தொடர்கள்
Published:Updated:

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

இந்திரா பார்த்தசாரதிசந்திப்பு : வெ.நீலகண்டன், ச.அழகு சுப்பையா, விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: கே.ராஜசேகரன்

ரை நூற்றாண்டுகளாகத் தமிழைப் பற்றி நடைபோடும் எழுத்துக் கலைஞர் இந்திரா பார்த்தசாரதி. நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆய்வு என எழுத்தின் எல்லா வடிவங்களிலும் பங்களித்தவர். கூர்மையான அரசியல் பார்வையும் அங்கதமும்கொண்ட மொழியால், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல் அசைவுகளைப் பதிவுசெய்த படைப்பாளி. சமீபத்தில், ஆனந்த விகடனின் ‘பெருந்தமிழர் விருதுபெற்றார். 88 வயதிலும், உற்சாகமாக கம்ப்யூட்டரில் டைப் செய்து, ‘கிண்டிலி’ல் கதைகள் வாசித்துக்கொண்டிருக்கிற மூத்த ஆளுமையை ஓர் அதிகாலையில் சந்தித்து உரையாடினோம்...

“ ‘மணிக்கொடி’ கால எழுத்தாளர்கள் பலர் வாழ்ந்த ஊரில் வளர்ந்திருக்கிறீர்கள். அது உங்கள் வாசிப்புப் பழக்கத்துக்கு எந்தளவுக்கு உதவியாக இருந்தது?”

“நான் சென்னையில் பிறந்தவன். வளர்ந்ததெல்லாம் கும்பகோணத்தில். அந்தவகையில், கும்பகோணத்தோடு எனக்கு நெருக்கமான மனத்தொடர்பு உண்டு. ஆனால், ‘மணிக்கொடி’ காலம் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. வாசிப்புப் பழக்கம், ஆசிரியர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும்தான் வந்திருக்க வேண்டும். நான் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பெல்லாம் படிக்கவில்லை. என்னை நேரடியாக ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அப்போது அதை ‘ஃபர்ஸ்ட் ஃபார்ம்’ என்பார்கள். பள்ளியில் சேர்ந்தபோது, எனக்கு ஒன்பது வயது. ஃபர்ஸ்ட் ஃபார்ம் ஆசிரியராக இருந்தவர், ஷேக்ஸ்பியர் கதைகளையெல்லாம் படித்துக்காட்டுவார். அதில் ஏற்பட்ட ஈர்ப்பு, வாசிப்புக்குக் காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் அம்மாவும் பாட்டியும் நிறைய வாசிப்பார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஏ.ஆர்.ரங்கராசு போன்றோர் எழுதுகிற துப்பறியும் கதைப் புத்தகங்கள் வீட்டில் நிறைந்திருக்கும். பாட்டிக்குக் கதைகளை நான்தான் வாசித்துக் காட்டுவேன். ஒரு மணி நேரம் வாசித்தால், ஓரணா கொடுப்பார். அந்தக் காலத்தில் அந்தக் காசுக்கு ஒரு மசாலா தோசை சாப்பிட்டு, ஒரு காபியும் குடித்துவிடலாம். அப்பா, நிறைய சம்ஸ்கிருதப் புத்தகங்கள் வாசிப்பார். வைஷ்ணவக் குடும்பம் என்பதால், வீட்டில் திவ்யபிரபந்தம் மாதிரி நிறைய இலக்கியங்கள் இருந்தன. அதையெல்லாம் படித்தே ஆக வேண்டும். தவிர, எனது சகோதரர் வெங்கடாச்சாரி இடதுசாரி அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர். அவர் மார்க்ஸ், லெனின் புத்தகங்கள் நிறைய வாசிப்பார். படிப்படியாக அதையெல்லாம் நானும் வாசிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் என் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது.”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“அந்தக் காலகட்டத்தில் உங்கள் சகோதரர் இடதுசாரி அமைப்பில் செயல்பட்டதைக் குடும்பம் எப்படி எடுத்துக்கொண்டது?”

“ ‘வீணாக் கெட்டுப்போயிட்டான்’ என்றுதான் சொன்னார்கள். (சிரிக்கிறார்). வெங்கடாச்சாரி, கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக இருந்தார். கல்லூரியில் படித்தபோது, யூனியன் ஜாக் கொடியை அகற்றிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்றியதற்காகக் கைதுசெய்து, 15 நாள்கள் சிறையில் அடைத்துவிட்டார்கள். அதைக் கண்டித்து, கல்லூரியில் ஸ்ட்ரைக் எல்லாம் நடந்தது. அப்போது நான் பள்ளிக்கூட மாணவன். அந்தக் காலகட்டத்திலேயே இடதுசாரி சிந்தனையோட்டம் எனக்குள்ளும் வந்துவிட்டது. ஆனால், நான் களத்துக்குப் போகவில்லை. இன்னொரு செய்தி,  வெங்கடாச்சாரி எழுத்தாளரும்கூட.  அவர் எழுதிய ‘வீரையனின் வஞ்சம்’ என்ற கதை, இப்போதும் என் நினைவில் நிற்கிறது. பின்னர், அவர் ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸி’ல் ஆசிரியராகச் சேர்ந்துவிட்டார்.”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”“தி.ஜானகிராமனின் மாணவர் நீங்கள். அவருடனான உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...”

