தொடர்கள்
Published:Updated:

அறம் ஒலித்த அரங்கம்!

அறம் ஒலித்த அரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் ஒலித்த அரங்கம்!

அறம் ஒலித்த அரங்கம்!

ரு சமூகம், செயலூக்கம்கொண்ட புதிய சிந்தனைகளாலும் கற்பனைகளாலும் தொய்வறியா செயல்பாடுகளாலும் தன்னைப் புதுப்பித்துத் தகவமைத்துக் கொள்கிறது. இச்செயல்பாட்டில், தன்னலமற்ற சமூகச் செயல் களம் காணும் மனிதர்கள், அதன் ஆதார உயிர்சக்தியாக இருக்கிறார்கள். அப்படி, தமிழ்ச் சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்குக் காரணமாக இருக்கும் ஆளுமைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது ‘ஆனந்த விகடன்’. கடந்த ஆண்டில் சமூக, கலை இலக்கிய, ஊடகத்துறைகளில் முக்கியப் பங்களித்தவர்களைக் கொண்டாடும் ‘நம்பிக்கை விருது விழா - 2018’, சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 09.01.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அறம் ஒலித்த அரங்கம்!

‘ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 13 போராளிகளின் குடும்பங்கள், கீழடி அகழாய்வில் முக்கியப் பங்காற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா ஐ.ஏ.எஸ்., மனிதஉரிமைச் செயல்பாட்டாளர் அ.மார்க்ஸ், திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், திரைக்கலைஞர் விஜய் சேதுபதி, ஒடுக்கப்பட்டோருக்கான கல்விப்பணியில் ஈடுபட்டுவரும் உமா வாசுதேவன், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சதுப்பு நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடும் ஈஞ்சம்பாக்கம் சேகர், அரசு மனநல மருத்துவச் செவிலியர் சாந்தி அருணாச்சலம் ஆகியோருக்கு ‘2018-ம் ஆண்டின் டாப்10 மனிதர்கள் விருது’ வழங்கப்பட்டது. இவர்களுக்கான விருதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் இரா.நல்லகண்ணு, மார்க்ஸிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அற்புதம் அம்மாள், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர்கள் ஜெயமோகன், சாரு நிவேதிதா, அ.முத்துக்கிருஷ்ணன், இயக்குநர்கள் பா.இரஞ்சித் மற்றும் மாரிசெல்வராஜ், திரைக்கலைஞர் நாசர், ஆகியோர் வழங்கினர்.

2018-ம் ஆண்டின் டாப் 10 இளைஞர்கள் விருது, கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராடும் அருள்தாஸ், ஓவியர் சந்தோஷ் நாராயணன், பன்மெய்ப்புல சவால் கொண்ட நிவேதா, இசையமைப்பாளர்கள் கோவிந்த் வஸந்தா, விவேக்-மெர்வின், மண்ணுக்காக மணலுக்காகப் போராடும் இசை, குழந்தைகளுக்கான பாரம்பர்ய விளையாட்டுலகத்தை மீள்உருவாக்கம் செய்யும் இனியன், ‘பிளாக் ஷீப்’ யூ டியூப் சேனல் குழுவினர், ஆயிரக்கணக்கான யாசகர்களை மறுவாழ்வை நோக்கி அழைத்துச் செல்லும் நவீன், ‘Let’s Make Engineering Simple’ சேனலின் பிரேமானந்த் சேதுராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கான விருதை, சமூகச் செயற்பாட்டாளர் முகிலன், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், லெனின்பாரதி, பா.இரஞ்சித், திரைக்கலைஞர் பொன்வண்ணன், ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி, பாடகர் மால்குடி சுபா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா, பாஸ்கர் சக்தி, பாக்கியம் சங்கர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

2018-ம் ஆண்டின் சிறந்த ஊடகங்கள் மற்றும் ஊடகப் பங்களிப்பாளர்களுக்கான விருது, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மா.கா.ப.ஆனந்த், அர்ச்சனா, பண்பலைத் தொகுப்பாளர்கள் கார்த்திக் பாலா, மிர்ச்சி சாரு, ‘சூப்பர் சிங்கர்-6’ நிகழ்ச்சியின் கர்த்தாக்கள் பிரதீப் மில்ராய் பீட்டர்  பிரவீன், ரெளஃபா, பிரதீமா, ‘டிஸ்கவரி கிட்ஸ்’ சேனல் குழுவினர், ‘செம்பருத்தி’ நெடுந்தொடர் குழுவினர், ‘ரெயின்போ’ எப்ஃ.எம் குழுவினர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த விருதுகளை, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் விஜயசாரதி, கோபிநாத், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், திரைக்கலைஞர்கள் லிவிங்ஸ்டன், பாத்திமா பாபு, சின்னத்திரைக் கலைஞர்கள் ரக்‌ஷிதா-தினேஷ், இயக்குநர்கள் திருச்செல்வம், கவிதா பாரதி ஆகியோர் வழங்கினர்.

கலைநிகழ்ச்சிகளும் விருது வழங்குதலும் ஆளுமைகளின் உரையாடலுமாகக் களைகட்டியது விழா. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்தவர்களின் குடும்பம் மேடையேறி வெடித்துக் கதறியதில் அரங்கம் அழுதது; அறம் ஒலித்தது. எங்கோ ஒரு மூலையில் இந்தச் சமூகத்திற்காகத் தனது வாழ்வைப் பணயம்வைத்துப் போராடிவரும் மகத்தான மனிதர்கள்மீது விழா மேடையில் வெளிச்சம் பாய்ச்சியது விகடன்.

ராஜ்மோகன், வினோதினி, அனிதா சம்பத் ஆகியோர் விழாவைச் சிறப்புறத் தொகுத்து வழங்கினார்கள்.

எங்கள் ஆசான் இந்திரா பார்த்தசாரதி!

