தொடர்கள்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

2018-ம் ஆண்டுக்கான ‘ஆனந்த விகடன் - நம்பிக்கை விருதுகள் விழா’ சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

தலையங்கம்

எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள் என வெவ்வேறு களங்கள், வெவ்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களை ஒன்றிணைத்து, அவர்களை அங்கீகரித்து, அடையாளப்படுத்தி விருதுகள் வழங்குவது இந்த விழாவின் தனிச்சிறப்பு. அரசு மற்றும் பெருநிறுவனங்களின் அங்கீகாரம் இல்லாமல் களத்தில் இயங்குகிற மனிதர்களை அங்கீகரிப்பது என்பது, ஓர் ஊடகத்தின் முதன்மையான கடமை என்ற அளவில், இந்த விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அரசு உள்ளிட்ட அதிகார மையங்களை எதிர்த்து மக்களுக்காக எழுதுபவர்கள், பேசுபவர்கள், களத்தில் செயல்படுபவர்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பது, சூழல் யதார்த்தமாக இருக்கிறது. ஒருபுறம் சட்டரீதியிலான நெருக்கடிகள், இன்னொருபுறம் கருத்துச் சுதந்திர மறுப்பும் அச்சுறுத்தலும் எனும் சூழலில், அர்ப்பணிப்பும் நீதியுணர்வும் கொண்டவர்களுக்கு விருதளித்து கவனப்படுத்த வேண்டியது அவசியம். இது அவர்களை மட்டும் அங்கீகரிப்பது அல்ல, அவர்களின் பணிகளை, அதற்கான சூழலை அங்கீகரிப்பதும்தான் என்ற புரிந்துணர்வு முக்கியமானது.

குறிப்பாக, தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலும், போராட்டத்திற்கு எதிரான அரசு வன்முறைக்கெதிரான உணர்வுகளைப் பதிவுசெய்யும் வகையிலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட தருணத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில் அரங்கமே கலங்கியது. 2018 என்ற ஆண்டை இந்த வரலாற்றுத் துயரத்தை நினைவுகூராமல் கடந்துவிட முடியாது எனும் உண்மை எல்லோரையும் சுட்டது. கவனிக்கப்படாத மனிதர்களைக் கௌரவிப்பது, கலை இலக்கியத் தளங்களில் செயல்படுபவர்களைக் கொண்டாடுவது என்ற இரண்டு செயல்பாடுகளும் இந்த விருது விழாவின் அடிப்படை.

பன்மைத்துவம் என்ற கருத்தாக்கமே கேள்விக்குள்ளாக்கப்படும் இச்சூழலில், இந்த விழாமேடையும், விருதாளர்கள் மற்றும்  பார்வையாளர்கள் வரிசையும் பன்மைத்துவத்தைப் பிரதிபலித்தன. வெவ்வேறு விதமான உணர்வுத் தருணங்களாலான ‘நம்பிக்கை விருதுகள் விழா’, தமிழகத்தின் சமகால உயிர்ப்புள்ள சூழலைப் பிரதிபலித்தது. செயல்வீரர்களுக்கு எம் வணக்கம்!

-  ஆசிரியர்