“கும்பகோணத்தில், டவுன் ஹை ஸ்கூலில் படித்தேன். அங்கு தி.ஜானகிராமன் ஆசிரியராக வேலைசெய்தார். எஸ்.எஸ்.எல்.சி-க்கு இங்கிலீஷ் பாடம் எடுத்தார். படிக்கும் காலத்தில் ஆசிரியர் என்ற உறவு தாண்டி, பெரிதாக எந்தத் தொடர்பும் இல்லை. கு.ப.ராஜகோபாலன் நடத்திய ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் ‘அமிழ்தம்’ என்று ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தார்; வாசித்திருக்கிறேன். தவிர, அவரைப் பற்றி எழுத்தாளராக அப்போது வேறு எதுவும் நான் அறிந்திருக்க வில்லை. நான் வேலையில் சேர்ந்தபின், எழுதிய எனது கதையொன்று ‘கல்கி’யில் வந்திருந்தது. அந்தக் கதை பற்றிக் கருத்து கேட்பதற்காக அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அப்போது அவர் சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ‘உன்னைப் பள்ளியிலிருந்தே எனக்கு நல்லாத் தெரியும். இங்கிலீஷ்லயும் தமிழ்லயும் நல்லா மார்க் வாங்குவே. இந்தக் கதையைப் படித்தபோது, நீ யார் என்று யோசித்துக் கண்டுபிடித்து விட்டேன்’ என்று பதில் எழுதியிருந்தார். டெல்லிக்கு வந்த பிறகுதான், அவரோடு நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்தது; மாதாமாதம் சந்திப்போம். படித்த புத்தகங்களைப் பற்றி விவாதிப்போம். ஆதவன், க.நா.சு., சம்பத், வாஸந்தி எல்லோரும் இருப்பார்கள். என்னுடைய ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ நாவலுக்கு அவர்தான் முன்னுரை எழுதினார்.”

“கும்பகோணத்திலிருந்த காலத்தில் அங்கிருந்த இலக்கியவாதிகளோடு உங்களுக்கு பரிச்சயம் இருந்ததா?”

“டவுன் ஹை ஸ்கூலுக்கு எதிரில் ஒரு டீக்கடை இருந்தது. அதை நடத்தியவருக்கு 18 வயதுக்குள்தான் இருக்கும். ‘தொண்டர் கடை’ என்று அதை அழைப்பார்கள். அதை நடத்திவந்தவர் தீவிரமான இலக்கிய ரசிகர். அவர் கடையில்தான் தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு,

ந.பிச்சமூர்த்தி எல்லோரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தக் கடை ‘ரைட்டர்ஸ் கிளப்’ மாதிரி இருக்கும். அதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு யாருடனும் பெரிய நட்பு இருந்ததில்லை. கரிச்சான் குஞ்சு-வைத் தெரியும். தி.ஜானகிராமனை ஆசிரியர் என்ற அளவில் தெரியும். கு.ப.ரா-வை என் அண்ணனுக்குத்தான் தெரியும். க.நா.சு-வை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பார்த்திருக்கிறேன். பல்கலைக் கழகத்திற்கு அருகில் அவர் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். நகுலன்தான் அவரை அறிமுகம் செய்துவைத்தார். நகுலன் என்னுடைய வகுப்புத் தோழரும்கூட. அவ்வளவுதான்...”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“முதல் சிறுகதை எழுதிய சூழல் நினைவிருக்கிறதா?”

“கும்பகோணத்தில் கி.ரா.கோபாலன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். அவரும், ‘தொண்டர் கடை ரைட்டர்ஸ் கிளப்’பில் ஒரு ஆள். இளவயதிலேயே இறந்துவிட்டார். ‘கல்கி’ நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில், முதல் பரிசு வாங்கியவர். கும்பகோணத்தில் ‘ஜெயமாருதி வாசகசாலை’ என்ற ஒன்றை நடத்தினார். அதன்மூலம் ஒரு கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒரு கதை எழுதினேன். என் ஞாபகப்படி, அதுதான் என் முதல் கதை. கணவனை இழந்த ஒரு பெண்ணைப் பற்றியது அந்தக் கதை. அந்தக் காலத்தில் அக்ரஹாரத்தில் இதுமாதிரி நிறைய பெண்கள் இருப்பார்கள். ‘மணி பன்னிரண்டு அடித்தது. கடிகார முட்கள் ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருந்தன. நான் மட்டும்..?’ என்று அந்தக் கதையின் முதல் வரி தொடங்கும். இதுதான் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக் கதையை எழுதியபோது, எனக்கு 15 வயது.”

“உங்கள் அண்ணன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். நீங்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டது உண்டா?”

“எனக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டம் என்றதும் ஒரு சம்பவம் எப்போதும் என் நினைவுக்கு வந்துவிடும். அப்போது பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் வீட்டுக்கு அருகிலிருந்த காந்தி பூங்காவில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டம் நடந்தது. அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களெல்லாம் பயந்து அருகிலிருந்த ஹோட்டலுக்குள் நுழைய முயன்றார்கள். ஆனால், அந்த ஹோட்டல் முதலாளி, ‘யாரும் உள்ளே வரக் கூடாது’ என்று கதவை மூடினார். அதற்குள் எல்லோரும் உள்ளே நுழைந்துவிட்டார்கள். போராட்டம் எல்லாம் முடிந்து சுதந்திரம் கிடைத்த பிறகு, அந்த ‘மகானை’ தியாகி ஆக்கிவிட்டார்கள் (சிரிக்கிறார்).

