Published:Updated:

``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்?’’ - வைரமுத்து ஆதங்கம்!

``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்?’’ - வைரமுத்து ஆதங்கம்!
``தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்?’’ - வைரமுத்து ஆதங்கம்!

`மதுவால் தமிழர்களை மாய்த்துவிட்டு, தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும் எனக் கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் அமைந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து இல்லத்தில் தமிழர் திருநாளும், திருவள்ளூவர் தினமும் கொண்டாடப்பட்டது. அவர் வீட்டின் அருகே பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழறிஞர்களும் திரையுலக நண்பர்களும் வெற்றித்தமிழர் பேரவையினரும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, ``விபத்துகளுக்கெல்லாம் காரணம் மது என அறியப்படுகிறது. தற்கொலைக்குக் காரணம் மது என அறியப்படுகிறது. நோய்களுக்கெல்லாம் காரணம் மது என அறியப்படுகிறது. குடும்பச் சிதைவுகளுக்குக் காரணம் மது என்று அறியப்படுகிறது. குழந்தைகள் அநாதையாவதற்குக் காரணம் மது என அறியப்படுகிறது.

நான் கிராமத்தான். அடிக்கடி கிராமத்துக்குச் சென்று வருபவன்; கிராமத்தில் வாழ்கிறவன். எனக்குத் தெரிந்து, கிராமத்தில் 50, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிக மிகக் குறைந்துபோனார்கள். மூத்தவர்கள் இல்லை; நரைந்தவர்கள் இல்லை. வழிகாட்டக்கூடிய தாத்தாக்கள் இல்லை. ஒருகாலத்தில், முதியவர்கள் எண்ணிக்கை கிராமம் முழுக்க நிறைந்திருந்தது. கிராமத்தில் இன்று முதிவர்கள் இல்லை. 50 வயதுக்குள் மதுப் பழகத்தால் மாண்டுபோனவர்களின் எண்ணிக்கை கிராமத்தில் அதிகமாகியிருக்கிறது. தமிழர்களை மாய்த்துவிட்டு; தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்?’’ என்றார். 

அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு, ``இதற்கு முன்பிருந்த அரசும் சரி, இப்போது உள்ள அரசும் சரி, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. அந்த முடிவை அரசு எடுத்தால் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள்'’ என்றார். தொடர்ந்து, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தமிழக அரசின் பெரியார் விருது, ஆளும் அ.தி.மு.க-வினர்களுக்கே கொடுத்துள்ளார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ``தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்'' என்றார்.