Published:Updated:

எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி

எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி

- மருதன், ஓவியம் : வேலு

எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி

- மருதன், ஓவியம் : வேலு

Published:Updated:
எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி

முள்ளம்பன்றியின் மேலுள்ள முட்கள் போல உடலிலுள்ள மொத்த அணுக்களும் அதிர்ந்து விழித்துக்கொண்டன. ஆனால், தோப்தி திரும்பவில்லை. அவள் நடந்து கொண்டிருந்தாள். ஒரு பெண் சோறு வடித்துக் கொடுத்திருந்தாள். வடிந்த சோறு ஆறியவுடன் சிறிதளவு எடுத்து இடுப்புத் துணியில் முடிந்து எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் தோப்தி. இப்போது அவள் காட்டுக்குள்ளிருக்கும் கேம்புக்குச் சென்றாக வேண்டும். 

‘தோப்தி!’ தன் பெயரைச் சொல்லி யார் அழைத்தாலும் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று அவளுக்குத் தெரியும். தோப்தி மேஜேனைப் பிடித்துக்கொடுத்தால் சர்கார் 200 ரூபாய் பணம் கொடுப்பார்களாம். அதற்காக ஆசைப்பட்டு யாராவது பின் தொடர்கிறார்களா? நான் தோப்திதான் என்பதை உறுதி செய்துகொள்வதற்காக என்னை அழைத்துப்பார்க்கிறார்களா? வேட்டை விலங்குகளைப் போல சுற்றிக்கொண்டிருக்கும் வீரர்களிடம் சிக்கிக்கொண்டால் என்னாகும் என்று தோப்திக்குத் தெரியும். அவளுக்குத் தெரிந்த ஒரு பையனைக் கட்டிப்போட்டு, ஒவ்வொரு எலும்பையும் நொறுக்கியிருக்கிறார்கள். பிறகு ‘கௌண்டர்’ பண்ணிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். அதற்குள் அவன் நாக்கைக் கடித்துத் துப்பிவிட்டான்.

தோப்திக்கு இது மறுவாழ்வு. கடந்த முறை பெரிய தொரையின் ஆள்கள் நடத்திய கௌண்டரில் பல பழங்குடிகள் செத்து விழுந்துவிட்டனர். அதில் தோப்தியும் இருந்தாள். உடலெல்லாம் ரத்தம் வழிய அப்படியே மூச்சைப் பிடித்துக்கொண்டு அவள் சடலங்களோடு படுத்துக்கிடந்தாள். காவலர்கள் நகர்ந்ததும் எழுந்து ஓடி வந்துவிட்டாள். பெரிய தொரை திரும்பிவந்து உடல்களை எண்ணியபோது, அவருக்கு பெரிய தலைகுனிவாகப்போய்விட்டது. ஒரு புழுவைப் போல அவர் துடித்தார். தோப்தி, தோப்தி என்று அரற்றத் தொடங்கினார். அவர் உடலும் கெட்டுப்போனது.

எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி

‘தோப்தி!’ இந்த முறை குரல் சற்று அருகில் ஒலிப்பதுபோல இல்லை? இது என்னுடைய போரல்ல. என் மூதாதையர்களின் நூற்றாண்டு காலப் போர். என் நரம்புகளில் ஓடுவது கலப்படமற்ற சம்பா பூமி சந்தால்களின் குருதி. தன் இடும்பில் பிறை போல தொங்கிக் கொண்டிருந்த அரிவாளை இதமாகத் தொட்டுப் பார்த்துக்கொண்டபடி நடந்தாள் தோப்தி. இதோ கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கேம்ப் வந்துவிட்டது. ஆனால், தோப்தி அந்த வழியில் செல்லாமல் வேறு வழியில் நடக்கத் தொடங்கினான். ஒரு காக்கை இன்னொரு காக்கையைத் தின்றாலும் தின்னும்; ஒரு சந்தால் இன்னொரு சந்தாலைக் காட்டிக்கொடுக்க மாட்டாள்.

‘ஹால்ட்...’ தோப்தி சட்டென்று நின்றாள். எல்லாம் முடிந்துவிட்டது. ‘தனது இரண்டு கைகளையும் உயர்த்தி, வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தி, காட்டின் பக்கம் திரும்பிக் கொள்கிறாள். பிறகு, உடல், உயிர், ஆவி மூன்றையும் ஒருங்கே இணைத்து, தனது சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி, ஓவென்று ஓலமிடுகிறாள். ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை ஓலம் வெடித்தெழுந்தபோது, ஜாட்கானி காட்டின் விளிம்புகளிலிருந்த மரங்களில் வசிக்கும் பறவைகள் உறக்கம் கலைந்து சிறகடித்துக்கொண்டு பறக்கின்றன. ஓலத்தின் எதிரொலி வெகுதூரம் செல்கிறது.’

