணி, ‘பிரபஞ்சன்’ என்று கொண்டாடப்படும் ஒரு நிஜ எழுத்தாளராக மலர்ந்ததுதான்.

உண்மைதான். அவரை நான் முதன் முதலாக சந்தித்தது, 1983-ல் பாண்டிச்சேரியில் பாரதி வீதியிலிருந்த ‘பாரதி டுடோரியல்ஸ்’ எனும் நிறுவனத்தில் மக்குப் பையன்களுக்கும், பெண்களுக்கும் தமிழ்ப்பாடம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த ஓர் ஆசிரியராகத்தான்.

மிருதுவாகப் பேசும் மனிதர் அவர். நடப்பதுகூட எங்கே கொஞ்சம் அழுந்தி நடந்தால் பூமிக்கு வலித்துவிடுமோ எட்டுவைப்பவர். பாண்டிச்சேரியில் கள்ளுக்கடை வைத்திருந்த ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர், ஒரு முழுநேர எழுத்தாளராக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, தனது 73 வது வயது வரை எழுத்தைத் தன் வாழ்க்கையாக வைத்திருந்தவர். பிரமிளா ராணி என்பவரை மணம்புரிந்து மூன்று மகன்களைப் பெற்ற பிரபஞ்சன் குடும்பம், பதவி, பணம், சொத்து என்று அதிகம் கவலைப்பட்டதில்லை. ‘பிரபஞ்ச கவி’ என்று கவிதையில் தொடங்கிய இவரது வாழ்க்கை, ‘பிரபஞ்சன்’ என்று சுருங்கிய வடிவத்தில் புனைகதை உலகிற்கு வந்து பரவலான கவனம் ஈர்ப்பதாக மாறியது. தனது 50 வயதிலேயே ‘சாகித்ய அகாதமி’ விருதினை ‘வானம் வசப்படும்’ எனும் தனது நூலுக்காகப் பெற்றார்.

சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!

பிரபஞ்சனைப்போலவே பாண்டிச்சேரியில் பிறந்தவன் நான் என்ற வகையில், பிரபஞ்சன் எனக்கு மிகவும் கவர்ச்சிகரமாகவே தென்பட்டு வந்திருக்கிறார். குறிப்பாக, பிரபஞ்சனைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனது நினைவுக்கு வருவது, மலையாள நாவலாசிரியர் கேசவதேவ் எழுதிய ‘கண்ணாடி’ எனும் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம்தான். அந்தக் கதாபாத்திரத்துக்கு ‘காற்று’ என்று பெயர் சூட்டியிருந்தார் கேசவதேவ். நாவல் முழுவதும் நடமாடும் அந்தக் கதாபாத்திரம் சுவடு காட்டாமல் வரும். பல உதவிகள் செய்யும், மறைந்துவிடும். பிரபஞ்சனும் அப்படித்தான்.

அவர் பாண்டிச்சேரி, சென்னை எனப் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார். சென்னையில் நான் படித்த கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரிலிருந்த ஒரு தெருவின் மாடியில், ஸ்டார் தியேட்டர் பக்கத்தில், மேற்கு மாம்பலத்தில், ஆழ்வார் திருநகரில், பீட்டர்ஸ் காலனியில் என்று அவர் வாழ்ந்திராத பகுதிகளே இல்லை என்று சொல்லலாம். பெரும்பாலும் எல்லா வாரப் பத்திரிகைகளிலும் அவர் வேலை செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி வேலை செய்யும் இடங்களில் அவர் பட்ட அவமானங்களைப் பற்றி பெரும்பாலும் பகடியாகவே பேசுபவர் அவர். ஆனால், ஒரு வாரப் பத்திரிகையில் அவர் வேலை செய்தபோது, அந்தப் பத்திரிகையில் அப்போது பிரபலமாக இருந்த நடிகை அம்பிகாவின் பெயரில் கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரபஞ்சன், அதைத் தன்னை அவமானப்படுத்தும் ஒரு முயற்சியாகவே நினைத்தார். போதாக்குறைக்கு அந்தப் பத்திரிகையில் வெளியிடுவதற்காக வைத்திருந்த நடிகைகளின் புகைப்படங்களில், எதை வெளியிடலாம் என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வேலை அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பற்றி என்னிடம் மிகவும் வேதனைப்பட்டுப் பேசினார்.  “எனக்குப் பிடிக்காத வங்கி வேலையில் நான் இருப்பதுபோல இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று நான் சொன்னபோது, தான் முன்னரே தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டதைச் சொல்லிச் சிரித்தார். அது மட்டுமல்ல, அந்த ராஜினாமா கடிதத்தில்,  ‘பஞ்சாங்கம்போல நடத்தப்படும் ஒரு பத்திரிகையில் என்னைப் போன்ற கலைஞர்கள் வேலைசெய்ய முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லி அவருக்கே உரிய தன்மையோடு சிரித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!

