Published:Updated:

அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்

அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்

க.வீரபாண்டியன்

அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்

க.வீரபாண்டியன்

Published:Updated:
அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்

‘பகடு’ நான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவல். ‘பகடு’ என்னும் இந்தச் சொல் வலிமை, பெருமை, எருது போன்ற பல்வேறு பொருள்களைத் தாங்கி நின்றாலும், யானை எனும் பொருள்தான் இந்த நாவலுக்கானது. யானை, காடுகளில் வாழ்ந்து திரியும் சுதந்திர வாழ்க்கை வாய்க்கப்பெற்ற ஓர் உயிரி. காடுகளிலிருந்து இழுத்துவரப்பட்டுப் போர்களில் ஈடுபடுத்தப்பட்டபோதும் அதற்கான மரியாதைகள் தவறாமல் செய்யப்பட்டன. வலிமை, பெருமை மற்றும் வீரத்தின் அடையாளமாக எல்லா நாட்டிலும் யானைகள் கம்பீரமாக உலவிவந்தன. ஆனால், இன்றைக்குக் கோயில்களுக்கு வெளியேயும் வீதிகளிலும் கையேந்தி அலையும் வாழ்வு. அவ்வாறான வாழ்க்கை வாய்க்கப்பட்ட சக்கிலிகளின் இன்றைய வாழ்க்கையை வரலாற்றில் பொருத்திவைத்துப் பார்க்கும் படைப்பாக ‘பகடு’ உருவாகியிருக்கிறது.

அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்என்னோடு பிறந்தோரும் உடன் வாழும் சுற்றத்தாரும் சகமனிதர்களால் வரலாறு நெடுகிலும் வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் மிகமோசமான இழிநிலைகளைச் சுமந்தபடி வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான இழிநிலைகளிலேயே உழன்று கிடக்காமல் போராடும் குணத்தைத் தனதாக்கிக்கொண்ட சமூகத்தின் அந்தரங்க வாழ்வு, பரிதாபகரமான கழிவிரக்கத்தோடு காட்டப்பட்ட இலக்கியப் படைப்புகளைக் கண்டு மனம் குமைந்த கணத்தில் உருவான கோபத்தை, ஒரு படைப்பாக உருத்திரட்டத் தொடங்கினேன். தெருக்கூட்டுதல், கையால் மலம் அள்ளுதல் முதலான இழிதொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நிர்பந்தத்தின் ஒடுக்குமுறைகள், நகர விரிவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சிதைந்து நசியும் வாழ்க்கைப்பாடுகளென இரண்டு தளங்களிலும் எதிர்கொள்ளும் வாழ்க்கையை இந்நாவல் பேசுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்

வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடம் ஒரு மனிதனின் சமூக நிலையை உறுதிப்படுத்தும் அடிப்படைக் காரணிகள். வாழ்வாதாரம் ஏதுமின்றி நாதியற்று வீதிகளில் உழன்று தவிக்கும் மக்கள், ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான சேரி, காலனிபோன்ற வாழ்விடங்களில் வாழும்படி விதிக்கப்பட்ட வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதத் தொடங்கினேன். 280 பக்கங்கள் எழுதி முடித்த பின்பு, நாவலை வெளியிட்டுவிடலாம் என்று எண்ணி அத்துடன் முடித்துக்கொண்டேன். என்னவென்று நிதானிக்க இயலாத வகையில் மனக்கொந்தளிப்பும் மனக்குழப்பங்களும் அதிகமானது. அன்றிரவில் அந்த நாவலின் கதாப்பாத்திரங்கள் என்னைக் கேட்டுத் துளைத்த கேள்விகளில், முடித்துவிட்டதாய் நினைத்த ஆசுவாச உணர்ச்சி மாறி, மனம் மிகுந்த அலைக்கழிப்புக்குள்ளானது. அந்த நாவலில் சொல்லப்பட்ட கதை, அரைகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையாய் மூச்சுவிட முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. அதுவரை எழுதப்பட்ட 280 பக்கங்களையும் ஒரு முறை தொடர்ச்சியாக வாசித்தேன்.