நான் அமெரிக்காவில் இருந்தபோது, இந்தச் சம்பவத்தைவைத்து ஆனந்த விகடனில் ஒரு கதை எழுதினேன். அதில், அந்த ஹோட்டல் முதலாளி தியாகியாகி...அரசியல்வாதியாகி... மந்திரியாகவும் ஆகிவிடுவார்.”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“சுதந்திரப் போராட்டம் அன்று அடித்தட்டு மக்கள் மத்தியில் சென்றுசேரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?”

“எப்போதும் ஏணியின் மேலே இருப்பவர்களுக்குக் கிடைக்கும் சௌகர்யங்கள், ஏணியின் கீழ்ப்படியில் இருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. காந்தி, காங்கிரஸ் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். நான் காந்தியை நேரில் பார்த்திருக்கிறேன். காந்தி எப்போதும் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். ஆனால், அது சிறப்பு ரயில். சரோஜினி நாயுடு ‘It’s very expensive to keep you poor’ என்று வேடிக்கையாகச் சொல்வாராம். ஆனால், அடித்தட்டு மக்கள் காந்தியை நம்பினார்கள். அவர் பின்னால் நின்றார்கள்.  ‘காந்தியின் அஹிம்சைப் போராட்டம் அப்போது எடுபட்டதுபோல இப்போது எடுபடுமா?’ என்ற கேள்வி எழும். ஆங்கிலேயருக்கு அடிப்படையான கண்ணியம் இருந்ததால் அது ஜெயித்தது. இன்று அதற்கெல்லாம் வாய்ப்பில்லை.”

“நகுலன் உங்கள் வகுப்புத் தோழர்... அவருக்கும் உங்களுக்குமான நட்பு பற்றிச் சொல்லுங்கள்...”

“1950-52 காலகட்டத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை படித்தேன். அப்போது, நகுலனும் நானும் வகுப்புத் தோழர்கள். அவர் என்னைவிட ஐந்து ஆண்டுகள் மூத்தவர். வங்கியில் வேலை பார்த்துவிட்டுப் பின்னர் தமிழ் படிக்க வந்தவர். எனக்கும் அவருக்கும் புத்தகங்கள் வாசிப்பதில் பெரிய விருப்பம் என்பதால், நட்பு ஏற்பட்டது. இருவருக்குமே ஆங்கிலத்தில் புலமை உண்டு. அந்தக் காலத்தில் பிராமணப் பையன் தமிழ் எம்.ஏ படிப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், தமிழ் படிப்பது என்னுடைய தேர்வுதான். ஆங்கிலத்தை எப்படியும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், தமிழிலிருக்கும்  தொல்காப்பியம், சேனாவரையம், நச்சினார்க்கினியரை எல்லாம் முறையாகப் படித்தால்தான் மண்டையில் ஏறும்.  அதனால்தான், தமிழ் படிக்கச் சேர்ந்தேன். என்னுடைய அப்பா, நீண்டகாலமாக நான் ஆங்கிலம்தான் படிக்கிறேன் என்றே நினைத்துக்கொண்டிருந்தார் (சிரிக்கிறார்).

இதையெல்லாம் நான் ‘வேர்ப்பற்று’ என்ற என்னுடைய சுயசரிதை நாவலில் எழுதியிருக்கிறேன். கிட்டத்தட்ட என்னைப்போலவேதான் நகுலனும். நாங்கள் இருவரும் அன்றைய காலகட்டத்தில் விசித்திரமானவர்களாகப் பார்க்கப்பட்டோம். நகுலன் நிறைய டைரி எழுதுவார். ஆனால், காட்டமாட்டார்.”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி ஆனதன் பின்னணி என்ன?”