கலை இலக்கியப் பணிகளின் வழியே, தமிழ்ச் சமூகத்தின் பெரும் அடையாளமாகப் பரிணமித்த ஆளுமைக்கான விருதாகிய ‘பெருந்தமிழர்’ விருது, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழின் சமகால முன்னணி எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், சு.வெங்கடேசன், நாடகக் கலைஞர் வேலு சரவணன் ஆகியோர் விருது வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“இன்றைய எழுத்து நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறார்கள். இத்தனை ஆளுமைகள் வந்து என்னைக் கௌரவிப்பார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால், இந்த விழாவைத் தவிர்த்திருப்பேன். ஆங்கிலத்தில்  ‘Scandalize’ (திட்டுவது) என்று சொல்வார்கள். அதேபோல் ‘Reverse Scandalize’ என்று ஒன்று உண்டு. ஒருவரை மேடையில் வைத்துக்கொண்டே, அவரைத் தொடர்ச்சியாகப் பாராட்டுவது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இது. எனக்கு இது சற்று அதீதக் கூச்சத்தைத் தருகிறது. ஆனால், இவை அனைத்தும் அன்பினால் செய்யப்படுவது என்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறது.   மேடைக்கான நாடகங்கள் பல எழுதியிருக்கிறேன் என்றாலும், மேடையில் பேசுவது இன்னும் எனக்குக் கைவராத ஒன்றாகவே இருக்கிறது. இந்திய அளவில் ‘சாகித்ய அகாடமி’, பத்மஸ்ரீ விருதெல்லாம் வாங்கிவிட்டேன். அந்த விருதுகளை வாங்கியதைவிடப் பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,  ‘ஆனந்த விகடன்’ அளிக்கும் இந்தப் ‘பெருந்தமிழர்’ விருது.” பெருமிதமும் கூச்சமுமாகப் பேசினார் இந்திரா பார்த்தசாரதி.

“எங்களின் ஆசான் இந்திரா பார்த்தசாரதி. என்னுடைய  ‘ஜீரோ டிகிரி’ நாவலைத் தடைசெய்யக் கோரி எழுந்த சர்ச்சைகளின்போது, என் நாவலை ஆதரித்து எழுதியவர்” என்றார் சாரு நிவேதிதா.

“தமிழில் பெருநகரம் சார்ந்த எழுத்துகளை நமக்கு அறிமுகம் செய்த முன்னோடி இவர். ஒரு தலைமுறை தாண்டி வாசித்தாலும் நகைச்சுவையுணர்வு ததும்பும் இவரது எழுத்துக்கு ஓர் உதாரணம்: ‘பிரதம மந்திரி என்பவர், 18 மொழிகளிலும் மௌனமாக இருக்கக்கூடியவர்’ என்ற இவரது வாக்கியம்.” எனச் சொல்லிச் சிரித்தார் ஜெயமோகன்.

பெரும் இனம் ஒன்றின் வாழ்க்கை இது!

சிறந்த நாவலுக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை, ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலுக்காக சு.வெங்கடேசன் பெற்றார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் விருது வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“நேரடியாக பாரியைப் பற்றி எழுதப்பட்ட சில பாடல்களும் சொற்பமான ஆதாரங்களும் மட்டுமே வரலாற்று ரீதியாக நமக்குக் கிடைக்கின்றன. ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ என்ற இந்த நாவல்,  பாரியைப் பற்றிய நூல் மட்டும் அல்ல. சங்க இலக்கியத்தின் 2281 கவிதைகளின் வழியாகப் பின்னப்பட்ட ஒரு பெரும் இனத்தின் வாழ்க்கை; சொற்களாலான ஓவியம். பத்தாயிரம் ஆண்டு பழைமையான தமிழ் வரலாற்றைப் புனைவின் வழியே படைப்பது என்கிற வகையில், இதை மிகச் சிறிய முயற்சி என்றே கருதுகிறேன். வாசிக்கவும் திளைக்கவும் வரலாற்றை ஆய்ந்தெடுக்கவும் அதிலிருந்து புனைவெழுத்தாக்கவும் இன்னும் ஆயிரமாயிரம் விசயங்கள் சங்க இலக்கியத்தில் செழித்துக்கிடக்கின்றன. சங்க இலக்கிய ஆதாரங்களை முன்னுதாரணமாகக்கொண்டு, ஒரு வெகுசனப் பத்திரிகையில் நாவலைத் தொடராக எழுதுவதென்பது, மிகவும் சவாலான விஷயம். இரண்டு ஆண்டுகள், இத்தனை லட்சம் வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டது என்பதே இந்நாவலுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக, விருதாக, வெற்றியாக நினைக்கிறேன். அதன் நீட்சியாக, 2018ம் ஆண்டுக்கான ஆனந்த விகடனின் விருதைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது” என்று நெகிழ்ந்தார் சு.வெங்கடேசன்.

அறம் ஒலித்த அரங்கம்!

“த.மு.எ.க.ச-வின் தலைவருக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. மரபு, பாரம்பர்யம் என்கிற பெயரில் பண்டைய காலத்திலிருந்து சமகாலத்திற்கு எதைக் கொண்டுவருகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு சமூகம் சமத்துவத்தை நோக்கியும் முற்போக்கான வழியிலும் எவ்வாறு மாறிக்கொண்டுவருகிறது என்கிற வரலாற்றுத் தொடர்ச்சி சார்ந்த புரிதல் கலைஞர்களுக்கு அவசியமானது. வேள்பாரி என்கிற ஆளுமை குறித்த வரலாற்றுப் புனைவின் வழியே சமகாலப் பிரச்னைகளை மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் சு.வெங்கடேசன். அதை இச்சமூகம் புரிந்துகொண்டு பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று குறிப்பிட்டார் ஆதவன் தீட்சண்யா.

என் தந்தைக்கும் பிரபஞ்சனுக்கும் சமர்ப்பணம்!

சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருது, ‘மாயக்குதிரை’ எனும் நூலுக்காக தமிழ்நதிக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர்  பா.செயப்பிரகாசம் மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகியோர் விருது வழங்கினர்.