அந்த வாசிப்பு, பல வகையான அவலங்களின் கண்ணிகளைக் கண்டிருந்த என் மனம் எதிர்கொண்ட அலைக்கழிப்புகளின் வேரைத் தேடிய ஒரு பயணமாக வளர்ந்தது. வேரோடிய திசைகளில் எல்லாம் புகுந்து, அதைக் கெட்டியாகப் பிடித்தபடி செல்லும் பயணத்தைத் தொடங்கினேன். எழில்.இளங்கோவன், மதிவண்ணன் ஆகியோர் தொடங்கிவைத்த பயணம் அது. அந்தப் பாதையில் தொடங்கிய பயணம் நெடுந்தூரம் நீண்டு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்லும் அந்த நீண்ட பயணத்தில், வரலாற்றின் சுழிப்புகள் என்னை அதன் அடியாழங்களுக்குள் இழுத்துச் சென்றன.

இன்றைய அவல வாழ்வின் மூலாதாரங்கள், தமிழ் நில வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களாக நிலத்தினடியில் பெருக்கெடுத்து ஓடும் தெளிந்த நீரைப்போல காலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருந்தன. பாண்டியர்கள், நாயக்கர்கள், சுல்தான்கள், பாளையக்காரர்கள், பிரிட்டிஷார் என மதுரை மாநகரச் சரித்திரத்தின் சுவடுகள் வீதி வீதியாய் வளைந்து நெளிந்து கிடந்தன. அதனூடாக எந்தவித மினுமினுப்பும் பளபளப்பும் பிரகாசமுமின்றி வீதிகளைச் சுத்தம் செய்யும் மதுரைச் சக்கிலிகளின் வாழ்வு மங்கிக்கிடந்தது. கமலைகள், காலணிகள் எனத் தோல்பொருள்கள் செய்துகொடுத்து விவசாயம் சார்ந்த ஊரகத் தொழில்களைச் செய்துவந்த சமூகம், தன் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நகர வீதிகளில் பிய்ந்த செருப்புகளைத் தைத்துக்கொண்டும் தெருக்கூட்டிக் கொண்டும் திரிந்ததற்கான வரலாற்றுக் காரணங்களை அவர்களின் வாழ்வினூடே காட்டிச் சென்றன.

புதைந்து கிடக்கும் சிந்து சமவெளி நாகரிகம், கீழடி நாகரிகம் என்று கண்டெடுக்கப்பட்டுவரும் வாழ்வின் வரலாற்றுத் தொடர்ச்சியில் ஏற்படும் இடையூறுகளை நினைத்துத் தொந்தரவுகொள்ளும் அதேவேளையில், அவ்வாறான நகரங்கள் காலத்தின் பல்வேறு கட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பதையும், விரிவாக்கப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட சமூகங்கள், பூர்வீக வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றன என்பதையும் நினைத்து எந்தளவிற்குத் தொந்தரவுகொள்கிறோம் என்னும் கேள்விகளிலிருந்து இந்த நாவல் தன் கதையை ஆரம்பித்தது.

அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்

சாமானிய மக்கள் வரலாற்று நெடுகிலும் நகரின் மையத்திலிருந்து மீண்டும் மீண்டும் நகரின் விளிம்புக்குத் துரத்தியடிக்கப் படுகின்றனர். விளிம்புதான் அவர்களின் வாழ்விடம் என்பது அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் நினைவூட்டிக்கொண்டே வரப்படுகிறது. நகரின் மையம் வலுவானவர்களுக்கானது. நகரின் விளிம்பு வலு குன்றியவர்களுக்கானது. கோயிலும் அக்ரகாரங்களும் நகரின் மையம். முனியும் சேரியும் நகரின் விளிம்பு. மையத்தை வலுவானவர்களுக்குப் பாத்தியப்பட்டப் புழங்குவெளியாகச் சொந்தமாக்கிக் கொண்டனர். விளிம்பும் அவர்களுக்குப் பாத்தியப்பட்டதுதான். எந்த நேரத்தில் வந்து கேட்டாலும் அனுபவித்ததை அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் ஒதுக்குப்புறத்திற்கு ஓட வேண்டும். ஒதுக்கப்பட்ட ஓரத்தில் கிடைத்ததைப் பிரித்துக்கொண்டு அடங்கிக் கிடக்க வேண்டும். கால ஓட்டத்தில் வளர்ச்சியின் வேகத்தில் நகரத்தின் கால்கள் அந்த விளிம்பையும் துரத்திவந்து தொட்டுவிடும். நகரம் கொஞ்ச காலத்திலேயே அவர்களைச் சூழ்ந்துவிடும்; நகரம் மாநகரமாகும்; மாநகரம் பெருநகரமாகும்; விளிம்பு மீண்டும் மையமாகும். மையம் மீண்டும் விளிம்பாகாது. அடுத்து புதியதாக இன்னொரு விளிம்பைத் தேடித்தான் போக வேண்டும். இது ஒருவழிப் பாதை. ஒரு மையம் பல மையங்களாகும்; மறுபடியும் மையங்கள் வலியவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆட்படும். நலிந்தவர்கள் மீண்டும் விளிம்புக்குத் துரத்தப்படுவர். நகருக்கு வெளியே கழிவைக் கொட்டுவதைப் போல அள்ளிப்போய் யாரும் அண்டாத பொட்டல் வெளிகளில், வாழத் தகுதியற்ற காட்டுப்புதருக்குள் இவர்கள் வீசப்படுவார்கள். வெளியே கொட்டப்படுவார்கள். விளிம்பு, மையம், விளிம்பு என்ற நச்சுவட்டத்தின் சுழலுக்குள் சிக்கித் தவிப்பதே அவர்களின் வரலாறு.

மதுரை மாநகரின் வரலாற்றுக் குறிப்புகளுக்குள் புகுந்த பயணம், திருநெல்வேலி சரித்திரத்திற்குள்ளும் தன் வேர்களை அகலப் பரப்பியிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், நாணயங்கள், புத்தகங்கள், வரலாற்று ஆவணங்களை வாசித்தல் ஒருபுறமும் மதுரை மற்றும் திருநெல்வேலியின் வீதிகள், திண்டுக்கல், பழனி, நெற்கட்டான் செவ்வயல், தென்மலை, சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் எனச் சுற்றியிருக்கும் ஊர்களில் அலைந்து திரிந்து நிலங்களோடும் மக்களோடும் உரையாடுதல் என்று மறுபுறமும் இந்தப் பயணம், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே யிருக்கிறது.

இந்த நாவல் எழுத எழுதப் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி முடித்தால், அந்தப் பதில் இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. அந்தக் கேள்விக்கு இன்னொரு பதில். அந்தப் பதிலிருந்து இன்னொரு கேள்வியென முற்றுப்பெறாமல் தொடர்கின்றன. கேள்விகளின் முடிச்சுகள் திரட்சியடைந்த காட்டுக்கொடிகளைப்போலப் பின்னிப்பிணைந்து அந்தரத்தில் ஆடுகின்றன. அவற்றை அசைப்பதுகூட இயலாத ஒன்று. அதற்குப் பதில் சொல்லிப் போதவில்லை. இதுதான் வரலாறென்று எழுதப்படாத மக்களின் வாழ்வை எழுத முற்படும் யாரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் கேள்விகள் அவை என்ற புரிதலோடு அவற்றை அணுகுகிறேன். மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நிலங்களுக்கு அடியிலும், அங்கு வாழும் மக்களின் நினைவுகளுக்குள்ளும் புதைந்துகிடக்கும் கதைகளின் கூர்மை காட்டுக்கொடிகளை அறுத்துப்போடக்கூடிய வலிமையோடு இருந்தன.