ஹாஸ்வேதா தேவி தனது கதையை  இத்துடன் நிறைவு செய்யவில்லை. பிடிபட்ட பிறகு தோப்தி என்னவாகிறாள் என்பதையும் சொல்லிவிட்டுதான் நகர்கிறார். நம் இதயத்தைப் பிளந்துபோடும் அந்தப் பகுதியை மஹாஸ்வேதா தேவி ஏன் எழுதினார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் அவரையும் நாம் புரிந்துகொள்ளவேண்டி யிருக்கிறது.

மஹாஸ்வேதா தேவியோடு உரையாடுவது மயக்கமூட்டும் அனுபவமாக இருக்கும் என்கிறார், ஆய்வாளர் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக். பேசிக்கொண்டிருக்கும்போதே இடைநிறுத்தி, பாடத் தொடங்கிவிடுவார். கேட்பதற்கு இனிமையான, ரசிக்கும்படியான சொற்கள் மட்டும்தான் அவர் வாயிலிருந்து வரும் என்றில்லை. கூச்சத்தோடு காதுகளைப் பொத்திக்கொள்ளும்படியான சொற்களைக் கூட அவர் சிரித்தபடியே பாடலுக்குள் வேடிக்கையாக நுழைத்துவிடுவார். சொற்கள், மனிதர்கள், வாழ்க்கை என்று எதையும் அவர் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.

இனிமையான, மகிழ்வூட்டும் கதைகளை வாசிக்க விரும்பும் ஒருவர் மஹாஸ்வேதாவை அணுகவேண்டியிருக்காது. தூக்கிவாரிப் போடும் வரிகளை, உங்களை வெட்கத்திலும் அவமானத்திலும் தள்ளும் சொற்களை அவர் இயல்பாக எழுதிச்செல்வார். ஒரு சில பக்கங்களுக்குள் அடங்கிவிடும் ஒரு கதைகூட, காலாகாலத்துக்கும் உங்களை உறங்கவிடாமல், உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கும்... திரௌபதியைப் போல.

மஹாஸ்வேதாவின் படைப்புகளில் இதயப் பகுதியாகப் பழங்குடிகளின் வாழ்வியல் அமைந்திருக்கிறது. தீராத வேட்கையோடு நெருங்கிச் சென்று அவர்களுடைய மொழி, பண்பாடு, வாய்வழிக் கதைகள், பாடல்கள், போராட்டங்கள் அனைத்தையும் பல்லாண்டுகள் ஆராய்ந்து, கற்றுக்கொண்டவர் அவர். அவர்களுடைய  சிக்கல்களை, வலிகளை, வதைகளை இழுத்துவந்து நம் உலகத்தின்மீது வீசி நம்மை துணுக்குறச்செய்தவர் அவர். மேற்கு வங்கம், புரூலியா மாவட்டத்தில் உள்ள சாபர் பழங்குடி மக்கள் மஹாஸ்வேதாவைத் தங்களுடைய தாய் என்றே அழைக்கிறார்கள்.

மஹாஸ்வேதாவின் கதைகள், விஷ அம்புகளைப் போல புறப்பட்டுவந்து நம்மைத் தாக்குகின்றன. `இந்தியா, இந்தியா என்கிறாயே... உன் இந்தியாவில் வாழும் பழங்குடிகளின் நிலை என்னவென்று தெரியுமா உனக்கு? அவர்கள் ஏன் விலங்குகளைப் போல வேட்டையாடப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவாவது முயன்றாயா? உன் ஜனநாயகம் ஏன் அவர்களுடைய காடுகளில் காலாவதியாகிப்போனது? வன்முறை, வன்முறை என்று கூச்சலிடுகிறாயே, உன் அரசின் கரங்களில் அழுத்தமாகப் படிந்திருக்கும் ரத்தக்கறையை என்றாவது நீ பார்த்ததுண்டா?  எதையும் தெரிந்துகொள்ளாமல் அந்த ரத்தக்கறை படிந்த கரங்களோடு கை குலுக்கிக்கொண்டு, அவர்கள் உன் காதுகளில் கிசுகிசுக்கும் கதைகளை நம்பிக்கொண்டு, அவர்களைப் போலவே நீயும் நெஞ்சம் நிமிர்த்தி, தொண்டை நரம்புகள் புடைக்க ‘மாவோயிஸ்டுகள்’ என்று கத்துகிறாயே? அவர்களைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?'