“ஒவ்வொரு நிகழ்வுக்கும் விருதுக்கும் பின்னால், ஓர் அரசியல் இருக்கிறது என்பதை நானறிவேன். அனைத்தும் கடந்து இந்த விருது எனது சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடையை எழுத்தைக் கொண்டாடும் என் கணவர் ராஜகுமாரன், என் நண்பர் ஜோஸ் ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறம் ஒலித்த அரங்கம்!

ஓர் இலக்கியவாதி மிகச்சிறந்த மனிதராகவும் வாழ முடியும் என்பதற்கு எழுத்தாளர் பிரபஞ்சன் ஓர் உதாரணம். பெண்களால் ஆத்மார்த்தமாக இலக்கியத்தை நேசிக்க முடியாது; அவர்களால் சிறந்த படைப்புகளைத் தர முடியாது என்ற ஒரு கருத்து, கற்பிதம் இங்கு நிலவிவருகிறது. இந்தப் போலியான கற்பிதத்திற்கு எதிராகப்  பெண்களை, பெண்களின் எழுத்துகளைத் தொடர்ந்து முன்மொழிந்தவர் பிரபஞ்சன். இலக்கிய வாசிப்பை, புத்தகங்களை எனக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் என் தந்தை. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கும் இந்த விருதைச் சமர்ப்பணம் செய்கிறேன்” என்றார் தமிழ்நதி.

 “ஈழத்தமிழின் வரலாற்று நதியான தமிழ்நதிக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சிகொள்கிறேன். இந்த விருது தமிழ் ஈழ விடுதலைக்காகத் தங்களை விதைத்த வீரர்களுக்காக மட்டுமல்லாது, அண்மையில் காலமான தமிழ்நதியின் தந்தைக்காகவும் என எண்ணி, இந்த விருதை அவருக்கு வழங்குகிறேன்.” என்று தழுதழுத்தார் கவிஞர் அறிவுமதி.

அறம் ஒலித்த அரங்கம்!

“ஈழம் தொடர்பான எல்லா எழுத்தாளர்களும் எல்லாக் கவிஞர்களும் இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்து இலக்கியம், தமிழக இலக்கியத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த ஈழத்து இலக்கியத்தில் தமிழ்நதி ஒரு முன்னோடி நதி. நான் ஒரு சிறுகதை ஆசிரியன் என்கிற முறையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.

இந்த விருது, பொறுப்பைத் தருகிறது!

சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை பெரு.விஷ்ணுகுமார் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ நூலுக்காகப் பெற்றார். அவருக்குக் கவிஞர் மனுஷ்ய புத்திரன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் விருது வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“தமிழின் மொழிப்பரப்பில் கவிதையும் அதனுள் செயல்புரியும் காலமும் நிச்சயம் நேர்க்கோடானதல்ல. மறைபொருள் தேகமென வெளிப்படுத்திக்கொள்ளா ரகசியங்களைத் தாங்கியிருக்கும் அது ‘ழ’வைப்போல வளைந்து நெளிந்து செல்லக்கூடியது. அவ்வகையில், காலத்தின்மீதான அபத்தங்கள், அவலங்கள், அதிசயங்கள், வன்மங்கள், மென்நினைவுகளெனச் சதா இவைகளையே குழப்பிக்கொள்கிற ஒரு மனிதனை, ஒரு கண்ணாடி முன்னே நிற்கவைப்பது எத்தகு பதற்றமான செயலோ அதைவிடப் பதற்றமானது அத்தகு ஒருவன் கவிதையெழுத வருவது. திடீரென்றொரு தருணத்தில் அக்கண்ணாடியிலிருக்கும் பிம்பம், அதைவிட்டு வெளியேறிவிட்டால் எப்படியிருக்கும் என்ற கேள்விதான், இந்தத் தொகுப்பிலிருக்கும் கவிதைகளும் உடன் இந்தத் தலைமுறையில் வாழும் எனக்கு என் சமூகத்தின்மீதான கேள்வியும்கூட.

அறம் ஒலித்த அரங்கம்!

எல்லா ஆரம்பநிலைப் படைப்பாளிகளின் வரிகளைப் போலவே இவ்வெழுத்துகளும் எவ்வித லட்சியமுமின்றி எழுதிப் பார்க்கப்பட்டன. வாசிப்பு மற்றும் தொடர்ந்த உரையாடலுக்கு மத்தியில் அவை யாருக்கும் தெரியாமல் பதுக்கியேவைக்கப்பட்டன. பிற்பாடு, கல்லூரி தொடக்கத்தில் வாசிக்கப்பட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் பிரசுரம் கண்டுவந்தது. அப்படிப்பட்ட கவிதைகளைச் சேர்த்த முதல் தொகுப்பே ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’. அவ்வகையில், இலக்கியத்தில் முதல் அடியைத் தொடங்கியிருக்கும் எனக்கு, இந்த விருதானது நல்லூக்கத்தையும் மகிழ்வையும் தரும் அதேசமயம், இனிமேலான எனது பயணம் குறித்த பொறுப்பையும் பயத்தையும் தருகிறது. இப்படியொரு தளம் அமைத்துக் கொடுத்ததற்காக ‘மணல்வீடு’ பதிப்பகத்திற்கும்  ‘ஆனந்த விகட’னுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.” என்று மகிழ்ந்தார் பெரு.விஷ்ணுகுமார்.

அங்கீகரிக்கப்படாதவர்களுடன் பகிர்கிறேன்!

சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை பா.பிரபாகரன், ‘எதிர்ப்பும் வெறுப்பும்’ எனும் நூலுக்காகப் பெற்றார். விருதை எழுத்தாளர் ஜெயராணி, நாடகக் கலைஞர் பிரளயன் ஆகியோர் வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“நம்மோடு வாழ்கிற சகமனிதரை நம் சமூகம் எப்படி அன்றாடம் நடத்துகிறது என்பதைப் பற்றிய பதிவுதான் இந்த நூல். சாதியின் பெயரால் ஒருவர் இன்னொருவரை எப்படி அடக்கி, ஒடுக்கி, ஒதுக்கி அவமானப்படுத்துகிறார் என்பதைப் பற்றிய தொகுப்பு. எழுத்து என்பது சமூகத்தோடு உரையாடுவதற்கான கலைவடிவம். எழுத்தாளர் எப்போதும் தனிமனிதன் அல்ல. அவர் சமூகத்தின் பிரதிநிதி. சமூகத்திற்கும் தனிமனிதர்களுக்குமான உறவை மேம்படுத்துவதற்கான  கருவி அவர். எனவே, சமகாலத்தைப் பற்றிப் பேசாத எதுவும் சமூக ஒடுக்குதலைப் பேசாத எதுவும் மக்களுக்கான எழுத்தாக, படைப்பாக இருக்க முடியாது. வரலாற்று நிகழ்வுகள், நினைவுக் குறிப்புகள், ஆதிக்க மனங்களின் வெறித்தனம், சாதிய மேலாதிக்கம், உடல் அரசியல், மத அரசியல் என வேறுபட்ட பதிவுகளால் நம் மனசாட்சியைக் கேள்விக்குட்படுத்தும் எழுத்துகள் இவை. அரசியல் பண்பாட்டுத் தளத்தில் பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும், என்னைப் பாதித்த விஷயங்களுக்கான எதிர்வினையே இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள். என்னைப் பாதித்தவையே என்றாலும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு சமகாலத்தைப் புரிந்துகொள்ள எல்லோருக்கும் உதவும் என்றே நம்புகிறேன்.

அறம் ஒலித்த அரங்கம்!

இப்படியொரு தொகுப்பைத் தேடிக் கண்டுபிடித்து, விருது வழங்கிய ஆனந்த விகடனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும். இன்று என்னுடைய அப்பாவின் முதல் நினைவுநாள். அந்த நாளில் இந்த விருதைப் பெறுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக விருதுகளைத் தொடர்ந்து செயல்படுவதற்கான உந்துதல் எனச் சொல்லக் கேட்டிருப்போம். என்னைப் பொறுத்தவரையில் இந்த விருது என்பது, இதுவரையிலான என்னுடைய எழுத்துகளுக்கான அங்கீகாரம் என்றே கருதுகிறேன். எனவே, இந்த விருதை அங்கீகரிக்கப்படாத எழுத்தாளர்களோடும் படைப்பாளர்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி” என்றார் பா.பிரபாகரன்.

விகடன் தாத்தா இன்று என் கைகளில்!

சிறந்த சிறார் இலக்கியத்துக்கான ‘ஆனந்த விகடன்’ விருதை யெஸ்.பாலபாரதி, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ எனும் நூலுக்காகப் பெற்றார். கவிஞர் சுகிர்தராணி, சிறார் எழுத்தாளர் விழியன் உமாநாத் ஆகியோர் விருது வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“பாரம்பர்யம் மிக்க விகடன் தாத்தா, இன்று என் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறார் என நினைக்கும்போது, மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நான் குழந்தைகளுக்குக் கதை எழுதியதற்கான அடிப்படைக் காரணம் என்னுடைய மகன். என்னுடைய மகனுக்குக் கதைசொல்ல வேண்டும் என்பது எனக்கு எப்போதும் ஆசை. ஆனால், அவன் என்னிடம் கதை கேட்பதில்லை. என் மகனின் உலகம் வேறு. அவனுக்கு ஆட்டிஸ பாதிப்பு இருக்கிறது. என் கதைகளை யாருக்குத்தான் சொல்வது என யோசித்தபோதுதான், பிற குழந்தைகளுக்கு எழுதலாமே என முடிவுசெய்தேன்.

அறம் ஒலித்த அரங்கம்!

பெண் குழந்தைகள்மீது காலம்தோறும் பாலியல் வன்முறை நடத்தப்பட்டே வருகிறது. அது மிக நுட்பமான பிரச்னை. பெற்றோர், கதைகள் வழியாகத்தான் இதுகுறித்த உரையாடல்களைக் குழந்தைகளிடம் எடுத்துச்செல்ல முடியும் எனத் தீர்க்கமாக நம்புகிறேன். பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான ஆண், பெண் குழந்தைகளை நேரில் சந்தித்திருக்கிறேன். பாலியல் தொடர்பான விஷயங்களைக் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது என்பது பற்றிய தயக்கம், பெற்றோர்களுக்கு இந்த இருபத்தியோராம்  நூற்றாண்டிலும் தொடர்வது வருத்தமளிக்கிறது. தமிழில் பாலியல் சீண்டல்கள் பற்றிப் பேசும்போது, பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய விழிப்புணர்வு அவசியம். என்னுடைய கதைகளிலும், நான் இதைத்தான் பிரதிபலிக்கிறேன். நான் என் கதைகளின் வழியே, குழந்தைகளுடன் சிறுவர்களுடன் பொதுச்சமூகம் உரையாடத் தயங்கும் விஷயங்களைப் பேசுகிறேன். என் மனைவி லக்ஷ்மிக்கும் என் மகனுக்கும் என்னைப்போன்ற ஆட்டிஸக் குழந்தைகளைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்!” என்று உருக்கம் தொனிக்கப் பேசினார் யெஸ்.பாலபாரதி.

எல்லாவற்றுக்கும் மேலான விருது இது!

சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை ‘முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை’ எனும் நாவலை மொழிபெயர்த்தமைக்காக எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெற்றார். விருதை எழுத்தாளர் பாவண்ணன் வழங்கினார்.

அறம் ஒலித்த அரங்கம்!

“தொடர்ந்து பிரஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் படைப்புகளை மொழிபெயர்த்துவருகிறேன்.போர்களும் வன்முறையும் நிறைந்த இந்த அபத்த உலகத்தில் காதலும் மனிதநேயமும் எவ்வளவு ஆதாரமான மகத்தான உணர்வுகள் என்பதை நிறுவுகிறது அந்திரேயி மக்கீனின் ‘முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை’ நாவல். பிரெஞ்சு ‘செவாலியே’ விருது, அதற்கும் மேலான ‘ஒஃபீசியே’ விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்களும் விருதுகளும் பெற்றிருந்தாலும், ‘விகடன் விருதை’ அவை எல்லாவற்றுக்கும் மேலான விருதாகக் கருதுகிறேன்.