பணம் சார்ந்த மதிப்பீடுகள் மட்டுமே ஆட்சி செய்யும் இந்த உலகில், அவர் பணத்தையும் அதிகார பீடங்களையும் அசட்டை செய்யும் ஒருவராகவே இருந்தார்.

பிரபஞ்சனின் வீடு, பாண்டிச்சேரியில் பாரதி வீதியில் இருந்தது. அங்கு அடிக்கடி செல்லும் ஒருவனாக இருந்த நான், அவரின் அப்பாவைச் சந்தித்திருக்கிறேன். பிரபஞ்சன் அவரது அப்பாவை வெகுவாக நேசித்தார். பிரபஞ்சனின் கதைகளில் அந்த அப்பா அடிக்கடி பிரவேசித்திருப்பதன் மூலம், அப்பாமீது அவர்கொண்ட நேசத்தை அவரின் வாசகர்கள் எளிதில் உணர முடிந்தது.

ஒருமுறை எனது ‘அன்னியன்’ நவகவிதைத் தொகுப்பு பற்றி வண்ணதாசன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்,  ‘பிரபஞ்சனின் கதைகளில் அடிக்கடி வரும் அப்பா போலவும் மீன் குழம்பு போலவும் உங்கள் கவிதைகளில் கடல் அடிக்கடி வருகிறது’ என்று வண்ணதாசன் எழுதியிருந்தார்.

பிரபஞ்சன், ‘மீன்’ என்று ஒரு சிறப்பான கதை எழுதியிருக்கிறார். பாண்டிச்சேரிக்காரன் என்ற வகையில் நான் சொல்ல விரும்புவது இதுதான், காலை நேரத்தில் பாண்டிச்சேரியில் யார் வீட்டுக்குப் போனாலும், அங்கே மீன் ஆய்ந்துகொண்டிருப்பார்கள். பிரபஞ்சன்   ‘சுதும்பு’ எனும் பத்திய மீன் குழம்பை ருசித்துச் சாப்பிடும் அழகே தனி. பிரபஞ்சன், தனது சிகரெட்டை மிருதுவாகத் தட்டுவது எப்படி ஒரு தனித்துவமானதோ, அதேபோல்தான் புதிதாக ஒரு சட்டையை வாங்கி அதை உடனே அணிந்துகொள்வதும்.

பலமுறை புத்தம் புதுச் சட்டையில் விலை அட்டையை எடுக்காமலேகூட அணிந்துகொள்ள நேரிடும். நானே இலக்கியக் கூட்டங்களில், புத்தகக் கண்காட்சிகளில் எல்லாம் புத்தாடையிலிருக்கும் அட்டையைப் பிய்த்துப் போட்டிருக்கிறேன்.

சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!

ஒரு பூவை ரசிப்பது மாதிரி வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த பிரபஞ்சன், ஆச்சர்யமான வகையில் பணமும் சந்தர்ப்பவாதமும் ஆட்சி செய்யும் இந்த உலகத்தில் எப்படித் தாக்குப்பிடித்தார் என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

பிரபஞ்சனின் பாண்டிச்சேரியும் எனது பாண்டிச்சேரியும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்ததுதான். என்னைவிட அவர் மூன்று வயதுதான் பெரியவர். பணம் சார்ந்த மதிப்பீடுகள் என்னைத் தன் காலடியில் போட்டு மிதித்துவிடக் கூடாது என்பதற்காக, என் இயல்புக்குப் பொருந்தாத வங்கி வேலையில் சரண் புகுந்தேன். ஆனால், பிரபஞ்சன் ஒரு மாவீரனைப்போல் வாழ்க்கையை ஓர் எழுத்தாளனாகவே எதிர்கொண்டார். பிரெஞ்சு எழுத்தாளர் ‘ஆல்பெர் காம்யு’ ஒருமுறை சொன்னதுதான் இங்கே நினைவுக்கு வருகிறது. “சுதந்திரமில்லாத இந்த உலகத்தை எதிர்கொள்வதற்கான ஒரே வழி, முழுக்க முழுக்க சுதந்திரமாக வாழ்ந்து காட்டுவதுதான். அப்படி ஒரு சுதந்திர புருஷனாக வாழத் தொடங்குகிறபோது, நமது வாழ்க்கையே ஒரு கலகச் செயல்பாடாக மாறிவிடுகிறது.”