“நான் எழுதிய காலகட்டத்தில் மு.வரதராசன் தவிர வேறு யாரும் தமிழில் நவீன இலக்கியத்தின் பக்கம் வரவில்லை. மு.வரதராசன் நவீன இலக்கியம் படைத்தாலும்கூட, அவர் தமிழாசிரியர் என்பது அவரது எழுத்தைப் பார்த்தால் வெளிப்படையாகத் தெரியும். எனக்கு இரண்டு அவதாரங்கள் தேவைப்பட்டன. ஒன்று, நவீன இலக்கியப் படைப்பாளி. மற்றொன்று, ‘நச்சினார்க்கினியரைத் தவிர வேறொன்றுமறியேன்’ என்ற முகம். நவீன இலக்கியப் படைப்பாளிக்குத் தனியாக ஒரு பெயர்சூட்ட வேண்டியிருந்தது. என் பெயர் மாற்றத்துக்கு இரண்டு சம்பவங்கள் காரணமாக இருந்தன. ‘ஆனந்த விகட’னில் அப்போது ஜெயகாந்தன் மாதிரி எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டி ருந்தார்கள். நாமும் எழுதிப் பார்க்கலாமே என்ற எண்ணம். ‘மனித எந்திரம்’ என்ற ஒரு சிறுகதையை அனுப்பினேன். அந்தக் கதைதான் நான் எழுதி, பிரசுரத்துக்கு அனுப்பிய முதல் கதை. அது ‘ஆனந்த விகட’னில் முத்திரைக் கதையாக வெளியானது. இதழை வாங்கி, எனது நண்பர் ஆறுமுகத்திடம் காண்பித்தேன். ஆறுமுகம், ‘நச்சினார்க்கினியரைத் தவிர தமிழில் எவனுமே இலக்கியம் படைக்கவில்லை’ என்று வாதிடக்கூடிய ஆள். கதையின் தலைப்பைப் படித்துவிட்டு, என்னை நக்கலாகப் பார்த்து, ‘இப்படியெல்லாம் வேற ஆரம்பிச்சுட்டீங்களா?’ என்று ஏதோ செய்யக் கூடாத காரியத்தைச் செய்துவிட்டதைப்போலக் கேட்டார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், சொந்தப் பெயரில் எழுதக் கூடாது என்று பெயர் மாற்றம் பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். அந்தத் தருணத்தில் என் மனைவி ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அது ஒரு அழுத்தமாக மனதில் இருந்தது. அதனால், மனைவி பெயரை இணைத்து, புனைபெயர் வைத்துக்கொண்டேன். இப்போது அவள் இல்லை எனும்போது, இந்தப் பெயருக்குக் கூடுதல் அர்த்தம் உருவாக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.”

“1947, ஆகஸ்ட் 15 அன்று எங்கிருந்தீர்கள்... உங்கள் மனநிலை எப்படியிருந்தது?”

“வழக்கம்போலக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். நள்ளிரவில் சுதந்திரச் செய்தியைச் சொன்னார்கள். ஒரே கொண்டாட்டமாக இருந்தது.  நிறைய கனவுகள் கண்டோம். ‘இந்தியா நிச்சயம் முன்னேறிவிடும்’ என்று நம்பினோம். காரணம், நேருவிடம் பொறுப்பு தரப்பட்டதுதான். அவரின் கனவுகள்தாம் இந்தியாவின் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள். பட்டேல் உட்பட யார் வந்திருந்தாலும் இது சாத்தியமாயிருக்காது. ஏனென்றால், அதற்கு நவீன சிந்தனையும் வேண்டுமல்லவா!”

“இடதுசாரி படைப்பாளிகள் வரும்வரை தஞ்சாவூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அப்பகுதியின் சமூகப் போராட்டங்கள், வாழ்வியல் பிரச்னைகள் பற்றி எழுதவேயில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?”

“பத்திரிகைகளைப் பொறுத்தவரை வாசகர்களின் ஆதரவு முக்கியம். அவர்களை வாங்கவைக்க வேண்டும். எல்லா பத்திரிகைகளின் நிலைப்பாடும் அதுதான். அந்தக் காலத்தின் மத்தியதர வாசகர்கள் பிராமணர்கள். பத்திரிகைகளை நடத்தியவர்களும் பிராமணர்கள்தாம். சுதந்திரத்துக்குப் பிறகு, கொஞ்சம் புதிய வாசகர்கள் வந்தார்கள். அதேபோல, அப்போதைய எழுத்தாளர்களைப் பார்த்தாலும் புதுமைப்பித்தன்,
சு.சண்முகசுந்தரம் போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து மற்றவர்கள் பிராமணர்கள்தான். அதனால், அவர்கள் சார்ந்த பிரச்னைகளைத்தான் எழுதினார்கள். ந.பிச்சமூர்த்தி, அடித்தட்டில் இருப்பவர்களைப் பற்றி சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், அவர் கவிஞராகத்தான் இங்கே பார்க்கப்படுகிறார். கதைகள் அதிகம் கவனிக்கப்படவில்லை.”

“திருச்சி, டெல்லி, வார்ஸா, புதுவை என உங்கள் பணிக்காலச் சூழல் பற்றிச் சொல்லுங்கள்?”