நான் படித்த காலங்களில் புதுவை, பிரெஞ்சு அரசின்கீழ் இயங்கிவந்தது.  பல சூழ்நிலைகள் காரணமாக, நான் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டிருந்தேன். நிர்பந்தம் காரணமாக அந்த இரு மொழிகளிலும் நான் எழுதினாலும், அதில் எனக்குப் பெரிய திருப்தி இருந்ததில்லை. தாய்மொழியில் எழுதமுடியாத வருத்தம் எனக்கு எப்போதும் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாகப் பல கட்டுரைகளைத் தமிழில் எழுதிவருகிறேன். பல மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறேன். எப்போதேனும் சிறிய அங்கீகாரமாவது கிடைக்கும் என நினைத்திருந்தேன். இந்த விருதைப் பெறுவதில் சந்தோஷமும் பெருமையும் கொள்கிறேன்.

அறம் ஒலித்த அரங்கம்!

கனிவான வரவேற்பு, இந்தப் பிரமாண்டமான மேடை, என்னோடு விருதுபெறும் சகஆளுமைகள், ஒவ்வொருவரும் மேடையில் அறிமுகம் செய்யப்படும் விதம் என எல்லா வகையிலும் ஒரு நிறைவான விழாவாக இருக்கிறது. இப்படி ஒரு சிறப்பான இலக்கிய விழாவை ஏற்பாடு செய்த ‘ஆனந்த விகடன்’ குழுமத்திற்கு என் நன்றிகலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” -சொற்களால் கனிந்தார் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி.

ஊக்கம் கொடுக்கும் மேடை!

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை, ‘உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது’ எனும் நூலை மொழிபெயர்த்தமைக்காக வடகரை ரவிச்சந்திரன் பெற்றார். எழுத்தாளர் தமயந்தி, இயக்குநர் நலன் குமாரசாமி ஆகியோர் விருதை வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“இந்தியாபோன்ற மூன்றாம் உலக நாடுகளில் வெளிவரும் படைப்புகளின் கதைக்களமும் சிமாமண்டா என்கோஜி அடிச்சீயின் கதைக்களமும் ஒரே அடிப்படையிலானவை; மிகவும் நெருக்கமானவை என்பதை இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது உணரமுடியும். அதுமட்டுமல்ல இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை மொழிபெயர்க்கும்போது, புலம்பெயர் மக்களின் பிரச்னைகள், ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள், நைஜீரியர்களின் பண்பாட்டு நம்பிக்கைகள், அரசியல் போராட்டம், இளைஞர்களின் வேட்கை, குழுமோதல், நைஜீரிய மக்கள் உறவுகளை அணுகும் விதம், அவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், அரசை அந்த நில இளைஞர்கள் அணுகும் விதம் போன்றவற்றை என்னால், நம் மண்ணோடு தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது. சிற்றிதழில் வெளியிடுவதற்காக நண்பர் ஒருவர், சிமாமண்டாவின் சிறுகதைகளுள் ஒன்றைக் கொடுத்து என்னை மொழிபெயர்க்கச் சொன்னார். மொழிபெயர்த்துக் கொடுத்தேன். ஆயினும், அது பிரசுரமாகவில்லை. ஆனால், அந்த ஒரு சிறுகதைதான் நான் சிமாமண்டாவைக் கண்டடையப் பேருதவியாக இருந்தது.

அறம் ஒலித்த அரங்கம்!

ஒரு கதையை மொழிபெயர்க்கலாம் எனத் தொடங்கிய நான், அதன்பின் இந்தத் தொகுப்பிலிருக்கும் அனைத்துக் கதைகளையும் தேடித் தேடி மொழிபெயர்த்தேன். கதைகளிலிருந்த  சில வட்டாரச் சொற்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. நைஜிரியாவிலிருக்கும் சில நண்பர்கள் அதற்கு உதவினர். இப்படிப் பலரின் ஒத்துழைப்பின் பயனே இந்த நூல். எனக்கு உதவிசெய்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். ‘ஆனந்த விகட’னின் இந்த விருதை என்னுடைய உழைப்பிற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இது என்னைப் போன்ற இலக்கியவாதிகளுக்குப் பெரிய அளவில் ஊக்கம் கொடுக்கும் மேடையாக இருக்கிறது. இந்த விழா என் வாழ்வில் மிகவும் முக்கியமானது. இனி, மொழிபெயர்ப்பில் முன்னைக்காட்டிலும் தீவிரமாக இயங்குவேன்!” என்றார் வடகரை ரவிச்சந்திரன்.

இது அன்னா ஸ்விருக்குக் கிடைத்த விருது!

சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை ‘அன்னா ஸ்விர் கவிதைகள்’ எனும் நூலினை மொழிபெயர்த்தமைக்காக சமயவேல் பெற்றார். கவிஞர்கள் கலாப்ரியா,ச.விசயலட்சுமி ஆகியோர் விருதை வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“பிரம்மராஜன் போன்றோர் தமிழில் செய்த மொழிபெயர்ப்பு வேலைகளை அதே உத்வேகத்துடன் யாரும் தொடராமல் இருந்த பின்னணியில்தான், நான் எனது மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தொடங்கினேன். எனக்குப் பிடித்த பல கவிதைகளையும் அவ்வப்போது மொழிபெயர்த்துக்கொண்டே இருந்தேன். கடந்த பத்தாண்டுகளில் நான் வாங்கிக் குவித்த உலகக் கவிதைகளின் தொகுப்புகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்துக்கொண்டே இருந்தேன். அப்படி அறிமுகமாகி என்னை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்கிய அன்னா ஸ்விரின் கவிதைகளை ஒரு நூலாகக் கொண்டுவரலாம் எனக் கடந்த ஓராண்டாக அதற்கான வேலைகளைச் செய்துவந்தேன்.

அறம் ஒலித்த அரங்கம்!

கடந்த ஆண்டுகளில் தொலைக்காட்சியில் நான் பார்த்த ஈராக் யுத்தம், ஈழப் பேரழிவு, சிரியா போன்ற சிறிய தேசங்களைச் சூறையாடப் பேரரசுகளின் உதவியுடன் நடக்கும் உள்நாட்டு யுத்தங்கள், அன்னா ஸ்விரின் போர்க்களக் கவிதைகள் இன்றைக்கும் தேவையாக இருப்பதை உணர்த்தின. ராணுவங்களும் பேரழிப்பு ஆயுதங்களும் உலகைவிட்டு ஒழியும் கனவு, இன்னும் கவிகளின் கனவாகவே இருந்துவருகிறது. பெண்ணுடல் சார்ந்த கவிதைகளோடு நிற்காமல், ஒரு போராளியாகவும் ஒரு மகளாகவும் முழுமையான கவியாக ஒளிர்கிறார் அன்னா ஸ்விர். இந்தக் கவிதைத் தொகுப்புக்குக் கிடைத்திருக்கும் ‘ஆனந்த விகடன்’ விருதை, போலந்துக் கவி அன்னா ஸ்விருக்குக் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். இரண்டாம் உலகப்போரால் அழிக்கப்பட்ட ‘வார்ஸா’ நகரத்திற்கும் அங்கே செத்துமடிந்த ஒரு மில்லியன் மக்களுக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன். எனது கணினிக்குள் இருக்கும் பல உலகக் கவிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் விரைவில் நூல்களாக மாறும். அதற்கான பெரும் உந்துதலாக இந்த விருது அமைகிறது!” என்றார் சமயவேல்.

நவீன பிரக்ஞையைக் கட்டமைத்தது சிற்றிதழ் இயக்கமே!

சிறந்த சிற்றிதழுக்கான ‘ஆனந்த விகடன்’ விருதுக்கு ‘இடைவெளி’ இதழ் தேர்வுசெய்யப்பட்டது. விருதை ‘இடைவெளி’ இதழ் சார்பாகத் தன் குழுவோடு சிவ.செந்தில்நாதன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா,  ‘ஆயிஷா’ நடராஜன் ஆகியோர் விருதை வழங்கினர்.


விருதுபெற்றுக்கொண்ட சிவ.செந்தில்நாதனிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், “நீங்கள் பேசுவதைக்காட்டிலும் பாடுவதைக் கேட்க ஆவலாக இருக்கிறோம்” என்று சொல்ல, ‘அக்பர்’ திரைப்படத்தில் வரும் ‘கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே...’ பாடலைப் பாடினார்.

அறம் ஒலித்த அரங்கம்!

“சிறுபத்திரிகை என்பதிலுள்ள ‘சிறு’ என்ற முன்னொட்டு, சிறிய வட்டத்துக்குள் சிறிய எண்ணிக்கையில் புழங்கும் இதழ் என்பதால் மட்டும் குறிப்பிடப்படுவதல்ல. வணிகக் கலாசாரத்தின் ‘பெரிது’ என்பது சார்ந்த அனைத்து அதிகாரங்ளுக்கும் எதிரான புள்ளியில் தன்னைச் சிறுபத்திரிகைகள் நிலைநிறுத்திக்கொண்டதால், அதன் விளிம்புத் தன்மையை, சிறிய உண்மைகள் சிறிய கனவுகளை நோக்கிய அதன் தீவிரத்தைக் குறிப்புணர்த்தியே ‘சிறு’ என்ற நுட்பமான முன்னொட்டு பொருள்படுகிறது. விளிம்புநிலை, தீவிரம், தனித்துவம், பிடிவாதம், பொதுபுத்திக்கு எதிரான போர்க்குணம் ஆகியவையே சிறுபத்திரிக்கையின் விழுமியங்கள். தமிழில் நவீன பிரக்ஞையைக் கட்டமைத்தது சிற்றிதழ் இயக்கமே.கடந்த நூற்றாண்டின் எல்லாத் தீவிர அறிவியக்கமும் சிற்றிதழ் வெளியில்தான் நிகழ்ந்தன. அந்தச் சிற்றிதழ் மரபின் கண்டுபிடிப்புகள், இன்று வெகுசன வெளியில் உள்வாங்கப்பட்டுள்ளன. இன்றைய பொதுவெளி மொழியைக் கையளித்தவை நேற்றைய சிற்றிதழ் இயக்கம்தான். இன்று வெகுசன, கேளிக்கை வெளிகள் பெருகி, படைப்பூக்கமும் சாரமானக் கண்டுபிடிப்புமிக்க எழுத்தும் மூச்சுத் திணறடிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்றிதழ்களே மீட்சிக்கான வழி. குறுக்கும் நெடுக்குமான பலவித விவாத ஓட்டங்கள்கொண்ட தமிழின் பெரும் சிற்றிதழ் அறிவு மரபில், ‘இடைவெளி’ இதழும் தன் சிறிய கனவுகளுடன் விருப்பங்களுடன் இணைந்து கொண்டதிலும் அது ‘ஆனந்த விகட’னால் அங்கீகரிக்கப்படுவதிலும் மகிழ்ச்சியடைகிறோம்!” என்று முன்வைத்தது ஆசிரியர் குழு.

அறம் ஒலித்த அரங்கம்!

இதுதான் என் முதல் விருது!

சிறந்த வெளியீட்டுக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை, ‘பிரமிள் படைப்புகள்’ எனும் தொகுப்பு நூல்களை வெளியிட்டமைக்காக கால சுப்ரமணியம் பெற்றார். பேராசிரியர் வீ.அரசு விருதை வழங்கினார்.

 “ஆனந்த விகடன், இன்றுள்ள பெரும் பத்திரிகைகளில் முதன்மையாகவும் பிரபலமாகவும் விளங்கிவருவது. அன்றைய கல்கியின் ஆசிரியத்துவம்தான், விகடனின் வாசகர் என்ற ஒரு புதிய இனத்தைத் தமிழில் உருவாக்கியது என்பது வரலாறு. இன்று சினிமாவுக்கும் அரசியலுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் சூழலில் சிறுகதை, கவிதை, தொடர்கதை, கட்டுரை போன்றவற்றில் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் போக்கும் நவீனத்துவத்தோடு இணையும் போக்கும் பாராட்டுக்குரியது. சிறுபத்திரிகை தோற்றுவித்த நவீன இலக்கிய மரபை, இன்று  ‘விகடன் தடம்’ என்ற அதன் கிளைப் பத்திரிகை பின்பற்றி, தமிழில் ‘நடுநிலை இதழ்’ என்ற ஆரோக்கியமான புதிய மரபை உருவாக்கியுள்ளது. சினிமாவோடு நின்றுவிடாமல், ‘ஆனந்த விகடன் - நம்பிக்கை விருதுகள்’ என்று இலக்கியத்துக்கும் விழா எடுப்பது முக்கியமான முயற்சி.

அறம் ஒலித்த அரங்கம்!

கல்லூரித் தமிழ்ப் பேராசியராக, ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியது போக, நான் 40 ஆண்டுகளாகச் சிறுபத்திரிகை உலகில் பத்திரிகையாளனாக, பதிப்பாசிரியனாக, மொழிபெயர்ப் பாளனாக, கவிஞனாக, விமர்சகனாகச் செயல்பட்டிருக்கிறேன். ஆனால், இதுதான் எனக்குக் கிடைக்கும் முதல் விருது!

அறம் ஒலித்த அரங்கம்!

3,400 பக்கங்கள்கொண்ட இந்தப் பெரும்நூல் தொகுதியை, எந்த நிறுவனமும் சாராமல் எனது சொந்தப் பொருள்செலவில், பல ஆண்டுகளாக மிகவும் பாடுபட்டுத் தேடித் தொகுத்து, பதிப்பித்து, மிக நேர்த்தியான முறையில் அச்சிட்டு, தமிழ் இலக்கிய உலகத்துக்குத் தந்துள்ளேன். இதில் அடங்கியுள்ள எழுத்துகள், இதுவரை வெளிவந்த நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளிலேயே மிகச் சிறந்தவை என்று சொல்லிக்கொள்வதில் எந்தத் தயக்கமும் எனக்கில்லை. குறுகிய சிறுபத்திரிகை வட்டத்துக்குள் அகல் விளக்காக விளங்கிய பிரமிளை, இந்த விருதுமூலம் பெரும் வாசக வெளிக்கு அறிமுகப்படுத்தியமைக்காக ‘ஆனந்த விகட’னுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று உணர்ச்சி மேலிடப் பேசினார் கால சுப்ரமணியம்.  

இலக்கியப் பரிட்சயம் விகடனால் வந்தது!

கால் நூற்றாண்டுக்கும் மேலாக, எழுத்திலும் களத்திலும் தீவிரச் செயல்பாடுகொண்ட மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு, 2018-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் ‘டாப் 10 மனிதர் விருது’ வழங்கப்பட்டது. தொல்.திருமாவளவன், வே.ஆனைமுத்து ஆகியோர் விருதை வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“இந்த விருதை தொல்.திருமாவளவனும் வே.ஆனைமுத்து அய்யாவும் இணைந்து வழங்குவது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து இங்கே வே.ஆனைமுத்து அய்யா அவர்கள் பேசியது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. ‘ஆனந்த விகடன்’ இதழுடன் எனது பயணம் என்பது, அரை நூற்றாண்டுக்கும் மேலானது. சிறுவயதில் ஏராளமான துப்பறியும் கதைகளில் ஆர்வம்கொண்டு வாசித்துக்கொண்டிருப்பேன். அச்சமயம் ஒருமுறை என் அப்பா, “இந்தப் பத்திரிகையில் ஜெயகாந்தனின் சிறப்பான ஒரு சிறுகதை வந்திருக்கிறது. இதைப் படித்துப் பார்” என்றார். ‘யாருக்காக அழுதான்’ என்ற தலைப்பிலான கதையை அன்று விகடனில் வாசித்தேன். அந்தக் கதையின் வாயிலாகவும் அதன் பின் தொடர்ச்சியாக விகடனில் வந்த முத்திரைக் கதைகளை வாசித்தது வழியாகவும்தான் எனக்கு ஆரம்பகட்ட இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டது. அதை இப்போது இங்கே நினைவுகூர்கிறேன். இன்று இந்திய அளவில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டம்; கருத்துரிமை பெரிதும் நசுக்கப்படும் சூழல்; மனித உயிர்கள் பறிக்கப்படக்கூடிய நிலை; சாதி, மதக் கொடுமைகள், மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய போக்கு இப்படியான சமூகச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித உரிமைகள் குறித்துத் துணிச்சலாகப் பேச வேண்டிய அவசியமான சூழலில், இந்த இரு ஆளுமைகளின் கைகளால் ‘ஆனந்த விகடன்’ வழங்கியிருக்கும் இந்த விருதால் பேரானந்தம் கொள்கிறேன், நன்றி.” என்றார் அ.மார்க்ஸ்.

“எந்த ஒன்றைக் குறித்து எழுதும்போதும், துல்லியமாக ஆய்வுசெய்து கட்டுரைகள் எழுதக்கூடியவர் அ.மார்க்ஸ். இந்த விருதை அவருக்கு வழங்கும் ஆனந்த விகடனுக்கு எனது நன்றி. மார்க்ஸுக்கு என் வாழ்த்துகள்.” என்றார் வே.ஆனைமுத்து.

என் எழுத்தில் பாதி விகடனில் வெளியானது!

எமக்குத் தொழில் எழுத்து என இலக்கியத்தை ஒரு தவமாகக்கொண்ட, தேசிய அளவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் ‘சாகித்ய அகாடமி’ விருதைச் சமீபத்தில் பெற்ற, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2018-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் ‘டாப் 10 மனிதர் விருது’ வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், சாரு நிவேதிதா இருவரும் விருதை வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“நான் ஒரு விகடன் குடும்ப உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். விகடன் மாணவப் பத்திரிகையாளராகத்தான் என்னுடைய கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கினேன். கிட்டத்தட்ட என்னுடைய எழுத்தில் பாதி விகடனில்தான் வெளியாகியிருக்கிறது. என்னை இந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்த ஆனந்த விகடனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விகடன் குழுமம், என் மனதுக்கு எப்போதும் நெருக்கமான ஒன்று. நல்லாசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பும், பா.சீனிவாசன் அவர்களது அன்பும், விகடனின் ஆசிரியர்களாக இருந்த ரா.கண்ணன், ப.திருமாவேலன் போன்றவர்களின் நட்பும் அன்பும் எனது எழுத்துவெளிக்கான நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தன. நான் மதிக்கும், மிகப்பெரும் எழுத்து ஆளுமைகளான சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் இணைந்து இந்த விருதினை எனக்கு வழங்கியது, தமிழ் இலக்கியச் சூழலின் உயிர்ப்புமிக்க பண்பாட்டுக்கான ஓர் உதாரணம். எங்கள் மூவரின் வாசகர்களுக்குள் எப்போதும் சச்சரவும் சண்டைகளும் இருப்பதாக ஒரு கருத்து நிலவிவருகிறது. அது இல்லை என்பதை இந்த நிகழ்வு அனைவருக்கும் உணர்த்தும் என நம்புகிறேன். நாங்கள் மூவரும் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான போக்கை உருவாக்கியவர்கள். ஆனால், மூவரும் சேர்ந்து நிற்கும் மேடை இதுதான் என நினைக்கிறேன். இதை சாத்தியப்படுத்திய ஆனந்த விகடனுக்கு நன்றி.

ஒரு வீட்டையும் ஒரு எழுத்தாளனையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது ரெட்டைச் சுமை.  என்னுடைய எழுத்துப் பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும் எனது மனைவி, குழந்தைகளுக்கு எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இது தமிழ் ஓவியவெளிக்கான அங்கீகாரம்!

நவீன ஓவியவெளியில் மினிமலிச பாணியைப் பேசுபொருளாக்கியதோடு, எழுத்து, இயற்கை விவசாய ஆர்வம், நூலாக்கப் பணிகளில் அழகியல் பங்களிப்பு எனத் தொடர்ச்சியாக இயங்கிவரும் ஓவியர் சந்தோஷ் நாராயணனுக்கு, 2018-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் ‘டாப் 10 இளைஞர்’ விருது வழங்கப்பட்டது. சென்னை ஓவியக் கல்லூரியில் சந்தோஷின் ஜூனியரான இயக்குநர் பா.இரஞ்சித், திரைக்கலைஞர் பொண்வண்ணன் ஆகியோர் விருதை வழங்கினர்.

அறம் ஒலித்த அரங்கம்!

“ஆனந்த விகடனின் இந்த மேடையில் நிற்கும்போது, முதலில் விகடனுக்கும் எனக்குமான உறவைச் சொல்லிவிட வேண்டும். வாசிப்பில் ஆர்வமுள்ள எல்லாத் தமிழர்களையும்போலவே இளம்வயதில் குமரி மாவட்டத்தின் மூலையிலிருந்த ஒரு கிராமத்துப் படிப்பகம் வழியாக விகடன் எனக்கு அறிமுகமானது. ஓவியம்மீது ஆர்வம் ஏற்பட, அன்று விகடனில் நான் பார்த்த முன்னோடி ஓவியர்களின் படைப்புகளும் ஒரு காரணம். பிறகு, அதே விகடனில் நான் ‘கலைடாஸ்கோப்’ எனும் தொடர் எழுதுவேன்; ‘மினிமலிசம்’ படம் போடுவேன் என்பதெல்லாம் எப்போதும் யோசித்துப் பார்க்காதது. சூழலில் புதியன ஏதேனும் முளைக்குமென்றால், அதற்கான களத்தை அமைத்துத் தர விகடன் எப்போதும் தயாராக இருக்கிறது என்பதைச் சொல்லவே இந்த சுயபுராணம். பொதுவாக சினிமாவை மட்டுமே வெளிச்சத்துடன் கொண்டாடும் தமிழ் மனப்பரப்பில், இப்படி ஓர் ஒளிமேடை என்பது தனி மனிதர்களுக்கு என்றில்லை, கலை இலக்கியம் சமூகம் சார்ந்த பண்பாட்டு வெளிக்கு விகடனின் கொடை என்றே நினைக்கிறேன். அந்தவகையில் ஒரு ‘குறுஞ்சித்திரனாக’ எனக்கு அளிக்கும் இந்த அங்கீகரம், தமிழ் ஓவியவெளிக்கான அங்கீகரமாகக் கருதி, விகடனுக்கு என் நன்றியைச் சொல்லக் கடைமைப் பட்டிருக்கிறேன். எனக்கு இலக்கிய வாசிப்பை, கலை உலகை அறிமுகப்படுத்திய எனது மாமா சுஜித்குமார், வறுமையான சூழலிலும் நான் கேட்கும்போதெல்லாம் குச்சியும் சாக்பீஸும் கலர்பென்சிலும் வாங்கித்தந்து, என்னை ஓர் ஓவியனாக எப்போதும் உற்சாகப்படுத்திய அம்மா சுசீலா, எனது கலைசார்ந்த அகஉலகின் பயணத்தில் எப்போதும் கைகோர்த்துக் கூடவேவரும் மனைவி ஷர்மிளா, என்னை மேலும் கற்பனைகளின் உலகத்துக்குள் கைப்பிடித்து இழுக்கும் என் குழந்தைகள் அபிநந்தன், காயாம்பூ, என் சகபயணிகளான நண்பர்கள் யாவருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக, விகடன் தாத்தாவைக் கைகளில் ஏந்தி நிற்கும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி” என்றார் சந்தோஷ்.

அறம் ஒலித்த அரங்கம்!
அறம் ஒலித்த அரங்கம்!
அறம் ஒலித்த அரங்கம்!
அறம் ஒலித்த அரங்கம்!
அறம் ஒலித்த அரங்கம்!
அறம் ஒலித்த அரங்கம்!

- தொகுப்பு: வெய்யில், கார்த்தி, ச.அழகு சுப்பையா

படங்கள்: கே.ராஜசேகரன்