பிரபஞ்சன், அந்தவகையில் தனது மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படாமல் இருந்ததின் மூலமாக ஒரு மாபெரும் கலகக்காரராக வாழ்ந்துகாட்டியிருக்கிறார். அவர் பல நேரங்களில் பல இலக்கியக் கூட்டங்களுக்கும் திருமணங்களுக்கும் வருகிறேன் என்று சொல்லுவார். அவரது பயணச் சீட்டுகள் அவர் கையில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ‘வருகிறேன்’ என்ற அவரது சொல்லைப் பலமுறை தவறவிட்டிருக்கிறார். கேட்கும்போது, நமது மனதை நோகடிக்காத ஒரு காரணத்தைச் சொல்லுவார். மனதுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதைத்தான் அவர் தனது வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

அவரது புனைகதைகள் அன்பையும் மனிதாபிமானத்தையும் இலட்சியவாதத்தையும் உயர்த்திப் பிடித்தன. அதனால்தான், தமிழகத்தில் காலில் விழும் கலாசாரத்தை எதிர்த்து அவரால் குரல் கொடுக்க முடிந்தது. சக எழுத்தாளர்களிடம் - மூத்தவர்களாக இருந்தாலும், இளையவர்களாக இருந்தாலும் - அவர், தான் ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டதில்லை. அதேபோல், யாரையும் தனது முன்னுதாரணமாகவும் அவர் கொண்டதில்லை என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில், யாரையும் அவர் விமர்சனமின்றி கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதில்லை. நான் மட்டுமில்லை, யார் அவரோடு பழகியபோதும், அவர்களைச் சரிக்குச் சமமாகவைத்து அவர்களின் தோள்மீது கைபோட்டு நடப்பவராகவே பிரபஞ்சன் எப்போதும் இருந்திருக்கிறார்.

சுதந்திரனாய் வாழ்ந்த கலகக்காரர்!

எல்லா விலங்குகளும் தங்களது பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து எடைபோடும் தேவையற்று வாழ்கின்றன. ஆனால், மனிதன் எனும் உயிரினம் மட்டும் தன்னைத்தானே சர்வசதா காலமும் எடைபோட்டு எடைபோட்டு வாழ்வதின் மூலமாகக் குற்றவுணர்ச்சியில் விழுந்து குமைகிறது. பிரபஞ்சனின் இறுதி நாள்கள் மிகவும் துயரமானவை. கேன்ஸர் நோயில் விழுந்து, பாண்டிச்சேரியின் மணக்குள விநாயகர் மருத்துவமனையில், அவர் பெற்ற மகன்போலப் பக்கத்திலிருந்து கவனித்த பி.என்.எஸ்.பாண்டியனோடு நான் பிரபஞ்சனைப் பார்த்தேன். ஆபத்தான நிலையில் கட்டிலில் படுத்திருந்தார். ஆனால், அந்தத் துயரநிலையிலும் ஓர் அப்பழுக்கற்ற புன்னகையை வீசி என்னை வரவேற்றார். “எனக்கு ரொம்பத் திமிர் இந்திரன். பாண்டிச்சேரியின் வரலாற்றை நான் எழுத வேண்டியிருக்கு. அதுமட்டுமல்ல எனக்கு எழுத இன்னும் நிறைய கதைகள் இருக்கு. அதுக்காகவாவது நான் புகைபிடிப்பதைக் குறைத்திருக்கலாம்” என்றார். ஆனால், இப்போது பிரபஞ்சனே பாண்டிச்சேரியின் வரலாறாக மாறிவிட்டார்.

எழுத்தாளர்கள் சாகிறபோது, அவர்களுக்குள் இருக்கும் உலகங்களும் சாகின்றன!

- ஓவியம்: பிரேம் டாவின்ஸி
படம்: க.பாலாஜி