“கல்லூரியில் முதல் வகுப்பு பெற்றிருந்தும் தமிழகத்தில் வேலை கிடைக்கவில்லை. அப்போது, கல்லூரிகளும் அதிகம் கிடையாது. அண்ணனைப்போல பத்திரிகையாளராகிவிடலாம் என்று மும்பைக்குச் சென்று வேலை தேடினேன். வேலை கிடைப்பதற்கான சூழல் இருந்தது. அப்போது திருச்சியிலிருந்து ஒரு தந்தி வந்தது. திருச்சி நேஷனல் கல்லூரி, பிராமணர் கல்லூரி என்பதால், தமிழ் கற்றுக்கொடுக்க பிராமண ஆசிரியரைத் தேடியிருக்கிறார்கள். என்னை யாரோ பரிந்துரைக்க, ‘உடனே வந்து வேலையில் சேரவும்’ என தந்தி அனுப்பியிருந்தார்கள்.  பத்திரிகை வேலையா, ஆசிரியர் வேலையா என்று குழப்பம். முடிவில், திருச்சிக்கு வந்து கல்லூரியிலேயே சேர்ந்துவிட்டேன். எனக்கு முன் அந்த இடத்தில் வேலை செய்தவர், நகுலன். என் வாழ்க்கை மூன்று திருப்பங்களால் தீர்மானிக்கப்பட்டது என்று நான் சொல்வேன். முதல் திருப்பம், திருச்சி நேஷனல் கல்லூரிக்கு வந்தது. அந்தக் கல்லூரி ரொம்பவே ஆசாரமாக இருந்தது. என் போக்குக்கு அது பொருந்தவில்லை. அப்போது, ஜனாதிபதியாக இருந்த ரா.வெங்கட்ராமன்,  கல்லூரிக்கு வந்திருந்தார். அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. அவர் ‘என்ன சம்பளம் வாங்குற?’ என்று கேட்டார். நான், ‘149 ரூபாய்’ என்றேன். ‘டெல்லியில் உள்ள தமிழ்ப் பள்ளியில் 250 ரூபாய் சம்பளம்... அங்கு வருகிறாயா?’ என்று அழைத்தார்.  கல்லூரியிலிருந்து யுனிவர்சிட்டிக்குப் போகலாம்... பள்ளிக்கு எப்படிப் போவது..?  ‘யோசித்துச் சொல்கிறேன்’ என்றேன். வீட்டில் ‘வேண்டாம்’ என்றார்கள். ஆனால், டெல்லியில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்பதால், அந்த வேலையைத் தேர்வுசெய்தேன். ஓராண்டுக்குப் பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆறுமுகம், ‘யுனிவர்சிட்டி வேலைக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். எதிர்பார்த்த வாய்ப்பு, உடனடியாகச் சேர்ந்துவிட்டேன். இது இரண்டாவது திருப்பம். என் பணி ஓய்வுக்குப் பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது மூன்றாவது திருப்பம். வெங்கட சுப்பிரமணியன் மூலம் கிடைத்த வாய்ப்பு அது. ஆனாலும், எனக்கு மீண்டும் தமிழாசிரியராகச் சேர விரும்பவில்லை. அதனால், ‘நாடகத்துறை ஆரம்பித்தால் நான் வேலைக்கு வருகிறேன்’ என்றேன். நம்ப முடியாதவாறு ஆறே மாதத்தில் அந்தத் துறையை ஆரம்பித்து என்னை அழைத்துக்கொண்டனர். இடையில், ஐந்து ஆண்டுகள் வார்ஸாவில் வேலைசெய்தேன். அங்கிருந்து செய்த முக்கியமான வேலை என்றால், ‘இயேசுவின் தோழர்கள்’ நாடகம் எழுதியதுதான்.  ‘தினமணி கதிரில் தொடராக எழுதினேன். பயண அனுபவமாக எழுதச் சொன்னார்  கி.கஸ்தூரிரங்கன். நாவலாக எழுதித் தருகிறேன் என்று சொல்லி எழுதினேன்.”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”“நாடகங்கள் மீதான ஈர்ப்பு எப்படி வந்தது?”

“அக்காலகட்டத்தில் நாடகங்கள்மீது எனக்கு நல்ல அபிப்ராயங்கள் இல்லை. ஆனால், அது மிகப்பெரிய படைப்பு வடிவம். நாம் நினைப்பதுபோல அதில் செயல்பட்டுப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். ‘மழை’ என்றொரு நாடகம் எழுதினேன். அதைப் படித்த சுஜாதா, ‘இதையெல்லாம் யாருமே நாடகமாகப் போட மாட்டார்கள். ஏன் டயத்தை வேஸ்ட் பண்றீங்க?’ என்று சொன்னார். அந்த நேரத்தில் பாரதிமணி என்னிடம் ஒரு நாடகம் எழுதிக் கேட்டார். அவரைக் கையோடு அழைத்துவந்து ‘மழை’ நாடகப் பிரதியைக் கொடுத்தேன். சில நாள்கள் கழித்து, ‘எங்க குழுவின் பெண்கள், நாயகியின் வசனங்களைச் சரியாகப் பேச மாட்டார்கள். வேறு யாராவது நடிகை இருந்தால் சொல்லுங்க’ என்றார். எங்கள் வீட்டினருகே இருந்த க.நா.சு வீட்டுக்குச் சென்று, அவர் மகள் ஜமுனாவிடம் நாடகப் பிரதியைப் படிக்கக் கொடுத்தேன். அவர் சிறிது நேரத்திலேயே அந்த நாடகத்தின் வசனங்களைப் படித்து, நாடகத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். நாடகத்திற்கு நாயகியும் கிடைத்தார்; மணிக்கு மனைவியும் கிடைத்தார்” (சிரிக்கிறார்).

“உங்களுடைய அநேகக் கதைகள் உளவியல் சிக்கல்களை அலசுகிறவையாகவே இருக்கின்றன. இதைத் திட்டமிட்டுச் செய்கிறீர்களா?”

“அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை.  ‘எல்லாவற்றையும் பார்க்கிறோம், கேட்கிறோம். மனசுக்குள் பதியவைத்துக் கொள்கிறோம். எது எப்போது வெளியே வருமென்று யாருக்கும் தெரியாது’ என்று புதுமைப்பித்தன் சொல்வார். நம்மைப் பல சம்பவங்கள் பாதித்திருக்கும். எப்போது எதை எழுத வேண்டும் எனத் தீர்மானிக்க முடியாது. நான் கல்லூரியில் படித்தபோது பார்த்த ஒரு குடும்பத்தின் கதையைப் பல ஆண்டுகள் கழித்து நாடகமாக எழுதினேன். நீங்கள் சொல்லும் உளவியலை நான் யூகித்ததில்லை.”

“உங்களுடைய சிறுகதைகளில் உரையாடல் தன்மை அதிகம் தென்படுவது ஏன்?”

“எனக்குள் நான் அதிகம் உரையாடிக் கொண்டிருப்பதால் இருக்கும். மேலும், அது எனக்கு வசதியான வடிவமாக இருக்கிறது. ‘அவன், ஆறடி உயரத்தில் அகன்ற மார்போடு ஆஜானுபாகுவாக இருந்தான்’ என்று எழுதுவதை இரண்டு பேரின் உரையாடல் வழியே சொன்னால் வாசகனின் கண்ணில் காட்சி ஒளிரும்.”

“உங்கள் படைப்புகளில் துயரம், விரக்தி போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் மிகுதியாக இருப்பது ஏன்?”

“துயரமும் வாழ்க்கையின் ஒரு பகுதிதானே! இலக்கியத்தில் புறத்தைவிடவும் அகம் சார்ந்த படைப்புகள்தான் அதிகம். எதையும் திட்டமிட்டுத் திணிக்க முடியாது. பாத்திரங்கள் அதைத் தீர்மானிக்கும். ஒருவேளை என் எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் அதை உணர்ந்திருந்தால் நான் தேர்ந்தெடுத்து வாசித்த புத்தகங்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.”

“உங்கள் சொந்த வாழ்க்கைச் சம்பவங்களைப் படைப்பாக்க முனைந்திருக்கிறீர்களா?”

“என் படைப்புகளெல்லாம் என் சொந்த வாழ்க்கைதான். என் அனுபவங்கள் தவிர எது குறித்தும் நான் எழுதுவதில்லை. என் கதைமாந்தர்கள் எல்லோரும் என்னைக் கடந்துசென்ற மனிதர்கள்தான். பெரும்பாலும், எல்லா  எழுத்தாளர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

“ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை மீளுருவாக்கம் செய்யும் முறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”

“நல்ல விஷயம்தானே! வால்மீகியுடைய கதையை எடுத்து கம்பர் எழுதியிருக்கா விட்டால், நம் தமிழ் இலக்கியத்துக்கு ‘கம்பராமாயணம்’ கிடைத்திருக்காது இல்லையா? மீளுருவாக்கம் என்பது ஒரு படைப்பு எந்தவகையில் அவரைப் பாதித்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஆனால், இந்த வேலையை மிகவும் பொறுப்புணர்வோடு செய்ய வேண்டும். கம்பரின் பார்வைகோணம் வேண்டுமானால் சற்று மாறியிருக்கலாம். ஆனால், வால்மீகி படைத்த பாத்திரங்கள் சொன்ன நீதியைத்தான் கம்பரும் சொல்லியிருக்கிறார். அதேமாதிரிதான் ‘பாஞ்சாலி சபதமும்’. பழைமையான இலக்கியங்களை அந்தந்தக் காலகட்டங்களுக்கு ஏற்றவாறு மீளுருவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம். அது முக்கியமான ஆவணமும்கூட.

மீள் உருவாக்கம் செய்யும்போது நிகழும் நன்மை தீமைகளுக்கு அதைச் செய்யும் எழுத்தாளர்தான் பொறுப்பு. மூலப் படைப்பின் நோக்கையே தன் போக்குக்கு மாற்றிவிடலாம். தங்கள் கருத்தைத் திணிக்கலாம். இது மீளுருவாக்கம் செய்யும் எழுத்தாளரின் ஆற்றலையும் நம்பிக்கையையும் பொறுத்தது. ஆனால், மறுவாசிப்புக்கு இதுபோன்ற மீளுருவாக்கங்கள் முக்கியம்.”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“நீங்கள்கூட ‘நந்தன் கதை’யை நாடகமாக மீளுருவாக்கம் செய்திருக்கிறீர்கள். அதில் புதிய கதாபாத்திரங்களையும்கூட உருவாக்கி யிருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் கடைப்பிடித்த உத்தி என்ன?”

“கோபால கிருஷ்ண பாரதி, சேக்கிழாரின் ‘பெரியபுராண’த்திலிருந்து மீட்டெழுதிய கதை. பெரியபுராணத்தில் பெரிதாக நாடக உத்திகள் ஏதுமில்லை. கோபாலகிருஷ்ண பாரதி, தன் எழுத்தில் ஒரு நாடகத்தைப் புகுத்துகிறார். நான் கூடுதல் அழகுணர்ச்சிக்காகச் சில விஷயங்களைச் சேர்த்தேன். ஒரு படைப்பை மீளுருவாக்கம் செய்யும்போது, அதன் மூலத்தன்மை, அசைவுக்கு உள்ளாகாமல் சில விஷயங்களைச் சேர்க்கலாம். இன்னொரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நமக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளும் வாய்ப்புகளும் முன்பு எழுதியவர்களுக்குக் கிடைக்கவில்லை. நான் எழுதிய காலத்தில் எழுதியவர்களுக்கு அமைப்பியல், பின்நவீனம் எல்லாம் தெரியாது. ஆனால், இன்று  தொல்காப்பியத்திலெல்லாம் அமைப்பியல் அணுகுமுறை இருப்பது புலப்படுகிறது. ஆக, இன்று நமக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. மீளுருவாக்கமும் அந்த வாய்ப்புகளின் வழியே பிறக்கிறது. நல்ல விஷயம்தான்.  ஆனால், அது காலம் கடந்து நிற்பதென்பது மீளுருவாக்கம் செய்பவரின் நேர்மையைப் பொறுத்தது.”

“மீண்டும் இக்காலத்துக்கு ஏற்றவாறு ‘நந்தன் கதை’யை எழுத விரும்பமுண்டா?”

“வாய்ப்பேயில்லை. அது எழுதி முடிக்கப்பட்ட பிரதி. இனி அதற்கு அவசியமுமில்லை. தேவைப்பட்டால், வேறு யாரேனும் வந்து எழுதுவார்கள்.”

“ ‘ராமாநுஜர் பற்றி அதி தீவிர வைணவ அறிஞர்கள்கூட ஒற்றைப்படைத் தன்மையோடுதான் எழுத முடியும்’ என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார். நீங்கள் எழுதிய ‘ராமாநுஜர்’ நாடகத்தை முக்கியமானது என்றும்  குறிப்பிட்டிருக்கிறார். ‘ராமாநுஜர்’ நாடகம் பற்றிய தங்களின் கருத்து?”

(நீண்ட நேரம் யோசிக்கிறார்) “ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருது கிடைத்தது. இந்த விருதைக் கொடுப்பது பிர்லா ஃபவுண்டேஷன். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த  வைணவர்களெல்லாம் ஒன்றுகூடி, பிர்லாவின் கைக்குக் கிடைக்கும்படி ஒரு கடிதம் எழுதினார்கள். இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில், ‘இந்திரா பார்த்தசாரதி ராமாநுஜரை அசிங்கப்படுத்திவிட்டார். ராமாநுஜர் சமூக சீர்திருத்தவாதியல்ல; அவர் தீவிர வைஷ்ணவர். இந்த நாடகம் எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டது. அதனால், இந்திரா பார்த்தசாரதிக்கு  ‘சரஸ்வதி சம்மான்’ விருதைக் கொடுக்கக் கூடாது’ என்று எழுதியிருந்தார்கள். பிர்லா ஃபவுண்டேஷன் இயக்குநர் அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பி, ‘இப்படியொரு கடிதம் வந்திருக்கிறது. ஆனால், உங்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதில் எந்த மாற்றமுமில்லை. உங்களுடைய கருத்தை அனுப்பினீர்கள் என்றால், அதை நாங்கள் பதிவுசெய்துகொள்கிறோம்’ என்று கேட்டிருந்தார். ‘இந்த மாதிரியான வைஷ்ணவர்களுக்காகத்தான் இந்த நாடகத்தையே நான் எழுதினேன்’ என்று பதில் கொடுத்தேன். ராமாநுஜர், மேல்கோட்டையில் விக்ரகத்தைக் கண்டறிய உதவியவர்கள் தலித் மக்கள்தான். அந்தக் கோயில் நிர்வாகத்தை அவர் தலித்துகள் கையில்தான் கொடுத்தார். பிற்காலத்தில் அதைக் கைப்பற்றிய வைஷ்ணவர்கள், ‘ஆண்டுக்கொருமுறை தலித்துகள் கோயிலுக்குள் செல்லலாம்’ என்று மாற்றிவிட்டார்கள். எந்தத் தத்துவமாக இருந்தாலும், நிறுவனமயமானால் பாதை மாறிவிடும். வைணவம் நிறுவனமயமானவுடன் ராமாநுஜருக்கு மரணம் நேர்ந்துவிட்டது. படைப்பளவில் நான் நேர்மையாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.”

“தமிழ்ச் சமூகத்தில் சைவம் முக்கியத்துவம் பெற்ற அளவுக்கு வைணவம் முக்கியத்துவம் பெறாமல் போனது ஏன்?”

“அதற்குக் காரணம், வைணவர்கள்தான். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் எழுதப்பட்ட வியாக்யானங்களை ராமாநுஜர்தான் தமிழில் எழுதச் செய்தார். ‘கோயில்களில் வேதம் ஒலிப்பது மாதிரி இந்தத் தமிழ்வேதமும் ஒலிக்க வேண்டும்’ என்று போராடியவர், செயல்படுத்தியவர் ராமாநுஜர். ‘சமஸ்கிருதத்தில் நிறைய எழுதியிருக்கிறீர்கள்.  தமிழிலும் நீங்கள் ஏன் எழுதக் கூடாது?’ என்று சிலர் ராமாநுஜரைக் கேட்டிருக்கிறார்கள். ‘நான் எழுதினால், ராமாநுஜரே சொல்லிவிட்டார் என்று காலாகாலத்துக்கும் அதை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். ஆனால், காலத்துக்குக் காலம் அதற்குப் புதிய அர்த்தங்கள் வேண்டும். அதனால், அதை மற்றவர்கள் எழுதுவதுதான் சரியாக இருக்கும்’ என்று கூறிவிட்டார் ராமாநுஜர். ஆனால், இவர்கள் ராமாநுஜரை பூஜையில் வைத்துப் பூட்டிவிட்டார்கள்.  பூஜையில் வைத்தால் எதுவும் வெளியில் பரவாது.”
 
“கீழ்வெண்மணி சம்பவத்தை முன்வைத்து நீங்கள் எழுதிய ‘குருதிப்புனல்’ நாவல் வந்தபோது, மார்க்ஸிஸ்ட்டுகள் கடுமையாக விமர்சித்தார்களே?”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“ஆமாம். ‘செம்மலரி’ல் கடுமையாக எழுதினார்கள். ‘குருதிப்புனல்’தான் கீழ்வெண்மணிச் சம்பவம் பற்றி வந்த முதல் நாவல். ‘கணையாழி’யில் தொடராக எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு, வானமாமலை மிகவும் பாராட்டி எழுதினார். ‘தேசாபிமானி’ இதழிலும் மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். அப்போது தமிழகத்தில் சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளுக்கிடையே பெரிய ஈகோ யுத்தம் நடந்துகொண்டிருந்தது. வானமாமலையும் சி.பி.ஐ-ம் பாராட்டியதால், இங்கிருந்த சி.பி.எம் தோழர்கள் அதை எதிர்த்தார்கள். ‘மார்க்ஸியத்தை இந்த நாவல் கொச்சைப்படுத்துகிறது’ என்று கூறி ஒரு தோழர், பொது இடத்தில் புத்தகத்தைக் கிழித்துப்போட்டாராம். இதெல்லாம் அந்த நாவலுக்குப் பெரிய விளம்பரமாகத்தான் இருந்தது.”

“கீழ்வெண்மணிப் படுகொலைச் சம்பவம் நடந்து 50 ஆண்டுகளாகின்றன. அந்தச் சம்பவத்தை இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போதும் மாறவில்லை என்பதுதான் எதார்த்தம். அடித்தட்டு மக்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். சம்பவம் நடந்து ஓராண்டுக்குப் பிறகு, நான் கீழ்வெண்மணிக்குச் சென்றேன்.  சம்பந்தப்பட்ட பலரையும் சந்தித்தேன். சி.பி.ஐ  - சி.பி.எம் தோழர்கள்தான் என்னை அழைத்துச் சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடு உறவுக்காரர்களையும் சந்திக்க முயன்றேன், முடியவில்லை. எல்லாக் கள அனுபவங்களையும் உள்ளடக்கித்தான்  ‘குருதிப்புனலை’ எழுதினேன்.”

“தற்போது இலக்கியச் செயல்பாடுகளைக் கவனிக்கிறீர்களா? கடத்த பத்து ஆண்டுகளில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக நினைக்கிறீர்களா?”

“வடிவத்தில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அடிப்படை மாறவில்லை. மனிதநேயம்தான் இன்றைக்கும் இலக்கியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. ஆனால், புதிய எழுத்தாளர்கள் அணுகுமுறையை மாற்றியிருக்கிறார்கள். ஒருகாலத்தில் கிராமங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று கிராமங்கள்தான் படைப்புகளில் முதன்மை பெறுகின்றன.”

“எந்தத் தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்!”

“50 ஆண்டுகளுக்கும் மேல் திராவிட இயக்கக் கருத்தியல் தமிழகத்தை நகர்த்துகிறது. நவீன இலக்கியத்தில் அது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறீர்களா?”

“நான் அக்ரஹாரத்தில் வளர்ந்தவன். திராவிட இயக்கக் கருத்தியலின் தேவையை நன்கு அறிவேன். அந்தக் காலகட்டத்தில் பெரியார் தேவையாகத்தான் இருந்தார்.  ஆனால், வைணவம் பற்றி நீங்கள் கேட்டபோது சொன்ன பதிலைத்தான் இதற்கும் சொல்வேன். எந்தவொரு கருத்தியலும் தத்துவமும் நிறுவனமய மாகும்போது, நீர்த்துப்போகும். இதிலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், திராவிட இயக்கத்தின் தாக்கமில்லாமல் இங்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. திராவிட இயக்கக் கருத்தியலோடு எழுதுகிற இமையம், சல்மா போன்றோரின் படைப்புகளெல்லாம் சிறப்பாக இருக்கின்றன.”

“நிகழ்த்து கலைகளில் ஆழங்கால்பட்டவர் நீங்கள். தற்கால நாடகங்களின் போக்கு எப்படியிருக்கிறது?”

“நன்றாகத்தான் இருக்கிறது. பிரளயன் மிகச் சிறப்பாகச் செய்கிறார். ந.முத்துச்சாமி நிறைய செய்திருக்கிறார். நிறைய இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள்  ‘நாடகத்தின் பக்கம் வரமாட்டேன்’ என்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் ‘அரவான்’ எழுதினார். மிகச் சிறப்பான நாடகம். ஆனால், அதன்பிறகு எதுவும் இல்லை. எல்லோரும் வர வேண்டும். நிறைய நாடகங்கள் எழுத வேண்டும்.”

“இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?”

‘கணையாழி’யில் கடைசிப் பக்கம் எழுதுகிறேன். 88 வயதாகிறது. வேறென்ன செய்ய முடியும்! எழுத்தாளனுக்கு வயதானால், அணிந்துரை, முன்னுரை, முதல் பிரதி பெறுவது மாதிரி எதையேனும் செய்யவேண்டியதுதான்” (சிரிக்கிறார்).