கடுமையான அலுவல் பணிகளுக்கு இடையில் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் இதற்கென ஒதுக்குவதில்தான் இலக்கியம் படைக்கப்படுவதின் நோக்கத்தை உணர்ந்துகொள்கிறேன். இந்த மக்களின் வாழ்வைச் சொல்ல எஞ்சியிருக்கும் சில உயிரிகளில் நானுமொருவன் எனும் கடமையுணர்ச்சியோடு இந்த வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது நிச்சயம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை மறுத்து, உண்மையின் திசையைக் காட்டும். நகர விரிவாக்கத்திற்குப் பலியான மதுரை நகரின் ஒரு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பிலுள்ள துப்புரவுப் பணியாளர்களின் இன்றைய வாழ்க்கைக்கு முன்னும் பின்னும் நடந்த வரலாற்றைச் சொல்லிச் செல்வதின் ஊடாகத் தமிழ் இலக்கியங்களில் தெரிந்து திரிக்கப்பட்ட கதைகளையும், அறிந்து செய்த விடுபடல்களையும், தெரியாமல் சொல்லப்பட்ட அறியாமைகளையும் கேள்வியெழுப்பும் அல்லது சரிசெய்யும் படைப்பாக இந்த நாவல் இருக்கும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெளியே இருக்கும் மதுரைவீரனும், மகாமுனியும், சடையாண்டியும், முனீஸ்வரனும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குள்ளே இருக்கும் பகடை ராஜாவின் கனத்த வாள், வளைந்து நீண்ட குழலும் சொல்லும் கதைகள் இதுவரை தமிழ்நிலம் காதுகொடுத்துக் கேட்காதவை. நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் காலத்திலும் மற்றும் விடுதலைக்குப் பிறகும் மதுரை நகரின் கோட்டைகள் இடிக்கப்பட்டு எல்லைகள் விரிவாக்கப்பட்ட ஒவ்வொருமுறையும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இன்றைக்கு கண்ணகி நகரும் செம்மஞ்சேரியும் இருப்பதைப்போலப் பல நகரங்களில் ஆற்றங்கரையோரக் குடிசைகளும் காங்கிரிட் சேரிகளும் வஞ்சிக்கப்பட்ட கதைகள் பலவற்றைத் தாங்கிய சுமையால் பலமிழந்து நிற்கின்றன.

நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட கதைகளும் பாடல்களும் நிலவொளியின் சாட்சியில் ஒவ்வோர் இரவிலும் சொல்லப்பட்டும் பாடப்பட்டும் வருகின்றன. அவை நகரிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் குறித்த கதைகள் மற்றும் பாடல்கள். தங்கள் பாடுகளைப் பாடல்களாக மாற்றி இன்னொரு தலைமுறைக்குக் கடத்துகின்றனர். இரவும் பகலும், நிலவும் சூரியனும், செடிகொடி மரங்களும், பறவைகளும் விலங்குகளும் அவர்களின் கதைகளில் துணைப் பாத்திரங்களாக வந்து சாட்சியம் சொல்கின்றன. பாடல்களும் அதிலுள்ள கதைகளும் ஒடுக்குமுறைகளைப் பற்றியது. அவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு முற்றிலும் தங்களை பலிகொடுத்துவிடாமல் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டே தனக்கான சமூக மாண்பை மீட்டெடுக்கப் போராடும் அரசியல், பண்பாட்டு, பொருளாதாரச் செயல்பாடுகளையும் இந்த நாவல் நுண்மையாகப் பதிவு செய்துகொண்டே செல்கிறது. அதுதான் வரலாறு. ஏனென்றால், சரியான வரலாற்றுப் புரிதல் இல்லாமல் இழந்த வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் மாண்புகளையும் மீட்டெடுக்க முடியாது. இழந்ததை மீட்டெடுக்கும் முயற்சிக்கு இலக்கியத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்கமாட்டர்கள். அந்த நம்பிக்கை யிலிருந்துதான் என் படைப்பைப் புனையத் தொடங்கியிருக்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism