Published:Updated:

மதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலைசெய்த அண்ணன் - திருப்பூரில் பரபரப்பு

மதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலைசெய்த அண்ணன் - திருப்பூரில் பரபரப்பு
மதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலைசெய்த அண்ணன் - திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் செல்வம் நகரில் வசித்துவருகிறார்கள், தர்மராஜ் காமாட்சி தம்பதி. இத்தம்பதிக்கு பிரகாஷ் மற்றும் விக்னேஷ் என 2 மகன்கள். இதில் மூத்த மகன் பிரகாஷுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. சகோதரர்கள் இருவரும் கட்டட வேலைக்குச் சென்று வந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரக் காலமாக தம்பி விக்னேஷைக் காணவில்லை என்று நேற்று முன்தினம் திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அண்ணன் பிரகாஷ். பின்னர் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விக்னேஷைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சின்னக்கரை ஓடை என்ற பகுதியில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்களுடன் ஒரு ஆண் சடலம் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த சடலத்தைக் கைப்பற்றி சோதனையிட்டதில், அந்தச் சடலம் காணாமல்போன விக்னேஷ்தான் என்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, தம்பியைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்த பிரகாஷிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார். இதனால் அவர்மீதே சந்தேகமடைந்த காவல்துறையினர், அடுத்தடுத்து பிரகாஷிடம் தீவிரமாக  விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதாவது, "கடந்த வாரம் மது போதையில் இருந்த தம்பி விக்னேஷ், தாயைப் பற்றி தவறாகப் பேசியிருக்கிறார். இதனால், சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், விக்னேஷ் வீட்டை விட்டு வெளியேறியுமிருக்கிறார். தொடர்ந்து தம்பியைக் காணாமல் தேடிவந்த பிரகாஷ், நேற்று முன்தினம் அவரைத் தொடர்புகொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டதால், இருவரும் ஒன்றாக சின்னக்கரை ஓடை பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். ஆள் அரவமற்ற அப்பகுதியில் அமர்ந்து இருவரும் மது அருந்திக்கொண்டு இருந்தநிலையில், விக்னேஷ் மீண்டும் தனது தாயையும், பிரகாஷின் மனைவியையும் பற்றி தவறாகப் பேசியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் பிரகாஷ், அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து விக்னேஷின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.  உடைந்துபோன பாட்டிலை எடுத்து விக்னேஷின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். சம்பவத்தில் விக்னேஷ் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துபோக, பின்னர் அங்கிருந்து தப்பிவந்த பிரகாஷ், தன் மீதான கொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்கவே தம்பியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது அண்ணன் பிரகாஷை கைதுசெய்திருக்கும் காவல்துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.