மஹாஸ்வேதா தேவி (1926-2016) டாக்காவில் பிறந்தவர். தாகூரின் சாந்திநிகேதனில் படித்து ஆங்கிலத்துறையில் பட்டம் பெற்றவர். எழுதியது வங்க மொழியில். நூறுக்கும் அதிகமான நாவல்கள், இருபதுக்கும் அதிகமான சிறுகதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. தந்தை மணிஷ் கட்டக்கிடமிருந்து கவித்துவமான எழுத்தையும் அம்மா தாரித்ரி தேவியிடமிருந்து (அவரும் எழுத்தாளர்தான்) சமூக அக்கறையுடன்கூடிய உலகக் கண்ணோட்டத்தையும் மஹாஸ்வேதா பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். சாகித்ய அகாடமி, மகசாசே, பத்ம விபூஷண், ஞானபீடம் என்று விருதுகளைக் குவித்துக்கொண்டதல்ல; இந்தியா முழுவதிலுமுள்ள 150 பிரிவுகளைச் சேர்ந்த இரண்டரை கோடி பழங்குடி மக்களின் குரலாக உருவெடுத்ததுதான் அவருடைய சாதனை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி

னி மிச்சக்கதை.  மாலை ஆறு மணிக்கு தோப்தி ‘அப்ரிஹெண்ட்’ ஆனாள். அதற்குப் பிறகு சாந்தல் பெண்ணான தோப்தியை, அவளுடைய அசலான சம்ஸ்கிருதப் பெயரைக் கொண்டு அழைக்கத் தொடங்குகிறார் மஹாஸ்வேதா தேவி.

‘ஒரு லட்சம் ஒளி வருடங்களுக்குப் பிறகு திரௌபதி கண்ணைத் திறக்கிறாள். என்ன அதிசயம்! வானையும் சந்திரனையும்தான் முதலில் பார்க்கிறாள். பிறகு, அவளுடைய மனதிலிருந்து ரத்தம்தோய்ந்த நகநுனிகள் நகர்ந்து நகர்ந்து செல்கின்றன. தான் அசைய முயன்றபோது, கால்களும் கைகளும் கட்டில் கால்களில் கட்டப்பட்டிருப்பதை உணர்கிறாள். ஆசனத்திலும் இடுப்பிலும் இது என்ன ‘பிசுக் பிசுக்’ என்று? அவளுடைய ரத்தம். வாயில் சுருட்டி அடைக்கப்பட்ட துணி மட்டும் இப்போது அங்கில்லை. தாங்க முடியாத தாகம். ‘தண்ணீர்’ என்று கேட்க வாயை அசைக்க முயன்ற கணத்திலேயே பற்களால் கீழ் உதட்டைக் கடித்து வார்த்தையை விழுங்குகிறாள்... எத்தனை பேர் தன்னைப் புணர்ந்திருப்பார்கள்... கண்களின் ஓரத்தில் நீர் சுரந்தபோது வெட்கமடைந்தாள்... எத்தனை பேர்? நான்கு? ஐந்து? ஆறு? ஏழு?’

சிறிது நேரம் கழித்து மீண்டும் அவள் ‘கவனிக்கப்படுகிறாள்.’ முடிந்ததும், அவள் மீது ஆடையை எடுத்து வீசுகிறார்கள். தண்ணீர் தருகிறார்கள். வா பெரிய தொரை கூடாரத்துக்கு. ‘திரௌபதி எழுந்து நிற்கிறாள். குவளையை உடைத்து தண்ணீரைத் தரையில் கொட்டுகிறாள். தன் துணியைப் பல்லால் கடித்துக் குதறுகிறாள். இந்த அதிசய நிகழ்ச்சியைக் கண்ட சென்ட்ரி, ‘பைத்தியமாயிட்டா, பைத்தியமாயிட்டா’ என்று கூச்சலிட்டுக் கொண்டே மேலிட ஆணைக்காக ஓடுகிறான்.’

கூச்சலைக் கேட்டு  தொரை வெளியில் வருகிறார். ‘இதெல்லாம் என்ன?’ ரத்தம் வடியும் தொடையோடு திரௌபதி நின்றுகொண்டிருக்கிறாள். ‘இடுப்பில் கைளை வைத்துக்கொண்டு சிரிக்கிறாள். நீ தேடிக்கிட்டு இருந்தியே அந்த தோப்தி மேஜேன் நான்தான்.’

`எங்கே இவள் துணி, இவள் உடலை மறையுங்கள்' என்று தொரை பயத்துடன் பின்வாங்குகிறார். திரௌபதி ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். ‘சிரிக்கச் சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக் கெடுக்கிறது. அந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு, வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள். ‘துணி என்ன துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால முடியும். ஆனா, என்னை திரும்ப உடுத்த வைக்கமுடியுமா உன்னால?’

திரௌபதியின் ரத்தம் படிந்த கரிய உடல் தொரையை நெருங்குகிறது. ‘நான் பார்த்து வெட்கப்படவேண்டிய ஆம்பிள இங்க யாருமில்ல. என்மேல் துணியைப்போட எவனையும் விட மாட்டேன். வா, என்னை கௌண்டர் பண்ணு... வா...’

திரௌபதியின் கடைசிப் பத்தி இது. ‘தனது ஆயுளில் முதன்முறையாக ஒரு நிராயுதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஓர் அமானுஷ்ய பயம்.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism